
இவர் ஒரு சிம்ஹாசனாதிபதி 3 – நங்கநல்லூர் J K SIVAN நடாதூர் அம்மாள்
”தத்வசாரம்” என்ற நூல் நான் படிக்காத ஒன்று. அதில் நடாதூர் அம்மாள் என்ற வைணவ ஆசார்யன் அவரது குரு எங்களாழ்வான் மீதான தனியனுடன் ஆரம்பிக்கிறாராம். அந்த முதல் ஸ்லோகம், ” என் மனம் என் சுவாமி எங்களாழ்வானின் திருவடித் தாமரையின் மீதே சரணடைய லயித்திருக்கிறது. இதைவிட சிறந்ததாக எதுவுமே தோன்றவில்லை. தேவையுமில்லை. இது மட்டும் எனக்கு கிடைக்காமலிருந்தால் அடியேன் ஒரு ஞான சூன்யமாக இருந்திருப்பேன். ஸ்ரீ ராமனுஜரின் ஈடிணையற்ற ஆழ்ந்த கருத்துகளை, உபதேசங்களை அடியேனும் புரிந்துகொண்டு மற்றோருக்கும் எடுத்துச்சொல்லும் பாக்கியம் கிட்டி இருக்காது.” எவ்வளவு குரு பக்தி பாருங்கள். நடாதூர் அம்மாளின் சிஷ்யர்களில் பிரதானமாக திகழ்ந்தவர்கள் : ஸ்ருதப்ரகாசிக பட்டர், (சுதர்சன சூரி என்றும் பெயர்.. இவர் வேத்வ்யாச பட்டரின் பேரன். கூரத்தாழ்வானின் கொள்ளுப் பேரன். பின்னர் ஸ்ரீ பாஷ்யம், வேதார்த்த சங்க்ரஹத்துக்கும், சரணாகதி கத்யத்துக்கும் உரை எழுதியவர் ), கிடாம்பி அப்புள்ளார், ஆத்ரேய ராமானுஜர் என்றும் பெயர், வடக்கு திருவீதி பிள்ளை, மற்றும் வாக் விஜயி பட்டர். வைணவ ஆசார்யர்களில் ஜொலிக்கும் பெயர்கள். ஸ்ரீ பாஷ்யத்தை ஸ்ரீவைஷ்ணவர்களும் சிஷ்யர்களும் அம்மாள் சுவாமிகளிடம் பயின்றனர். அம்மாள் தான் ஸ்ரீ வேதாந்த தேசிகனுக்கும் ஸ்ரீ கடிக சதம் அம்மாளுக்கும் குருவானவர். வார்த்தா மாலை என்ற நூலில் இருந்து அம்மாள் சுவாமிகள் பற்றியதான சில குறிப்புகள் – அம்மாளின் ஆச்சார்யர் ஸ்ரீ எங்களாழ்வான் ஒருநாள் சரம ஸ்லோகத்தை விளக்கிக் கொண்டிருந்தார். ”சர்வ தர்மான் பரித்யஜ்ய” என்ற இடம் வரும்போது, அம்மாள் சுவாமிகளுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. ஏன் எம்பெருமான் இவ்வளவு ஸ்வதந்திரத்தோடு சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்ட ”எல்லா தர்மங்களையும் (உபாயங்களையும்)” ஏன் தியாகம் செய்” என்கிறார். இந்த சந்தேகத்தை ஆச்சரியனிடம் வினவினவினார்.
