
ரெண்டு ஞாயங்கள் – நங்கநல்லூர் J K SIVAN
என் எழுத்துக்கள் படிப்பதற்கு கஷ்டமாக இருக்கிறதா? என் எண்ண ஓட்டம் கண்ணில்லாமல் தடுமாறி நடப்பவனைப் போல் அங்குமிங்குமாக அலைபாய்கிறது, சீராக இல்லையா? ஸ்வாரஸ்யமில்லாத ஒரு எழுத்தா? இப்படி இருந்தால் ஆச்சர்யமில்லை.
எனக்குள் ஏதோ ஒன்று உந்துதல் தந்து எழுத வைக்கிறது. கடகடவென்று மனதில் தோன்றியதை கீ போர்டில் ஆங்கிலத்தில் டைப் பண்ணுகிறேன். அது தமிழாக்கி தருகிறது. எனக்கு தமிழ் டைப்பிங் தெரியாது. 143 புத்தகங்கள் இப்படி தான் எழுதி இருக்கிறேன். பேனா பிடித்து காகிதத்தில் எழுதும் வர்கத்தை நான் சேர்ந்த வனில்லை.
எனக்கு 84+ என்றாலும் வாழ்க்கையில் கொஞ்சம் கூட போர் bore இல்லை. ஒவ்வொருநாளும் இன்னும் எட்டு மணி நேரம் கூட இருக்கக்கூடாதா என்ற ஏக்கம் உள்ள ஒரு பிறவி. 18 மணி நேரமாவது கம்ப்யூட்டர் முன்னால் நான் உட்காரவில்லையென்றால் தண்ணீரில்லாத மீன். துடிப்பேன். உங்களிடம் எத்தனையோ எண்ணங்களை ஒவ்வொரு நாளும் பரிமாறிக் கொண்டிருக் கிறேன்.
இப்போது என்னமோ உங்களோடு ”அவனை”ப் பற்றி பேச ஒரு எண்ணம் வந்ததால் இது உங்கள் கண்களில் இப்போது படுகிறது. இதுவும் அவனுடைய திருவிளையாடல்களில் ஒன்றே என்று எடுத்துக் கொள்ளலாம்.
ஏற்கனவே நிறைய பேர் சொல்லி, படித்து, கேட்ட விஷயமாக இருந்தால் தான் என்ன தப்பு. நாம் தான் எந்த நல்ல விஷயம் படித்தாலும் அதன் படி நடப்பதே இல்லையே. எனவே திரும்ப திரும்ப சொல்வதனால் என்றாவது ஒருநாள் யாருக்காவது ”உள்ளே” போகாதா? . அதுவும் ஒரு விதத்தில் நன்மை தானே.
வாசலில் ”துடைப்பம் துடைப்பம்” என்று படை படைக்கும் வெயிலில் இடுப்பில் ரெண்டு வயது குழந்தையும், தலையில் துடைப்ப கட்டும்,காலில் செருப்பு இல்லாமலும் கொதிக்கும் வெயிலில் தார் ரோடில் கத்திக்கொண்டே போகிறாளே. எல்லாருமா அவள் குரலைக் கேட்டு கூப்பிட்டு உடனே வாங்குகிறார்கள். யாருக்கு துடைப்பம் தேவையோ அவர்கள் அவளை நிறுத்தி கூப்பிட்டு தேவையான நல்ல துடைப்பமாக பொறுக்கி எடுத்துக்கொண்டு, அவள் சொன்ன விலையில் எவ்வளவு குறைந்த காசு அவளுக்குக் குறைத்துக் கொடுக்க முடியுமோ அதைக் கொடுத்து பேரம் பேசி வாங்கியதில் சந்தோஷம் அடைகிறோம். பாவம் ரெண்டு ரூபாய் அவளுக்கு கேட்டதற்கு மேல் கொடுத்தால் என்ன.? அவள் ஏதாவது காசு கிடைத்தால் எதையாவது வாங்கி குழந்தைக்கு கொடுக்கலாமே என்று நஷ்டத்தில் கொடுப்பதை நாம் கொள்ளை லாபமாக, சீப்பாக cheap பேரம் பேசி வாங்கிய சாமர்த்தியமாக நினைத்து சந்தோஷப் படுகி றோம். இவ்வளவு கெட்டிக்காரர்கள் நாம், ஏதோ ஒரு ஹோட்டலில் ஒட்டிக்கு