
மயில் ராவணன் – நங்கநல்லூர் J K SIVAN
2வது பதிவு.
மயில் ராவணனைப் பற்றி ராவணேஸ்வரனுக்கு எவ்வளவு தெரியுமோ அவ்வளவு விபீஷணனுக்கும் தெரியும். கூடவே கூட தெரியும். அவன் ராமனை சுற்றியிருந்த வானர சைன்யத்திடம் சொல்கிறான்;‘ எல்லோரும் இங்கே வந்து நான் சொல்வதை காது கொடுத்துக் கேளுங்கள்.
மயில் ராவணன் அதல பாதாளத்தின் அதிபதி. யாருமே நெருங்க முடியாத இடம். ஒரு இடத்திலே பல்லாயிரக்கணக்கான தாமரை செடிகளுண்டு. அதிலே மிகப் பெரிய தாமரை செடி ஒன்றின் தண்டின் மூலமே அந்த லோகத்துக்கு செல்ல முடியும். அது பல அரண்மனைகளை ஒன்றன் பின் ஒன்றாக கொண்டு அமைந்த ப்ரம்மாண்டமான லோகம் . செங்கல், பித்தளை, தாமிரம், இரும்பு, செம்பு, தங்கம் என அடுக்கடு க்காய் எத்தனையோ கோட்டைகளுக்குள் போகணும். அதற்குள்ளே தான் மயில் ராவணன் இருப்பான். அந்த கோட்டையை எல்லாம் பல லக்ஷம் ராக்ஷசர்கள் எப்போதும் காவல் காப்பார்கள். மயில் ராவணன் தாயாதி வழி முறையில்எங்களுக்கு தம்பி. மகா மாயாவி, சூத்ரதாரி, தந்திரக்காரன். எந்த ரூபத்தையும் எடுத்து வருவான். ஏமார்ந்தால் போதும், நினைத்ததை முடிப்பவன்.உலகின் அத்தனை யுக்திகளும் அயோக்கியத்தனமும் அவனுக்கு தெரியும். உக்ரஹ காளி தேவதை பக்தன். காளியைப் பற்றி தெரியுமல்லவா? மஹா சக்திசாலி. காளியின் அருள் இருந்தால் அனைத்துமே நடக்கும். ஆகவே தான் ராம லஷ்மணர்களை பலி தந்து காளியின் பலத்தை ராவணனுக்கு கொடுக்க சத்யம் பண்ணி இருக்கிறான் மயில்
இன்று ராத்திரி பதினைந்து நாழிகைக்கு அவன் கையில் ராம லஷ்மணர்கள் கிடைத்து விட்டால் அவர்களை பாதாளத்துக்கு கொண்டு போய் விடுவான். அப்புறம் அவர்களை மீட்பது கடினம். அதை ஹனுமானால் மட்டுமே தடுக்க முடியும் என்று சோழியும் சாஸ்திரமும் பக்ஷி ஜோசியமும் சொல்கிறது. நீங்கள் சென்று உடனே ஹனுமான் எங்கிருந்தாலும் இங்கே அழைத்து வாருங்கள்” என்றான் விபீஷணன்
வானர சேனை சொன்ன விஷயம் கேட்டு திடுக்கிட்ட ஹனுமான் ஓடிவந்தார். ராமனின் காலில் விழுந்து வணங்கி ‘ ராமனின் அருகே நின்ற் விபீஷணனை வணங்கினார்.
”ஐயா இதோ வந்து விட்டேன்.. நானென்ன பண்ண வேண்டும். உத்தரவிடுங்கள் ”விபீஷணன் சொன்ன விவரங்கள் கேட்டு யோசனையில் ஆழ்ந்த ஹனுமான் ‘இன்று ராத்திரி நேரத்தை எப்படி கடப்பது? அதைக் கடந்து விட்டால் மயில் ராவணன் சபதம் பொய்யாகிவிடும். என்ன செய்யலாம்?’சுக்ரீவனும் ஜாம்பவானும் ஒரு யோசனை சொன்னார்கள்.
