
விக்கிரமாதித்யன் கதைகள் – நங்கநல்லூர் J K SIVAN
பூர்வக்கதை சுருக்கம்.
சமுத்ரகுப்தன் முதல் விக்ரமாதித்தன் வரை ஒரு கண்ணோட்டம்.
விக்ரமாதித்யன் கதைகள் கட்டுக்கதையாக இருந்தால் என்ன நிஜமாக இருந்தால் என்ன. அதைப் படிக்கும் போது ஏற்படும் ஆனந்தம், சுவாரஸ்யம் தான் நமக்கு முக்கியம். சரித்திரம் சொல்வதை படித்தால் குப்தர்கள் ஆட்சி இந்த நாட்டின் ஒரு பொற்காலம். சாணக்கியன் சந்திரகுப்தனுக்காக ஸ்தாபித்தது ஹிந்து சனாதன தர்ம ஆட்சி. சாணக்கியன் ஒரு தீர்க்க தரிசி, ராஜ தந்திரி, ராஜகுரு, இப்படி ஒருத்தன் இன்று வரை இல்லையே என மூக்கின் மேல் விரல் வைத்து அதிசயிக்க வைக்கிறான்.
சந்திர குப்தனுக்குப் பிறகு சமுத்திர குப்தன் ராஜா. வேத சாஸ்திரங்கள் கற்றவன். சிறந்த கல்விமான்களை தேடி பிடிப்பவன். மேலும் மேலும் ஹிந்து சாஸ்திரங்களை அறிவதில் ஆர்வம் கொண்டவன். உஜ்ஜயினிக்கு வந்தான். களைத்து போய் ஒரு பெரிய அரசமரத்தடியில் படுத்தான். அந்த மரத்தில் ஒரு ப்ரம்ம ராக்ஷஸன் வெகுகாலம் குடியிருந்தவன். சமுத்ரகுப்தனைக்கண்டதும் பெருமகிழ்சசி பிரம்ம ராக்ஷஸனுக்கு.
“தூங்கும் குப்தனை எழுப்பியது. ”அடே , நீ யார். இந்த அடர்ந்த காட்டுக்குள் ஏன் வந்தாய்? ஆற்றின் அக்கரையில் அல்லவோ உஜ்ஜயினி நகரம் உள்ளது. அங்கே போனால் உண்ண , தங்க வசதி கிடைக்குமே” என்றது.
”நன்றி ஐயா, நீர் யாரென்று தெரியவில்லை. நான் சமுத்திர குப்தன். நன்றாக கற்றறிந்த ஒரு ஆசானை தேடி அலைகிறேன். அவரைத் தேடி கண்டுபிடிக்கும் வரை உணவு, தங்குமிட வசதிகளில் அக்கறையில்லை.
”சமுத்திர குப்தா, நான் வேதமறிந்த பண்டிதன். நானே உனக்கு ஆசிரியனாக இருக்கட்டுமா? ஆறுமாதம் இரவு பகல் தொடர்ந்து நீ கற்கவேண்டும். அந்த ஆறுமாதம் நீ உணவு தூக்கம் இல்லாமல் இருக்கவேண்டும். அதற்கான சக்தியை நானே உனக்களிப்பேன். இன்னொரு விஷயம். ஆறு மாதம் என்னிடம் கற்றபின் நீ இங்கிருந்து போனபின், உனக்கு கபகப என்று ஆறுமாத பசி எடுக்கும், ஆறுமாத தூக்கமும் வரும். சரியா? சமாளிப்பாயா? சரி என்றால் உனக்கு பாடங்கள் கற்பிக்கிறேன்”என்றது பிராம்ம ராக்ஷஸன்.
”சரி” என்றான் குப்தன்.
ப்ரம்ம ராக்ஷஸன் அரசமரத்து இலைகளில் வேகமாக எழுதி தள்ளினான். கீழே போட்டான். சமுத்திர குப்தன் எடுத்து ஒவ்வொன்றாக படித்தான். ஆறுமாதம் இரவு பகலாக எல்லாம் கற்றுக்கொண்டு ஆற்றைக்கடந்து உஜ்ஜயினி புறப்பட்டான். பசி கொன்றது. தூக்கமும் கண்ணை சுழட்டியது. ஒரு இடத்தில் கீழே படுத்துவிட்டான்.
