
இன்று காண்பதும் அதே நிலா – நங்கநல்லூர் J K SIVAN
இன்று சித்ரா பௌர்ணமி. இந்த கோடை வெயிலில், அதுவும் இந்த வருஷம் அதிக உஷ்ணமாக இருக்கும்போது, குளிர்ச்சியான தென்றல் வீச பால் மழை பொழியும் பூர்ண சந்திரன் மேலே இருந்து ஒளி வீசிடும்போது என்ன சுகம்…. நிலவைப் பிரிக்காதவர் யாரேனும் உண்டோ?நமக்கும் நிலாவுக்கு எத்தனை வருஷம் உறவு! ”நிலா நிலா ஓடிவா, நில்லாமல் ஓடிவா ” என்று பாடி குழந்தைக்கு சாதம் ஊட்டும் அம்மாக்கள் நிறைந்தது நமது தேசம். பூரண நிலாவை பிடிக்காத்தவர்கள் இன்னுமே பிறக்கவே இல்லை எனலாம். அதிலும் சித்ரா பௌர்ணமி விசேஷமானது.
எத்தனையோ நாட்கள் மொட்டை மாடியில் பல மணிநேரம் நிலவைப் பார்த்துக்கொண்டு எனக்கு நானே பாடிக்கொண்டு பாயில் படுத்து ரசித்திருக்கிறேன். என் வீட்டில் நான்கு தென்னை மரங்கள். தென்னை ஓலை காற்று அசைந்து சுகமான தென்றலில் ஆடும் ஓசை இனிமையானது. அது வீசும் குளிர்ந்த காற்றில் இயற்கை AC யை அனுபவித்திருக்கிறேன். . வானத்தில் நக்ஷத்திரம் அங்குமிங்கும் எங்காவது தெரியும். மறையும். வடக்கு வானத்தில் திருசூலத்திலிருந்து புறப்படும் விமானங்கள் சத்தம் போட்டு என்னை மேலே பார்க்க வைக்கும். பூர்ண சந்திரன் வட்டவடிவமாக மஞ்சள் கலந்த ஆரஞ்ஜு நிறத்தில் கிழக்கே வானத்தில் தோன்றியபோது வணங்கி இருக்கிறேன். வானத்தில் அழகாக வட்டமாக முழு நிலா. பகலின் வெப்பத்தை அற்புதமாக இரவில் தணிப்பவன் பூரணச்சந்திரன்.
எல்லோருக்கும் எல்லாமும் அமைவது அபூர்வம். ”நல்ல” மனைவி என்ற வார்த்தை சொல்லவே மாட்டேன். நாம் நல்ல கணவன்மார்களாக நடந்து கொண்டால் எந்த தாலி கட்டிய பெண்ணும் நல்ல மனைவி யாகவே மாறிவிடுவாள் ”நல்ல கணவனாக” என்று சொல்லும்போது தான் சிக்கல் வரும். ப்ரம்ம தேவனால் கூட அதற்கு விளக்கம் சொல்லமுடியாது. மனைவியின் எதிர்பார்ப்புகள் பொறுத்து தான் அதை நிர்ணயம் செய்ய முடியும்.
யமதர்ம ராஜனுக்கு சித்ரகுப்தன் வலது கை . அவனைப் போல் ஒரு அஸிஸ்டண்ட் அமைவது அபூர்வம். ராமகிருஷ்ண ருக்கு விவேகானந்தர். சாமுவேல் ஜான்சனுக்கு ஒரு போஸ்வேல், ராபின்சன் க்ரூஸோவிற்கு ஒரு வெள்ளிக்கிழமை,(man Friday ) ராமனுக்கு ஒரு ஹனுமான். மோடிக்கு ஒரு அமித்ஷா போல என்று அடுக்கிக் கொண்டே போகலாம். யமதர்ம ராஜனின் நம்பகமான கணக்காளன் சித்ரகுப்தன். இவனுக்கும் மௌரிய வம்சத்து சந்திரகுப்தன், சமுத்திர குப்தன் ஆகியோருக்கு எந்த ஸ்நானப் ப்ராப்தியும் கிடையாது. அவன் க்ஷத்திரியன் இல்லை. இந்த சித்ரகுப்தன் தேவலோக வாசி. காமதேனு புத்ரன். பார பக்ஷமில்லாமல் பூலோக வாசிகளின் வாழ்க்கை குறிப்பு எடுத்து வைத்திருப்பவன். கொரோனா சமயத்தில், டிரம்ப் ஈரான் யுத்த சமயத்தில் சித்ரகுப்தனுக்கு எக்ஸ்ட்ரா வேலை. அவன் கணக்கிலோ கண்ணிலோ நாம் படாதவரை நமக்கு க்ஷேமம். இவன் குறிப்பின்படி தான் யமதர்மன் அந்தந்த ஜீவன்களுக்கு அவர்கள் செய்த பாப புண்ய காரியங்களுக்கு தக்கவாறு தீர்ப்பு தண்டனை வழங்குவான்.
