MY MOTHER’S GREAT GRAND FATHER. J K SIVAN

எனது ஆதித்ய ஸ்வரூப மாத்ரு ப்ரபிதா மஹான்
நங்கநல்லூர் J K SIVAN

ரெட்டைப் பல்லவி தோடி சீதாராம பாகவதர்
நான் தர்ப்பணம் பண்ணும்போது என் தாய் வழி வர்க்கத்தில் அம்மாவின் கொள்ளுத் தாத்தாவுக்கும் தர்ப்பணம் பண்ணுகிறேன். மாத்ரு ப்ரபிதா மஹான் என்ற உறவில் அந்த மஹானுக்கு தர்ப்பணம் பண்ணும் பாக்யம் எனக்கு இருப்பதை பெருமையாக கொள்கி றேன்.
யார் அந்த மாத்ரு ப்ரபிதா மஹான், ஆதித்ய ஸ்வரூபத்தில் நான் இறைக்கும் எள்ளும் தண்ணீரும் ஏற்றுக்கொள்கிறவர்?
அவரை நான் பார்த்திருக்க வழியே இல்லை. 250 வருஷங்களுக்கு முன்பு இருந்தவர். அவர் பெயர் ”ரெட்டைப்பல்லவி தோடி சீதாராம பாகவதர்”. என் தாத்தாவையே அவரது 70 களில் தான் நான் ஓரிரு முறைகள் எனது ஐந்து வயதுக்குள் பார்த்திருக்கிறேன். எப்படி அவர் தாத்தாவை அறிவேன். ஒரு போட்டோ கூட எங்கும் கிடையாது. அவர் எப்படி இருப்பார் என்பதே கற்பனை தான்.
ஆனால் அவர் ஒரு அபூர்வமனிதர் என்பது என் தாய்வழி தாத்தா பிரம்மஸ்ரீ ‘புராணசாகரம்’ (இது மஹா பெரியவா கொடுத்த விருது) வசிஷ்ட பாரதிகள் தனது முன்னோர்களைப் பற்றி எழுதி வைத்ததில் இருந்து அறிந்தது.
சங்கீத த்ரி மூர்த்திகளில் ஒருவரான திருவையாறு தியாகராஜ ஸ்வாமிகள் காலத்தில் வாழ்ந்தவர் தாத்தா வின் தாத்தா, தோடி சீதாராமய்யர். அவர் அற்புதமாக பாடும் தோடி ராகத்தை வீட்டுச் செலவுக்கு பணம் இன்றி உடையார் பாளையம் ஜமீன்தாரிடம் 13 ரூபாய்க்கு ( ஒரு வராகன்) அடகு வைத்து தஞ்சாவூர் மராத்திய ராஜாவால் மீட்கப்பட்டு மீண்டும் தோடி ராகம் பாடிய தோடி சீதாராமய்யரின் பெயரை தாத்தாவின் மூத்த சகோதரருக்கு வைத்திருந்தது. அப்புறம் அந்த பெயரை தாத்தா என் முதல் மாமாவுக்கு வைத்தார்.
வறுமையும் வளமையும் இரவும் பகலும் போல. வறுமையும் புலமையும் ரெட்டைப் பிறவிகள் என்றும் சொல்லலாம். ஏனெனில் சரஸ்வதி இருக்குமிடத்தில் அவ்வளவாக லக்ஷ்மி குடியிருப்பதில்லை என்று தான் தெரிகிறது. ஏன் அவர்களே சேர்ந்து இருக்க மாட்டேன் என்கிறார்களோ?
ரெட்டைப் பல்லவி தோடி சீதாராமய்யர் குடும்பம் நடத்த முடியாத ச்ரமதசைக்கு தள்ளப்பட்டார். அவருடைய வருமானமான சன்மானங்களை விற்று சாப்பிட்டாகி விட்டதே. இனி என்ன இருக்கிறது நம்மிடம் என்றபோது தான் அவருக்கு சிரிப்பு வந்தது. கையில் வெண்ணையை வைத்துக்கொண்டே அல்லவா நெய்க்கு அழுகிறேன்?. எது என்னை இத்தனை நாள் ராஜ போகத்தில் வைத்ததோ அந்த வித்தை இப்போதும் உதவட்டும். பூமி சொத்து இருந்தால் அதை அடமானம் வைத்து சாப்பிடுவது எல்லோரும் அறிந்தது. அத்தகைய சொத்து எதுவுமே இல்லையே?