அலங்காரவல்லி என்று ஒரு பெண்மணி மயங்கி இருக்கும் சமுத்திர குப்தனைப் பார்த்து இவ்வளவு நோஞ்சானாக பசியோடு இருக்கிறானே என்று பரிதாபப்பட்டு ஒரு வைத்தியரிடம் கூட்டி போனாள் . ”இவனுக்கு ஒரு நோயும் இல்லை. ஆறு மாதமாக சாப்பிடாதவன், தூங்காதவன். சாதம் சமைத்து சூடாக அவன் உடல் முழுதும் மூன்று மாதம் அப்பி, ஒத்தடம் கொடு. தூக்கம் கலைந்து சரியாகிவிடுவான்” என்றான் வைத்தியன். அவ்வாறே செய்தாள் அலங்காரவல்லி.
சமுத்திர குப்தன் தூக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்தான். ”நான் எங்கே இருக்கிறேன்?என்று சினிமாவில் கேட்பது போல் கேட்டான். அலங்காரவல்லி நடந்ததை சொல்லி ”நான் தான் உன்னை காப்பாற்றினேன் நீ என்னை கல்யாணம் செய்து கொள்ளவேண்டும் ” என்கிறாள். ”அடடா இப்படி ஒரு ஆபத்தா, ப்ரம்ம ராட்சசன் எவ்வளவு நல்லவன் என்று எண்ணிய சமுத்திர குப்தன் ”அதெல்லாம் முடியாதும்மா ” என்றான் . அலங்கார வல்லி அழுதுகொண்டே போய் உஜ்ஜயினி ராஜாவிடம் சொல்லி நியாயம் கேட்கிறாள்.
ராஜா ரெண்டுபேர் கதையும் கேட்டான். கடைசியில் ”சமுத்திர குப்தா, நீ என் பெண்ணையும் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்” என்று சொல்லிவிட்டான். ராஜா சொன்னது எதிரொலிப்பது போல மந்திரி, ராஜகுரு இருவரும் கூட ”எங்கள் பெண்களையும் நீ கல்யாணம் செய்து கொள்ளவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்கள். அதிர்ஷ்டமா, துரதிர்ஷ்டமா என்ன சொல்வது? உஜ்ஜயினியில் சமுத்திர குப்தனுக்கு இவ்வாறு நாலு மனைவிகள் கிடைத்தனர்.
ராஜகுரு பெண் மூலம் வரருசி என்ற ஸமஸ்க்ரித பண்டித கவிஞன் பிறந்தான். ராஜாவின் பெண் மூலம் விக்ரமாதித்தன் என்ற இளவரசன் பிறந்தான். மந்திரி பெண் மூலம் பட்டி என்ற மந்திரிகுமாரன் பிறந்தான். அலங்கார வல்லி மூலம் பர்த்ருஹரி பிறந்தான். ராஜா பர்த்ருஹரி எழுதிய வைராக்கிய சதகம், சுபாஷிதம், நீதி சதகம் எல்லாம் அவ்வப்போது எழுதுகிறேன். படித்த ஞாபகம் இருக்கிறதா?.
சமுத்திர குப்தன் உஜ்ஜயினி ராஜாவாகிறான். காலம் நகர்கிறது. சமுத்திரகுப்தன் கிழவனாகி இறக்கும் சமயம் அழுகிறான். நான்கு பிள்ளைகளும் அவனருகில் நின்று அவனை தேற்றுகிறார்கள். ‘ ஏன் அப்பா அழுகிறீர்கள்?” மூத்த மகன் பர்த்ருஹரி கேட்கிறான்.
‘பர்த்ருஹரி நீ மூத்த இளவரசன். அடுத்த ராஜா. ஆனால் உன் வமிசம் ராஜ வம்சம் இல்லை என்பதால் நாட்டை ஆள முடியாதே என்று தான் அழுதேன்” – சமுத்திர குப்தன். ” அப்பா கவலைவிடுங்கள். நான் நாட்டை ஆள்கிறேன். எனக்கு அப்புறம் என் வமிசம் ஆளாது. இது நிச்சயம்” என்கிறான் பர்த்ருஹரி.