”ஹனுமான், இன்னிக்கி ராத்திரி பூரா நீ உன் வாலினால் ஒரு கொசுகூட நுழைய முடியாத கோட்டை கட்டு. அதற்குள் ராம லக்ஷ்மணர்களை வைத்துக் கொள் . ஒரு ராத்திரி பொழுது அப்படி போகட்டும். எப்படி மயில் ராவணன் இங்கே வருகிறான் பார்ப்போம். மீறி வந்தால் அவனை கண்ட துண்டமாக வெட்டி சாய்க்கலாம். உயிரோடும் புதைக்கலாம். ஹனுமா, உன்னால் மட்டுமே வாலினால் ஆகாயத்தைத் தொட்டமாதிரியும், பூமிக்குள் புதைந்த மாதிரியும் கோட்டையைக் கட்ட முடியும். ராமனின் பக்தன் நீ. நீயே அதைச் செய்ய வேண்டும்’”என ஜாம்பவானும் அழுத்தி சொன்னார். .
”என் தலைவர்களே, நீங்கள் எனக்கு நல்ல யோசனை யை, தக்க சமயத்தில் தந்தீர்கள். இதோ நீங்கள் சொல்லியபடியே நிச்சயம் செய்வேன். கவலையே வேண்டாம். நான் கட்டும் வால் கோட்டைக்குள் என் வாயில் புகுந்து காது வழியேதான் செல்ல முடியும், என்ற ஹனுமான் வால் கோட்டை மளமள வென்று கட்ட ஆரம்பித்தார். எழுபது வெள்ள வானர சேனைகளையும், ராம லஷ்மணர்களையும் சுற்றி தன் வாலினால் ஆகாயத்தையும் பூமியையும் தொடும் அளவு கோட்டை ஒன்றைக் கட்டினார் அனுமான் . அந்த கோட்டைக்குள் போக வேண்டும் என்றால் அனுமானின் வாயில் புகுந்து காது வழியே வெளியேறி உள்ளே செல்ல வேண்டும். ஈயும் எறும்பும் கூட உள்ளே நுழைய முடியாது. அத்தனை நெருக்கமாக, இடைவெளி இல்லாமல் சுருட்டிக் கட்டப்பட்டிருந்த வால் கோட்டை அது.
வால் கோட்டைக்குள்ளே பர்ணசாலையில் ராம லஷ்மணர் படுத்திருக்க விபீஷணரோ ”வானர வீரர்களே நாலு ஜாமமும் ஜாக்கிரதையாக கண் விழித்து இருங்கள் .கவனமா இருங்கள். திசைக்கு ஒருத்தராக விடாமல் தொடர்ந்து காவல் இருங்கள். உங்களுக்கு மயில் ராவணனின் சாமர்த்தியம் தெரியாது ” என கூவிக் கொண்டே அங்கும் இங்கும் ஓடியபடி அங்கதன், நீலன், சாம்புவன், குமுதன் என்று பலருக்கு கட்டளை இட்டுக்கொண்டு கண் விழித்திருந்தார் விபீஷணன்.
பாதாள இலங்கையில் இருந்த மயில் ராவணன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தான். மந்திர தந்திரங்கள் சோழி, பக்ஷி சாஸ்திரம் ஜோசியம் எல்லாம் அவனுக்கு சாதகமாக இருந்தது. எனினும் அவனுக்குள் ஏதோ ஒரு வித பய உணர்ச்சி.
ராத்திரி பதினைந்து நாழிகளில் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு சதுரன், சாத்திரன், சகல பிராவணன் மற்றும் மாய வினோதன் எனும் நான்கு படை வீரர்களை அழைத்துக் கொண்டு ராம லஷ்மணர்களை கடத்தி வர மயில் ராவணன் கிளம்பினான். அபசகுனம் போல ஓ என்று கத்திக்கொண்டே அவன் மனைவி வர்ணமாலி அங்கு வந்து அவனை வழி மறித்தாள்.