கனம் கிருஷ்ணய்யர்( தமிழ் தாத்தா உ.வே.சா வின் உறவினர்) சீதாராமய்யருக்கு தாய் மாமன் வகையில் உறவு. மேலும் சீதாராமய்யர் தகப்பனார் கனம் கணபதி ஸாஸ் திரிகளிடம் கனம் பயின்றவர் வேறு. அவர் உடையார் பாளையம் ஜாமீனில் ஆஸ்தான வித்வான் என்பதும் ஞாபகத்துக்கு வரவே அவர் மூலம் உடையார் பாளையம் ஜமீன்தார் யுவரங்க பூபதியை நேரில் சென்று சந்தித்தால் என்ன?என்று முடிவு செய்தனர். கிருஷ்ணய்யர் ஜமீன்தாரை சந்திக்க ஏற்பாடு செய்தார். சீதாராமய்யர் ஜமீன்தார் சமூகத்தில் அவரை வணங்கி நின்றார்.
” இவர் யார் ?” ஜமீன்தார்கிருஷ்ணய்யரிடம் கேட்டார்.
” தஞ்சாவூர் மகாராஜா சமூக வித்வான்”
” உங்களுக்கு இவரை எப்படி தெரியும்?”
”என் குருவின் புத்திரன். மேலும் எனக்கு பந்துவும் ஆனவர்”
”இவர் பெயர் என்ன?”
”கன, நய, தேசிக, ஜிகி பிகி, டால், உருகி, கமக , சம்ரதான (பிர்கா ),ரெட்டைப்பல்லவி, தோடி, சோல்ஜர் சீதாராமய்யர்.”
”பேஷ் பேஷ், இவ்வளவு பட்டப்பெயரா!!”
”அவருக்கு அவ்வளவு யோக்யதாம்சம் உண்டு”
ஜமீன்தார் சீதாரமய்யரைப் பார்த்து புன்முறுவலுடன், உமது பேர் கேட்டிருக்கிறேன். உங்களுடைய தகப்பனார் கணபதி சாஸ்திரிகள் தஞ்சாவூர் சமஸ்தான வித்வான் என்றும் அறிந்திருக்கிறேன். உமக்கு என்ன வேண்டும்?”
”எனது க்ரஹத்தில் சீமந்த கல்யாணம் வருகிறது. அதற்கு செலவுக்கு பணம் வேண்டும் ”
”ஒ, அப்படியா, நீங்கள் ராஜ சமூகத்தில் பாடுபவர். இங்கெல்லாம் பாட மாட்டீர்களே. நீங்கள் பாடினால் தருவோம். மேலும் ராஜ சமூகத்தை விட்டு எம்மிடம் வந்து சேர்ந்தால் வேண்டியது தருவோம் ”
சீதாராமய்யர் யோசித்தார். பாடுவதற்கும் மனமில்லை. தஞ்சையிலிருந்து குடி பெயர்ந்து உடையார்பாளையம் வரவும் துணிவில்லையே ! ஒரு கணம் யோசித்தவர், ஒரு தீர்மானத்துக்கு வந்தார்.
”ஜமீன்தார் அவர்களே, என்னிடம் உள்ள ஒரே சொத்து.சங்கீத வித்தை..அதையே உங்களிடம் அடகு வைக்கிறேன். அதை ஈடாக வைத்துக் கொண்டு பொருள் கொடுப்பீர்களானால் அது ஒரு பேருபகாரமாக இருக்கும் எனக்கு.”
”அது என்ன வித்தை?”
” பாடும் பல வித ராகங்களில் தோடி ஒரு மிகப் பிரசித்தமான ராகம். அதை தான் நாம் ராஜசபையில் பாடுவது வழக்கம். அதையே உங்களுக்கு இப்போது அடமானம் வைக்கிறேன்”
”வைத்தால்?”
”எந்த வருஷம், மாதம் தேதியில், சீட்டு எழுதி கொடுத்து வாங்குகிற தொகையை தங்களிடத்தில் திருப்பிக் கொடுத் து சீட்டை மீட்டுக்கொள்கிறேனோ, அதுவரை ராஜாவே பாடச்சொன்னாலும் அந்த ராகத்தை பாடுகிறதில்லை, இது சூர்ய சந்திராள், பூமாதேவி மேல் சத்தியம்”
ஜமீன்தார் யுவரங்க பூபதி இதைக் கேட்டு பெரு மகிழ்ச்சி அடைந்தார்.