ரெட்டியாக எதையோ ஒரு பேர் சொல்லி என்னவோ ஒன்றை, ஒரு பீஹாரி, நேபாளி கொண்டுவந்து கொடுத்ததை சந்தோஷத்தோடு சாப்பிட்டு அவன் அதற்கான கம்ப்யூட்டர் bill லை அட்டைக்குள் வைத்ததும் ஐநூறு ரூபாய் நோட்டுகளை அதற்குள் திணிக்கிறோம். அவன் மீதி நூறு ஐம்பது என்று மட்டும் அந்த அட்டைக்குள் வைத்துக் கொண்டு வந்து கொடுப்பான், அதில் ஒரு நூறையோ , சில ஐம்பதுகளையோ பில் தொகைக்கும் மேலே அவனுக்காக வைத்து விட்டு வருகிறோம். இது நமது தாராள மனப்பான்மையாலா? இல்லை, நமது அந்தஸ்து, வறட்டு கௌரவம் காட்டு வதற்காக. பாவம் அந்த துடைப்பக்காரிக்கு ரெண்டு ரூபா அன்று மத்தியானம் கொடுக்க மனம் வரவில்லையே. என்று நாம் மனம் திருந்துவோம்?
நாம் பொறுப்பற்றவர்கள். சுமைகள் தாங்க வேண்டி வந்தால் தவிக்கிறோம். பகவான் நம்பிக்கை குறைந்து வருகிறது. நன்றாக புரிந்து கொள் . உன்னுடைய சுமை எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக அவன் மேல் போடு. அனைத்தையும் அவன் தாங்குவான். அத்தனை சக்தி அவனுக்கு உண்டே. மதுரைக்கு டிக்கெட் வாங்கி மாடு சுமக்கும் மூட்டையைக் கொண்டு வந்துவிட்டாய். எப்படியோ ரொம்ப நீளமாக ரயில் ப்ளாட்பாரத்தில் platform கம்பார்ட்மெண்ட் கம்பார்ட்மெண்டாக நடந்து மூச்சைப் பிடித்து அதை S 2 பெட்டிக்குள் கொண்டு தள்ளி விட்டாய். அதற்கப்பறம், மதுரைக்கு யார் அதை சுமந்தது. நீயா. ரயிலா? அது போலவே அவன் மேல் உன் சுமையை இறக்கிவிட்டால் அவன் தூக்கிக் கொண்டு வருவான்.
”இப்படிச் செய்ய வேண்டும், அதைச் செய்யவேண்டும் முதலில் ‘ என்று பிளான் போட்டதெல்லாம் நடப்பது அவன் முடிவு. வண்டிக்குள் உட்கார்ந்து ஏன் தலையில் பாரத்தை ஏற்றிக்கொள்கிறாய்? உன்னையே தூக்கிச் செல்லும் அவன் உன் பாரத்தையுமா சுமக்க மாட்டான்?
எல்லாம் அவன் செயல் என்று நம் முன்னோர் அதனால் தான் ”பாரத்தை அவன் மேல் போடு”என்றார்கள்.
அப்படி, எல்லாமே நம்மால் ஆவது ஒன்றுமே இல்லை. அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்ற பரிபூர்ண நம்பிக்கை வந்துவிட்டால் தெளிவு மனதில் பிறக்கும். உண்மை விளங்கும். இப்படி சரணடைய ரெண்டு விதமான வழிகள் உண்டு.
ஒன்று, ”நான்” என்பது தனியாக இயங்கும் ஒரு சக்தி இல்லை. அவனிடமிருந்தே வரும் தூண்டுதல், இயக்கப்படும் ஒரு வஸ்து என்று புரிந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக ”அன்பே சிவ” மாக இரண்டறக் கலந்துவிடுவது, மாறிவிடுவது. இது எளிதல்ல. எல்லார்க்கும் முடிந்ததுமில்லை. மிகுந்த பிரயாசை வேண்டும். மனம் பக்குவமடையவேண்டும். அது என்றோ?