”இது தான் பகவானின் உண்மை ஸ்வரூபம் ,குணம்,அவர் சர்வ ஸ்வதன்திரர், பற்றற்றவர். அதனால் அவ்வாறு சொல்ல முடிகிறது. ஜீவாத்மா பகவானையே லயித்து ஒன்றி இருக்கும் தகைமை கொண்டது, பகவானே அதன் உபாயம் எனும் அதன் ஸ்வதர்மத் திலிருந்து வேறு எதிலும் ஈடுபடாமல் பகவானையே முழுதும் நாடி நிற்க அவ்வாறு சொல்கிறார்” என்று விளக்கினார் எங்களாழ்வான். நடாதூர் அம்மாளும் வேறு ஒரு பிராமணரல்லாத வைஷ்ணவரும் சேர்ந்து பிரசாதம் அனுபவித்துக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த மற்றொரு ஸ்ரீவைஷ்ணவர் பெருங் கூர் பிள்ளான் என்பவர் சந்தோஷப்பட்டார்.
“உங்களை இவ்வாறு ஸ்ரீ வைஷ்ணவர்களோடு ஒன்றி பழகுவதை பார்க்கவில்லையென்றால் வர்ணாஸ்ரம தர்மத்தை தவறாக புரிந்துகொண்டிருப்பேன்” என்று அம்மாளிடம் உரைத்தார். “ஒரு ஆசார்யனைச் சேர்ந்த அனைவரும் எவராயினும் அவர்களை அரவணைக்க வேண்டும், இதை அனுஷ்டிப்பது தான் நமது பூர்வாச்சார்யர்கள் உபதேசித்த பாகவத தர்மம்” என்றார் அம்மாள் ஸ்வாமிகள். நடாதூர் ஆழ்வான் ஸ்ரீ ராமானுஜரால் ஸ்ரீ பாஷ்ய பிதா என்று போற்றப்பட்டவர். தனது ஸ்ரீ பாஷ்ய சிம்ஹாசனத்தை நடாதூர் ஆழ்வானுக்கு அளித்தவர் ஸ்ரீ ராமானுஜர். இதற்கு ஒப்புதல் அளித்தவர காஞ்சி ஸ்ரீ வரதராஜ பெருமாளே. தனது குரு ஸ்ரீ ராமானுஜருக்கு நடாதூர் ஆழ்வான் அவரது அர்ச்ச விக்ரஹத்தை வரதராஜ பெருமாள் ஆலயத்திலேயே நிறுவினார் என்று அறிகிறோம். தந்தையின் வழியே நடாதூர் அம்மாள் சுவாமிகளின் தந்தையும் ஆழ்வானைப் பின்பற்றி ஸ்ரீவைஷ்ணவத்தை போஷித்து வளர்த்தார். ஒரு கதை. மற்ற சிஷ்யர்கள் நடு நடுவே நடாதூர் அம்மாளிடம் கேள்வி கேட்பார்கள் சந்தேகம் தீர்த்துக் கொள்வார்கள். சுதர்சன சூரி மட்டும் ஒன்றுமே வாயை திறக்கமாட்டார். அவர் கொஞ்சம் மக்கு பிளாஸ்திரி என்று மற்றவர்கள் எடை போட்டுவிட்டனர். ஒருநாள் ஸ்ரீ பாஷ்யம் பிரசங்கத்துக்கு சுதர்சன சூரி வர நேரமாயிற்று. மற்றவர்கள் காத்திருந்தவர்கள் ஆசார்யனை பிரசங்கத்தை ஆரம்பிக்க சொன்னார்கள். ”இன்னும் சற்று நேரம் பொறுங்கள். சுதர்சன சூரி வரட்டும். பிறகு ஆரம்பிக்கிறேன்” ”சுவாமி சுதர்சனன் தங்களைப் புரிந்து கொள்ள ஸ்ரமப்படுபவன் என்று நினைக்கிறோம். அவன் வந்து என்ன புரிந்து கொள்ளப் போகிறான். தாங்கள் அடியோங்களுக்குக்காக ஆரம்பிக்கலாமே” அட இது சங்கரரின் சிஷ்யர் தோடகாச்சார்யாரை ப் பற்றியஹா விஷயம் போலவே இருக்கிறதே! அம்மாளுக்கு மன