KUCHELA AND KRISHNA J K SIVAN

கேளாமலே தருவான்…  நங்கநல்லுர்  J K SIVAN
குழந்தைகளே,  என்னை ஒரு கதை சொல் என்று கேட்டால் எனக்கு சந்தோஷம் தானே. இதோ உடனே  சொல்கிறேன் . நீங்கள் கேட்காத ஒரு கதையை.
 உங்களைப்போலவே  ரெண்டு  அருமையான குழந்தைகள் பற்றிய கதை தான் இது. ஒருவன் பெயர் சுதாமா, அவனுக்கு  வேறு  பெயர் குசேலன்.  மற்றொருவன் உங்கள்  எல்லோருக்கும் தெரிந்த ஒருவன்.  அவன்  பெயர். கிருஷ்ணன். புல்லாங்குழல் வைத்துக்கொண்டு நீலநிறமாக நெற்றியில் நாமம், தலையில் கொண்டையின் மேல் ஒரு அழகிய மயில்  இறகு , இடுப்பிலே மஞ்சள் வஸ்திரம்,   கழுத்து நிறைய மார்பை மறைக்கும்  மலர்மாலைகள். அவனைச் சுற்றிலும் மான்கள், கன்றுகள் பசுக்கள், மரங்கள், செடிகள் கொடிகள். அருகே ஓடும் அழகிய யமுனை நதி……. அடடா பார்த்தித்தீர்களா உங்களை   சில  வார்த்தைகளிலேயே  பிருந்தாவனத்துக்கே அழைத்துச் சென்று விட்டேன்.

கிருஷ்ணனும்  அவன் நண்பனும் முதலில் சந்தித்தது எங்கே தெரியுமா?  சாந்தீபனி என்னும் முனிவரின் ஆஸ்ரமத்தில். அவர் தான் ரெண்டு பேருக்கும் மற்றும் சில மாணவர்களுக்கும் குரு.    அந்தக்  காலத்தில் பள்ளிக்கூடம் என்பது கிடையாது. மாணவர்கள் ஆசிரியர் வீட்டுக்கு சென்று பல வருஷங்கள் அவர் வீட்டிலேயே  உண்டு உடுத்து, உறங்கி, அவர் வீட்டில் ஒருவராக வாழ்ந்து அவ்வப் போதேல்லாம் ஆசிரியரிடம் கல்வி அறிவு பெறுவது. இதற்கு என்ன பெயர் தெரியுமா? குருகுலம்.

கிருஷ்ணன் யாதவ குலத்தரசன். குசேலனோ ஒரு ஏழை பிராமணன்.  என்றும் பற்றாக்குறை, ஏழ்மை, வறுமை,  பசி இது  தான் அவன் அறிந்தது.  இருந்தாலும் அவன் சந்தோஷமாகவே இருந்தான்.  

அவ்வப்போது தனது வீட்டுக்கு சென்று திரும்பும் போதெல்லாம் கிருஷ்ணனுக்கும் தனது வீட்டிலிருந்து நிறைய  பக்ஷணங் கள் கொண்டு வந்து கொடுப்பான். கிருஷ்ணன் சந்தோஷமாக அவற்றை உண்பான்.
காலம்  ஓடியது.  இருவருமே  இப்போது வளர்ந்து திருமணம் முடிந்து குடும்பம் நடத்துபவர்கள்.  கிருஷ்ணனுக்கு ருக்மணி ராணி.ஏழை உஞ்சவிருத்தி பிராமணன் குசேலனுக்கு மனைவி சுசீலை.  அவர்களுக்கு 27 குழந்தைகள். ஒரு பள்ளிக்கூடமே  சொந்தமாக நடத்த வாய்ப்பு.  கிருஷ்ணனும்  குசேலனும்  வெகுகாலம் சந்திக்காவிட்டாலும்  குசேலன் மனைவி சுசீலைக்கு ஒரு  எண்ணம். நம்பிக்கை.
 ”நாதா, நமக்கு இந்த வறுமையிலிருந்து  விடிவே   இல்லையே. அடிக்கடி சொல்வீர்களே  உங்கள் பால்ய நண்பன் கிருஷ்ணன் இப்போது துவாரகை ராஜா.  ரொம்ப இனியவன் என்பீர்களே. அவனை ஒருநாள் போய் பார்த்து நம் நிலைமையை எடுத்து சொல்லி கொஞ்சம் பொருளுதவி பெற்று வாருங்களேன். நாமும் சில நாட்களாவது சுபிக்ஷமாக வாழ்வோம்”
அடிக்கடி இப்படி சுசீலை ஞாபகப்படுத்தும் போதெல்லாம் குசேலன் கிருஷ்ணனிடம் சென்று யாசிக்க விரும்பவில்லை. நட்பு புனிதமானது. அதை சுயநலத்துக்கு பயன்படுத்தக் கூடாது என்று குசேலன் தீர்மானமாக இருந்தான்.  சுசீலை அடிக்கடி வற்புத்தவே, வேறு வழியின்றி, தனது வறுமைக்கு ஒரு முடிவு காண  குசேலன் கிருஷ்ணனை சந்தித்து உதவி கேட்க ஒப்புக்கொண்டான்.  

