

தலைமுறை வித்யாசம். – நங்கநல்லூர் J K SIVAN
வாழ்க்கை கட்டமைப்பு இப்போது முற்றிலும் மாறி விட்டது. முன்காலத்தில் கூட்டுக் குடும்பம் தான் வழக்கத்தில் இருந்தது. குடும்பத்தின் தலைவர்கள் மாமனார், மாமியார், தாத்தா, பாட்டி பெரியப்பா, பெரியம்மா மட்டுமே. அவர்கள் சொல்லுக்கு மற்றவர்கள் பணிந்தார்கள், கட்டுப்பட்டார்கள்.
மருமகள்களின் விருப்பங்கள், எண்ணங்கள் கருத்துகள் என்னவென்று கேட்கப் படாத நிலை இருந்தது.. வரதட்சிணை கண்டிப்பாக புழக்கத்தில் உண்டு. எத்தனையோ இளம் பெண்கள் திருப்பி அவர்கள் வீட்டுக்கு அனுப்பட்டிருக்கிறார்கள். இது அக்கால வழக்கத்தின் மோசமான பக்கம்.
குடும்பத்தில் எல்லோரும் ஏதாவதொரு பங்கை ஏற்றுக்கொண்டு பொறுப்பை வகித்தார்கள். பணம் அவர்கள் வாழ்க்கை முறையில் குறுக்கிடவில்லை. ஒருவரோடொருவர் உறவு முறையை மதித்து பெரியோரின் வாக்குக்கு பணிந்து வாழ்ந்தார்கள். எல்லோரும் ஒன்றாக உழைத்து, ஒன்றாக சாப்பிட்டு வீடு கலகலவென்று இருந்தது. இது அக்கால வாழ்க்கையின் நல்ல பக்கம்.
சமூகத்தில் இப்படிப்பட்ட கூட்டுக்குடும்ப முறையில் சில தவறுகளும் நேர்ந்தன. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்கள் மதிக்கப் படவில்லை.பெண்களுக்கு படிப்பு சமூக சுதந்திரம் வழங்கவில்லை. வயது வித்தியாச ரெண்டாம் மூன்றாம் கல்யாணம் சமூகத்தில் எதிர்க்கப்படவில்லை. இளம்பெண்கள் வயதானவர்களின் மனைவியானார்கள். மருமகள் வீட்டு வேலைக்கு சம்பளம் இல்லாத பணியாள் என்ற அதிகாரம் மாமியார்களிடம் இருந்த காலம். எத்தனையோ துர் மரணங்கள், தற் கொலைகள் பல குடும்பங்களில் வெளியே நேர்மை நீதி கிடைக்காத உள்ளக் குமுறலால் விளைந் தது. இது எதுவுமே சமூகத்தில் பெரிதாக காட்டிக் கொள்ளப்படவில்லை. வயதான கணவன் இறந்தால் அவன் உடலோடு இளம் மனைவியும் எரிக்கப்பட்ட காலம். நல்லவேளை ராஜ ராம் மோகன் ராய், வெள்ளைகார அரசின் உதவியோடு SATHEE ACT சதி சட்டங்களை அமுல் படுத்தி, குழந்தை வயது திருமணங்கள் நின்றன. CHILD MARRIAGE ABOLITION சட்டம் வந்தது. இது அக்கால வாழ்வின் கொடுமையான பக்கம்.
காலம் மாறியது. புதிய சட்டங்கள் பெண்களின் நலத்துக்கு வழக்கில் வந்தன. பெண்கள் படிப்பு, உத்யோகம், சமூக சம உரிமை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது. கூட்டுக் குடும்பங்கள் முறிந்தன.இது மாற்றம்.
இப்போது வண்டி முன்னால் குதிரை பின்னால் , மாமனார் மாமியார்கள் LUGGAGE , எக்ஸ்ட்ரா BAGGAGE ,ராகு கேதுக்கள் என்று கல்யாணம் நடக்கும் முன்பே பேசப்பட்டு அப்புறம் பெண் வீட்டார் போடும் நிபந்தனைகளுக்கு உட்பட்டால் தான் பெண் கல்யாணத்துக்கு ஒப்புக் கொள்வாள் என்ற நிலைமையும் வந்துவிட்டது. இது இப்போதைய நடைமுறை.