வருத்தம். சுதர்சனத்தை இப்படி அவமதிக் கிறார்களே என்று. ஒரு நாள் பாதி பிரசங்கத்தில் இது வரை சொன்ன ஸ்ரீ பாஷ்ய கருத்துகளை எடுத்துச் சொல் என்று சுதர்சனத்தை கேட்டார். கடல் மடையாக அன்று சொன்ன கருத்துகள், அதற்கு முன் சொன்னவை என்று பிரித்து அழகமாக அவன் விவரித்தவுடன் அவர்களுக்கு ஆச்சர்யமாகி விட்டது. ஆசார்யன் சொன்ன வியாக்யானங்கள் ஒன்று விடாமல் சுதர்சனம் விவரித்தான். அம்மாளுக்கே அதிசயம். வியந்தார். ”எப்படியப்பா உன்னால் இதெயெல்லாம் நினைவில் கொண்டு வர முடிந்தது?” என்றார் அம்மாள் சுவாமிகள். ”குருநாதா, அன்றாடம் உங்கள் உபதேசங்களை வீட்டுக்குச் சென்றவுடன் ஓலைச்சுவடியில் பதித்து விடுவேன். மனத்திலும் பதித்துக் கொள்வேன். அதை தங்களிடம் சமர்ப்பிக்கிறேன் என்று ஓலைச் சுவடிகளை அளித்தார். அது வே ஸ்ருதப்ரகாஸிகா என்கிற ஸ்ரீ பாஷ்யத்தின் பொழிப்புரை. பிற்காலத்தில் சுதர்சன பட்டர் இதை விவரித்து 36,000 கிரந்தங்களில் பதிவு செய்தார். காலத்தின் எதிர்ப்புகளுக்கு ஈடு கொடுத்து இவை காப்பாற்றப் பட்டன . மாலிக் காபூர் படையெடுப்பின் போது சுவாமி தேசிகன் இந்த கிரந்தங்களை தன்னோடு பிணைத்து பிணக்குவியலில் இறந்த உடலைப் போல கிடந்து காப்பாற்றியதாக ஒரு செய்தி உலவுகிறது. ஒரு நாள் இரவு கனவில் வரதராஜன் தோன்றி ”அம்மா, நீ எனக்கு வசந்தோத்சவத்துக்கு ஒரு மண்டபம் கட்டித்தருகிறாயா’? என்று கேட்டான். குழந்தை கேட்டால் அம்மாவாகிய நடாதூர் அம்மாள் சும்மா இருப்பாரா? கஷ்ட நஷ்டங்களை எல்லாம் சமாளித்து ஒரு வசந்த மண்டபம் தயாரானதே! ஒருமுறை அம்மாள் சுவாமிகள் தனது சிஷ்யர்களுடன் நடந்து திருப்பதி திருமலை க்ஷேத்ராடனம் செல்லும்போது வழியெல்லாம் அவர்களை பக்தர்களும் பொது மக்களும் வணங்கி சிச்ருஷை செய்தனர். எனினும் கண்டாரவன் என்ற ஒரு பழங்குடி மக்கள் தலைவனுக்கு தனது எல்லைக்குள் இவர்கள் நுழைவது விருப்பமில்லை. அவர்களுக்கு தொந்தரவு கொடுக்க எண்ணம் கொண் டான். தனது மாந்திரீக சக்தியால் அனைத்து சிஷ்யர்களையும் மயக்கமடைய செய்தான். அம்மாள் இதை அறிந்து கண் மூடி த்யானித்து சுதர்சன மந்த்ரத்தை உச்சரித்தார். தான் இயற்றிய ‘எதிபுங்கவ’ ஸ்தோத்ரத்தை உச்சாடனம் செய்தார். மாந்த்ரிக கட்டு உடைந்து சிஷ்யர்கள் நினைவு பெற்றார்கள். இதைத் தொடர்ந்து கண்டாரவனுக்கு அம்மாள் சுவாமிகளுக்கும் ஒரு வாதம் நடந்தது. தோற்ற கண்டாரவன் அம்மாள் சுவாமிகளிடம் சரணடைந்தான். அம்மாள் சுவாமிகள் அவனை