யாரையாவது பார்க்க போகும்போது நாம்  திண்பண்டங்கள் பழங்கள், போல ஏதாவது ஒரு சிறிய அன்பளிப்பு  எடுத்துச் செல்கிறோமல்லவா?. பரம தரித்ரன் குசேலன் என்ன எடுத்துக்கொண்டு போய் இப்போது ராஜாவாக இருக்கும் பழைய நண்பனைக்  காண்பான்? அவனிடம் ஒன்றுமே இல்லையே. சுசீலை வீட்டில் கிடைத்த கொஞ்சம்  அவலை  குசேலன் கையில் கொடுத்தாள் .
” இது தான் இருக்கிறது. இதை அவருக்கு பரிசாக கொடுங்கள்”   இடுப்பு வேஷ்டியின் ஒரு நுனியில் அந்த அவலை மூட்டை கட்டிக்கொண்டு  பல காத தூரங்கள் துவாரகை நோக்கி குசேலன் நடந்தான்.

துவாரகா வந்தடைந்த  குசேலன்  அழகிய  அரண்மனை முன் வந்து நின்றான்.  அரண்மனை காவல்காரர்கள் அவனை நிறுத்தினார்கள்.

”ப்ராமணா,  யார் நீ ? எங்கே  உள்ளே போக  முயல்கிறாய். நில் இங்கேயே ”
‘என் பெயர்  சுதாமா.  உங்கள் ராஜா கிருஷ்ணனோடு  பால்யத்தில் ஒரே  ஆசிரியரிடம் ஒன்றாக  பாடம் கற்றவன்.  கிருஷ்ணன் எனது நெருங்கிய நண்பன். அவனைப் பார்க்க தான் வந்தேன்”

அழுக்கான கந்தல் உடையைத்  தரித்திருக்கும்  இந்த தரித்ரன்  பாவம்  ஒரு பைத்தியம் போல் இருக்கிறது. என்னென்னவோ கற்பனையில்  உளறுகிறான். என்ன தைரியம் இருந்தால் நமது ராஜாவை பேர் சொல்லி அழைப்பான்’   என்று சிரித்தார்கள்.  வெகு நேரம் அவனை காக்க வைத்தார்கள்.  கடைசியில் ஒரு காவலன் மனது இளகி  பதில் சொன்னான்.