”நாம் இருவர் நமக்கு ஒருவரோ இல்லை இருவரோ” என்ற முடிவு அமுலுக்கு வந்து விட்டது. ஒவ்வொரு வீட்டிலும் டஜன் குழந்தைகள் காலம் மலையேறி விட்டது.
வேற்று மனிதர்கள் என்று கணிக்கப்படும் அப்பா வோ அம்மாவோ, அண்ணி, மைத்துனன் என்று யாராக இருந்தாலும் கணக்குப் பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். இத்தனைக்கும் முன் போல இல்லாமல் இப்போதெல்லாம் எல்லோரிடமும் நிறைய பணப் புழக்கம் இருக்கிறது, செலவழிக்கும் வகையும் அதிகமே. ”இருந்தும் பறந்து முறம் தூக்குகிறார்கள்!”
முன்பு போல அறுபதையே தாண்டாதவர்கள் இப்போ தொண்ணூறு வரை உயிர் வாழ்கிரார்கள், இது விஞ்ஞான மருத்துவ கண்டுபிடிப்புகளால் நடந்த முன்னேற்றம். தப்பா ? அவரவர்கள் பெற்றோர்கள் வீடு வாசல் என்று கஷ்டப் பட்டு கட்டி அதையும் பெற்ற பிள்ளைகளுக்காக வித்து, தலைப் பையனோ, அடுத்த பையனிடமோ இருக்கும் படி நேர்கிறது.பெண்கள் வீட்டில் வாழும் பெற்றோரால் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதாக தோன்றுகிறது. பெண்ணுக்கு முழு சுதந்திரம் உள்ள வீடுகளில் இது ஒருவேளை முடியலாம். அதிலும் எண்ணற்ற உள் தகராறுகள் சிக்கல் இருக்கிறது.
சில சமயம் பணம் வேண்டும் என்பதற்காக இருக்கும் ஒரே வீட்டையும் விற்று,இருக்கும் பிள்ளைகளுக்கு பிரித்துக் கொடுக்கும் படியான நிர்பந்தம் ஏற்படும் போது, எல்லாப் பிள்ளகளுமே ,ஒரு மனதாக பெற்றவர்கள் மாறி மாறி எல்லாப் பிள்ளைகளிடமும் இருக்கட்டும் என்று கர கோஷம் போடுவார்கள். ஏன், எதற்காக?சொத்தில் பங்கு வருகிறது என்று! ஆனால் சில வருஷத்திலேயே , பெற்றவர்கள் டிபன்டன்ட் ஆக இருக்கும் படி வந்தால், பாசிங் த பார்சல் தான், அப்பப்ப மூட்டைக் கட்டி புட் பால் போல கிக் அடித்து அனுப்பப் படுவது அநேக குடும்பங்களில் வாடிக்கை.
எல்லாப் பிள்ளைகளுமே ஒரே மாதிரியாக , எல்லா மாட்டுப் பெண்களும் ஒரே மாதிரியாக இருப்பதும் இல்லை, ஒரு சிலர் அவர்கள் பெற்றோர்கள் படும் அவஸ்தையைப் புரிந்துக் கொண்டு மாமனார், மாமியாரை நன்றாக நடத்துகிறார்கள், ஒரு சிலர் அவர்களுடைய பிறந்த வீட்டில் பெற்றோர்களுக்கு நடக்கும் கொடுமையை மனதில் நினைத்து , அவர்களுடைய மாமனார், மாமியாரை நன்றாக பார்த்துக் கொள்வதில்லை. இதுவும் பரிதாபமான நிலை.
பெற்றவர்களும் தன்னிடம் இருப்பதை எல்லாவற்றையும் பிரித்துக் கொடுத்து விட்டால், கிடைக்க வேண்டியது கிடைத்ததனால், ஒரு பிரயோஜனமும் இல்லாததால் பிள்ளைகள் இனி சுரண்ட என்ன இருக்கு, எதற்காக பணம் செலவழிக்கணும்னு நினைக்கிறார்கள். இதைப்பற்றி நினைக்கவே முடியவில்லை.
சில வயோதிக பெற்றோர்கள் கடைசிவரை தனியாகவே இருந்து விடுகிறார்கள் ,சின்னதாக வீடு பார்த்துக் குடி போகிறார்கள், வரும் பென்ஷனில் முடிந்தவரை பிள்ளைகளை எதிர்பார்க்காமல் காலத்தை தள்ளி விடுகிறார்கள், நம்பகரமான வேலைக்காரியை வைத்துப் பிழைப்பை முடித்து விடுகிறார்கள். ஒரு சிலர் பிள்ளைகளின் வீட்டிற்குப் பக்கத்திலேயே தனியாக சுதந்திரமாக இருக்கிறார்கள், பட்டும் படாததுமாக.
