
ரெண்டு காது ஒரு வாய். – நங்கநல்லூர் J K SIVAN
என் அருமையான ஒரு நண்பர் வாசுதேவய்யர் இப்போது இல்லை. அவரிடம் ஒரு அருமையான பழக்கம். வாயே திறக்க மாட்டார். ”வாய் திறவா ஐயர்” என்று தான் நண்பர்கள் அவரை கேலி செய்வோம். அப்போதும் தலையாட்டிக் கொண்டு ஒரு புன் சிரிப்பு தான். யார் எது பேசினாலும் கூர்ந்து கவனித்து கேட்பார். பதில் சொல்லமாட்டார். அவர் யாருக்காவது அறிவுரை வழங்கியதாகவோ, எங்காவது பொது இடத்தில் நாலு வார்த்தை பேசியதாகவோ சரித்திரம் இந்த ஜென்மத்தில் இல்லை. எல்லோருக்கும் அவரைப் பிடித்ததற்கு இந்த மௌனம் ஒன்றே காரணம். மனதில் எழும் எண்ணங் களை வெளியே தளும்பாமல் நிரப்பி வைத்துக் கொள்ள எல்லோராலும் முடிவதில்லை.
”சில பேரைப் பற்றி நாம் என்ன சொல்கிறோம். ”
”மனதில் அவனுக்கு ஒன்றும் இல்லையப்பா. வெகுளி. வெள்ளை மனசு. மனதில் இருப்பதை அப்படியே கொட்டி விடுவான்”.
நிறைய பேசுபவனை என்ன சொல்கிறோம்? ”அவன் ரொம்ப நல்லவன். எல்லாருக்கும் நல்லது பண்ணுவான். ஆனா அவன் வாய் தான் அவனுக்கு எதிரி. வாயாலே கெட்டவன் . பிழைக்க தெரியாதவன் ”
ஒருவனுக்கு பணத்தால், அறிவுரையால் உதவி செய்வதை விட, அவன் கொட்டும் மனக் கஷ்டத்தை, துயரத்தை, துக்கத்தை, பொறுமையுடன், கவனித்து, கேட்டால் அதுவே பெரிய ஆறுதல்.
”உங்கள் தோளிலே சாஞ்சிண்டு ஒரு பாட்டம் அழுதால் போதும். அதுவே நிம்மதி” என்று சொன்னவர்களை எனக்கு தெரியும். மனதில் உள்ள பாரம் நீங்க அவர்கள் படும் அவஸ்தை புரியும். தலையிலிருந்து முதுகை ஆதுரத்தோடு, தாய்ப் பாசத்தோடு, சகோதர பாவத்தோடு தடவிக்கொடுத்தாலே போதும். பேச்சு வேண்டாம். துக்கம் பறந்தோடிவிடும். அனுபவம் கற்றுக்கொடுத்த வைத்தியம்..
ஒருத்தர் சொல்வதை இன்னொருவர் கேட்காமல் இருப்பதால் தான் எத்தனையோ குடும்பங்களில் கணவன் மனைவி விரிசல். தப்போ தவறோ பொறுமையுடன் கேட்டால் பாதி சச்சரவு தீரும்.
ஒருவர் சொல்வதை மற்றவர் கேட்பது மூன்று வகைப்படும். அறிவு சார்ந்து கேட்பது. மனதை முழுமையாக செலுத்தி கேட்பது. இதயம் கனிந்து கேட்பது. மூன்றாவதை தான் எல்லோரும் விரும்புகிறார்கள். அறிவு சார்ந்த கேட்பதில் பாதிக்கு மேல் சொல்வதை புத்தி ஏற்காது. தப்பு கண்டுபிடிக்கும்.
எல்லோருக்கும் கதை சொன்னால் ரொம்ப பிடிக்கும் இல்லையா.
ஒரு ஊரில் காட்டில் ஒரு மஹாத்மா ஆஸ்ரமத்தில் வசித்தார். ஒரு தத்துவ மேதை அவரை போய் தரிசித்தான். ஞானியை வணங்கி அந்த மேதை நீளமாக பேச ஆரம்பித்தான். மணிக்கணக்கில் பேசினான். ஞானி ஒன்றும் பேசாமல் அவனை பார்த்துக்கொண்டே கேட்டுக்கொண்டிருந்தார். விடாமல் பேசியவன் வாய் வலித்ததோ என்னவோ பேச்சை நிறுத்தி
”சுவாமி எனக்கு ஏதாவது அறிவுரை கூறுங்கள்” என்றான்.