”இவர் ஒரு வித்வான். பிரசித்தமானவர். இவருக்கு இந்த தருணத்தில், சீட்டை எழுதி வாங்கிக்கொண்டு தோடி ராகத்தின் மேல் பொருளை கடன் கொடுத்தால், எப்படியும் இந்த சீட்டின் மூலமாக நம்முடைய கீர்த்தி சிவாஜி மகாராஜா சமூகத்தில் ஏறும்” என்று சந்தோஷப்பட்டு ஒப்புக்கொண்டார்.
சீதாராமய்யர் கடன் சீட்டு எழுதிகொடுக்க, ஜமீன்தார் கேட்ட பணம் கொடுத்தார். மகிழ்ச்சியோடு சீதாராமய்யர் பணத்தோடு தஞ்சாவூர் திரும்பி தனது சீமந்த முகூர்த்தத்தை நன்கு சுற்றம் சூழ செய்து கொண்டார். ஒரு பெண் குழந்தை பிறந்தது. குலதெய்வம் பெயரில் அலமேலு என்று நாமதேயம்.வைத்து வீட்டில் எல்லோரும் அம்மணி என்று அழைத்தார்கள். அம்மணி தான் என் அம்மாவின் பாட்டி. தாத்தா வசிஷ்ட பாரதிகள் அம்மா. இந்த பெயரை மாமா சீதாராமய்யர் தனது முதல் பெண்ணுக்கு வைத்தார். மாமாவின் பெண் அம்மணி இன்றும் இருக்கிறாள்.
சீதாராம பாகவதர். பல சமஸ்தானங்களின் ஆதரவு பெற்று சிறப்புடன் வாழ்ந்த சங்கீத வித்வான். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ ஸ்வாமிகளை அடிக்கடி சந்தித்து பேசுபவர். இருவருக்கும் பரஸ்பர மரியாதையும் நல்ல நட்பும் உண்டு. தியாகராஜ ஸ்வாமிகள் வசித்த திருவையாறு கிராமத்தை தாண்டி தான் தனது ஊர் கார்குடிக்கு சீதாராம பாகவதர் அடிக்கடி செல்வார்.
வெள்ளைக்காரர்கள் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக மலைப்பாம்பு விழுங்குவதைப் போல் நாடு முழுதும் ஆக்கிரமித்து ஆண்டு விட முயன்ற நேரம். தஞ்சாவூரிலும் கலெக்டர் என்று ஒருவன் இருந்தான். அதிகாரம் முழுக்க அவனிடம். முடிசூடா மன்னர்கள். பரம்பரை பரம்பரையாக ஆண்ட மராத்திய ராஜாக்கள் கூட வெள்ளைக்காரனுக்கு பயந்தார்கள். அவனை திருப்தி படுத்தினார்கள். வெள்ளைத்தோலுக்கு அப்படி ஒரு மரியாதை. அந்த காலத்திலேயே இருந்து இன்று மாலை வரை கூட அந்த பழக்கம் நம்மை விட்டு போகவில்லை.
வெள்ளை தோல் காரர்களில் எல்லாருமே படித்தவனோ, பண்புள்ளவனோ, யோக்கியனோ இல்லை. வெள்ளை என்பது மஞ்சள், கருப்பு காப்பிக்கொட்டை போல ஒரு நிறம். அவ்வளவு தான். மனித தன்மை எவனிடம் இருக்கிறதோ அவனே உயர்ந்தவன்.