‘பிராணநாதா, நீங்கள் எங்கே கிளம்பிவிட்டீர்கள்? என மயில் ராவணனைக் கேட்கவும் முகம் சுளித்த மயில் ராவணன் ”தேவி நான் ஒரு முக்கிய காரியத்துக்கு கிளம்பும்போது இப்படி அபசகுனமாக வந்து புலம்பலாமா? இது ஒரு மனைவிக்கு அழகா? என் தாயாதி சகோதரன் ராவணனை இரண்டு மானிடர்கள் அவமானப்படுத்தி, அவன் சந்திதியினரையும், சேனைகளையும் நிர்மூலமாக்கி விட்டார்கள். அவன் என்னை தனக்கு உதவ கேட்டான். அவனுக்கு உதவ வாக்கு கொடுத்து விட்டேன். அவனுக்கு ஒரு துன்பம் வந்தால் அது நம் வம்சத்துக்கும் துன்பம் தானே.? அந்த ரெண்டு மானிடர்களையும் காளிக்கு பலியிடுவதாக சங்கல்பம் செய்துவிட்டேன். ஆகவே ராமனை லக்ஷ்மணனைப் பிடிக்க இப்போ போகிறேன். குறுக்கே வராதே. என்னை தடுத்து நிறுத்தாதே’
‘பிராணநாதா, நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள். அந்த ராம-லஷ்மணர்கள் சாமான்யமா னவர்கள் இல்லையாம். தெய்வ அம்சங்களாம் . பலர் சொல்ல கேட்டேன். ஆகாசவாணியும் கூட நான் காளிக்கு பூஜை செய்யப் போனபோது வழி நெடுக என் காதில் வந்து இதைக் கூறியது. உங்கள் அண்ணன் ன் ராவணனுக்கு பொல்லாத காலம் வந்துள்ளது என நினைக்கின்றேன். அதனால்தான் அவர் அபலைப் பெண்ணான சீதையை பேடி போல தனியா இருக்கையில் தூக்கிக் வந்து அதனால் ஏற்பட்ட பின் விளைவினாலே புத்திர, மித்ரர்களையும் சேனைகளையும் இழந்திருக்கிறார். அதனால்தான் உமக்கு மீண்டும் மீண்டும் நான் கூறுகிறேன்.காது கொடுத்துக் கேளும். உங்கள் அண்ணன் செய்தது தீய காரியம். அதனால் தான் உங்கள் இன்னொரு அண்ணன் விபீஷணர் கூட ராமரை சரணடைந்து, சகோதரனுக்கு புத்தி சொல்லிப் பார்த்து சண்டையை தடுக்கப் பார்த்தார். அவரையும் ராவணன் லக்ஷியம் பண்ண வில்லை. அதன் பலனே தன் சுற்றத்தாரையும் யுத்தத்திலே இழந்து அவரும் நிர்க் கதியாக நிற்கிறார். அதனால்தான் திரும்ப கூறுகிறேன், ராம-லஷ்மணர்களை பிடித்து வந்து பாவ காரியத்தைச் சுமக்காதீர். அது உமக்கு வேண்டாமையா. ராம-லஷ்மணர்களை உம்மால் வெல்ல முடியாது. அதனால் நீரும் ராவணனைப் போலவே நாசமாகி விடுவீரோ என்று பயப்படுகிறேன்”
வர்ணமாலி அழுது புலம்பி மயில் ராவணனின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு கதறினாள். மயில் ராவணன் துளியும் வலை லக்ஷியம் பண்ணவில்லை.
”புத்தி பேதலித்தவள் புலம்பிக் கொண்டே இருக்கட்டும்’ என மயில் ராவணன் அவளை உதாசீனப்படுத்தி விட்டு சதுரன், சாத்திரன், சகல பிராவணன் மற்றும் மாய வினோதன் ஆகியோருடன் பாதாள அரண் மனை யை விட்டு பெரும் படையோடு வெளிக் கிளம்பி அக்னிக் கோட்டையைத் தாண்டி சமுத்திரத்தின் மேலே வந்தான்.
”உங்களில் யார் அந்த ரெண்டு பேரையும் பிடித்து வர முதலில் போவீர்கள்? என மயில் ராவணன் கேட்க சதுரன். ‘ராஜா, நானிருக்க, மற்றவர் எதற்கு? நானே அந்த எழுபது வெள்ள வானர சேனையையும் நொடிப் பொழுதில் கொன்று தின்று வருவேன்” மயில் ராவணன் சதுரனை கட்டிப் பிடித்து பாக்கும் வெற்றிலையும் மடித்துக் கொடுத்து ‘சென்று வா, வென்று வா” என அனுப்பினான்.
சதுரன் இருட்டிலே மெல்ல மெல்ல அனுமான் வாலினால் கட்டி இருந்த கோட்டையை சுற்றி சுற்றிப் பார்த்தான். உள்ளே நுழைய வழியே தெரியவில்லை. ‘அண்ணாந்து பார்த்தா ஆகாயம் மட்டும் தெரியுது. கீழே பார்த்தா வாலும் பூமிக்குள்ளே போகுதே!! இதென்னடா, புதுமாதிரி வால் கோட்டை. இப்படி ஒரு கோட்டை யை நான் கண்டதில்லையே. பாதாளம் முதல் ஆகாயம் வரை படந்திருக்கும் இதில் வாசலும் காணோம், வழியும் காணோம்! வாசல் கதவு எது? உள்ளே போகமுடியவில்லையே என்று ஓடி மயில் ராவணனிடம் விஷயம் சொன்னான்.ன் முன்னால் சென்று தலை குனிந்து நின்றான்.
