
பகவான் ராம கிருஷ்ணர் – நங்கநல்லூர் J K SIVAN
”அம்மா இங்கே வா வா”
நமக்கெல்லாருக்குமே பக்தி உண்டு, பூஜை பண்ணுவோம், பஜனைபாட்டுகள் தனித்தோ சேர்ந்தோ பாடுவோம். கை தட்டி ஆடுவோம். உபவாசம் இருப்போம், அர்ச்சனை பண்ணுவோம், எல்லாம் சரி. இதன் மூலம் கடவுளை நேரில் கண்டோமா? காண ஆசைப்பட்டதாவது உண்டா? நாம் ஒருவருமே ”பகவானே நான் உன்னை பார்க்க வேண்டும்,எங்கிருக்கிறாய், வா என் எதிரில் வா ” என்று அழுது புரண்டதுண்டா?
தேடியதுண்டா? பிடிவாதம் பிடித்ததுண்டா? பைத்யமாக தன்னை மறந்து, அன்ன ஆகாரமின்றி அந்த விகிரஹத்தையே பார்த்துக் கொண்டிருந்ததுண்டா? அது தான் நமக்கும் ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும் உள்ள வித்யாசம்.
அமானுஷ்ய அந்த மயானத்திற்கு சென்று அம்பாள் பவதாரிணியை நோக்கி தியானம் செய்யும்போது ராமகிருஷ்ணர் தனது ஆடையையும் பூணலையும் கூட களைந்து விடுவார். நிர்வாணமாக இருக்கிறோம் என்ற எண்ணம் கூட கிடையாது. அவர் ஊர்க்காரர், உறவினர், தக்ஷிணேஸ்வரத்தில் காளிகோயிலில் அவருக்கு உதவி செய்ய நியமிக்கப்பட்ட ஹ்ரிதய்க்கு இது தெரிந்து ஒருநாள் ”ராமகிருஷ்ணா, ஏன் இப்படி பண்ணுகிறாய்?” என கேட்டான்.
”என் தெய்வத்தோடு நான் ஹ்ரிதயம், மனம், ரெண்டும் கலந்து இணையும்போது நான் எல்லாவற்றி லிருந்தும் விடுபட்டு இருக்கவேண்டாமா? பிறக்கும்போது எட்டு தடைகளோடு பிரிக்கிறோம். வெறுப்பு, வெட்கம், உறவு, உயர்வு தாழ்வு பேதம், பயம், ரகசியம், ஜாதி வித்யாசம், துக்கம் என்ற இவற்றை களைய வேண்டும் . நான் போட்டுக்கொண்டிருக்கும் பூணல் நான் ஒரு உயர்சாதி, பிராமணன், என்ற நினைப்பை தருகிறது. என் தாய்க்கு முன் நான் நிற்கும்போது இதெல்லாம் என்னிடம் இருக்கலாமா?
”ஐயோ, ராமகிருஷ்ணனுக்கு பைத்தியம் பிடித்து விட்டதே ” என கவலையுற்றான் ஹ்ரிதய்.
நாள் செல்ல செல்ல ராமகிருஷ்ணர் பூஜை பண்ணும் வழிமுறைகளும் தடை பட்டன. கமலகாந்த் , ராம்பிரசாத் போன்ற காளி பக்தர்கள் பாடல்களைப் பாடிக்கொண்டு மணிக்கணக்காக பவதாரிணி முன் அமர்ந்தார் ராமகிருஷ்ணர். அவளை நாடி, தேடி, தாயிடமிருந்து பிரிந்த சேயானார்.
”அம்மா நீ எங்கே? என்று தரையில் முகத்தை இடித்துக் கொண்டு அழுதார்.
”சொல் நீ உண்மையிலேயே அம்மாவா? இல்லை சும்மாவா? நீ உண்மையிலேயே இருப்பவளானால் ஏன் என் முன்னே வரக்காணோம்?
மணிக்கணக்கில் தரையில் அவள் முன்னே ஜமக்காளத்தை மடித்து போட்டு அதன் மேல் உட்கார்ந்து கொண்டு அவளை வெறித்து பார்த்துக் கொண்டிருப்பார்.அன்ன ஆகாராதிகள் தூக்கம் எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தன. நின்றன.
எதிர்பார்த்த நேரம் ஒருநாள் வந்துவிட்டது. பவதாரிணி கண் முன் தோன்றினாள்.