அந்த காலத்தில் இருந்த தஞ்சாவூர் கலெக்டர் பெயர் மாண்ட்கோமரி. அவன் ரொம்ப நல்லவன். கெடுபிடி அதிகார தோரணை உண்டு. அது அந்த காலத்தில் எல்லா வெள்ளைக்காரனுக்கும் உண்டு. நான் சின்ன பையனாக இருந்தபோது கோடம்பாக்கத்தில் சூளைமேட்டில் சுதந்திரத்துக்கு முன்னால் நிறைய வெள்ளைக்காரர்கள் இருந்தார்கள். ஒருவன் ப்ரெய்ச்சி என்று பெயர்கொண்ட ஒல்லி ஆள். முழுக்கை அழுக்கு சட்டையை பேண்டுக்குள் நுழைத்து முதுகு கூனி தடிமனான கண்ணாடி போட்டுக்கொண்டு நடந்து போவான். எங்கோ ஒரு அரசாங்க உத்யோகம் அவனுக்கு. பெரிய உத்யோகமாக இல்லை என்று இப்போது நினைக் கிறேன். குமாஸ்தாவாக இருக்கலாம். ஆனால் அவனைக் கண்டபோதெல்லாம் எல்லோரும் ஸலாம் அடிப்போம். அவனும் திருப்பி அடிப்பான். வழி விடுவோம். மரியாதை காட்டுவார்கள் எல்லோருமே. அவன் நிறத்துக்காக.
1945-47லேயே மெட்ராஸ் பட்டணத்தில் இப்படி என்றால் 250 வருஷங்களுக்கு முன்பு தஞ்சாவூரில் எவ்வளவு கொடிகட்டி பறந்திருப்பான் வெள்ளைக்காரன்.
கலெக்டருக்கு ராஜாவின் சமூகம் ஒரு பெரிய விருந்து வைத்தது. முதல் முறையில் நடந்த அந்த பெரிய விருந்துபசாரத்தின் போது தான் பல சங்கீத பிரபல வித்வான்கள் கூடியிருக்க அன்று தானே ரெட்டைப் பல்லவி தோடி சீதாராம அய்யர் பாடி கலெக்டர் அவரை ”சோல்ஜர்” என்று பாராட்டினார்.
என்னமோ தெரியவில்லை. கலெக்டருக்கு சீதாராமய்யரின் குரல் பிடித்துவிட்டது போலிருக்கிறது, எனவேு ரெண்டாம் முறையாக ராஜா விருந்துக்கு அழைத்தபோது அந்த ”சோல்ஜர்” வந்து பாடுவாரா என்று தன்னை அழைக்க வந்தவர்களிடம் கேட்டிருக்கிறார். ராஜாவின் ஆட்கள் உடனே சீதாராமய்யர் வீட்டுக்கு ஓடினார்கள். அவரை பாட்டுக்கச்சேரிக்கு கூப்பிட்டார்கள்.
”சந்தியாவந்தனம் பண்ணிவிட்டு வேறு ஏதோ ராகத்தை தனக்கு தானே அனுபவித்துக் கொண்டிருந்த தோடி சீதாராமய்யர்
” ஆஹா ராஜா அழைத்தால் வராமல் இருப்பேனா. அவசியம் நான் வருகிறேன் ஆனால் ராஜாவிடம் சொல்லிவிடுங்கள் ” தோடி” ராகத்தைத் தவிர்த்து மற்ற ராகங்கள் வேண்டுமானால் பாடுகிறேன் . தோடியை அடகு வைத்துவிட்டதால் மீட்கும் வரை அது எனக்கு சொந்தமில்லை” .என்றார்.
தஞ்சாவூரை அப்போது சிவாஜி என்கிற மராத்திய ராஜா ஆண்டுவந்தான். அவனிடம் விஷயம் போனது. ராஜா அவரை அழைத்தார்
”ஐயர் வாள் ‘ உமக்கு தோடி சீதாராமய்யர் என்று தானே பிரசித்தியான பேர் .. அது இல்லாமல் கச்சேரி சோபிக்காதே. அதை தான் அந்த கலெக்டர் துரை ரொம்ப ரசித்து கைதட்டினான். நீர் அதை அவசியம் பாடவேண்டும். என் உத்தரவு ” என்றார் ராஜா.
”மகாராஜா, .மன்னிக்க வேண்டும். அதை நான் பண முடைக்காக அந்த ராகத்தை அடகு வைத்திருக்கிறேன். இன்னும் மீட்க முடியவில்லையே. என் செய்வது.”
”என்ன பேத்தல் இது. ராகத்தையாவது அடகு வைப்பதாவது? பைத்தியக்காரத் தனமாக இருக்கிறதே இது. என்னை நம்பச் சொல்கிறீரா. ஏமாற்றப் பார்க்கிறீரா?” ராஜாவின் கண் சிவந்தது.
