KUDHAMBAI CHITHTHAR J K SIVAN

எளிதில் புரியும் ஒரு சித்தர் –  நங்கநல்லூர்  J .K. SIVAN
குதம்பை சித்தர்
திடீரென்று ஒரு பழைய பாட்டு நினைவுக்கு வந்தது.  சிதம்பரம் ஜெயராமனின்  ”குதம்பாய், காசு முன் நில்லாதடி”  என்ற வித்யாசமான குரல்  காதில் ஒலித்தபோது சித்தர் ஞாபகம் வந்தது.
சினிமா பாட்டுகளில் குதம்பாய் குதம்பாய் என்று பாடுகிறோமே  அது கண்ணதாசன் இல்லை.  அவருடைய  எத்தனையோ குருமார்களில்  ஒருவர்.  தமிழகத்தில் எத்தனையோ சித்தர்கள் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்று பலர் உள்ளவர்கள். அதிசய அபூர்வ  அஷ்டமா  சித்தி படைத்த  சித்தர்கள்  மண்ணை பொன்னாக்குவார்கள், பறப்பார்கள்,தண்ணீருக்கடியில் பல வருஷம் வாழ்வார்கள். ஒரு உடலிலிருந்து இன்னொரு உடலுக்குள் புகுவார்கள்,  பற்றற்றவர்கள். எதிர்காலத்தை  நாம்  வாட்ஸாப்  செய்திகள் படிப்பதுபோல்  பட்டென்று  சொல்பவர்கள்.  விநோதர்கள்.
 ஒருவர் என்னிடம் ”சார்  நீங்கள் குதம்பை சித்தர் பாடல்கள் பற்றி எழுதுகிறீர்கள்  ஏன்  அவர் குதம்பாய் என்று ஒரு பெண்ணை பார்த்து இதெல்லாம் சொல்கிறார். ஆணுக்கு சொன்னால் என்ன ?. அவனுக்கு தேவை இல்லையா? ஒருவேளை சொன்னால்  கேட்கமாட்டானா? பெண்ணுக்கு தான் இந்த அறிவுரை அவசியமா?   என்று கேட்டார்.
”ரொம்ப நியாயமான கேள்வி. கட்டாயம் குதம்பை சித்தரை சந்தித்தால் இந்த கேள்வியை கேட்டு பதிலை வாங்கித் தருகிறேன்”என்று சொல்லி   நழுவினேன்.

 கவிஞர்கள் பெண்ணே, தோழி, என்று பாரதியார் போல் சிலர் விஷயங்களை கூறுவது ஆழ்வார்கள்  நாயன்மார்கள் காலத்திலிருந்தே இருக்கிறது. ஆண்  பெண்ணை விட மன உறுதி குறைந்தவன் என்று சொல்வதை விட, அவன் தனக்கு தேவையானதை மட்டுமே  யோசிப்பவன். நல்ல விஷயம் தேட ஆரம்பித் தானானால் அவனுடைய வேகத்துக்கு  ஈடு கொடுக்க முடியாது. பெண்ணை  விட ஆண்  சுதந்திரமானவன். கட்டுப்பாட்டுக்குள் அவனை கொண்டு  வருவது கஷ்டம்.

ஒரு பெண்ணுக்கு  நல்ல விஷயம்  ஒன்று சொன்னால் ஒரு வம்சத்துக்கே  சொன்ன  மாதிரி. குதம்பை சித்தருக்கு இது தெரியும். ஒருக்கால்  வேறொருவரும் கிடைக்காமல் குதம்பை என்கிற பெண்  ஓட வழியில்லாமல் அவரிடம் மாட்டிக் கொண்டிருப்பாளோ  என்னவோ ?