”ப்ராமணா,  உன்னைப்பார்த்தால்  பாவமாக இருக்கிறது.  நீ இங்கேயே  நில். நான் உள்ளே போய் மஹாராஜாவிடம்  உன்னைப் பற்றி சொல்கிறேன்.  ஏதாவது பிக்ஷை கொடுத்தால்  கொண்டுவந்து தருகிறேன்.  இல்லையென்றால் நீ இங்கே மேற்கொண்டு  எங்களைத்  தொந்தரவு எதுவும் பண்ணாமல் வந்த வழியே திரும்பிப் போ.”
பாவம். குசேலன் மனதில் கிருஷ்ணனை வேண்டினான். அங்கேயே நின்றான்.  காவலன் உள்ளே சென்று கிருஷ்ணன் முன் கைகட்டி நின்றான்.
”என்ன விஷயம்  காவலா?  எதற்கு இங்கே வந்தாய்?
”மஹாராஜா, உங்களைப்  பார்க்க  ஒரு  ஏழை பிராமணர்  வாசலில் நிற்கிறார்.  நீங்கள் ஏதாவது கொடுத்தல் கொண்டு போய் கொடுக்கிறேன்.   உங்களை பார்க்க வேண்டும் என்கிறார்.”
 ”ஹ்ம்ம்  யார்  அந்த மனிதர்’
”உங்களோடு  இளவயதில் ஒன்றாக  ஒரே ஆசிரியரிடம் படித்தவராம்”
”சுதாமாவா  வந்திருக்கிறான்?’
” ஆமாம் மஹாராஜா, நான் சொல்லுமுன் நீங்களே அவர் பெயரை சொல்லிவிட்டீர்கள்.”
”ஆஹா   எங்கே  என் சுதாமா, வாசலிலா நிற்கிறான் இத்தனை நேரம்/”
” ஆமாம் மஹாராஜா”
”அடாடா..  நான் இதோ வருகிறேன்”
 அப்படியே  காலில் பாதுகை கூட  அணியாமல் கிருஷ்ணன் எழுந்து வாசலுக்கு ஓடினான். தூர காவல்காரர்கள் இருப்பிடத்தில்   ஓரமாக   நின்றுகொண்டிருக்கும்  குசேலனைக் கண்டதும்  பெருமகிழ்ச்சி அடைந்தான். ஓடிப்போய் அவனை அப்படியே ஆலிங்கனம்  பண்ணிக்கொண்டான்.  கிருஷ்ணனை ராஜ கோலத்தில் கண்ட குசேலனும்  ப்ரமித்தான்.
காற்று கூட இடை புகமுடியாமல் இருவரும் கட்டித்தழுவிக்கொண்டே  உள்ளே சென்றார்கள். காவல்காரர்கள் கிருஷ்ண னின் நட்பை, ப்ரேமையை அனுபவித்து  திகைத்தார்கள்.
உள்ளே தனது பிரத்யேக அறைக்கு  குசேலனை அழைத்துக்கொண்டு வந்த கிருஷ்ணன் அவனை தனது சப்ரமஞ்ச கட்டில் மேல் உட்காரவைத்தான்.
”ருக்மணி வா, நாம் இந்த ப்ராம்மணோத்தமனுக்கு  பாத பூஜை பண்ணுவோம்.”ருக்மணியும் கிருஷ்ணனும் குசேலன் பாதங்களை க்  கண்ணில் ஒற்றிக் கொண்டு தங்கத்தாம்பாளத்தில் வைத்து    புஷ்பம், சந்தனம், பால், பன்னீர், கங்கை நீரால்    இருவருமாக சேர்ந்து  அபிஷேகம் செயது, அந்த ஜலத்தை புனித  பிரசாதமாக  பருகினார்கள். தலையில் ப்ரோக்ஷணம் பண்ணிக் கொண்டார்கள்.
”சுதாமா, நீ எப்போது உன் வீட்டிலிருந்து வந்தாலும் எனக்கு ஏதாவது பக்ஷணம் எடுத்துக் கொண்டு வருவாயே , இப்போது என்னப்பா கொண்டு  வந்திருக்கிறாய்?”
” இவ்வளவு பெரிய மஹாராஜாவாக இருக்கும்  என் கிருஷ்ணனுக்கு நான் எப்படி இந்த அல்ப அவலைக் கொடுப்பேன்.” என்று  நாணி, கூனிக்  குறுகி  தலை கவிழ்ந்து  கண்களில் ஜலம் விட்டான் குசேலன்.
குசேலன் ஒன்றும் பேசாமல் எதுவும் கொடுக்காமல் தலை கவிழ்ந்து இருப்பதைக் கண்ட கிருஷ்ணனுக்கு எல்லாம் தெரியும். குசேலன் வெறும் கையோடு  வருபவன் அல்லன் . தானே அவன் வஸ்த்ரங்களில் ஏதாவது இருக்கிறதா என்று தடவி தேடினான் கிருஷ்ணன். அவன் கையில் வேஷ்டி முனையில் ஒரு சிறு பொட்டலமாக  முடிச்சுபோட்டிருந்த  சுசீலை தந்த அவல்  கண்ணில் பட்டது.  ஆவலோடு அவலை  எடுத்த கிருஷ்ணன் பரம சந்தோஷத்தோடு ஒரு கை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான். அதற்குள் அங்கே ஓடிவந்த ருக்மணி தானும் மீத  மிருந்த அவலை  ”இது எனக்கு” என்று   எடுத்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்.
