
கோவர்தன கிரி தாரி – நங்கநல்லூர் J K SIVAN
ஆய்ப்பாடி, ஆயர்பாடி, கோகுலம், பிருந்தாவனம், வ்ரஜபூமி என்றெல்லாம் அழைக்கப்படும் புண்ய பூமியில் கண்ணன் லீலைகளை இன்றும் நாம் நினைத்து, படித்து, கேட்டு, பாடி மகிழ்கிறோம் . பசுக்கள் பால் வழங்கி அவற்றின் மூலம் கிடைக்கும் வெண்ணை தயிர் ஆகியவற்றை உண்டு மீதியை விற்று காசாக்கி வாழ்ந்த ஆயர்குடி மக்கள் அந்த பசுக்களை தெய்வமாக கொண்டாடி அவற்றுக்கு பூஜை செய்யும் திருநாளாக வருஷத்தில் ஒருநாள் கொண்டாடுவது தான் கோ வர்தன பூஜா (கோ என்றால் பசு, வர்தனம் என்றால் சிறந்த பராமரிப்பு). இதை அன்னகுட் பண்டிகை என்று நிறைய தானியங்களை மலை போல் குவித்து கோவர்தன மலையாக்கியும், பசும் சாணத்தை மலைபோல் குவித்தும் பல இடங்களில் கொண்டாடினாலும் இது தீபாவளி பண்டிகையின் ஒரு பகுதியேயாகும். இதை கிருஷ்ணன் வழக்கத்தில் கொண்டுவந்தான். கிருஷ்ணன் நரகாசுரனை வதம் செய்த தீபாவளி நாள் இந்த பூஜைக்கு ஏற்ற நாளாயிற்று. இதன் பின்னாலேயே ஒரு ருசியான கதை ஒளிந்து கொண்டிருக்கிறது. மலையை கிள்ளி எலியை பிடிக்கலாமா?
ஆயர்பாடி பிருந்தாவன வாசிகள், கோபர் கோபியர், காலம் காலமாக மழை தரும் கடவுளாக, சூல் கொண்ட கரு மேகங்களின் அதிபதியாக இந்திரனை வழிபட்டு நன்றி செலுத்த வருஷத்துக்கு ஒரு தடவை, இந்திரனுக்கு விழா எடுப்பார்கள்.
கிருஷ்ணன் நந்தகோபன் மாளிகையில் வாசலில் அப்பாவின் மடியில் உட்கார்ந்திருந்தான். மேலே கருமேக கூட்டங்கள் எங்கும் இருளைத் தந்து வரப்போகும் பெரிய மழையை பறைசாற்றியது. கருமேகக் கூட்டத்துக்கு நடுவே கஷ்டப்பட்டு சூரியன் வெளியே கொஞ்சம் கொஞ்சம் அப்பப்போ தலையை காட்டினான்.ஊர் எங்கும் கோலாகலம். தோரணம், மாலைகளோடு இனிப்பு வகைகளோடு மக்கள் புத்தாடை அணிந்து உலவுவதை பார்த்த கிருஷ்ணன் நந்தகோபனிடம் கேட்கிறான் “அப்பா இன்னிக்கி என்ன என்ன விசேஷம்?” “இந்திர விழா”
” அப்படின்னா என்ன?”