உண்மை என்னவென்றால்,  ‘குதம்பை’  என்பது ஒரு காதணி, கம்மல், கடுக்கன், தோடு மாதிரி.  குதம்பை சித்தரின் அம்மா அவருக்கு சிறு வயது முதல்  அதை அணிவித்து அழகு பார்த்தவள்.  அவர் காதோடு குதம்பை எப்போதும் இருந்ததால் அவரையே குதம்பாய்  என்று அழைத்து  பின்னர்  அவர்  சித்தரானபோதிலும் அந்த பெயர் நிலைத்திருக்கலாம்.
குதம்பைச் சித்தர் பாடல்கள் தத்துவங்களை அவர் தனக்கே சொல்லிக்கொள்பவைகளாக இருக்கிறது. அதுவும் வழக்கத்தில் உள்ளது தான்.  வேமனா  சதகத்தில் வேமனா தனக்கே சொல்லிக் கொள்வது போல் தான் நீதி அறிவுரைகள் சொல்வார்.  இதெல்லாம் ஆத்மோபதேசம் வகை.   ஏற்கனவே  வேமனா பற்றி சொல்லி இருக்கிறேனே.  இனி குதம்பை சித்தர் பாடல்கள் சிலவகற்றை படிப்போம். ”எந்த உயிர்க்கும் இரைதரும் ஈசனைச் சந்ததம் வாழ்த்தடியோ குதம்பாய் சந்ததம் வாழ்த்தடியோ.”

இறைவன் சகல உயிர்களையும் காப்பவன்.  கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும், கருப்பையில் ஜனிக்கும் சிசுவின்  உயிர்க்கும்  புல்லுணவாவது தருபவன் ஈசன். அவனை என்றும் மறவாதே. வாழையடி வாழையாக வணங்கப் பட  வேண்டியவன்.

”காணக்கிடையாத கற்பாந்த கல்பத்தை  நாணாமல் ஏத்தடியே குதம்பாய் நாணமற் ஏத்தடியே.

பகவான் ஆதி அந்தம் இல்லாதவன், முடிவிலாதவன். முடிவற்ற கல்ப காலத்திற்கு அப்பால் பட்ட அழிவற்ற  சத்யம். அவனைப்  போற்றிப் பாடு குதம்பாய் .

அணுவாய் பல்அண்டமாய் ஆன சிற்சோதியைத்   துணிவாய்நீ போற்றடியோ குதம்பாய்   துணிவாய்நீ போற்றடியோ.

 ”அவன் அணுவுக்குள் அணு. பெரிதிலும் பெரிதானவன்.  அண்ட  பகிரண்ட  ஞான தீபம். அவனை மனம் விரும்பி போற்றிப்பாடு குதம்பாய்.

”மாணிக்கக் குன்றிற்கு மாசற்ற சோதிக்குக்  காணிக்கை நன்மனமே குதம்பாய்  காணிக்கை நன்மனமே.”

பரமேஸ்வரன் எப்போதும்  நாம் எதையும் கேட்காமலேயே எல்லாம் அருள்கிறானே, அவனுக்கு  என்ன காணிக்கை தருவது என்றா கேட்கிறாய், குதம்பாய், வேறொன்றும் வேண்டாம்,  அந்த சுத்த ஜாதிக்கு நம்மால் கொடுக்க முடிந்த காணிக்கை, அவன் விரும்பும், நமது நல்ல மனம் ஒன்றே.  அதுவும் அவனே தந்தது. அதையே அவனுக்கு பரிசுத்தமாக கொடுப்போம்.

 ”வெட்ட வெளிக்குள் வெறும்பாழாய் நின்றதை இட்டமாய்ப் பார்ப்பாயடி குதம்பாய், இட்டமாய்ப் பார்ப்பாயடி.

அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாக இருக்கும் பரம்பொருளை சந்தோஷமாக மனதில் உணர்வாய். வேறென்ன வேண்டும். மனதே அப்படிப்பட்ட பெரு வெளி. மனதில் ஆன்மாவை பார்ப்பது தான் பரம் பொருளை, ஒன்றுமில்லாத ”பரவெளி” அருவமான வெட்டவெளி. ப்ரம்மம். குதம்பை சித்தர் ஆத்ம விசாரத்தில் ஈடுபடும் ஆனந்தத்தை, ஞானப்ரகாசத் தை பாடுகிறார்.