இப்படிப்பட்ட அருமையான சித்ரகுப்தனை நாம் ஏன் நினைப்பதே இல்லை?. அவனும் அது பற்றி கவலைப்பட வில்லை. இடறி விழுந்தால் ஏதோ ஒரு சிவன், பெருமாள் கோவில் மேல் தான் விழ வேண்டுமென்ற அளவில் நிறைய கோவில்கள் உள்ள காஞ்சியில் இந்த சித்ரகுப்தனுக்கு ஒரு குட்டி கோவில் இருக்கிறது. நான் சென்று தரிசித்திருக்கிறேன்.
சித்ரகுப்தன் சூரியன் பிள்ளை, எமதர்மனின் தம்பி. கேது கிரஹ அதிதேவதை அவன். பௌர்ணமி அன்று அவன் கோவிலுக்கு பக்தர்கள் ரொம்ப வருவார்கள். சித்ரா பௌர்ணமி அன்று கேட்கவே வேண்டாம். உள்ளே நுழையவே வெளியே வெகுநேரம் ஹனுமார் வால் போல நீளமான வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் கூட்டம். காஞ்சிபுரம் நெல்லுக்காரர் தெருவில் அமைந்துள்ள அதிசய புராதனமான சின்னகோவில் இது. ஒன்பதாம் நூற்றாண்டு சோழன் யாரோ ஒருவன், சித்ர குப்தனை நினைத்திருக்கிறான். அவன் கட்டிய அதிசய கோவில் இது.
மூன்றடுக்கு ராஜகோபுரம். உள்ளே சித்ரகுப்தன் அமர்ந்துகொண்டு ஒரு கையில் எழுத்தாணி, இன்னொன் றில் சுவடு. எப்போதும் கடமையில் ஈடுபட்டு வேலையில் மும்முரமாக இருக்கிறான். கர்ணிகாம்பாள் சமேதன்.
இன்னொரு சேதி. சித்ரகுப்தனுக்கு மூன்று தேவியர்கள். கர்ணிகாம்பாள்,பிரபாவதி, நீலாவதி. சித்ர குப்தன் ஊர் அமராவதி . அவன் மனைவி கர்ணிகாவின் எட்டு குழந்தைகள் தான் பிற்காலத்தில் கர்நாடகாவில் வசிக்கும் கருணீகர்களின் முன்னோடிகள் என்பார்கள். ஆதம்பாக்கத்தில் கருணீகர் வீதி என்று பிரபலமான தெருவுக்கு அடிக்கடி போயிருக்கிறேன்.
தென்னிந்தியாவில் கிட்டத்தட்ட 14 கோவில்கள் சித்ரகுப்தனுக்கு இருக்கிறது. . காஞ்சிபுர சித்ரகுப்தன் கோவிலில் சித்ரவேலைப்பாடு நேர்த்தி. ஒரு தடவை சென்று பாருங்கள், அப்படியாவது நம்மை பற்றி அவன் நாலு வார்த்தை நல்லதாக எழுதட்டுமே .
சித்திரை பவுர்ணமிக்கு முன்னால் சித்ரகுப்தன் -கர்ணிகா அம்பாள் கல்யாண உத்சவம் நடக்கும். கர்னிகாவுக்கு வேறு பெயர் சித்ரலேகா. கல்யாணமாகி, சித்ரகுப்தன் பவுர்ணமி அன்று நகர்வலம் வருகிறார். திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டுச் சென்றால் திருமணம் நடைபெற்று இல்லறத்தில் இனிதே வாழ்ந்துவருகிறார்கள். இக்கோயிலின் மூலவர் சித்திரகுப்தரை வணங்கினால், இறப்பிற்குப் பின் ஞானமும், மோக்ஷமும் எளிதில் கிடைக்குமாம்.
ஒருநாள் வழக்கம் போலவே கைலாசத்தில் சிவ பெருமானும், பார்வதியும் அமர்ந்து பேசிக் கொண்டிரு க்கிறார்கள். ”தேவி! அவரவர்கள் செய்யும் பாவ புண்ணியங்களை எழுதி வைக்க ஒருவனை உருவாக்கி வைக்க நேரம் வந்து விட்டது ”ஆம்! சுவாமி” என்றார் பார்வதி
உடனே இருவரும் பிள்ளை வரம் வேண்டி கடும் தவமிருக்கும் தேவேந்திரனுக்கும், இந்திராணிக்கும் காட்சி யளித்து ”இந்திரா! கவலைப்படாதே! உன் எண்ணம் நிறைவேறும். மகிழ்ச்சியுடன் போ” என்று ஆசி கூறி அவர்களுடன் தெய்வப்பசுவான காமதேனுவை பசுங் கன்றாக மாற்றி உடன் அனுப்பி வைத்தார்.
