
இம்ப்ரூவ்மென்ட். – நங்கநல்லூர் J K SIVAN
நல்ல விஷயங்கள் சட்டென்று கிசு கிசு போல் புரியாது. திருப்பி திருப்பி படிக்கவைக்கும். அப்புறம் கொஞ்சம் யோசிக்கவேண்டும். அப்புறம் அழகான உள்ளர்த்தம் புரியும். எத்தனை படித்தாலும் புரியாதது என்று சில விஷயங்களை ஓரம் கட்டிவிடுகிறோம். அதில் ஒன்றை எடுத்து உதறி, தூசி தட்டி என்ன என்று பார்த்தால், அதுவுமே இன்னும் புரியாமலே தான் இருக்கிறது. இது மாதிரியான விஷயங்களை தான் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக புரிய வைக்க முயல்கிறேன். அது என் பழக்கம். ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்வோமே என்ற ஆசை.
மஹா பெரியவாளைப் படித்ததில் அதைச் சுருக்கி புரிய வைக்க முயல்கிறேன்.
சாந்தோக்ய உபநிஷத்தில் ஒரு மஹா வாக்கியம் ”தத்வமஸி”.
” நீ தானப்பா அந்த பிரம்மம்”. இப்படி ஸ்வேதகேதுவுக்கு அவனுடைய அப்பா உத்தாலக ஆருணி திரும்ப திரும்ப ஒன்பது தடவை உபதேசம் செய்தார். என்ன அர்த்தம்?.
”தத்’= உன்னத பரமாத்மாவான பிரம்மம்; ”த்வம்”= ஜீவாத்மா; நீ நான் எல்லோரும் ”அஸி’= இருக்கிறாய்.
நீ யே பரப்ரம்மமாக இருக்கிறாய் – என்றைக்கோ ஒருநாள் அல்ல! எதிர்காலத்தில் எப்போதோ ஒரு சமயம் இல்லை; இப்போதும் எப்போதும் நாம் எல்லோரும் எல்லாமும் பிரம்மம்தான். இனி மேலே கஷ்டப்பட்டு ஒரு நாள் பிரம்மமாக வேண்டாம்.
அப்படியானால் முயற்சி, ஸாதனை எதற்கு? பிரம்மமாக இருந்தாலும் அதை நாம் தெரிந்து கொள்ளவில்லையே! தெரிந்தால் இத்தனை அழுகை, இத்தனை காமம், கோபம், இத்தனை பயம் நமக்கு இருக்கவே இருக்காதே! அலையே எழும்ப முடியாமல் ஆகாசம் வரை முட்டிக் கொண்டு நிற்கிற முழுசாக ஆனந்த சமுத்திரமாக அல்லவா இருப்போம்?
எனவே ”நீ எப்போதும் பிரம்மம் தானப்பா” என்றால் எப்படி? நாம் ப்ரம்மம் என்பதை உணரும் வரை நாம் ப்ரம்மம் இல்லை. மஹா பெரியவா அதைப் புரிய வைக்க ஒரு கதை சொன்னார்.சொல்கிறேன். நமது வாழ்க்கையே எதாவது ஒரு கதையை நம்பி தானே நடக்கிறது.
ப்ருஹதாரண்யக உபநிஷத் பாஷ்யத்தின் நடுவிலே (II-1-20) சங்கர பகவத் பாதாள், சிலந்தி தன்னிலிருந்தே நூலை இழுத்து வலை பின்னுகிற மாதிரியும், அக்னி தன்னிலிருந்தே பொறிகளை உதிர்க்கிற மாதிரியும் , ஆத்மாவிலிருந்தே அத்தனை பிரபஞ்சமும் தோன்றி யிருக்கிறது எனகிற மந்திரத்துக்கு ரொம்ப விஸ்தார மாக அர்த்தம் பண்ணிக்கொண்டு போகிறபோது, இந்தக் கதை வருகிறது.
ஒரு ராஜா அவன் மனைவி ராணி இருவருமே ஒரு நாள் எதிரி ராஜாவின் படையெடுப் பில் கொல்லப்பட் டார் கள். இளவரசன் குழந்தை. ஆகவே ராஜாவின் நல்ல மந்திரி மந்திரி இளவரசன் குழந்தையை காப்பாற்ற அவனை யாருக்கும் தெரியாமல் காட்டில் வேடர்கள் வாழும் பகுதியில் கொண்டு விட்டுவிடுகிறான். வேடர் கள் அவனை வளர்த்து பெரியவனாகிறான். பின்னால் அவன், தான் வேடன் இல்லை நாட்டின் ராஜகுமாரன் என்று அவனை தப்பிக்க விட்ட மந்திரி மூலமே பல வருஷங்களுக்கு பிறகு வாலிப வயதில் உணர்கிறான். இத்தனை காலமும் வேடப் பையனாகவே தன்னை நினைத்துக் கொண்டிருந்த காலத்திலும் அவன் ராஜ குமாரன் என்று அவனுக்கு தெரியவில்லை. வேடன் மாதிரியே வாழ்ந்தான். உண்மை புரிந்தவுடன் ராஜ குமாரனாகவே தெரியாமல் வாழ்ந்தவன் இப்போது அநுபவத்தில் ராஜாவாகிறான். வேடப்பையனும் ராஜகுமாரனும் இரண்டுபேர் இல்லை. ஒரே பேர்வழி தான். முதலில் தன்னை தெரிந்து கொள்ளவில்லை. புரியவில்லை. அப்புறம் புரிந்துகொண்டு விட்டான். புரியாத நிலையில் வேடனாக எங்கேயோ கீழ்நிலையில் வேடப்பையனாகி கிடந்தவன் புரிந்து கொண்டவுடன் ராஜகுமாரனாகினான். அப்புறம் எதிரி ராஜாவோடு சண்டை போட்டு ஜெயித்து ஸாம்ராஜ்யாதிபதி யாகவே ஆகிவிட்டான்.
