
அந்த போட்டோவின் நினைவு. நங்கநல்லூர் J K SIVAN
பழுப்பு நிறமான பழைய போட்டோ. அதில் வரிசையாக நான்கு ஐந்து பெண்கள் நின்று கொண்டிருக் கிறார்கள். அவர்களுக்கு முன்னாள் நாற்காலிகளில் ஆண்கள், சிலர் மடியில் சின்ன குழந்தைகள், அவர்கள் காலடியில் சில பெரிய குழந்தைகள். பெண்களில் ஒருத்தர் முகத்திலாவது சிரிப்பு என்பது கடுகளவு கூட கிடையாது. ஏதோ ஒரு பயத்தோடு புலியை நேரில் பார்த்தாற் போல் காமிரா மேன் படம் எடுப்பதைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள் போல் இருக்கிறது. இழுத்துப் போர்த்திய கழுத்தை மறைக்கும் மடிசார் புடவை, முழங்கை அளவு ரவிக்கை. அவர்களே தைத்துப் போட்டுக்கொண்டிருக்கிறார்களோ? ஒவ்வொருவர் ரவிக்கையும் ஒவ்வொரு மாதிரி மாடலாக இருக்கிறதே. சிலர் மூக்கில் புல்லாக்கு. எல்லோர் நெற்றியிலும் பழைய வெள்ளி ஒரு ரூபாய் நாணயம் அளவு குங்குமம். கருப்பாக, இல்லை பழுப்பாக தான் படத்தில் தெரிகிறது. கசங்கிய சுருக்கம் கொண்ட புடவைகள். கையில் கழுத்தில் காதில் என்னென்னவோ ஆபரணங்கள். அதன் பெயர் கேட்டால் இப்போது நமக்கு புதிதாக இருக்கும். புல்லாக்கு, நாக ஒத்து, ஓலை, வங்கி, கோதுமை சங்கிலி,ரெட்டை வடம், மகரகண்டி , காசுமாலை, தொங்கட்டான், சரப்பளி அட்டிகை, புஷ்பராக கண்டசரம்,கொப்பு , கருகமணி மாலை, இடுப்பில் ஒட்டியாணம். இதைத்தவிர அவரவர் கழுத்தில் தாலி.
எல்லோரும் ஒரே குடும்பத்தினர் .நெருங்கிய உறவினர். பல வயசு பெண்கள். குட்டையும் நெட்டையுமாக, குண்டும் ஒல்லியுமாக . நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஆசாமிகளில் அநேகர் அவரவர் மனைவி முன் அமர்ந்திருக்கும் கணவன்மார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி, அநேகமாக எல்லோருமே பஞ்சகச்சம் கட்டியவர்கள். ஒரு சிலர் கருப்பு கோட்டு, பாக்கெட் கடிகாரம் மாட்டியவர்கள் . சிலர் கண்ணாடி போட்டுக் கொண்டவர்கள். ஒரு சிலர் கையில் வாக்கிங் ஸ்டிக் , ஒரு சிலர் கையில் குண்டு புஸ்தகம். காலில் கருப்பு தோல் பூட்ஸ். அது ஒரு ஆடம்பரம். தலையில் தலைப்பாகை,தொப்பி, நெற்றியில் விபூதி குங்குமம். கழுத்தில் கௌடி சரடு. சிலர் ஜிப்பா, சிலர் வெறும் மேல் துண்டு. மடியில் ரெண்டு மூன்று வயதுக்குட்பட்ட பேரன் பேத்திகள். அந்த ஆண்கள் முகத்திலும் கூட சிரிப்பே இல்லை. கண்கொட்டாமல் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள் .சிலர் கையை விரித்து முழங்கால் மேல் வைத்துக்கொண்டு போஸ் .pose
கீழே தரையில் காலை மடக்கி, சப்பணம் போட்டு க்கொண்டு அமர்ந்திருக்கும் அரைநிஜார் பாவாடை சிறுவர் சிறுமிகள்.
