
ஆடிப் பூரக்காரி – நங்கநல்லூர் J K SIVAN
இன்று சாயங்காலம் ஆரம்பித்து நாளையும் ஆடிப்பூரம். விசேஷ நாள். இந்த உலகத்தில் எத்தனை பெண்களுக்கு ஆண்டாள் என்ற பெயர் உள்ளதோ அத்தனை பெண்களுக்கும் எனது வாழ்த்துக்கள்/பெரியவர்களாக இருந்தால் நமஸ்காரம். அவர்களுக்கு ஏன் ஆண்டாள் என்று பெயர்? எப்படி அந்த பெயர் கிடைத்தது? சுமார் 1300 வருஷங்கள் முன்பு நடந்த ஒரு அற்புதத்தை சொன்னால் தான் விடை கிடைக்கும்.
கலியுகத்தில் நள என்கிற வருஷம் 60 வருஷத்துக்கு ஒரு முறை திரும்ப வரும். இப்படி ஆரம்பத்திலிருந்து 98வது தடவை வந்தது. அன்று இதே ஆடி மாசம். சுக்ல பக்ஷம் சதுர்த்தசியும் பூர நட்சத்திரமும் கூடிய நன்னாள். சரி நாள் சொல்லி ஆகிவிட்டது. எங்கே எப்படி எப்போது?
தமிழ்நாட்டின் தென்கோடியில் வில்லிப்புத்தூர் எனும் கிராமம் அப்போது ஒரே காடு. அந்த காட்டிற்குள் ஒரு சாதாரண காட்டை அழித்து அதை ஒரு பூந்தோட்டமாக, ஒரு பெரிய நந்தவனமாக மாற்றி அதில் துளசியை (பிருந்தா; துளசி)காடாக துளசி வனம் , பிருந்தாவனமாக்கி தினமும் விடிகாலை குளித்துவிட்டு ஹரி நாமம் சொல்லிக்கொண்டே துளசி தளங்களையும் புஷ்பங்களையும் நிறைய பறித்து நந்தவனத்தில் பறித்த்துக்கொடு ஆஸ்ரமத்தில் அவற்றை மாலையாக தொடுத்து அருகே இருக்கும் வடபத்ர சாயி கோயிலில் ரெங்கமன்னார் எனும் அரங்கனுக்கு மாலை சூட்டுபவர் ஒருவர். அவர் பெயர் தான் விஷ்ணுசித்தர் எனும் வைஷ்ணவ சாது. பிற்காலத்தில் பெரியாழ்வார். மேலே சொன்ன நாளில், ஆடிப்பூரத்தன்று வழக்கம் போல் புஷ்பம் துளசி பறிக்க நந்தவனத்துக்குள் நுழைந்தார்.
எங்கும் அறையிருள். நிசப்தம். சுற்றிலும் ஜீவராசியே கண்ணில் படவில்லை. துளசிவனத்தில் அருகே சென்றபோது ஒரு சின்னஞ்சிறு சிசுவின் அழுகுரல். திடுக்கிட்டார். அருகே சென்று குனிந்து பார்த்தார். அதிரூப சுந்தரியாக ஒரு பெண் குழந்தை. சுற்றி முற்றி யாராவது தென்பாடுகிறார்களா என்று பார்த்தால் கண்ணுக்கெட்டியவரை எவருமே தென்படவில்லையே. எப்படி இங்கே ஒரு சின்னஞ்சிறு சிசு வந்தது? இப்போது தானே இந்த விடியற்காலையில் குரல்? சற்று முன் தான் அவள் அங்கே தோன்றி இருக்க வேண்டும்? முன்பே இருந்தால் அவள் குரல் என் காதில் கேட்டிருக்கும். நான் இங்கே தானே விழித்துக்கொண்டு இருந்தேன். ஓஹோ இது மனிதர்கள் செய்த வேலை இல்லை. பகவான் ஸ்ரீ மன் நாராயணனின் லீலை இது. மீண்டும் குனிந்து அந்த தெய்வீக குழந்தையை உற்றுப்பார்த்தார். முதல் நாள் பெய்த மழையில் துளசி இலைகள் குளுமையாக மெத்துமெத்து என்று படுக்கையாக அந்த குழந்தைக்கு அமைந்திருந்தது. அவரைப் பார்த்ததும் அழுகையை நிறுத்திவிட்டு அந்த சிசு சிரித்தது. ‘இனி என்ன செய்வது?. இதுவும் அந்த நாராயணன் செயலே. எனக்கு அவன் கொடுத்த கட்டளை இந்த சிசுவை நான் வளர்க்கவேண்டும் என்று எடுத்துக் கொள்கிறேன்” விஷ்ணு சித்தர் அந்த சிசுவை அணைத்து தாய் போல வளர்த்தார். “கோதை”( பூமியிலிருந்து பிறந்தவள்), என பெயரிட்டு வளர்த்தார். பூமாதேவிக்கு வேறு என்ன பெயர் பொருத்தமாக இருக்கும்?