”ஈரமான துணியைப் பிழிவோமே, அதுபோல் என் ஹ்ரிதயம் பிழிபட்டது. எங்கோ பறப்பது போல் லேசானேன். இந்த ஜென்மத்தில் அவளை காண முடியாது போய் விடுமோ என்ற பயம் என்னை பிடித்துக் கொண்டது. பிரிவு இனிமேல் தாங்கமுடியாது என்ற நிலை. சே, இதற்கு எந்த வாழ்வு? என்று தோன்றியது. அம்பாளுக்கு மேல், சுவற்றில் தொங்கிய வாளின் மேல் என் கண் போனது. ஆஹா. நல்ல யோசனை.முடிவு. இது தான் என் வாழ்வின் கடைசி நேரம். பந்து போல் எகிறினேன். மேலே இருந்த அந்த வாளை எடுத்தேன். வாளுக்கும் எனக்கும் இடையே……..அப்பப்பா, . என் தாய், என் அம்மா .என் இதய தெய்வம் .. பவதாரிணியின் முகம் ..தோன்றி காட்சி அளித்தது. என் எதிரே எல்லாமே தலைகீழாக வேகமாக சுழன்றது. கோவில், கட்டிடம், கங்கை நதி, மரம், கோபுரம், நந்தவனம், எல்லாமே ஏன் இப்படி தலை கீழாக வேகமாக ஓவென்று சுற்றுகிறது?. அதில் ஒவ்வொன்றிலும் பெரிதும் சிறிதுமாக எங்கும் எதிலும் என் தாயின் முகமும் காண்கிறதே….சுழலும் வேகம் அதிகரித்தது. இன்னும், இன்னும்…… ஓ வென்ற சப்தத்திலும் வேகத்திலும் உருவங்கள் மறைந்தது. நான் எங்கிருக்கிறேன்? … நினைவு அழிந்தது..எவ்வளவு நேரம் இப்படி நடந்தது…. அப்புறம் அப்புறம்… பிறகு அமைதி. அசைவற்று போனேன். எல்லாம் மறைந்து ஒரு எல்லையற்ற காலமற்ற வெள்ளம்… பிரஞை உணர்வு மீண்டதா?. பேரிடி போன்ற சப்தம். அதன் எதிரொலியில் நடுக்கம். மூச்சு திணறியது. எது என்னை மூழ்கடிக்கிறது?. என் நினைவு அகன்றது. வெளி உலகத்தில் எது என்ன எப்படி நடந்ததோ? எனக்கென்ன தெரியும்? என்னுள்ளே ஒரு ஒளி பெரிதாகிக் கொண்டே வந்தது. என் தாய், என் அம்மா ஒளியாகி என்னுள்ளே வியாபித்தாள் ..அப்பாடா அவளை ஒருவழியாக கடைசியில் பிடித்து விட்டேன். இனி அவள் என்னுள்ளே”. விடுவேனா அவளை இனிமேல் வெளியே….” இதெல்லாம் ராமேக்ரிஷ்ணர் சொன்னது.
ராமகிருஷ்ணன் கண் விழித்தார். இதழ்கள் அம்மா என்று உச்சரித்தன. நடந்தது இனி வரப்போவதற்கு அச்சாரம். இனிப்பின் ருசி தெரிந்த குழந்தை ‘ இன்னும் இன்னும்’ என்று கேட்குமே? அம்மாவை நாடினார். இடைவெளி இல்லாத எப்போதும் நிரந்தரமாக பவதாரிணி தேவையானாள். குழந்தை மட்டுமா விளையாடும்?. அம்மாவும் .கண்ணாமூச்சி விளையாடினாள். தோன்றுவாள், மறைவாள். அழ வைப்பாள். சிரிக்க வைப்பாள். தேடி அழும்போது ”அழாதே கண்ணா” என்று எதிரில் நின்றாள். பேச்சுக்கு, சிரிப்பதற்கு, ஆள் கிடைத்தாயிற்று அவளுக்கு மட்டுமல்ல அவருக்குமே. இனிமேல் அவர்கள் இணை பெரியாத தாயும் சேயும். கண் முன்னே ஆயிரக்கணக்கான ‘பளிச்’ சென்று ஒளிவிடும் மின்மினி பூச்சிகள் பறக்கும். எங்கோ முடிவில்லாத, உருவம் காணமுடியாத ஒரு பனித்திரை போர்வையாக மூடும். ஆழம் தெரியாத சமுத்திரத் தின் அடியில், பேயாட்டம் ஆடும் அலைகளின் மேல்,…. மேலே உச்சி வானில்…. எங்கெல்லாம் என் தாய் என்னை அலைக்கழிக்கிறாள்? சுடச் சுட வெள்ளியை காய்ச்சி உருக்கி வார்த்தது போல் இதோ திருவடிகள், கணுக்கால், தொடை, இடை, மார்பு, முகம் தலை….முழு உருவம்… ஆஹா என்ன தேஜஸ்..அவளது மூச்சு சூடாக அவர் முகத்தில் பட்டது. அவள் குரல் காதில் ஒலித்தது. பூஜை பண்ணுவார். எண்ணற்ற முறை அவளது தரிசனத்தில் மரக்கட்டையானார் ராமகிருஷ்ணர்.