அக்காலத்தில் ஒரு போட்டோ எடுத்து முடிக்க வெகு நேரம் ஆகும். அசையாமல் அப்படியே உட்கார்ந்திருக்க சொல்வர் போட்டோ எடுப்பவர்.. போட்டோ கிராபர் பெரிய காமெராவை முக்காலி ஸ்டாண்டில் சாய்த்து நிறுத்தி, கதையும் தனது தலையையும் ஒரு போர்வைக்குள் நுழைத்து எதிரே ஒரு வினோத மிருகம் போல் நின்று கொண்டு போட்டோ எடுப்பார். போட்டோ ஒரு வாரம் பத்து நாள் கழித்து கொண்டு வந்து கொடுப்பார்.
ஒரு முக்கியமான விஷயம். அந்த காலத்தில் போட்டோ அடுக்கும் வழக்கம் அதிகம் இல்லை. போட்டோ எடுத்தால் ஆயுசு குறைவு என்று ஒரு ஐதீகம் அல்லது பயம். அதனால் நிறைய முன்னோர்களை நாம் பார்க்க முடியாமல் போய்விட்டது.
இப்படி ஒரு போட்டோ என் வீட்டில் வெகு காலம் இருந்து பல வருஷங்கள் முன்பே காணாமல் போய்விட்டது. எனக்கு இன்று அந்த போட்டோ ஞாபகம் வர காரணம் நின்று கொண்டிருந்த பெண்களில் ஒரு ஓரமாக ஒல்லியாக அதிக உயரமில்லாமல் பயத்தோடு நின்றவள் என் அம்மா. அவள் உருவம் என்றும் கண் முன்னால் நிற்கும்.
திருமணம் என்றால் என்ன என்று புரியாத விளையாட்டுப் பருவத்திலேயே அம்மாவுக்கு திருமணமாகி விட்டது. பத்து பன்னிரண்டு வயதுக்குள் ற்குள் அவள் ஒரு மனைவியாகி விட்டாள் . அவள் கணவன் என்கிற பையனுக்கு 17 வயது. காலேஜ் மாணவன். இருவருமே சேர்ந்து பாண்டி பல்லாங்குழி விளையாடுபவர்கள். .
அக்காலத்தில் கல்யாணம் ஆனவுடன் புருஷன் வீட்டுக்கு போகமாட்டார்கள். ருதுவானபின் நாள் பார்த்து அனுப்பப்படுவாள். பெண்கள் பள்ளிக்கூடம் போனதில்லை. படிப்பு அவசியமாக தோன்றவில்லை. வீட்டில் நிறைய வேலை செய்ய பழக்கப் படுத்தப்பட்டவர்கள். அந்தக் காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது ஒரு டஜன் ஆசாமிகளாவது இருப்பார்கள். ஆண்கள் வேலைக்கு செல்வார்கள். வேலை என்றால் ஏதோ கம்பனி, ஆபிஸ் என்று கனவு காண வேண்டாம். வயல் தான். சிலர் பள்ளிக்கூட வாத்தியார்கள். காலை உணவு, மதியம் சாப்பாடு எல்லாமே வாழை இலையில் தான்.தட்டு அதிகம் உபயோகத்தில் இல்லை. மாலை எதாவது நொறுக்ஸ். வீட்டிலேயே கடலை எண்ணையில் பண்ணியது. இரவு முக்யமாக பலகாரம். இதை ருசி குறையாமல் தயாரிக்க வேண்டும். தயாரிக்க ஸ்டவ், காஸ் அடுப்பு எல்லாம் என்ன என்றே தெரியாத காலம் ஆச்சே. ஆகவே மூன்று குமிழ் வைத்த களிமண்ணால் வேயப்பட்ட மெழுகிய அடுப்பு. அதை நிரப்ப தோட்டத்தில், காட்டில் வெட்டப்பட்ட மரங்கள் விறகு என்று வெயிலில் காய வைத்தவை. , சுள்ளிகள். புகையை ஊதி அப்புறப்படுத்த ஊதாங்குழல் என்று இரும்பு குழாய். பெண்களால் மார்பு வலிக்க ஓதப்பட்டு அடுப்பு