‘வாருமையா தீரரே, ஆச்சூ, போச்சூனு ஓடினீரே, போன காரியம் என்னவாச்சு? தலை குனிந்து நிற்கி றீரே….போன காரியம் என்ன ஆச்சு?’ என மயில் ராவணன் கேட்க சதுரன் தலை நிமிராமல் தான் கண்ட அதிசயத்தைக் கூறி ‘அதுக்குள்ளப் போக நம்மால முடியாது சாமி’ என்று கூற ‘ வாயை மூடும் மூடனே உன்னால் முடியவில்லை என்றால் நான் போய் அதை செய்து காட்டுவேன் பார் ’ என சூளுரைத்தான் பக்கத்திலிருந்த சாத்திரன்.
சதுரனைப் போலவே, சாத்திரனும் வெட்கி , நாணி தப்பித்தோம் பிழைத்தோம் என று உடம்பெல்லாம் காயம்பட்டு ஓடி வந்தான். வால் கோட்டைக்குள் நுழைய முயன்ற அவனை வாலினாலேயே எலும்பு நொறுங்கும் அளவு பூமியில் தேய்த்து தேய்த்து துவைத்து, அவன் சதை எல்லாம் பிய்ந்தே போகுமளவு அனுப்பி இருந்தார் அனுமான். அடுத்ததாக போன சகல பிராவணன் மற்றும் மாய வினோதனுக்கும் அதே கதி தான். யோசித்த மயில் ராவணன் ‘இனி இவர்களை நம்பிப் பிரயோஜனமில்லை. நான்தான் போய் தந்திரமோ, மந்திரமோ, மாயமோ எதேகிலும் செய்து கச்சிதமாக காரியத்தை முடிக்கணும். வேறு வழி இல்லை என தீர்மானித்து வால் கோட்டை அருகே வந்தான். சாமர்த்தியமாக தன்னை விபீஷணன் போல உருமாற்றிக் கொண்டான். வெற்றிலையில் மை தடவிப் பார்த்து அனுமானின் முகம் எங்குள்ளது என்பதைக் கண்டு பிடித்தும் விட்டான். அவன்தான் மாயாவி ஆயிற்றே.
மெல்ல மெல்ல அனுமானின் காதருகில் சென்று ‘ஐயா அனுமனே, பத்திரம்….பத்திரம்….எச்சரிக்கை……ரொம்பவே எச்சரிக்கையாக இரும் …. பதினைந்து நாழியாகப் போகிறது. கோட்டைக்கு வெளியே எல்லாமே சரியா இருக்கு. அனைத்தையும் பார்த்துட்டேன். எல்லாமே சரியாக இருக்கு. நல்ல வேளை ….உள்ளே நுழைய வந்த களவாணி எல்லாருமே ஓடி விட்டார்கள் உள்ளே எல்லாம் சரியா இருக்கிறதா என்று பார்த்து விட்டு வருகிறேன்” என அனுமானிடம் விபீஷணன் போல் கூறினான்.
பேசுவது வந்தது விபீஷணன் தான் என ஹனுமார் ஏமாந்துவிட்டார். அவர் வாயை திறக்க அவர் வாயில் புகுந்து கோட்டைக்குள் நுழைந்து அனைவரது புத்தியையும் க்ஷண நேரத்துக்கு கட்டி வைத்து விட்டு, அது முடியும் முன்னேயே ராம லஷ்மணர்கள் படுத்திருந்த பர்ணசாலைக்குள் சென்று மாய வினோதம் செய்து காளியின் அருளால் ராம லஷ்மணர்களை கைவிரல் அளவிலாக்கி, மயக்கமாக்கி, ஒரு சின்ன பெட்டிக்குள் அடைத்து உள்ளே போனது போலவே வெளியிலும் வந்து பாதாள இலங்கையை அடைந்து அவர்களை காளி கோவிலில் பத்திரமாக பூட்டியும் வைத்து விட்டான். அவர்களால் இனி அங்கிருந்து தப்ப முடியாது.