சில நாட்கள் சந்தோஷமாக  பழைய நண்பர்கள் இருவரும்  தங்கள் பால்ய வாழ்க்கை அனுபவங்களை நினைவு கூர்ந்து பேசி மகிழ்ந்தார்கள்.  ஒருநாள் குசேலன் தான் ஊர் திரும்பவேண்டும் என்று விடை பெற்றான்.
”சுதாமா  நீ நடந்து போகவேண்டாம். நான் உன்னை என் தேரில் அனுப்புகிறேன். எப்போது வேண்டுமானாலும் நீ என்னிடம் வா” குசேலன் தேரில் தனது ஊர் சென்றான். ஊர் நெருங்கி விட்டபோது தான் அவன் உடல் வியர்த்தது. உடல் நடுங்கியது.
”அடாடா, சுசீலை  என்னை எதற்காக கிருஷ்ணனை சந்திக்க அனுப்பினாள் ?  கிருஷ்ணனிடம் ஏதாவது பொருள் உதவி பெற அல்லவோ?  முட்டாள் நான் இவ்வளவு நாள் கிருஷ்ணனோடு இருந்தபோதும்  அவனிடம் என் வறுமை ஏழ்மை பசி பற்றி ஒன்றுமே சொல்லாமல்  ஒரு உதவியும் கேட்க தவறிவிட்டேனே . அவனும்.  ”சுதாமா, உனக்கு ஏதாவது தேவையா கேள?” என்று  ஒரு வார்த்தை கேட்காமல் இருந்து விட்டானே. இப்போது என்ன செய்வேன்?”சுதாமா வசிக்கும் இடம் வந்து விட்டது.தேர்ப்பாகன்    ‘ஐயா  தங்கள் வீடு எது என்று காட்டுங்கள் தேரை நிறுத்துகிறேன் ”என்ற போது தான்  குசேலனுக்கு நினைவு திரும்பியது.  அவன் வீட்டின் எதிரே வந்து விட்டான். ஆனால் அவன் குடிசையைக் காணோமே. ஐயோ என் வீடு என்னவாயிற்று?  என் குடிசை மறைந்து போய்விட்டதே. அதை இடித்துவிட்டு  இங்கே  யாரோ ஏதோ ஒரு  மாளிகை அல்லவோ கட்டி இருக்கிறார்கள்.  ஒருவேளை தப்பாக எங்கோ வந்து நிற்கிறேனோ?  இல்லையே இது தான் என் தெரு இங்கே தான் என் வீடு எத்தனையோ காலமாக….. என் வீட்டுக்கு அண்ணா ஆச்சு?  எங்கே  என் சுசீலையும் என் குழந்தைகளும்.   ஒன்றுமே புரியவில்லையே ?’
குசேலன்  தேரிலிருந்து அப்படியே  குதித்து ஓடினான். அங்கும் இங்கும் தேடினான்.  அப்போது தான் அந்த பெரிய மாளிகையிலிருந்து சில குழந்தைகள் பட்டாடை ஆபரணங்கள் உடுத்து  வெளியே வந்தார்கள்.
”அப்பா” என்று  குசேலனைக்  கண்டதும்  ஆரத்தழுவினார்கள். சுசீலை  அந்த மாளிகையிலிருந்து  தங்கத் தாம்பாளத்தில் ஆரத்தி கரைத்து  ஆரத்தி எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்து குசேலனை வரவேற்றாள். அவள் பட்டு ஆடைகள்,சர்வாலங்கார பூஷிதையாக வண்ண கண்ணைப் பறிக்கும் தங்க வைர நகைகளில்  அவளை அடையாளமே தெரியவில்லை குசேலனுக்கு.
”சுசீலா   என்ன இதெல்லாம்”?   பரக்க  பரக்க விழித்தான் குசேலன் .
”நாதா,   உங்கள் நண்பர் கிருஷ்ணன் நிறைய சீர்  வரிசைகளோடு பல அரசாங்க உத்யோகஸ்தர்களை அனுப்பி நமது வீட்டை ஒரு மாளிகையாக்கி விட்டார்கள். எங்களுக்கல்லாம் நிறைய  ஆடை ஆபரணங்கள் அளித்தார்கள். நீங்கள் சிலகாலம்  மஹாராஜா கிருஷ்ணனோடு தங்கிவிட்டு வருவீர்கள் என்று எங்களிடம் சொல்லிவிட்டு சென்றார்கள்” என்றாள் .
”ஆஹா  கிருஷ்ணா. நான் உன்னை ஒன்றும் கேட்கவில்லையே  என்று வருந்தினேன்.  நீயும் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்க வில்லையே என்று நினைத்தேன். நீ கேட்டதை தருபவன் அல்ல கேளாத போதும் தருபவன் என்று இப்போது தானப்பா உணர்ந்தேன்”  என்று கிருஷ்ணன் வாழும் திசை நோக்கி சிரம் மேல் கரம் கூப்பினான் குசேலன். 

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;