வாசக நண்பர்களே, அசந்து போகாதீர்கள். பர்த்ருஹரி பெயரும் புகழும் பெற்ற சிறந்த ராஜாவாகி ஆயிரம் ராணிகள் அவனுக்கு. அவர்களில் அநங்கசேனா என்பவள் மேல் அலாதி மோகம்.
உஜ்ஜயினியில் ஒரு பிராமணன் வெகுகாலம் தவம் செய்து பூமா தேவி ப்ரத்யக்ஷம் ஆகிறாள்.
”ப்ராமணா, உன் தவத்தை மெச்சினேன். என்ன வரம் வேண்டும் கேள்?”
”எனக்கு வயதாகிவிட்டது. மூப்பு பிணி வந்துவிட்டது. நான் என்றும் இளமையோடு பலகாலம் இருக்கவேண்டும்?”
”அவ்வளவு தானே, இந்தா இந்த தங்கநிற மாதுளையை சாப்பிட்டால் நீ என்றும் இளமையோடு இருப்பாய், திருப்தியா?” என்று கொடுத்துவிட்டு மறைந்தாள்.
பிராமணன் யோசித்தான். ”நான் இனி இளமையோடு இருந்து என்ன பயன்? இந்த நாட்டை ஆளும் அருமையான ராஜா பர்த்ருஹரி என்றும் இளமையோடு நீண்டகாலம் இருந்தால் எல்லோருக்கும் அது பயனளிக்குமே !” ராஜாவிடம் இந்த தேவலோக மாதுளையை கொண்டுபோய் கொடுக்கிறான் பிராமணன். விஷயம் அறிந்த பர்த்ருஹரி பிராமணனுக்கு நிலம், செல்வம் எல்லாம் பரிசளித்து மாதுளம் பழத்தை பெறுகிறான். ராஜா மனதில் ஒரு திடீர் எண்ணம். ”இந்த மாதுளம் பழத்தை என் காதல் ராணி அநங்கசேனாவிடம் கொடுத்து அவள் உண்டால் நீண்டகாலம் இளமையோடு இருந்து என்னை மகிழ்விப்பாளே ” . மாதுளை இப்போது கைமாறி அநங்கசேனாவிடம் . அநங்கசேனா ராஜா பர்த்ருஹரி மனைவியாக இருந்தாலும் அவள் மனதை கொள்ளை கொண்டவன் அரண்மனை தேரோட்டி. அவன் அழகன்.’ இந்த பழத்தை என் காதலனிடம் கொடுத்தால் என்றும் இளமையானவனாக என் மேல் ஆசையோடு இருப்பானே.”
ஒரு ரஹஸ்யம் சொல்கிறேன். தேரோட்டிக்கு உள்ளபடியே ஏற்கனவே வேறு ஒரு பெண் மேல் காதல். அரண்மனை குதிரை லாயத்தை கழுவி பெருக்குபவள். தேரை குதிரையில் பூட்டும்போதெல்லாம் சிரித்து அவன் மனதை கொள்ளைகொண்டவள். அவளிடம் மாதுளம் பழம் போகிறது. அப்புறம்? அந்த வேலைக்கார பெண் தங்க மாதுளையை ஒரு கூடையில் வைத்து வீட்டுக்கு எடுத்துப் போகும்போது அந்த வழியாக எதேச்சையாக வந்த பர்த்ருஹரி கண்ணில் தங்க மாதுளங்கனி பட்டுவிட்டது. விசாரணை துவங்கி எல்லா உண்மைகளும் வெளிவந்து பர்த்ருஹரி அதிர்ச்சி அடைகிறான். நாடு, மனைவி, அரசாட்சி, எல்லாமே வெறுத்து விட்டது. சே வாழ்க்கையே பெரிய சூன்யமாகி விட்டது ஏமாற்றம். துரோகம். அதர்மம், அக்ரமம் . சுயநலம். பொய் …
தம்பி விக்கிரமாதித்தனை ராஜாவாக்கி விட்டு பர்த்ருஹரி துறவியாக செல்கிறான். இன்னொரு தம்பி பட்டி விக்கிரமாதித்தனின் மந்திரியாகிறான்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