எரியும். கண்களில் நீர் வடியும். சாதம் வடிக்க பிரிச்டீஜ் குக்கர் கிடையாது. பெரிய பித்தளை தவலை அல்லது பெரிய வெண்கல பானை. சில வீடுகளில் பானை. அரிசி கொதித்து சாதமாகிவிட்டது என்று தெரிந்தவுடன். அதன் மேல் ஒரு தட்டு மூடப்பட்டு துணியால் குறுக்கே கெட்டியாக இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு இறக்கி கஞ்சி வடிக்கப்படும். காஞ்சி ஆறியவுடன், கொஞ்சம் மோர் பெருங்காயம், உப்பு போட்டு ஜலம் சேர்த்து குழந்தைகள் சாப்பிட்டு விடும். சூடான கஞ்சியோடு கொஞ்சம் பால் சேர்த்து நாட்டு சர்க்கரை போட்டு சூடாக பருக பெரியவர்கள் காத்திருப்பார்களே.
வீட்டில் நிறைய குழந்தைகள் சின்னதும் பெரிசுமாக வத வத என்று மேயும். வீடு என்றால் ஒட்டு வீடு. ரெண்டு கட்டு மூன்று கட்டு என்று உள்ளே உள்ளே போய்க்கொண்டே இருக்கும். பின்னால் கொல்லை வரை செல்லும். கொல்லையில் நிறைய மரங்கள். செடிகள்,காய்கறி தோட்டம். மாட்டு கொட்டாய். பசு கன்றுக் குட்டி பசு எல்லாம் பின்னால் காத்திருக்கும். பெண்களே பால் கறப்பார்கள் . காப்பி டீ கிடையாது.
குழந்தைகளுக்கு மூன்று வேளையும் ஏதோ ஒரு சாதம். தனித் தனி தட்டுகள் கிடையாது. அனைத்து அரை டிக்கெட்களும் 3 லிருந்து 15 வரை வரிசையாகவோ வட்டமாகவோ உட்கார்ந்திருக்கும் . வட்டத்தின் நடுவே பெரிய பாத்திரத்தில் கலந்த சாதம், பிசைந்த சாதம் தயாராக இருக்கும். ஒரு முதியவள், பாட்டியோ, அத்தையோ, சித்தியோ, அம்மாவோ அதை வட்டத்தின் உள்ளிருந்து ஒவ்வொரு நீட்டப்பட்ட கையிலும் ரச வண்டி, குழம்பு சாதம், தயிர் சாதம் போடுவாள். ஒரு கைக்கு போட்டு விட்டு மறு கைக்கு நகர்வாள் . ரெண்டு சுற்று, மூன்று சுற்றிலேயே பாத்திரம் நிறைய இருந்த தயிர் சாதமோ, குழம்பு சாதமோ, ரசம் சாதமோ காலி யாகிவிடும். சாதத்திற்கு தொட்டுக்கொள்ள ஒவ்வொரு கைப்பிடியிலும் ஏதாவது ஊறுகாயோ, காயோ வைத்து கலந்து தான் போடுவாள். தேவாம்ருதமாக இருக்கும் அந்த சாப்பாடு. பசி, இப்போது மாதிரி நொடிக்கு ஒருதரம் திறந்து உள்ளே வேட்டையாட fridge எனும் குளிர் சாதன பெட்டிகளோ, அலமாரியில் பிஸ்கட் டப்பாக்களோ, கிடையாதே. சோம்பேறித்தனமாக உட்கார்ந்து பொழுது போக்க டிவியோ கம்ப்யூட்டரோ, ஐபாடோ கிடையாது. ரேடியோ என்றால் என்னவென்றே தெரியாது. ஒருவரோடு ஒருவர் பேச டெலிபோன் கூட இல்லாத காலம். இப்போது மாதிரி கர்ண குண்டலமாக ஒட்டிக்கொள்ள ஒரு மொபைல் தொலைபேசி, கைப்பேசி கிடையாது. குடிக்க ஆர்வோ தண்ணீர் கிடையாது. ஆற்றிலிருந்து மொண்டு வந்த தவலையில் உள்ள ஜலம், அல்லது பானையில் உள்ள நீர் தான் எல்லோருக்குமே.