ஒரு சிலர் வெறும் கையுடன் ரிடையர் ஆகி, மொத்தமும் பிள்ளைகளை எதிர்பார்க்கும் போது தான் ப்ராப்ளமே .
சொல்லிக் காட்டி சோறு போடும் மகன், மருமகள், பணம் தேவைப் படும் போது கூனிக் குறுகி கேட்க நேரும் போது, ஒரு முழுங்கு விஷம் குடித்து செத்து தொலைந்து விடலாமொன்னுக் கூடத் தோணும்படி நடத்தப் படுவார்கள்.என் காதில் நிறைய இப்படி குறைகளை கேட்க நேர்ந்திருக்கிறது. நான் முதியோர் சங்க காரியதரிசியாக, செயலராக இருந்த போது எத்தனையோ பிரச்னைகளை தீர்த்து வைத்ததிலமட்டற்ற மகிழ்ச்சி. எத்தனையோ வீடுகளுக்குச் சென்று வாதாடி இருக்கிறேன்.
கடைசிக் காலத்தில் வயதானவர்கள் வேறு எதற்குப் பணம் இருக்கிறதோ இல்லையோ, மாத்திரைக்கும், யாத்திரைக்கும் கண்டிப்பாக கையில் கொஞ்சம் ஐவேஜ் வைத்துக் கொள்ளணும் .
நிறையப் பென்ஷன் வந்தாலும் தப்பு, பிள்ளைகள் அரியர்ஸ் வரும் போதேல்லாம் எதாவது சாக்குச் சொல்லி பிடுங்கி விடுவார்கள்,.
பெற்றவர்களிடம் பணம் இருந்து பிடுங்குவது ரொம்ப ஈஸி ,அதே பெற்றவர்களுக்கு உடம்பு என்று வரும் போது, பணம் வாங்கியதே செலெக்டிவ் அம்னீசியாவாக மாறி விடும். அப்போதான் பாசம் எங்கேன்னு தேடும் உறவுகள் பணத்திற்காக பயந்து ஓடி ஒளிந்துக் கொள்ளும். எல்லாப் பிள்ளைகளுமே பங்கு போட வேண்டி வரும், அதுவும் ஒரு சில பிள்ளைகள் வெளி ஊரிலோ, நாட்டிலோ இருந்தால் யாரிடம் இருக்கி றார்களோ அவர்களுக்குத் தலை வலி அதிகம் ஆகிவிடும். பணம் செலவழிகிறதே என்பதோடு , சரீரத்தாலும் உதவி செய்யவேண்டி உள்ளதேன்னு கடுப்பாக மாறி அது வார்த்தையின் எரிமலையாக துப்பும். அப்போது உடம்பு முடியாத பெற்றோர்கள் படும் பாடு கண்ணில் ரத்தம் வரவழைக்கும்.
பிள்ளையிடம் ATM கார்ட் கொடுத்து பணம் எடுத்து வர சொன்னால்,அதில் கொஞ்சம் சுருட்டு, கேட்டால், ‘ஆமாம், எடுத்துக் கொண்டேன்’ என்று சொல்லுவான்’.இவனே மனைவி அவனைக் கேட்காமல் பேன்ட் பாக்கட்டிலிருந்து எடுத்தால் ,ஒரு சிவ தாண்டவமே ஆடிவிடுவான், அது வேற, இது வேற !
வந்தவர்கள் யாராவது பெற்றோர்களுக்கு பணம் கொடுத்து விட்டுப் போனால், அத்தையும் எதற்கோ என்றைக்கோ செலவு செய்ததைக் காட்டி …பிச்சை எடுத்தானாம் பெருமாளு, அத்தையும் பிடுங்கி னானாம் ஹனுமானு ‘ன்னு கொரங்கு ஆப்பம் பங்கு போட்டா மாதிரி,’ காக்கா குஸ்’ ன்னு போய்டும்.