“மழை கொடுக்கிற இந்திரனாலே தான் நாமெல்லாம் சந்தோஷமா இருக்கோம் இல்லியா அதற்காக இந்திரனுக்கு இன்று பூஜை”
“அதோ இருக்கே அந்த கோவர்தன மலை தானே நமக்கு காற்று, தண்ணி எல்லாம் தருது. நீ சொல்ற கருப்பு மேகங்க ளைஎல்லாம் தடுத்து இங்கே மழை பெய்ய வைக்கிறது .அந்த மலையிலிருந்து தானே நமக்கு மூலிகை எல்லாம் கிடைச்சு நமக்கு நோய் வராம இருக்கு. அந்த மலையிலே தானே நம்முடைய ஆடு மாடு எல்லாம் நிறைய மேச்சலுக்கு போறது. நிறைய நிறைய பழம் காய் எல்லாம் இருக்கிற செடி கோடி, மரம் எல்லாம் அந்த மலை மேலே தானே நமக்காக இருக்கு. நமக்கு அந்த மலை தானே ரொம்ப முக்கியம். அதுக்கு நாமெல்லாம் நன்றி சொல்றோமா? பூஜை பண்ணவேண்டாமா?””நீ சொல்றது சரி கிருஷ்ணா. நாம நன்றியோடு இருக்கணும்.””கோவர்தன மலையை பார்க்கிறோம், இதோ இருக்கு தெரியறது. இந்திரனைப் பார்க்கிறோமா, இங்கே இருக்கானா?””இந்திரன் கடவுள் என்கிறதாலே அவனுக்கு தான் நாம் பூஜை செய்யறோம் ” என்றான் நந்தகோபன்
” அது எப்படி அப்பா சரியாகும். கண்ணுக்கு நேரே இருக்கிற இந்த மலை தான் கடவுள். இதைவிட்டு எங்கேயோ கண்ணுக்கு தெரியாத மேலே இருக்கிற இந்திரன் எப்படி இந்த பூஜைக்கு தகுதி?. நீங்களே யோசித்து பாருங்களேன்” என்றான் கிருஷ்ணன்
சிறுவனாக இருந்தாலும் கிருஷ்ணன் சொல்வதில் உள்ள உண்மை, கருத்து ஊரிலுள்ள கோபாலர்களுக்கு புரிந்து ஆச்சர்யப் பட்டார்கள். கூடிப் பேசினார்கள். அந்த வருஷம் கோவர்தன மலைக்கு பூஜை செய்வது என்று முடிவெடுத்தனர்.
இந்திரனுக்கு விஷயம் தெரிந்தது. கடும் கோபம் கொண்டான். ”யார் அவன் அந்த பொல்லாத சிறுவன்? அவன் பேச்சைக் கேட்டு என்னை அவமதித்த இந்த பிருந்தாவன மக்களுக்கு சரியான பாடம் புகட்டுகிறேன்”இந்திரன் நிறைய கருமேகங்களை அனுப்பி பிருந்தாவன கிராமம் முழுதும் விடாத மழை வெள்ளத்தில் மூழ்கி அனை வரும் அழிய உத்தரவிட்டான். மேகங்கள் சூழ்ந்தன. சூரியனின்றி பகல் இரவாகியது. மழை கொட்டியது. கிராமத்தில் எல்லோரும் இது இந்திரனின் கோபம். நாம் செய்த கோவர்தன பூஜை யால் வந்த வினை ” என்று முணுமுணுத் தார்கள்.நந்தகோபன் கவலைப் பட்டான்.”கிருஷ்ணா, பார்த்தாயா நான் சொன்னதை நீ கேட்காததால் வந்த விளைவை ?”
”அப்பா, இந்த பெரிய மழை வெள்ளம் இந்திரனுக்கு வந்த கோபத்தால் என்கிறீர்களா?.அவன் நமக்கு தீங்கு செய் கிறான் என்கிறீர்களா. கொஞ்சம் பொறுங்கள்”.
கிருஷ்ணன் ஓடினான். மழை வெள்ளம் முழங்கால் அளவு ஊரில் எல்லா வீடுகளுக்குள்ளும் வந்து விட்டது. ”எல்லோரும் உடனே கோவர்தன மலை கிட்டே வாருங்கள்” – கிருஷ்ணன் கத்தினான். அவன் குரல் கேட்டு அனைவரும், ஆடு மாடு அனைத்தும் பின் தொடர நேரே கோவர்தன மலை யருகே வந்தார்கள். கண் இமைக்கும் நேரத்தில் இடது கை சிறுவிரலால் கோவர்தன மலையை அலாக்காக கிருஷ்ணன் தூக்கினான். குடையாக அது மேலே நின்று அனைவரையும் மழையினின்று காத்தது. ஊரில் உயிர்ச்சேதம், கால்நடை நாசம், பொருள் சேதம் எதுவும் இல்லை. இந்திரன் அசந்து போனான். ஏழு நாளாக இடது கை சுண்டு விரலில் கோவர்தன மலையை தூக்கி நின்ற சிறுவன் சாதாரணன் அல்லன் என்று புரிந்து கொண்டான். மழை நின்றது. வெள்ளம் வடிந்தது. இந்திரன் மழை நீரோடு நீராக கலந்து கண்ணன் கால்களை அலம்புவதுபோல் வணங்கி கிருஷ்ணன் ஆசியை பெற்று அகம்பாவம் நீங்க பெற்றான். கிருஷ்ணன் இருந்த காலம் முதல் 5000 ஆண்டுகளாக இன்றும் கோவர்தன பூஜை நாடெங்கும் நடப்பது இந்த கதை நிஜமாக நடந்ததற்கு ஒரு சான்று .
Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