அன்றன்று தயாரிக்கும் உணவுக்கு அரைக்க கரைக்க மிக்சி கிடையாது. கல்லுரலில் நிறைய அரிசி, பருப்பு போட்டு மாங்கு மாங்கு என்று அரைப்பார்கள். காலை நீட்டிக்கொண்டு சிலர் அரிசி, பருப்புகளை எந்திரம் என்னும் இரு வலுவான வட்ட கல்லுக்குள் போட்டு அரைப்பார்கள். கீழ் வட்டக்கல் அசையாது. மேல் வட்டக்கல் ஒரு மர அச்சில் பொருத்தப்பட்டு ஒரு முனையில் கைப்பிடியாக ஒரு மரக் கோல் ..உபயோகித்து உபயோகித்து அந்த கைப்பிடி வழு வழு என்று இருக்கும். அரிசி நாம் வாங்குவது போல் பையில் வராது. நெல்லை குதிரிலிருந்து அப்பப்போது எடுத்து, புடைத்து, தூசி தும்பு நீக்கி, உரல் ( இதுவும் ஒரு கல்லால் ஆன உபகரணம்) அதன் வாய்க்குள் நிறைய நெல்லை போட்டு, மர உலக்கையால் இடிப்பார்கள். நெல்லை உமி நீக்கி, குருணை நீக்கி, அரிசியாக சேகரித்து அதை பெரிய பானைகளில் போட்டு வைப்பார்கள். அரிசிப்பானை இல்லாத வீடு அப்போது இல்லை.
பெரிய பானைகளில் புளி , வெல்லம், எல்லாம் சேகரித்து வைத்திருப்பார்கள். மளிகைக் கடைகள் என்று நிறைய கிடையாது. வீட்டுக்கு தேவையான அரிசி பருப்பு புளி காய்கறிகள், எல்லாம் அவரவர் நிலத்தில் இருந்தே கிடைக்கும். எண்ணெய் செக்கிலிருந்து ( ஒத்தை அல்லது சில பெரிய செக்குகளில் ரெட்டை மாடு) சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கும். எள்ளு, கொப்பரை ஆகியவைகளை செக்கில் இட்டு அதை வழ வழப்பான கனமான ஒரு உலக்கை போன்று ஒரு உபகரணம் அரைத்துக்கொண்டிருக்கும் அந்த உலக்கையின் கழுத்தில் இருந்து வரும் கயிறு மாட்டின் நுகத்தடியிலிருந்து வரும் மரத்தில் இணைக்கப் பட்டிருக்கும். மாடு நகர நகர, சுற்றி வர, அந்த தடியான மர உலக்கை செக்கில் உள்ள கொப்பரையையோ எல்லையோ நசுக்கி எண்ணையாக அரைத்துக்கொண்டிருக்கும். பிறகு தெளிய வைத்து வடிகட்டி எண்ணையை பீப்பாய்களில் நிறப்பி விற்பார்கள். வீசை தோலா கணக்கு அப்போது. காலணா, அரையணா, மொட்டைத்தலை எட்வர்ட் ரூபாய், கிரீடம் வைச்ச விக்டோரியா ராணி போட்ட வெள்ளிக்காசு என்று இருந்தது.
Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