பெற்றவள் சுமை என்று சீக்கிரமே வெளியே தள்ள வில்லை, அவள் உன்னை வயிற்றில் சுமந்ததற்க்கும் வாடகை கேட்டதில்லை. அப்படி இருக்க அப்பா அம்மாவை தன வீட்டில் வைத்துக் கொள்ள மற்ற உடன் பிறந்தவர்கள் மாசம் maintenance கொடுக்க வேண்டும் என்று சில வீடுகளில் நிலைமை இருக்கிறது. அம்மா அப்பா மெஷின், கார், வீடு, இல்லை, அதற்கு தான் மெயின்டனன்ஸ் தேவை. இங்கே அன்பு பாசம் மட்டும் தான் தேவை. அப்பா அம்மா யாரிடம் இருக்கிறார்களோ அவர்களுக்கு மற்றவர்கள் மாசம் இவ்வளவு என்று பணம் அனுப்பணும் , ஒரு பிள்ளை மாற்றி மற்றொருவன் மருந்து செலவுகளை ஏற்கணும் என்று ஒரு முறை வைத்திருக்கிறார்கள் சில குடும்பங்களில். சூழ்நிலை காரணமாகவோ, தட்ப வெட்பம் காரணமாகவோ இதில் ஒரு பிள்ளை வீட்டில் முதிய பெற்றோர் இருக்கும் படி நேர்ந்தால், மற்ற பிள்ளைகள் பணம் அனுப்பணும் மாசா மாசம். அந்தப் பணத்தையும் வாங்கிக் கொண்டு, போடுகிற ஒரு பிடி சோற்றிற்கும், இருக்கும் வாடகைக்கும் என்ற கணக்கு காட்டி, சொல்வதென்னவோ ‘நானே தான் வைத்துக் கொள்ள வேண்டியிருக்கு’ என்று. இப்படிச் சொல்வது அந்த முதியோர் காதிலும் விழும்போது அவர்கள் மெளனமாக கண்ணீர் உகுப்பது எனக்கு தெரியும்.
அப்படிச் சொல்லிக் காட்டுவதனால் பெண்களிடம் போய் சில நாட்கள் இருக்கலாம் என்று நினைத்து, போய் இருந்தபோது அதில் இன்னும் சிக்கல்கள் ஜாஸ்தி. பணம் வாங்கி கொண்டாலும் சிலர் பேசும் வார்த்தைகள், எப்பப் பாரு சொல்லிக் காட்டுவது நரக வேதனை.
சில இடங்களில் தாய் தந்தையர் அவர்களுடைய பர்சனல் செலவுகளைத் பென்சனிலேயே வாங்கி பிள்ளையின் கையை எதிர்பார்க்காமல் கூட்டுக் குடும்பமாக இருந்தாலும் ஒதுங்கி வாழ தொடங்கி விட்டார்கள். தான் உண்டு தன் அறை உண்டு என்றும் இருக்கிறார்கள், பிள்ளை மருமகள் பெறக் குழந்தைகளை ஒரு கேள்வியும் கேட்காமல் போட்டதை சாப்பிட்டு நமக்கேன் வம்பு என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள். ஏன்? உதவிக்கும் கூப்பிட்ட குரலுக்கும் ஒரு மகன் இருக்கிறானே என்பதால் தான் .
பிறந்த நாள் செலவு விஷயமும் இப்படித்தான். பெருமைக்காவது தங்களுடைய பிள்ளை பெண்களின் பிறந்த நாளை, ஹோட்டலிலோ, வீட்டு மொட்டை மாடியிலோ, பாட்டு, கூத்து, கேம்ஸ் என்று விமரிசையாக கொண்டாடு வார்கள், ஆனால் அதே தங்களுடைய பெற்றவர்கள் என்றால் பலூனுக்கு காத்து இறங்கினால் போல முகம் ஆகி விடும். யாரால முடியும் எனக்கோ வயசாகிறது, இந்த வயசில் வேண்டாம் என்பார்கள். ஆனால், வயசான பிறகு தான் அவர்களுக்கு, தங்களுக்கு என்று ஒன்று யாராவது செய்ய மாட்டார்களா, நம்மைப் பார்க்க யாராவது வரமாட்டார்களா என்று இருக்கும்.