அனுமானின் வாய் வழியே வெளியில் வந்து மயில் ராவணன் திரும்பிப் போகும் போது விபீஷணன் வேஷத்தில் ‘ஹனுமான், உள்ளே அனைத்தும் சரியாகவே இருக்கு. ராம லக்ஷ்மணர்கள் ஜாக்கிரதையாக இருக்கிறார்கள். பதினைந்து நாழிகைக்கு இன்னும் பத்து சொட்டு நாழிதான் பாக்கி. மயில்ராவணன் எந்த உருவிலும் வருவான்….பார்த்து….கவனமாக இரும். நானும் வெளியில் சுற்றிக் கொண்டே இருந்து கண்காணிப்பேன்’ என்று கூறி விட்டே ஒன்றும் தெரியாதவன் மாதிரி பறந்து விட்டான். ஹனுமார் தன்னிடம் பேசி விட்டு சென்றது விபீஷணனே என்று நம்பிவிட்டார்.
மயில் ராவணன் ராம-லஷ்மணர்களை கடத்திக் கொண்டு பறந்த போது ஆகாயத்தில் ஆகாசவாணி குரல் கேட்டான்; ‘அடே பாதகா, மயில் ராவணா, நீயெல்லாம் செய்தது மஹா பாதகம். வைகுண்ட நாதர் ஸ்ரீ ராம லக்ஷ்மண அவதாரங்களை ஒரு பெட்டியில் வைத்துக் கொண்டு போகிறாயே, உனக்கு அழிவு காலம் வந்து விட்டதடா….நீர் அழிவது நிச்சயம். ..போ…போ…. இத்தனை சிரமப்பட்டு ராவணனுக்காக இதை செய்கிறாயே. அவனும் ராஜ்யத்தை இழக்கப் போறான். நீயும் ராஜ்யத்தை இழக்கப் போகிறாய் …. மூர்க்கனே, உன் சகோதரி தூம்ரதண்டியின் பிள்ளை உன் சிம்மாசனத்தில் அமரப் போகிறான்…. இந்த சத்திய வாக்கை நீயும் பார்ப் பாய்….உன் சந்ததியினரும் பார்பார்கள்…போடா மூடனே….போ. போகுமுன் ஒரு க்ஷணம் யோசனை செய்….ராம லஷ்மணர்களை உடனே விடுவித்து விடு. ராவணனிடம் சீதையை உடனே விடுதலை செய் என்று சொல். . இருவரும் ராமனிடம் சரண் அடையுங்கள். அப்போது நீயும் தப்புவாய். உன் அண்ணனும் தப்புவான். அதை செய்யாவிடில் நீங்கள் இருவரும் அழிவது நிச்சயம்.…அழிவு சத்தியம்’ என்றது.
ஆகாசவாணி கூறியது மயில்ராவணன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது. ‘அப்படியா சங்கதி….என் தங்கையின் பிள்ளை ஆட்சியை என்னிடமிருந்து பறிக்க உள்ளானா? விட்டேனா பார் அவனை. என்ன செய்கிறேன் பார்’ என கருவினான் .
அதல பாதாளத்தில் ராம-லஷ்மணர்களை பாதுகாப்பாக அடைத்து வைத்தான். அடுத்த வேலையாக தூம்ரதண்டியையும் அவள் பிள்ளையையும் சிறையில் அடைத்து கைவிலங்கு, கால் விலங்கு, மார் விலங்கும் போட்டு, அறையிலே சிறை வைத்து அறையைப் பூட்டி எல்லா கதவுகளுக்கும் நாலு பக்கமும் நானூறு பூட்டும் போட்டு உணவு கொடுக்க மட்டும் சிறு ஓட்டை இடம் விட்டு, சுற்றி சுண்ணாம்பு சுவரும் எழுப்பி விட்டான். ‘இப்போ பார்க்கலாம் எப்படி அவன் என் சிம்மாசனத்தில் அமருவான் என்று என்று கருவி சிரித்தான்.
அடுத்த பதிவில் மேற்கொண்டு நடந்த விஷயங்களை அறிவோம். மயில் ராவணன் கதை ரொம்ப ஸ்வாரஸ்யமானது. எனக்கு அப்படி தான் தோன்றியது. படிக்க விறுவிறுப்பாக இருந்தது. நீங்கள் எப்படி இதை வரவேற்கிறீர்கள். பிடிக்கிறதா? ஒரு நல்ல கதையை எழுதத் தெரியாமல் ஏதோ கிறுக்கி பாழடித்து விட்டேனா?
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


Extremely attracted to the way the story is narrated long live SIVAN mama