”இந்த பூஜாரி பூஜை சரியாக பண்ணவில்லையே” அவனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது” என்ற சேதி பக்தர்களிடையே பரவியது. தட்டில் புஷ்பம் வைத்தால் . அதை எடுத்து தன் தலை, முகம், கால்களில் எல்லாம் முதலில் போட்டுக்கொண்டு பிறகு பவதாரிணிக்கு சாத்துவார். அவள் தாடையை பிடித்து கொஞ்சுவார். பாடுவார், பேசுவார், அணைப்பார். சிரிப்பார். நர்த்தனம் ஆடுவார்.
பிரசாதம் ஒரு கவளம் எடுத்து அவள் வாயில் வைத்து ”இந்தா நீ சாப்பிட்டால் தான் விடுவேன்” என்று பிடிவாதம். அவருக்கே அவள் சாப்பிட்டதாக தோன்றினால் தான் விடுவார்.
இரவில் அவளை நித்திரை படுத்திவிட்டு பிறகு தான் தனது அறைக்கு போவார். ஆனால் அவள் படியேறி மாடிக்கு கோபுரத்தின் உச்சிக்கு போவது தெரியும். ”சலங் சலங்” . தண்டை கொலுசும் ஒலிக்குமே. அவர் கண்களில் தெரிவாள். ஏன் தலையை விரித்து போட்டுக்கொண்டிருக்கிறாள்? என்ன செய் கிறாள்? அவள் உருவம் பெரியது. கங்கை நதி இருளில் ஓவென்று ஒலித்தது. வானுக்கும் பூமிக்குமாக பவதாரிணி கங்கை மேல் நிற்கிறாளே, அதோ தெரிகிறாளே . எவ்வளவு பெரிய உருவம். கங்கையை, கல்கத்தா முழுவதையும் பார்க்கிறாளே”
தக்ஷிணேஸ்வரம் காளி கோவில் நிர்வாகிகள் சந்தேகமே படவில்லை. இது சரியான முற்றிய பைத்தியம் என்று தீர்மானித்தார்கள். சில டாக்டர்கள் வந்து பார்த்தனர். எந்த மருந்தும் வேலை செய்யவில்லையே. எல்லோரும் சொல்வது போல் நான் பைத்தியமாகி விட்டேனோ? என்று ராமக்ரிஷ்ணருக்கே தோன்றும்.
”எல்லையற்ற கடலில் திசை தெரியாமல் மிதந்து செல்கிறேனே. அம்மா, நீ தான் வழிகாட்டி. எனக்கு மந்திரமோ, தந்திரமோ, வேதமோ, சாஸ்திரமோ, ஒன்றுமே தெரியாதே. உன்னை நான் அடைய வழி நீ தான் சொல்ல வேண்டும்.”
பைத்தியம் என்று சொன்னவர்கள், அவரது சாத்வீகம், அமைதி, எளிமை, பரிபூரண பக்தி ஆகியவற்றை போற்றினார்கள். அவரைக் கண்டாலே தாங்கள் உயர்வடைவதை உணர்ந்தனர்.
கோயில் தோட்டத்து வட மூலையில் ஒரு இடம் தனக்கு அமைத்துக் கொண்டார்.
‘அடேய் ஹ்ரிதய், இந்த ஐந்து செடிகளை இங்கே நட்டு விடுகிறாயா?”
”ம். நடுகிறேன்’
ஹரிதய் நட்டான். அது தான் பஞ்சவடி. நாம் இன்றும் தக்ஷிணேஸ்வரத்தில் பார்ப்பது.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


