
தைப்பூசம் – நங்கநல்லூர் J K SIVAN
தைப்பூசத்தில் முருக பக்தர்கள் விரதமிருந்து காவடி எடுப்பார்கள். காவடியில் எத்தனையோ விதம். பால் காவடி, புஷ்பகாவடி, போன்று பல வித காணிக்கைகள் உலகமுழுதும் பல நாடுகளில் விசேஷமாக அளிக்கப்படும். நாக்கில், கன்னத்தில், வேல் குத்திக் கொள்வது, முதுகில் வேல் குத்தி, (அலகு என்று பேர் ) தேர் இழுப்பது, அந்தரத்தில் தொங்குவது போன்ற பக்தர்களைப் பார்ப்பதற்கே பயமாக இருக்கும். மயிர்கூச்செறியும் பக்தி. தமிழகம், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரீசியஸ் போன்ற நாடுகளில் மிகுந்த ஆர்வத்துடன் இவ்விழா இன்றும் கொண்டாடப்படுகிறது. முருகனுக்காக குழந்தைகள் பெரியவர்கள், பெண்கள் கூட முடி காணிக்கை கொடுத்து நிறைய முருகன் கோவில்களில் மொட்டைத்தலையில் மஞ்சளாக சந்தனம் பூசிய ஆண் பெண் குழந்தைகள் தலைகளைப் பார்த்திருக்கிறேன்.
தைப்பூசம் அன்று தான் ஆறுமுகன் தாரகாசுரனை வீழ்த்துவதற்காக, பார்வதி தேவிஇடம் இருந்து சக்தி வேல் பெற்றதாக ஐதீகம். சிக்கலில் விசேஷமாக தரிசனம். கற்சிலையாக முருகனின் முகத்தில் வியர்வை துளிர்க்கும் காட்சி இன்றும் காண்கிறோம்.
அறுபடை வீடுகளில் பக்தர்கள் கூட்டம் சொல்லி முடியாது. ஸ்ரீலங்கா (கதிர்காமம்), மலேசியா (பத்து கேவ்) போன்ற இடங்களில் மிகப்பெரிய அளவில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. மலேசியாவில், பத்து கேவ் (Batu Caves) தைப்பூசத் திருவிழா உலகப் புகழ் பெற்றது. காதுக்கு ரம்யமாக திருப்புகழ் பஜனை எங்கும் எதிரொலிக்கும். எங்கள் காலனியில் திருமால் மருகன் கோவிலில் விசேஷமாக அலங்காரம், பூஜை, அர்ச்சனை, தரிசனம். கிடைக்கும். தெருவை வளைத்து பந்தல் போட்டு அநேகருக்கு மேசை நாற்காலி போட்டு இலையில் அன்னதானம் பகல் வெகுநேரம் வரை நடக்கும்.
வடலூரில் வள்ளலார் மறைந்த அந்த அறையை திருக் காப்பிட்ட அறை (பூட்டிய அறை ) என்று புனிதமாக வணங்குகிறோம். ஒவ்வொரு தைப்பூசம் அன்று தான் அந்த அறையை திறக்கிறார்கள். அன்று வள்ளலார் இயற்றிய திரு அருட்பா பல்லக்கில் அந்த அறைக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஜன்னல் வழியாக அந்த அறையை பார்க்க சாயந்திரம் 6 மணி வரை பக்த கோடிகளுக்கு அனுமதி.
வள்ளலார் ஒரு அருமையான மனிதர், மனித தெய்வம். நல்லவர் என்கிறோமே, நாம் நல்லவர்களா? தயை, காருண்யம் இரக்கம், நேர்மை, நியாய, மனசாட்சி இதில் ஏதாவது நமக்கு உண்டா? இதெல்லாம் பற்றி எப்போதாவது சுய பரிசோதனை செய்து கொள்கிறோமா? இல்லை என்பது தான் எல்லோரின் பதிலும். கோவில் குளம், தெய்வ தரிசனம், விரதம், நோன்பு, எல்லாமே பாபங்களை தொலைக்கத் தான். தெரிந்தோ தெரியாமலோ ஒவ்வொருவரும் எத்தனையோ பாபங்களை புரிகிறோம். வள்ளலார் தன்னை ஒரு பாபியென்று கருதி நான் என்னென்ன பாபம் செய்தேனோ என்று ஒரு நீளமாக ஒரு லிஸ்ட் போடுகிறார். வள்ளலார் போட்ட பாப லிஸ்ட் இது தான்:
நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!– நல்லவர் மனதை கஷ்டப்படுத்தினேனோ.
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!– பொய்க் கேசு போட்டு நீதி மன்ற நேரத்தை கெடுத்தேனோ. இப்போது அது தான் நியாயமாக நடக்கிறது.
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!– தான் கொடுக்காவிட்டாலும் கொடுப்பதை தடுக்காதே.
கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!–நண்பர்களுக்கிடையே துரோகம் செய்யக்கூடாது.
மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!– நட்புக்கு வஞ்சகம் செய்தேனோ.
குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ! – பொதுமக்களுக்கு அடிக்கடி வரி விதித்தேனோ?. இப்போது விலைவாசி என்கிற பெயரில் பேயாக வரிகள் புதுசு புதுசாக வந்து கொண்டே இருக்கிறதே. .
