
சாணக்ய நீதி – நங்கநல்லூர் J K SIVAN
ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான். அறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித் தருவான்.
குழந்தையை 5 வயது வரை தாராளமாக கொஞ்சுங்கள், 5 -15 வயது வரை வளர்ந்த பயல்களை தப்பு பண்ணினால் கொம்பால் பின்னிவிடுங்கள். உயரமாக அண்ணாந்து பார்க்கும் படி வளர்ந்தவனை ‘ தம்பி, ‘நண்பா’ என்று கூப்பிட்டு நாசுக்காக வேலை வாங்குங்கள். அதிகாரம் அப்போது செல்லாது.
நாம் கற்றுக்கொள்ளும் கல்வி பசுவைப் போல இருக்கவேண்டும். பசு எல்லா காலங்களிலும் பால் சுரக்கும், கல்வி அப்படிப்பட்ட பசுவைப் போல் எக்காலத்திலும் கை கொடுக்கும், அம்மா மாதிரி. எங்கு சென்றாலும் நம்மை காக்கும், ஆதலால் கற்காமல் ஒரு நாளும் காலத்தை வீணாக்க வேண்டாம். அப்புறம் எவராவது சொல்லிக் கொடுத்து எழுதிக் கொடுத்து காசு கொடுத்து கொஞ்சம் தெரிந்து கொண்டு பேசவேண்டும் நிலை ஏற்பட்டு, எழுதிக் கொடுத்தாலும் அதைத் தப்பாக படித்து அவமானப்பட நேரிடுமே.
மாரிக்காலத்தில் பெய்யும் மழை பயனற்றது, பகலில் எரியும் தீபம் போல் அதனால் ஒரு ப்ரயோஜனமுமில்லை. வசதி உள்ளவனுக்கு கொடுக்கின்ற பரிசும் அப்படித்தான் பயனற்றது, நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு அவனுக்கு எந்த விதத்தில் உதவும்?. இதற் கெல்லாம்கிரீடம் வைத்தது போல் தான் முட்டாளுக்கு கூறுகின்ற அறிவுரைகள் .
காமத்தை விட கொடிய நோய் உலகத்தில் இன்று வரை இல்லை. அறியாமையை விட கொடிய எதிரி இல்லை. கோபத்தை விட கொடிய நெருப்பு இல்லை. ஜாக்கிரதை.
எவன் ஒருவனிடம் பணம் இருக்கிறதோ, அவனுக்கு உறவினர்கள் , நண்பர்கள் ஜாஸ்தி. கூட்டமாக சேரும். பணம் இருப்பவனைத் தான் உலகம் பெரிய மனிதனாக தலைவனாக மதிக்கிறது. அவனைத்தான் அறிவாளி, பண்டிதன் என்று கூட உலகம் போற்றுகிறது.டாக்டர் பட்டமெல்லாம் கொடுக்கிறது.
பிறவிக் குருடனுக்கு கண் தெரியாது. காமம் உள்ளவனுக்கும் கண் தெரியாது, பெருமை உள்ளவனுக்கு கெடுதி தெரியாது, பணம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவனுக்கு பாபம் தெரியாது.
பேராசை கொண்டவனைப் பிடித்து வாழ்த்தி பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனை அணுகி முகஸ்துதி பண்ணி, சலாம் போடுவதன் மூலமும், முட்டாளைப் புகழ்ந்து, சில கடி ஜோக், நகைச்சுவை மூலமும் அணுகலாம். உண்மையான அறிவாளியை உண்மையான வார்த்தை, சிந்தனைகள் மூலமும் அணுகலாம்.
சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறு விஷயங் களையும் நாம் கற்று கொள்ள வேண்டும். அது என்னது என்று தெரியவேண்டாமா? அதைச் சொல்லி இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.
சிங்கம் எப்போவும் ஸ்லோ. எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும். பிறகு வெற்றி அதற்கே.
கொக்கு ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை காத்து நிற்கும், அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற் கு முன் இடம் பொருள் ஏவல் தன் ஆற்றல் எல்லாம் ஒன்றும் கூடும் வரை காத்திருந்து செயல் புரிவான்.
களைப்புற்றாலும் கழுதை தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டுப் பட்டிருக்கும். எந்த அரசியல் வாதி பேச்சு அச்சாகி இருந்தாலும் படிக்காமல் கவலைப் படாமல் பாரபக்ஷமில்லாமல் அந்த செய்தித் தாளை சுவைத்து தின்றுவிடும். இது கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயம். அதைப் போல் சாப்பிடவேண்டாம். குப்பையை வாரி அதன் மேல் குவித்து தூக்கிப் போடலாம்.
விடியற்காலை எழுந்திருப்பது, தைரியமாக சண்டை போடுவது, அவரவர்க்கு தேவையானவற்றை பிரித்து கொடுத்தல், தனக்கு தேவையானவற்றைத் தானே உழைத்துத் தேடி சம்பாதித்து சாப்பிடுவது ஆகிய நான்கு வித்தைகளும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டியவை.
இரவில் குடும்பத்தோடு சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கா நமக்கு சொல்லித்தரும் பாடங்கள்.
கிடைத்ததில் பூரண திருப்தி அடைவது, ஆகாரம் கிடைக்காத நேரத்தில் பட்டினி இருப்பது, பசி இருந்தாலும் கட்டளை வரும் வரை காத்திருப்பது, நல்ல தூக்கத்தில் இருந்தாலும் டக்கென்று எழுந்து வேலை செய்வது, எஜமானன், முதலாளியிடம் விசுவாசமாக இருத்தல், உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