”தேவி! ஒரு தங்கப்பாகையும், சித்திரக்கோலும் கொண்டு வா! என்றார் சிவன்.
அவற்றை உடனே அம்பிகை கொண்டு வந்தார் சிவபெருமான் வண்ணங்களை குழைத்து தூரிகைகளால் தன்னைப் போலவே ஒரு உருவத்தை பலகையில் வரைந்தார் அம்பிகை அந்த ஓவியத்தை உயிர்பிக்க கருணை ததும்பும் கண்களால் பார்த்தார்.
”சுவாமி! நீங்கள் வரைந்த இந்த ஓவியக் குழந்தையை நீங்களே கூப்பிடுங்கள்” என்றார்.
சிவபெருமான் தன் கைகளை நீட்டி ”சித்ர குப்தா வா ” என உள்ளம் நிறைந்த அன்போடு கூப்பிட்டார். ஓவியக் குழந்தை உயிர்பெற்று எழுந்தது. குப்தன் என்றால் கணக்குப்பிள்ளை என்றும் ஒரு அர்த்தம் உண்டு. அம்மையப்பனான பார்வதி பரமேஸ்வரனை வணங்கியது. பரமேஸ்வரன் அந்த சித்ர குழந்தையின் சிரத்தில் தனது கரங்களை வைத்து ஆசீர்வாதம் செய்து சித்திரத்தில் இருந்து பிறந்ததால் சித்ரகுப்தன் என பெயரிட்டார்.
”குழந்தாய் நீ நீடூழி வாழ்வாய், எல்லா ஜீவராசிகளும் அவரவர் செய்யும் எல்லா செயல்களையும் நீ ஒன்று விடாமல் கவனித்து பாவ, புண்ணிய கணக்கு எழுதும் வேலையை செய்து வா, இந்திராணி மாளிகை தடாகத்தில் நீ ஒரு பூவாக இரு. காமதேனு தண்ணீர் குடிக்கும் போது பூவான உன்னையும் சேர்த்து உண்ணும் அதன் வயிற்றில் இருந்து சித்திரை மாதம் பவுர்ணமி அன்று சித்திரை நட்சத்திரம் ஆதி வாரம் பிரம்ம முகூர்த்தம் (திங்கள்) அன்று நீ குழந்தையாக அவதரிப்பாய் .அதனால் இந்திரனின் குழந்தை இல்லா குறையும் தீரும்” என்றார். ஆகவே இந்திராணி பராமரிப்பில் இருந்த காமதேனு தண்ணீர் குடிப்பதற்காகத் தடாகத்துக்குச் சென்றது குளத்தில் தாமரைப் பூவாக மாறி இருந்த சித்தரகுப்தனை அந்தப் பசு ஆர்வத்துடன் தின்றது.
சிவபெருமான் அருளாசியால் அந்தப் பசுவுக்கு வயிற்றில் ஏடும், எழுத்தாணியும் கொண்டு சித்திரகுப்தன் சித்திரை மாதம் பவுர்ணமி அன்று சித்திரை நட்சத்திரம் ஆதி வாரம் பிரம்ம முகூர்த்தத்தில் மகனாய் அவதரித்தார் .சித்திரம் என்றால் ஓவியம். குப்தன் என்றால் ரஹஸ்யன் .
மனிதன் உயிருடன் இருக்கும் போது செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஏற்றவாறு அவனுடைய இறப்புக்குப் பின்பு, அவனுடைய ஜீவன் அதற்கான பலன்களை அடைகிறது. அவன் செய்த நற்செயல்களுக்கு நற்பலன்களையும், தீயசெயல்களுக்குத் தண்டனைகளையும் அந்த ஜீவன் அடைகிறது.
இந்தப் பூமியில் நாம் செய்யும் அனைத்துச் செயல்களையும் இறைவன் சிவபெருமான் சித்ர குப்தரைக் கொண்டு கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார். தெரியாமல் செய்த தவறு களை மன்னிக்க வேண்டியும், இனி எந்தத் தவறையும் செய்யப் போவதில்லை என்பதை உறுதியாகக் கொண்டும் சித்திரகுப்தனை நாம் வழிபட வேண்டும். ஜீவனுக்கு தீய செயல்களில் இருந்து விடுவிப்பு கிடைப்பதுடன், அந்த ஜீவன் நரகம் செல்லா மல் காப்பாற்றப்பட்டு சொர்க்கத்துக்கு அனுப்பப்படும் என்கிற நம்பிக்கை உள்ளது. சித்ரகுப்தரை வணங்கு பவர்கள் கேதுவால் ஏற்படும் தொல்லைகளில் இருந்தும் விடுபடுவார்கள்.