”இல்லை மஹாராஜா நான் சொல்வது சத்தியமான வார்த்தை.”
உடையார் பாளையம் யுவ ரங்க பூபதி ஜமீன்தார் ராகத்தின் மேல் கடன் கொடுத்த விஷயத்தை சீதாராமய்யர் ராஜாவிடம் சொன்னார்.
சிவாஜி உடனே தனது மந்திரி சோம்நாத்தை பார்த்து ”அரே பாப் ரே பாப். க்யா சோம்னாத்ஜி , உடனே நீங்க போய் இந்த அய்யர் சொல்வது நிஜமா என்று விசாரிங்க ”
”அய்யர், நீங்க இங்கே இருங்க. அவங்க வந்து விஷயம் சொல்ற வரை இங்கே இருக்கணும்.”
குதிரை மீது ரெண்டு ஆட்கள் உடனே பறந்தார்கள். உடையார்பாளையம் ஜமீன்தாரிடம் விவரம் அறிந்தார்கள். அவரிடம் இருந்த கடன் சீட்டை மீட்க ராஜா கொடுத்த பணத்தில் தேவையான அசலையும் , வட்டியையும் கட்டினார்கள் மீட்பு சீட்டு வாங்கிக்கொண்டு ராஜாவிடம் வந்தார்கள்.”ஹா ஹா” என்று சிவாஜி ராஜா சந்தோஷத்தோடு சிரித்தார். ””ஐயர் உங்க தோடி ராகம் இந்தாங்க” என்று அந்த மீட்பு சீட்டை அவரிடம் நீட்டினார். ”இப்போ பாடுவீங்களா . இனிமே இந்த ராகத்துக்கு ஏதாவது ஆபத்து வந்தாலும் என்கிட்டே தான் முதல்லே சொல்லணும். தெரியுமா?”
கலெக்டர் விருந்து அன்று வெகு விமரிசையாக நடந்தது. பொங்கி வரும் வெள்ளமாக சீதாராமய்யர் தோடி ராகத்தை நிறைய புதுப் புது கல்பனா ஸ்வரங்களோடு நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரே ரசித்து பாடினார். பிரிந்த குழந்தையை மீட்ட அம்மா ஆசையாக கொஞ்சமாட்டாளா?. அடேடே இந்த ராகத்தையா நமது உடையார்பாளையம் யுவரங்கன் அடகில் வைத்து பணம் கொடுத்தான். பேஷ் பேஷ் என்று ராஜா சந்தோஷம் அடைந்தார்.
தோடி சீதாராமய்யர் பாடும் இடங்கள் வழக்கமாக மூன்று .
1. தஞ்சை மேலவீதி காமாக்ஷி அம்மன் சந்நிதி. – ஒவ்வொரு சுக்ரவாரமும்.
2. மகாராஜா சமூகம் — சபையில் ராஜா குறிப்பிடும் காலங்களில்.
3. திருவையாறு – சப்தஸ்தான உற்சவம் அன்று இரவு தில்லைத்தானம் ஆற்றங்கரை மணலில் பிரதி வருஷமும்.
மற்ற போதெல்லாம் தனது வீட்டுத் திண்ணையில் – சந்தோஷமாக இருக்கும் நேரங்களில் இதைத்தவிர அவர் எந்த ஊருக்கும் சென்றதில்லை, வேறு எவர் முன்னிலையிலும் பாடினதில்லை. தஞ்சாவூரில் இருந்த தோடி சீதாராமய்யர் ஒரு தெலுங்கு சங்கீத விதவானை நன்றாக தெரிந்து வைத்திருந்தார். அந்தக்காலத்தில் வித்துவான்கள் ஒருவரை ஒருவர் கண்டால் ரொம்ப சந்தோஷமாக உடன் பிறந்தவர்களை போல் மகிழ்ந்து கொண்டாடுவார்கள்.
அந்த தெலுங்கு வித்துவான் திருவையாறில் இருந்த சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான நாத ப்ரம்மம் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் தான். என் முப்பாட்டனார் தோடி சீதாராமய்யர் ஸ்வாமிகளை அடிக்கடி சந்தித்து பேசுவார். ஒருநாள் என்ன நடந்தது என்று அடுத்த பதிவில் சொல்கிறேன்.”

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;