
மஹா பாரத வெள்ளம் – நங்கநல்லூர் J K SIVAN
”ஓம்” என்ற பிரணவ சப்தத்தோடு பகவானை வேண்டிக்கொண்டு அனைத்து மஹநீயர்களுக்கும் சாஷ்டாங்க நமஸ்காரத்துடன் தான் மஹா பாரத காவ்யத்தை தொட்டு தமிழில் ”ஐந்தாம் வேதமாக” ஆயிரம் பக்கங்களில் ரெண்டு பாகமாக, ஐந்து வர்ண படங்களுடன் எழுதி வெளியிட்டேன். (புத்தகம் வேண்டுவோர் என்னை அணுகலாம் 9840279080)
அதில் சில காட்சிகளை விவரிக்க மனம் விழைகிறது. அப்பப்போ கொஞ்சம் கொஞ்சமாக முடிந்த போதெல்லாம் சொல்லுகிறேன்.
நான் வ்யாசனல்ல . பாரதத்தை தமிழில் பொழிந்த வில்லிப்புத்தூராரும் இல்லை. ஒரு சாதாரணன். குழந்தைகளுக்கு புரியும்படியாக கதை சொல்ல விழைபவன். அதற்காகத் தெரிந்தவரை, முடிந்தவரை, முயற்சிப்பவன். யார் எழுதிய பாரதத்தையும் முழுமையாக எழுதும் உத்தேசமும் இல்லை. சிறந்த விஷயங்களை எங்கிருந்தாலும் சேர்த்து தொடுத்து கதை களாக வடித்து ,சுவையாக அளிக்க, மட்டுமே இதில் என் முயற்சி காணப்படும். பெரியோர் அறவோரின் வழி காட்டவே எண்ணம். ஒவ்வொருவரும் வாழ்வில் ஒரு தரமாவது விரும்பி ரசித்து ருசித்து மகிழவேண்டியவை தான் ராமாயணமும் மகாபாரதமும். இனிப்பு நிறைய வாங்குமுன் சிறிது ”சுவைக்க” (சாம்பிள்) தருவார்களே (எங்கள் காலத்தில் தருவார்கள், இப்போது ??) . அதுவே இது.
++
நைமிசாரண்ய வனத்துக்கு உக்ரஸ்ரவர் எனும் சுத மஹரிஷி வருகிறார். அங்கே தவம் செய்யும் எல்லா ரிஷிகளும் சூழ்ந்து உபசரித்து ஆசனமளித்து அவரிடம் கேட்கிறார்கள் ;
”குருவே எங்கிருந்து வருகிறீர்கள்?”
‘ ஜனமேஜய மஹாராஜா நடத்திய சர்ப்ப யாகத்துக்கு சென்றேன். அங்கே ‘பரீக்ஷித் மஹாராஜா சுக ப்ரம்மரிஷி யிடம் கேட்டதையும் ஜனமேஜயனுக்கு வைசம்பாயனர் வேதவியாசரிடம் கேட்ட விஷயங்களை சொன்னார். நானும் அங்கே தான் மஹா பாரதம் பற்றி வைசம்பாயனர் சொல்லக் கேட்டேன். மஹா பாரத யுத்தம் நடந்த சமந்த பஞ்சகம் எனும் குருக்ஷேத்ரத் துக்கு சென்றேன். பிறகு இங்கே வந்து ரிஷிகள் உங்களை எல்லாம் தரிசிக்க வந்தேன்.
”மகரிஷி சுதரே , நீங்கள் எங்களுக்கு வைசம்பாயன ரிஷியிடம் கேட்ட மஹா பாரதத்தை உபன்யாஸம் செய்யவேண்டும்.
சுதர் சொல்கிறார்;
”முதல் யுகம் ஆரம்பத்தில் எங்கும் காரிருள். அப்போது ஒரு மஹா திவ்யமான ஒரு பொன்னிற முட்டை யிலிருந்து ப்ரம்மா, எனும் பிரஜாபதி உதயமானார். பின்னர் அவரிடமிருந்து மேலும் 21 ப்ரஜாபதிகள். மனு, வசிஷ்டர், பரமேஷ்டி, ப்ரசேதஸ் , தக்ஷன். அவன் 7 பிள்ளைகள், விஸ்வே தேவர்கள், ஆதித்யர்கள், வசுக்கள், அஸ்வினி தேவதைகள், யக்ஷர்கள், சாத்யார், பைசாசங்கள், இன்னும் பலர் உருவானார்கள். அவர்களிலிருந்து தான் ப்ரம்ம ரிஷிகள், ராஜரிஷிகள் எல்லோரும் தோன்றினார்கள். முதல் யுகத்தில் இவ்வாறு பஞ்ச பூதங்களும் உருவாயின. பருவம், காலம், பக்ஷம் இரவு பகல் சகலமும் தோன்றியது. மனித இனம் பெருகியது. தேவர்கள் 33,333 பேர் தோன்றினார்கள்.