நாமெல்லாருமே இந்த மாதிரி ”வேட” வேஷத்தில் தான் உள்ளோம். ஜீவாத்மா என்ற வேஷத்தில் ஸம்ஸாரிகளா கவே நம்மை நினைத்துக் கொண்டிருந்தாலும் வாஸ்த வத் தில் நாமும் பரமாத்மாவேதான். வேஷம் எப்படி யிருந் தாலும் உள்ளே இருக்கிற வஸ்து எப்போதும் பரமாத்மாதான். ஐம்புலன்களின் வசியத்தில் இழுக்கிற வழியில் ஒடி வேட்டை யாடிக் கொண்டி ருக்கிறோம். நாம் உண்மையில் பிரம்மம் என்று தெரிந்து கொள்ள விடாமல் இந்திரியங்கள் (ஐம் புலன் கள்) நம்மை வேறு திசைக்கு இழுத்துக் கொண்டே போகிறது. ராஜகுமாரனாகவே இருந்தாலும் வாஸ்தவத்தில் அரசத் தன்மையை அடைய அந்த வேடப்பையன் அஸ்திர சஸ்திர அப்பியாஸம் பண்ணி எதிரிகளை ஜயித்து ராஜாவான மாதிரி நாமும் பிரம்மம் என்பதை உணராம லிருப்பதால் கர்மத்தில் ஆரம்பித்து பக்தி வழியாக, ஞான சாதனைகளைச் செய்து, உட் பகைகளை யெல்லாம் ஜயித்து, ஆத்ம ஸாம்ராஜ்யத்தில் ராஜாவாகஆகவேண்டும். ‘ஸாம்ராட்’- அதாவது ராஜா – என்றே உபநிஷத்தில் ஆத்ம ஞானி யைச் சொல்லியி ருக்கிறது.
பார்ப்பதற்கு ஐஸ் கட்டியும் ஸ்படிகமும் ஒரே மாதிரி தான் இருக்கிறது. ஐஸ்தான் உருகி ஜலமாகுமே தவிர, ஸ்படிகம் ஜலமாகாது. எது ஜலமாகவே இருந்து அப்புறம் உறைந்து ஐஸ் கட்டியாக வேறே வேஷம் போட்டுக் கொண்டிருக்கி றதோ அதுதான் உருகி மறுபடியும் தன் ஸ்வயமான பூர்வ ரூபமான ஜலமாகிறது. பிரம்மமே ஜீவனாக உறைந்து போயிருப்பதால்தான், இந்த ஜீவாத்மாவும் உருகிப் போனால்மறுபடியும் பிரம்ம மாகவே அநுபவத்தில் ஆக முடியும் . ஐஸ் தானாக கரைகிறது. நாம் கரைய மாட்டோம் என்கிறோம். அது தான் வித்தியாசம்.
”கல்லேனும், ஐயா, ஒரு காலத்தில் உருகும் என் கல்நெஞ்சம் உருகவில்லையே! — என்று எவ்வளவு அழகமாக உருக்கமாக தாயுமான ஸ்வாமிகள் நமக்காக பாடி யிருக்கிறார் கதையில் ராஜகுமாரனை அவன் ராஜா என்று உணர்விக்க ஒரு மந்திரி வந்த மாதிரி, நம்மை ஜீவனிலிருந்து ப்ரம்மமாக்க ஒருத்தர் தேவை. அவன் வரமாட் டேன் என்று முரண்டு செய்தா லும் வலிய இழுத்த மந்திரி மாதிரி, பாரமார்த் திகத் தின் பக்கமே போகமாட்டேன் என்ற அடம்பிடிக்கிற நம்மைக் கட்டி இழுக்க ஒருத்தர் வேண்டும்.
நமக்கு நம் ” பரமாத்ம” த்வத்தை எடுத்துச் சொல்லி, அதை நாம் அநுபவமாக்கி கொள்வதற்கான ஸாதனை களைச் செய்ய வைத்து, நம் கர்மா பாக்கி தீருவதற்காக தாமே தபஸைச் செலவு செய்து உபகாரம் பண்ணும் அந்த ஒருத்தர் தான் குரு என்பவர். நாம் மஹா பெரிய வாளையே மானசீக குருவாக ஏற்று அவர் உபதேசங் களை படித்து புரிந்து கொண்டு வாழ்ந்தாலே போதுமே.. எவ்வளவோ இம்ப்ரூவ்மென்ட்…
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