ரெண்டாவது, சதா சர்வகாலமும் அவனால் தானே நானே இயங்குகிறேன். என்னை ஆட்டுவிப்பவன் அவனல்லவோ என்று சிந்தையைத் தேக்கி அவனைச் சார்ந்திருப்பது. அவனே வழிகாட்டி. என் முயற்சிகள் அவன் அருளால் வெற்றி பெறட்டும் என்ற அசையாத நம்பிக்கை. இதால் அகம்பாவம் அடங்கி விரைவில் மறையும். மனதில் சுமை குறையும், நிம்மதி அந்த இடத்தைப் பிடித்துக் கொள்ளும்.
ரெண்டு வழியுமே கொஞ்சம் கரடு முரடான பாதை தான். கட்டுப்பாடு தான் இதற்கு முள் குத்தாமல் இருக்கும் பாத ரக்ஷை. ரெண்டு வழியிலும் கடைசியில் பலனாகப் பெறுவதே ஞானம். முக்தி எனப்படும். பெறுபவன் ஞானி. முக்தன். படிப்பு, அந்தஸ்து, குலம் எல்லாம் இதில் சேர்க்கையில்லை.
பக்தி வேறு முக்தி வேறு அல்ல. பக்தன் எப்போதும் தான் வேறு, பகவான் வேறு என்ற உணர்வுடையவன்.
இறைவனை வேறு நினைவின்றி சிந்திப்பவன். அவனை நாடுபவன். தேடி அடைபவன். மற்ற எண்ணங்க ளை இந்த ஒரு எண்ணத்தால் அழுத்தி அமுக்கி அழிப்பவன். அந்த இறைவன் தான் தன்னுள்ளே ”தானா” னவன் என பின்னர் அவனை உணரவைக்கிறது. அவன் எப்போதும் என்னை கண்காணிக்கிறான், பாது காக்கிறான் என்ற உணர்வு மேலிட்டு ஆனந்தம் பெறுகிறான்.
”யாமிருக்க பயமேன்?” என்று அந்த சக்தி அவனை அறிவுறுத்தி செயல் பட வைக்கும். பின் எதைக்கண்டும் அஞ்சத் தேவையில்லையே. எனவே ஞானத்தின் தாயே பக்தி தான். உலகத்தில் எதற்காக இவ்வளவு துக்கங்கள், சோகங்கள், துன்பங்கள் நம்மை பாதிக்கின்றன? காரணத்தை உன்னிப்பாகப் பார்த்தால், நமது எண்ணங்கள், முடிவுகள்,செயல்கள் இவை ஒன்றே தான் அனைத்தின் காரணமும் என புரியும். மாயை நம் கண்ணை மூடுகிறது, மதியை மயக்குகிறது. இறைவன் ” இந்தா, உனக்கு எதை வேண்டு மானாலும் எடுத்துக்கோ” என்று கொடுத்ததில் நாம் பார்த்து எடுத்துக்கொண்டது தான் நம்மை வாட்டுகிறது என்பது புரியும்.
எதிர்பார்ப்பு, விருப்பம், சுயநலம், தன்னிச்சை இவை யின்றி எல்லாம் அவன் விருப்பபடியே நடக்கும் என்று விட்டது தான் அந்த சர்வ வல்லமை பொருந்திய ஜகத் ரக்ஷகன் செயலால் நம்மை தூக்கி நிலை நாட்டு கிறது . சுதந்திரமாக செயல் படும் யாவும் அவன் பார்வையில் தான் நடக்கின்றன. வீடு பற்றியெரிகிறது. தீயணைக்கும் படை அதை நாடினால் தான் தீ அணைக்க வரும். தீயை அணைக்கும். செயல்படும். என்னால் முடியுமே என்ற முடிவு இறைவனை வேறு படுத்துகிறது. செயல் பாடுகள் அதற்குப்பின்னால் காரணமாக நிற்கும் அந்த சூத்ரதாரியின் எண்ணப்படி மட்டுமே என்ற உணர்வு அவனை நமக்கு அருகே கொணர்கிறது. திறம்பட அந்த செயல் நடக்கிறது. பொறுப்பு ”அவன” தாகி விட்டதல்லவா?