அன்போடு அணைத்து ஆசிர்வதித்து பஞ்சசம்ஸ்காரம் செய்வித்து ஸ்ரீ வைஷ்ணவனாக மாற்றினார். அவன் உதவிய நிதியை உபயோகித்து அந்த ஊரை லதா அக்ரஹாரம் என்ற ஒரு அழகிய கிராமமாக உருவாக்கினார் . அம்மாள் சுவாமிகள் சிஷ்யர்களோடு நடந்து ஒரு வழியாக திருச்சானூர் அடைந்தபோது சூரிய வெப்பக் கதிர்கள் அம்மாள் சுவாமிகளை களைப்புறச் செய்தன. ஒரு வீட்டின் திண்ணை யில் அமர்ந்து களைப்பாறினார்கள். பசி வாட்டியது. எங்கிருந்தோ ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் அங்கே வந்தார் ஒரு தங்க பாத்திரத்தில் அனைவருக்கும் சேர்த்து ததியோன்னம் வழிய வழிய கொண்டு வந்தார். இது ஸ்ரீநிவாசருடைய நியமனம் என்று அளித்தார். பிரசாதம் அனைவருக்கும் விநியோகமானது. அவர்கள் உண்டு பசியாறியது ஸ்ரீ வைஷ்ணவரும் அவர் கொண்டுவந்த தங்க பாத்திரமும் மறைந்தது. ஞானி அல்லவா, அம்மாள் சுவாமிகளுக்கு புரிந்து விட்டது யார் அந்தர்தானமாக மறைந்த ஸ்ரீ வைஷ்ணவர் என்று. அதே நேரம் ஆலயத்தில் ஒரு குழப்பம் நேர்ந்தது. பெருமாளுக்கும் வைத்திருந்த பெரிய வெள்ளி பாத்திரம் நிரம்பிய நைவேத்யத்தை காணோம் என்று அங்கும் மிங்கும் ஓடி தேடிக்கொண்டிருந்தார்கள். அப்போது அசரீரியாக வெங்கடேச பெருமாளே ” கவலை வேண்டாம். நானே என் பக்தர் நடாதூர் அம்மாளுக்கும் அவரது சிஷ்யர்களுக்கும் பசிக்கு உணவாக அதை அளித்துவிட்டேன். அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் அவர்களை தக்க உபசாரத்தோடு அழைக்கவும்” என்று கட்டளையிட்டார். அவர்கள் நடாதூர் அம்மாள் சுவாமிகள் எங்கு இருக்கிறார் என்று தேடிக்கொண்டு ஓடிவந்துகொண்டிருந்தார்கள். ”பகவானே, ஏழுமலை வெங்கடேசா, நீயா எங்களுக்கு நேரே வந்து உன் கையாலேயே பிரசாதம் தந்து எங்கள் பசியாற்றியவன்” என்று மனமுருக அம்மாள் சுவாமிகள் வேண்டினார். இதற்குள் கோவில் சிப்பந்திகள் தங்கப் பாத்திரத்தை ஆலயத்திலேயே கண்டனர் . எல்லோருக்கும் என்ன ஆச்சர்யம் இது என்று திகைப்பு. வெங்கடேச பெருமாள் உத்தரவுப்படியே கோவில் அதிகாரிகள் விரைந்து சென்று நடாதூர் அம்மாள் சுவாமிகளையும் அவர் சிஷ்யர்களையும் சந்தித்து ஆலயத்திற்கு அழைத்து சென்றனர். வெங்கடேசனுக்கு மங்களாசாசனம் செய்தார் அம்மாள் சுவாமிகள் . மனம் குளிர ஏழுமலை வாசன் தரிசனம் முடிந்து காஞ்சி திரும்பினார்கள்.
தொடரும்
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