குடும்பச் செலவுகள் பிள்ளைகள் பெண்கள் இடையே பங்கு போடும் வழக்கம் வந்து விட்டது. பெற்றோர்களுக்கு ஏதேனும் செலவு செய்வதாக இருந்தால் தனித்து யாரும் செலவழிக்க முன்வருவது குறைந்து போய்விட்டது. ஒருவர் இறந்து விட்டு , துக்க வீட்டில் எதாவது பொருள் வாங்க வேண்டி இருந்தால், (ஒரு பேச்சுக்கு மூன்று பிள்ளைகள் என்று வைத்துக் கொள்வோம்). அது விசிறியாக இருக்கட்டும், பிளாஸ்டிக் ஸ்பூனாக இருக்கட்டும் ,எது வாங்கினாலும் கூடுமானவரை மூன்றாக வாங்கி அதையும் பங்கு போடுவார்கள், அவ்வளவு கணக்காக இருக்கும். பெற்றவர்கள் தானே என்று இல்லை ஒரு பிள்ளை கூடுதலாக கொடுத்தால் தான் எண்ணக் குறைந்தாப் போயிடும்.? பெற்றோர் பிள்ளைகள் வீட்டில் தவணையில் சென்று எத்தனை நாட்கள் இருக்கலாம் என்று கணக்கிடப்படுகிறது.
பந்தாடப்படுகிறார்கள். எல்லாம் காலத்தின் கோலம் என்று ஏற்றுக் கொள்ளவேண்டியிருக்கிறது. இதுவும் மாறலாம்.
ஒரு வீட்டில் பிள்ளைகள், பெண்கள் ஏதோ ஒரு முக்கியமான பண்டிகை, நிகழ்ச்சியின் போது மட்டும் வந்து தலை காட்டுகிறார்கள். திவசத்தன்று ஏதோ நாடகத்தில் பங்கு கொள்வது போல வந்து புடவை மாற்றிக்கொண்டு , நாடகம் ஆடிவிட்டு, பணம் பெற்றுக் கொண்டு போவதற்கு பதிலாக தங்களுடைய பங்குக்கான பணத்தைக் கொடுத்து விட்டுப் போவார்கள், அடுத்து, அடுத்த வருஷ திவசம் தான் அது வரை…. நீயாரோ நான் யாரோ! என்று ஒருவர் எழுதி இருந்தது ரொம்ப சரி எனலாம்.இந்த மாதிரி பெற்ற பிள்ளைகள் விட்டேத்தியாக, பெற்றவர்களைக் கவனிக்காமல் தாமரை இலைத் தண்ணிப் போல இருப்பதனால் தான் முதியோர் இல்லங்கள் விளம்பரங்களை அடிக்கடி நாம் பார்க்கிறோம்.
எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணம். அன்பு பாசம் இன்மை. பணம் முக்கியப்பங்கு வகிக்கும் இடத்தில் பாசம் நேசத்துக்கெல்லாம் இடமில்லை. சுயநலம் பெரிதாகிவிட்டால் பற்று பாசம் பந்தம் எல்லாம் அருகே நெருங்க விடாது. குடும்பத்திலிருந்து தப்பிப்போக வெளிநாட்டு வேலைகள் ரொம்ப சௌகர்யமாக போய்விட்டது. எப்படியோ வெளிநாடு போய் அங்கே ஒரு வேலை சம்பாதித்துக் கொண்டு அங்கேயே நிரந்தரமாக வாழ மனம் இடம் கொடுத்துவிட்டது.இனி அடுத்த தலைமுறை முதியோரான பெற்றோரை அடிக்கடி சந்திக்கவோ கவனித்துக் கொள்ளவோ தேவையில்லை. பணத்தைக் கொடுத்தால் முதியோரில்லங்கள் நன்றாக கவனித்துக் கொள்ளும் என்று நம்புகிறார்கள். மனம் என்று ஒன்று இருக்கிறதே என்பதை பணம் மறைத்து விடுகிறது.
ஒரு வார்த்தை சொல்லி முடிக்க ஆசைப்படுகிறேன். மேலே சொன்னவைகளில் நல்லவைகள் ஏதவாதிருந்தால் அது எல்லா வீடுகளிலும் தொடரட்டும். விரும்பாத தகதவை இருந்தால் இந்தக்கணம் முதல் அவை மாற்றப்படட்டும். முடிந்தவரை பெற்றோர்கள்,முதியோர்கள் மனம் சந்தோஷமாக அன்போடு பாசமாக இருக்கும்படியாக அவர்கள் கடைசிகாலத்தை எல்லோரும் சந்தோஷத்தில் பங்கு போட்டுக்கொள்ளவேண்டும். பெரியோர் முதியோர் ஆசி ரொம்ப அவசியம் நமக்கு.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.




Clear picture of present & generation