பகவான் ரமண மகரிஷியிடம் ஒரு முறை ஒரு ராணி கேட்டாள் : ” பகவானே எனக்கு எல்லாமே இருக்கி றது, எதெல்லாம் தேவையோ அவற்றை அடைந்தேன். மன நிம்மதி மட்டும் இல்லையே சுவாமி! ஏதோ அதை வர விடாமல் தடுக்கிறதே அது என் விதிதானே? ”
”உனக்கு நீ விரும்பியதெல்லாம் கிடைத்து விட்டது என்றாயே. நீ நிம்மதியை விரும்பினாயா? இல்லை அல்லவா?”
”விதி என்பது என்ன? சுவாமி ”
அப்படி ஒன்றுமே இல்லையே. அவனிடம் சரணடை. எல்லாம் சரியாகிவிடும். அவன் பார்த்துக்கொள்வான். உனக்கு பளு இருக்காதே. விதி அப்பறம் எது, என்ன செய்யும்?”
”என்னால் முழுதும் அவனிடம் சரணடைய இயல வில்லையே?”
”முழுமையாக முடியாவிட்டால் என்ன. சிறிது சிறிதாக பழக்கப் படுத்திக் கொள்ளேன்.. போகப்போக முழுமையும் உன்னை இழந்து அவனை அடைவாய். ” அதுவரை நிம்மதி இருக்காதே. மன அமைதி இருக்காதே. கொஞ்சம் கொஞ்சமாக சரணடைந்தால் விதியை வெல்ல முடியுமா சுவாமி?’
”முடியுமே. உனக்கே தெரிய வருமே.
” விதி பூர்வ ஜன்ம கர்ம பலனால் தான் வருகிறதா சுவாமி’?”
”அவனை சரணடைந்தால் விதியை நிர்ணயிப்பது அவன் வேலையாகிவிடும்”
”அது அவரால் முடியும் என்ற போது, அது ஏன் தலை தூக்குகிறது?”
” விதியும் அவனிலேயே அடக்கம் என்பதை புரிந்துகொள். எதுவும் தலை தூக்காது . பூனைக் குட்டியாக இரு. தாய்க்குத் தெரியும் குட்டியை எப்படி வலிக்காமல் கவ்வ வேண்டும், எங்கெல்லாம் தூக்கிச் செல்ல வேண்டும் என்று. நீ தொங்கிக் கொண்டு இரு அது போதும்”
ஒரு பக்தை கேட்டாள் ரமண மகரிஷியை. ” சுவாமி, எனக்கு அடிக்கடி சிவன் தரிசனம் கிடைக்க வேண்டும்”
”ஆஹா தாராளமாக இறைவனை வேண்டி சரணடைந்து கேள். அப்படிச் செய்வதும் செய்யாததும் அவன் முடிவு. புரிந்து கொள். இறைவனைச் சரணடைவது அவனை அதிகாரம் பண்ணுவதற்கல்ல . நீ கேட்டதை அவன் கொடுக்க அல்ல. உனக்கு எது தேவை, எது உனக்கு வேண்டும் என்பதை உன்னைவிட அவன் தெளிவாக அறிவான். அம்மா பூனை பார்த்துப் பார்த்து செய்ய வேண்டியதை செய்யும். குட்டிப்பூனை பேசாமல் பால் குடித்துவிட்டு தூங்கிக் கொண்டு நிம்மதியாக இருக்கும். நீ சுகமாக இரு. இது தான் பக்தி”.மார்ஜால ஞாயம் எனப்படுவது. மரக்கட ஞாயம் என்பது குட்டி தாய் குரங்கை கெட்டியாக பிடித்தட்டுக் கொள்வது போல். தாய்க் குரங்கு குட்டியைப் பற்றி கவலையே படாமல் கிளைக்குக் கிளை வேகமாக தாவும். குட்டி கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கும். அதைத் தான் குரங்குப் பிடி என்பது. நமது பக்தி பகவானிடம் குட்டிக் குரங்கு போல் கெட்டியாக பிடித்துக் கொண்டதாக இருக்க வேண்டும்.”
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