அனைவருக்கும் தெரியும். வியாசர் சகலத்தையும் கரைத்து குடித்தவர். அதை உலகிற்கு எடுத்து சொல்ல, எழுத்தில் நிலை நாட்ட வேண்டும். இது பற்றி தான் பேச்சு நடந்தது அங்கு. பிறகு வந்தவர்கள் பேர்களை சொன்னால் தலை சுத்தும். உதாரணத்துக்கு கொஞ்சம்.
திவி மகன் ப்ரஹத்பானு, சக்ஷுஸ், ஆத்ம விபாவசு, சவிதா, ருசிக்க, அரக்கன், பானு,அஸவகன் ரவி.விவஸ்வான் தேவ விரதன், ஸுவ்ரதன், தச ஜோதி சத ஜோதி, சஹஸ்ர ஜோதி என ஆயிரக்கணக்கானோர். இதிலிருந்து வந்த வம்சங்கள், குரு , யது , பரத , யயாதி, இக்ஷ்வாகு. பராசரருக்கு சத்யவதி மூலம் பிறந்தவர் கிருஷ்ண த்வை பாயானர் எனும் வேத வியாசர்.
ஹிரண்யகர்பன் எனப்படும் பிரம்மா. நிறைய ரிஷிகள் சூழ ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவர் எதிரே த்வைபாயனர் எனப்படும் வியாசர் உள்ளார். பிரம்மாவிடம் வியாசர் வேண்டுகிறார்.
”பரமேஷ்டி ப்ரம்மா, வேதங்களை ஆராய்ந்து பகுத்து மனதில் விளக்கமாக வைத்த்துள்ளேன். முக்காலமும் கூடிய விஷயம் அது. சகல பர்வதங்கள், நதிகள், க்ஷேத்ரங்கள் எல்லாம் கூடியது இதை சுவடியில் வடிக்க எவரும் பூமியில் இல்லையே என்று ஏக்கமாக இருக்கிறது.”
”பிரணவ ஸ்வரூபன் கணேசனை மனதில் நினையுங்கள் காரியம் கைகூடும். துவங்குங்கள் அவர் வழிகாட்டுவார் ” என்ற தால் வியாசர் விநாயகனை பிரார்த்தித்தார். ”கணேசா, கணநாதா, என் மனத்தில் ஓடும் எண்ணங்களை ஸ்லோகமாகச் சொல்லத் துடிக்கிறேன். நீ அதை எழுத்தில் வடித்தால் சகலருக்கும் பயனுண்டே. செய்வாயா? ”
கணேசன் சிரிக்க, ஏன் என்று வியாசர் கேட்க, வியாச ரிஷியே,, நான் எழுதும் வேகத்திற்கு உங்களால் ஸ்லோகங்களை விடாமல் நிறுத்தாமல் சொல்ல முடியுமோ?” என்று யோசித்தேன். சிரிப்பு வந்தது என்றார்.
”அப்படியா, நீ சிறுவனாச்சே, வேகமாகச் சொன்னால் எழுதத் தடுமாறுவாயோ ஒருவேளை மெதுவாகச் சொல்லவேண்டுமோ என்று ஒரு தயக்கம் இருந்தது. பரவாயில்லையே. நான் சொல்லிக்கொண்டே வருகிறேன், உனக்குப் புரிபடாவிட்டால் அந்த இடத்தில் நிறுத்தினால் மட்டும் போதும், நடுவில் எந்த தடையும் குறுக்கிடாது” என்றார் வியாசர்.
”ஓம்” என்ற ஆரம்ப பிரணவ சப்தத்துடன் கணேசர் எழுத ஆரம்பித்தார். எதில் எப்படி எழுத ஆரம்பித்தார்? ஓலைச்சுவடியில் தனது ஒரு தந்தத்தை உடைத்து எழுத்தாணியாக்கி! அதனால் தான் விநாயகருக்கு ஒற்றைக்கொம்பன், ஏக தந்தன், என்று ஒரு பெயர். வியாசரின் வேதம் ஸ்லோக மாரி யாக பிரவாகித்தது. பல்லாயிரம் ஸ்லோகங்கள் மஹா பாரதமாக உருவாயின. ரெண்டு பேர் இதை முழுமையாக கேட்டு அனுபவித்து எடுத்து சொன்னவர்கள். ஒருவர் சுகர் பரிக்ஷித்துக்கு சொன்னவர். மற்றவர் சஞ்சயன் கண் தெரியாத திரிதராஷ்டிரனுக்கு எடுத்து சொன்னவர்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