”எங்கு நிறைந்தே இருக்கின்ற சோதியை அங்கத்துள் பார்ப்பாயடி குதம்பாய். அங்கத்துள் பார்ப்பாயடி.”

அண்டத்தில் இருப்பது தான் பிண்டத்திலும் இருப்பது. உள்ளேயும் வெளியேயும் இருப்பது ப்ரம்மம் ஒன்றே. சர்வம் ப்ரம்ம மயம் . ப்ரபஞ்சம் பூரா மிளிர்கின்ற பரமனை உன்னுள் உன் மனதில், நீ தான் அது எப் போது என்று நீ உணர்கிறாயோ அன்று தான் நீ ஞானி.

”அண்டத்துக் கப்பால் அகன்ற சுடரினைப் பிண்டத்துள் பார்ப்பாயடி குதம்பாய், பிண்டத்துள் பார்ப்பாயடி”

சித்தரின் எளிய வேதாந்த தத்துவத்துக்கு என்னுடைய அர்த்தம் வேண்டாம். மேலே சொன்னது தான். டிட்டோ DITTO

”ஆவித் துணையாகும் ஆராவ அமுதத்தைச் சேவித்துக் கொள்வாயடி குதம்பாய்,சேவித்துக் கொள்வாயடி.”

நமக்குள்ளே இருப்பது பரமாத்மா. அதன் கண்காணிப்பில் இருக்கும் நாம் ஜீவன், ஜீவாத்மா. ஜீவாத்மாவுக்கு உறுதுணை யாக கலந்திருப்பவன்,   நம்மை சாக்ஷி பூதமாக  எப்போதும் கண்காணிப்பவன் பரமாத்மா.. உள்ளமெனும் கோவிலில் அவனை ஆனந்தமாக சேவித்து பயனடைவாயாக.

”தீண்டா விளக்கினைத் தெய்வக் கொழுந்தினை,மாண்டாலும் போற்றிடுவாய் குதம்பாய்,மாண்டாலும் போற்றிடுவாய்.”

பரமாத்மா, ஆண்டவன் ஸ்வயம்ஜோதி. யாரும் எண்ணெய் ஊற்றி திரி இட்டு தீபம் ஏற்றவேண்டாம். தானாகவே ஒளிவீசும் ஞான தீபம் அவன். அவனை அந்த ஞானப்ரகாசத்தை உன் மனதில் காண்பாய். அந்த தெய்வம் உன்னை மரண ஜனனம் தாண்டி என்றும் காக்கும்.

”அண்டமும் பிண்டமும் ஆக்கிய தேவனைத் தெண்டனிட்டு ஏத்தடியே குதம்பாய்,தெண்டனிட்டு ஏத்தடியே.”

ஆத்ம நாதனை மாணிக்க வாசகர் போல் அனுதினமும் கொண்டாடுவோம். தனியாக வேறு எந்த அர்த்தமும் தேவை இல்லை. திரும்ப திரும்ப படித்து ருசியை அனுபவித்து பழக்கத்தில் கொண்டு வர வேண்டியது ஒன்று தான் நமக்கு வேலை.

”விந்தை பராபர வத்தின் இணையடி சிந்தையில் கொள்வாயடி குதம்பாய், சிந்தையில் கொள்வாயடி”

அங்கிங்கு எனாதபடி எங்கும் ப்ரகாசமாக ஆனந்த பூர்த்தியாக திலங்கும் தெய்வத்தின் திருவடிகளை சரணடைவாய் மனமே. குதம்பாய், சொல்கிறேன் கேள். உன் மனதில் அவன் திருப்பாதங்களை விடாமல் நிலையாக இருத்திக் கொள் .

 

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;