”கொஞ்சம் இருப்பா” ,என்று உள்ளே சென்றவர் ஒரு கோப்பை டீ சூடாக போட்டு பாத்திரத்தோடு கொண்டு வந்தார். அவன் எதிரே ஒரு கோப்பையை வைத்து அதில் சூடான டீயை ஊற்றினார்.
கோப்பை நிரம்பி வழிய ஆரம்பித்தது. அப்படியும் ஞானி டீயை மேலே மேலே ஊற்றிக்கொண்டே இருந்தார்.
”ஸ்வாமி, போதும் ஊற்றுவதை நிறுத்துங்கள். இனிமேல் கோப்பையில் ஒரு சொட்டுக்கூட இடமில்லை. டீ பொங்கி வழிகிறதே ‘
”ஓஹோ, உனக்கு கோப்பை நிரம்பினால் மேலே இனிமேல் ஒரு சொட்டுக்கு கூட இடமில்லை என்று தெரியுமா?”
மனதில் அகந்தை, புத்தி,நிரம்பி இருந்தால் அது வளர்க்கும் எண்ணங்களை நிரப்பிய பிறகு, புத்திமதி, அறிவுரைக்கு எங்கேப்பா இடம் இருக்கும்? அறிவுரை வேண்டுமானால் முதலில் மனதில் கொஞ்சம் இடம் தயார் செயதுகொள்” என்றார்.
மனதளவில் ஒருவர் சொல்வதைக் கேட்பது என்பது முழுமையில்லாத கேட்டல் ஆகும். ஏனென்றால் ஏற்கனவே நமது மனதில் அவர் சொல்வதைபற்றிய ஒரு அபிப்ராயம் இருக்குமே. சரியா தப்பா என்று. அது அவர் சொல்வதை மீண்டும் கேட்பதற்கு தடையாக இருக்கும்.
ஹ்ருதய பூர்வமாக ஒருவர் சொல்வதைப் புரிந்து கொண்டு கேட்பது அன்பு மேலீட்டால் வருவது. அது தான் துக்கத்துக்கு மருந்து. சொல்பவனும் கேட்பவனைப் புரிந்து கொள்வான். மனதைக் காலி செய்து தன்னுடைய ஆதங்கத்தை, துக்கத்தை, துயரத்தை, வலியை குறைத்துக் கொள்ள உதவுவது.
மனித குலம் ஒன்றினால் தான் மனத்தை சொற்கள் மூலம் வெளிப்படுத்த முடியும், அதை கேட்டு புரிந்து கொள்ளவும் முடியும். மொழி இதற்கு தேவையாகிறது. அப்போது தான் சம்பாஷணை பூர்த்தியாகிறது. நான்கு விதமான சம்பாஷணைகள் இருக்கிறது.
நான் என் மனதில் இருப்பதை எழுதுகிறேன், நீங்கள் படிக்கிறீர்கள். என் மனம் புரிகிறது.
அதேபோல் மனதை வெளிப்படுத்தி பேசுகிறேன், சொல்கிறேன். கேட்கிறீர்கள் புரிந்து கொள்கிறீர்கள். குழந்தைப்பருவம் முதல் வீட்டிலும் பள்ளிக்கூடத்தில் இவ்வாறு பேசுவது, எழுதுவது படிப்பது மட்டும் தான் கற்றுக் கொள்கிறோம். கேட்பது வேறு, மனதை இருதயத்தை செலுத்தி பூரணமாக கேட்பது வேறு. எதையோ கேட்கும்போது காதில் விழுகிறதே தவிர விஷயம் மனதிற்குள் புகுவதில்லை.
கிருஷ்ணன் நமக்கு ரெண்டு காது ஒரு வாய் ஏன் கொடுத்திருக்கிறான் ?
ரெண்டு காது நிறைய தாராளமாக நிறைய கேட்கவேண்டும். ஆனால் அதில் பாதி தான் பேசவேண்டும். நாமோ நிறைய பேசுகிறோம், கேட்பது கொஞ்சம். ஒருவர் சொல்வதைக் கேட்கும்போது, மனது அதற்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதில் தான் ஈடுபடுகிறது. நாம் கேட்கும்போது சொல்பவன் வேறு கேட்பவன் வேறு என்ற மனப்பாங்குடன் தான் கேட்கிறோம். சொல்வதை நம்முடையதாக ஏற்று உள் வாங்கிக் கொள்வதில்லை. நான் அவனை விட புத்திசாலி என்ற எண்ணம் மேலோங்கினால் கேட்பதில் என்ன பயன்? நாம் சொல்லும் பதில் அவனுக்கு எப்படி உதவும்?
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