சிறந்த தமிழறிஞர், விஷ்ணு பக்தர் என்பதால் பாசுரங்கள் சொல்லி கொடுத்தார். வெகு சீக்கிரமே அவள் தந்தையை மிஞ்சிய தனயளாக வளர்ந்தாள். விடாமல் பெருமாள் பெருமை,மஹிமை, கம்பீரம், அழகு எல்லாம் சொல்லி வளர்க்கப்பட்டதால் துளசி இயற்கையாகவே நறுமணத்தோடு இருப்பது போல் ஆண்டாள் எம்பெருமான் மேல் ஆழ்ந்த பக்தியும் காதலும் கொண்டு தானும் விஷ்ணுசித்தை ஆனாள் .
விஷ்ணு சித்தர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவர் தொடுத்த மாலைகளை தானே சூடிக்கொண்டு கண்ணாடி முன் நின்று ”அரங்கா, நானுனக்கு பொருத்தமானவளா? ” என கேட்பாள். ஆண்டவனுக்கு ஆண்டாள் தானே பொருத்தமானவள் .
மனதளவில் அரங்கனும் ஆண்டாளும் ஒன்றானதை ஆழ்வார் அறியமாட்டார். ஒருநாள் அவள் சூடிக் கொடுத்த மாலையில் அவள் தலை முடி ஒன்று இருந்ததால் ஆலயத்தில் பட்டாச்சாரியார் இது யாரோ அணிந்தது. வேறு கொண்டுவாருங்கள் என்று மாலையை திருப்பி தந்துவிட்டார். ஆழ்வாருக்கு ஆண்டாள் செய்த வேலை இது என்று தெரிந்து அவளைக் கோபித்து வேறு புதிதாக ஒரு மாலை தொடுத்து ஆண்டவனுக்கு சாற்ற எடுத்துச் சென்றார். அன்று கனவில் அரங்கன் ஆழ்வாரிடம் ”ஆண்டாள் சூடிய மாலை மட்டுமே மணமுடையதும் நம் விருப்பத்திற்கு உகந்ததும் ஆகும்” எனக் கூறினான். அன்று முதல் ஆழ்வாருக்கு ஆண்டாள் மகளல்ல. அவளை பூமாதேவியாகவே மதித்து போற்றினார்.
பத்து வயதானால் மணப்பருவம் அக்காலத்தில். ஆகவே ஆண்டாளுக்கு யாரை மணாளனாக மணமுடிப்பது? உனக்கு யார் அம்மா வேண்டும் ? என்று கேட்டார் ஆழ்வார்.’மானிடவர்க் கென்று பேச்சுப்படில் வாழ்கிலேன்” என்றும் ”மற்றவர்க்கு என்னைப் பேசலொட்டேன்
மாலிருஞ் சோலை எம் மாயற்கல்லால்” என்றும் கூறினாள் . அதாவது எந்த மனிதனையும் நான் கணவனாக ஏற்க மாட்டேன். அவர்களை பற்றி என்னிடம் பேசினால் உயிரோடு இருக்கமாட்டேன்.”.”சரி அப்படியென்றால் இந்த 108 திவ்ய தேசங்களில் வாழும் எம்பிரான்களில் உனக்கு யார் அம்மா வேண்டும்?””அவர்களை பற்றி எல்லாம் சொல்லுங்கள்? நான் பதில் சொல்கிறேன்” என்றாள் ஆண்டாள்.