காஞ்சிபுர சித்ரகுப்தன் கோவிலில் மூலவராக உட்கார்ந்து கொண்டும், , உத்ஸவராக நின்ற நிலையிலும் சித்ரகுப்தன் அருள்பாலிக்கிறார். இந்தக் கோயில், கருணீகர் மரபினரால் நிர்வகிக்கப்படுகிறது.சித்ரா பௌர்ணமிதோறும் இந்திரனே இந்த ஆலயத்தில் வந்து பூஜிப்பதாக ஐதீகம். பிராமண நித்ய கர்மானுஷ்டானத்தில் யமவந்தனம் என்று ஒன்று, சாயங்கால வேளையில் அஸ்தமனத்தில் சூரியன் மறையும் முன் ஸந்த்யாவந்தனத்தில் செய்வது.
அதில் மரணத்தைப் பற்றி – அதாவது யமனைப் பற்றி ஓர் ஸ்லோகம் தான் ”வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:”
வ்ருகோதரன் என்றால் ஓநாய் போன்ற பெரிய வயிறு உடையவன் என்று பொருள். மரணம் ஒரு கட்டத்தில் எல்லா உயிர்களையும் உண்டு விடுகிறது. மரணத்தின் வயிறு பெரிது என்று சொல்வது ஒரு கவித்வ அழகு. மரணத்தை அழகானவன் என்று வர்ணனை. நிறைவான வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு மரணம் அழகான நண்பன்.
சித்ரகுப்தன் என்றால் நம் பாவ புண்ணியங்களைக் கணக்கு வைத்துக்கொள்பவன் என்று தப்பர்த்தம் செய்து கொண்டு விட்டோம். யமனுக்கு வடமொழியில் சித்ரகுப்தன் என்று ஒரு பெயர். குப்த என்றால் ரகசியம். சித்ர என்றால் அழகான மரணம். ஓர் அழகான ரகசியம். அதற்குரிய காலம் வரும்போது அதைத் தெரிந்து கொள்ளலாம். இப்போது வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு ராஜா ஒரு சந்யாசியை வணங்கி வேண்டினான்
”ஸ்வாமி எனக்கு ஆசிர்வாதம் பண்ணுங்கள்”
“உன் தந்தையார் சாவார், அப்புறம் நீ சாவாய், உன் பிள்ளை மகன் இறப்பான். அப்புறம் அவன் பிள்ளை, உன்பேரனும் இறப்பான்”
சந்நியாசி இப்படி ஆசிர்வதித்தால் ராஜாவுக்கு எப்படி இருக்கும். ரொம்ப கோபத்தில் கண்கள் சிவந்தது.மீசை துடித்தது. “இப்படியா ஒருவனை வாழ்த்துவது?” என்று பொங்கி எழுந்து உரக்க கேட்டு விட்டான்.
” இல்லை ராஜா, இதுதான் உச்சகட்ட மகிழ்ச்சி. யாருமே நிரந்தரமாக வாழ முடியாது. முதலில் நிறைவாக வாழ்ந்துவிட்ட உன் தந்தை இறக்க வேண்டும். அதன்பின் நீயும் நிறைவாக வாழ்ந்து இறக்க வேண்டும். இப்படி வரிசைக் கிரமத்தில் மரணம் நிகழுவதுதான் பெரிய வரம். இந்த வரிசை கொஞ்சம் மாறினால் அதனால் நடக்கும் விபரீதங்களைச் சிந்தித்துப் பார். உன் தந்தை உயிருடன் இருக்கும்போது நீ மாண்டால் அந்தப் புத்ர சோகத்தை அவரால் தாங்கிக் கொள்ள முடியுமா?”
சந்நியாசியின் வாக்கு ராஜாவுக்கு புரிந்து அவன் சாந்தமானான். நிறைவாக வாழ்ந்து விட்டவனுக்கு ஆசை இருக்காது. ஆசையில்லாத மனிதனை மரணத்தால் பயமுறுத்த முடியாது. தன் வாழ்க்கையில் விரும்பியதையெல்லாம் செய்து முடித்தவனை “க்ருதக்ருத்யன்” என்று மகாபாரதம் சொல்கிறது. அப்படிப்பட்டவனுக்கு மரணம் ஓர் இனிய நண்பன் என்றும் சொல்கிறது. காயஸ்தர்கள் என்ற வம்சம் சித்ரகுப்தன் வம்சாவழி என்பார்கள்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