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!– ஏழைகள் மனம் வாடி, வயிறு பற்றி திகுதிகு வென எரியும்படியாக என் ஆட்சி இருந்ததோ ?
மன்றோறம் பேசி வாழ்வழித்தேனோ! — பொய் சாட்சி பூதலிங்கமாக இருந்தேனோ”
உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரஞ் செய்தேனோ!– வெட்டுபவனுக்கு கத்தி தீட்டிக் கொடுத்தேனோ?
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ! – யார் வீட்டில் பணம் திருடலாம் என்று ஐடியா கொடுத்தேனோ?
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ! — வேண்டாத, மற்றவர்களின், பொருளுக்கு ஆசைப்பட்டேனோ?
ஆசைகாட்டி மோசஞ் செய்தேனோ! — ஏமாற்றுவதில் நான் கில்லாடியோ?
வரவுபோக் கொழிய வழியடைத்தேனோ! — பொது வழியை தடுத்து ஆக்கிரமித்தேனோ?
வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ!– நிறைய வேலை வாங்கி கொஞ்சம் சம்பளம் கொடுத்தவனோ? சம்பளமே கொடுக்காதவனோ?
பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ! — ஐயா பசி என்றபோது என் காது ஒரு போதும் கேட்டதில்லையோ?
இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்றேனோ! — சோறு கீறு கிடையாது. போய் எங்காவது வேலை செய் என்றவனோ?
கோள் சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ!- கோள் மூட்டி குப்புசாமியோ?
நட்டாற்றிற் கையை நழுவவிட்டேனோ! – நம்பினவனை கை விட்டவனோ”
கலங்கி யொளித்தோரைக் காட்டிக்கொடுத்தேனோ! – எட்டப்பனோ?
குருவை வணங்கக் கூசிநின்றேனோ! – வாத்யார் மேல் மதிப்பின்றி வணங்காதவனோ?
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!- பீஸ் கொடுக்காமல் வாத்யாருக்கு நாமம் போட்டவனோ?
கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ! – படித்தவர்களை பிடிக்காதவனோ?
பெரியோர் பாட்டிற் பிழைசொன்னேனோ! உன் பாடலில் தப்பு என்று வேண்டுமென்றே சொன்னவனோ?
பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ! பறக்கும் பறவையை பிடித்து கூண்டிலிட்டவனோ?
கன்றுக்குப் பாலு‘ட்டாது கட்டிவைத்தேனோ! பசுவின் பாலை விற்று அதன் கன்றை பட்டினி போட்டவனோ?
ஊன்சுவை யுண்டு உடல் வளர்த்தேனோ! சாப்பாட்டு பிரியனோ?
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ! – நான் கலப்படப் புலியோ?
அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ!- அன்பாக இருந்தவர்களுக்கு துன்பம் தந்தவனோ?
குடிக்கின்ற நீருள்ள குளந் து‘ர்த்தேனோ! குளத்தை மூடிவிட்டு அதன் மேல் மாடி வீடு கட்டியவனோ?
வெய்யிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ!– மரங்களை வெட்டி பிளாட் போட்டவனோ?
பகைகொண்டு அயலோர் பயிரழித்தேனோ! அடுத்தவன் வயலுக்கு தீ வைத்தவனோ?
பொதுமண்டபத்தைப் போயிடித்தேனோ! பொதுக் கட்டிடத்தை சொந்தமாக்கிக்கொண்டவனோ?
ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ! பக்தர்கள் உள்ளே புக முடியாது ஆலய கதவை மூடியவனோ?
சிவனடியாரைச் சீறி வைதேனோ! சிவனடியாரை இழிவாக பேசுபவனோ?
தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ! தவசிகளை ஏளனம் பண்ணுபவனோ?
சுத்த ஞானிகளைத் து‘ஷணஞ் செய்தேனோ! ஞானிகளை வாய்க்கு வந்தபடி பேசுபவனோ?
தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ! தாய் மொழி வேண்டாதவனோ?
தெய்வ மிகழ்ந்து செருக்கடைந்தேனோ! சாமி இல்லை போடா என்ற கர்வம் கொண்டவனோ?
என்ன பாவம் செய்தேனோ! இன்னதென்றறியேனே! நான் எப்படிப்பட்டவன் என்னென்ன பாவம் செய்தென் என்று தெரியவில்லையே என்று மனுநீதி சோழன் அழுகிறான். மனு நீதி சோழன் என்னென்ன செயதேனோ என்று கேட்பதெல்லாம் சர்வ சாதாரணமாக இப்போது நம்மில் சிலர், இல்லை , நமது அரசாங்கமே செய்கிறதோ என்று அல்லவோ தோன்றுகிறது.
வள்ளலார் போட்ட பாவங்களின் லிஸ்ட் ”மனு முறை கண்ட வாசகம்” எனப்படுகிறது. நான் போட்ட லிஸ்ட் இல்லை. இன்றும் மேலே கண்டா பாபங்கள் அனைத்தும் அதற்கு மேலும் லிஸ்ட்ல் இல்லாததும் நிகழ்கிறதாக பயம் இருக்கிறது. முருகா நீ தான் காப்பாற்ற வேண்டும்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