ஆழ்வார் வில்லிப்புத்தூரில் தொடங்கி பாண்டி மண்டலம்,தொண்டை மண்டலம், மலைநாடு, சோழநாடு, வட திசைத் திருப்பதிகளில் உறையும் எம்பிரான்கள் மற்றும் திருவேங்கடவன், அழகர், திருவரங்கன் ஆகியோரது பெருமைகளை விரிவாக கூறினார். அரங்கத்துறையும் அழகிய மணவாளனின் கண்ணழகு குழலழகு ஆகியவற்றால் கவரப் பட்ட கோதை அவரையே தன் மணாளராக வரித்தாள். அந்த நம்பி மதுசூதனன் வந்து கைத்தலம் பற்றும் கனாக்கண்டாள்.எப்படி ஆண்டாள் அரங்கனை மணமுடிக்க முடியும்? விஷ்ணு சித்தருக்கு இது பெரிய கவலை. .அரங்கத்தம்மானே அவர் கனவில் தோன்றி “கோதையை திருவரங்கத்துத் திருமுற்றத்துக்கு அழைத்து வருக. அங்கே தக்க முறையில் அவள் கைத்தலம் பற்றுவோம்.” என்று சொன்னான்.
அரங்கத்துக் கோயில் பரிவாரம் முற்றும் எம்பிரானின் சத்ரம், சாமரம் போன்ற வரிசைகளோடு வில்லிபுத்தூர் வந்து பெரியாழ்வாரைப் வணங்கி ஆண்டாளை அழைத்து வர அரங்கன் கட்டளையிட்டதாக சொன்னார்கள்.
ஆழ்வாரும் மற்றோரும் ஆண்டாளை பட்டுத் திரையிட்ட பல்லக்கில் ஏற்றி பல்வகை இசைக்கருவிகள் இசைத்து “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி வந்தாள் சுரும்பார்க் குழற்கோதை வந்தாள். திருப்பாவைபாடிய செல்வி வந்தாள். தென்னரங்கனைத் தொழும் தேசியள் வந்தாள்.” பெரிய முழக்கங்களோடு அழகிய மணவாளன் திருமண்டபத்தை எல்லோரும் அடைந்தனர். பாண்டிய மன்னன் வல்லபதேவன் போன்ற பக்தர்களும் புடைசூழ கோவிற் பரிவாரமும் பார்த்திருக்க பல்லக்கின் திரைச்சீலையை ஆழ்வார் திறந்தார். ஆண்டாள் பட்டுச் சேலை யணிந்து, பருத்த செங்கழுநீர் மாலை சூடி, சீரார் வளையொளிக்க, சிலம்புகள் ஆர்க்க, அன்ன நடையிட்டு அரங்கன் பால் சென்று நின்றாள். அவனைக் கண்களாரக் கண்டு அவன் அரவணை மீதுகால் மிதித் தேறி அவனடி சேர்ந்தாள். அங்கிருந்த அனைவரும் வியக்க மறைந்து போனாள். அதிக பக்ஷம் அவளுக்கு அப்போது வயது பதினைந்து இருக்கலாமோ?
ஆண்டாள் மார்கழி நீராடி மாதவனை எண்ணி நோன்பு நோற்று, திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய பிரபந்தங்களைப் பாடி நமக்கு அருளியவள்.. வில்லிப்புத்தூர் கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர் சோதி மணி மாடம் தோன்றும் ஊர்-நீதியால் நல்லபத்தர் வாழும்ஊர் நான்மறைகள் ஓதுமூர். என்னுடைய ”பாவையும் பரமனும்” புத்தகத்தில் ஆண்டாள் சரித்திரத்தை திருப்பவையோடு இணைத்து சொல்லி இருக்கிறேன். படிக்க பிடிக்குமா? அணுக: 9840279080
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


