GANESH CHATHURTHI – J K SIVAN

பிள்ளை  யார் ?   – நங்கநல்லூர்  J K  SIVAN
நாளை 18.9.2023  திங்கட்கிழமை இந்த வருஷம்  விநாயக சதுர்த்தி/பிள்ளையார் சதுர்த்தி என்று நாடெங்கும் ஹிந்துக்கள் கொண்டாடுகிறார்கள். மிகவும் பிரபலமான ஹிந்து பண்டிகை. கணேசன் பிறந்தநாள். ஆவணி மாதம் சுக்ல சதுர்த்தி . வருஷா  வருஷம்   ஆகஸ்ட் /செப்டம்பரில் வருவது. வடக்கே பத்து நாள் கொண்டாடு வார்கள். அனந்த சதுர்தசி வரையில் கோலாகலமான பண்டிகை. சிவபெருமான் பார்வதிக்கு  மூத்த பிள்ளை கணேசன். யானைத்  தலை மனித உடம்பு, அழகிய தொந்தி, நான்கு கரங்கள், கண்ணைக் கவரும் உருவம். ஒரு  கையில் சூலம். இன்னொன்றில் அங்குசம். ஒன்றில் தாமரை, இன்னொன்றில் ருத்ராக்ஷம் சில படங்களில் அதில் மோதகம் எனும் தேங்காய் பூரண கொழுக்கட்டை இருக்கும்.
 விநாயகர் என்றாலே வினைகளை தீர்ப்பவர்,எடுத்த காரியத்தை எதிர்பார்த்த நன்மையுடன் முடித்து வைப்பவர். அவரை நினைத்து ஒரு சுழி ”உ” மாதிரி போட்டுவிட்டு ஆரம்பிக்கும் அத்தனையும் ஜெயமாக முடியும் என்ற நம்பிக்கை அளிப்பவர்.

தனது பக்தர்கள் தன்னை கார்கில் ராணுவ வீரனாக, மத்தள, நாதஸ்வர வித் வானாக, மோட்டார் சைக்கிள் ஓட்டுபவனாக, கிரிக்கெட் வீரனாக எப்படி சித்தரித்தாலும் மகிழ்பவர், மகிழ்ச்சி  தருபவர். வேறு எந்த ஹிந்து கடவுளுடனும்  நமக்கு  இப்படி நெருக்கம் கிடையாது.

புராணத்தில் ” பார்வதி குளிக்கும் போது மஞ்சள் கலவையில் ஒரு கூம்பு வடிவத்தில் படைத்து உயிரூட்டி உருவானவர் பிள்ளையார்.

”பிள்ளையாண்டானே, நான் குளித்து விட்டு வரும் வரை இங்கே நீ வாசலில் காவல் இரு. எவரையும் உள்ளே விடாதே என்று கட்டைளை யிட்ட பார்வதியின் வாக்கை  மதித்து  காவல் காத்து நிற்க, அப்போது அங்கே பார்வதியை சந்திக்க வந்த சிவனை யார் என்று அறியாமல் விநாயகர்  தடுக்க, பார்வதியால் பிள்ளையார் தோன்றியதை அறியாத சிவனது கோபத்தால்  தனது  சிரத்தை இழந்து, பின்னர் பார்வதியின் மூலம் விஷயமறிந்த சிவன் தவறை உணர்ந்து ”முதலில் கண்ணில் படும்  எந்த உயிரின் தலையாவது கொண்டுவா” என்று சிவகணங்களுக்கு கட்டளையிட, ஒரு யானை தலை இழந்து அதன் தலை பிள்ளையாரின் தலை யாயிற்று” என்று புராணம். பிள்ளையார்  ஒரிஜினல் தலையோடு இருக்கும் சில கோவில்கள் பற்றி எழுதி இருக்கிறேன். படம் தந்திருக்கிறேன்  வடக்கே தலையில்லாத பிள்ளையாரையும் ஒரு கோவிலில் வழி படுவதை பற்றியும் எழுதி இருந்தேன்.
பிள்ளையார் சிவ கணங்களுக்கு அதிபதி, தலைவனாகி ”கணபதி” ”கண ஈசன்” (கணேசன்) ஆகிறார். குறைபாடுகளை விக்னங்களை, தீர்க்கும் விக்னேஸ்வரர் ஆகிறார். எல்லா வீட்டிலும், சிவ ஆலயங்களிலும் முதலில் காவல் தெய்வமாக காண்பவர் பிள்ளையார்.

சரித்திரத்தின்  பக்கங்கள், சாதவாஹன, ராஷ்டிரகூட, சாளுக்கிய மன்னர்கள் காலத்தில் இருந்தே விநாயக சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்  பட்டதை சொல்கிறது. சத்ரபதி சிவாஜி மஹாராஜா மராத்தி தேசத்தில் விநாயக சதுர்த்திக்கு பிரதானம் கொடுத்தார். இன்றும் அங்கே தான் முதன்மை யாக பிள்ளையார் போற்றப்படுகிறார். மராத்திய பேஷ்வாக்களுக்கு பிள்ளையார் குலதெய்வம். 1818 முதல் 1892 வரை உன்னத மாக கொண்டாடப்பட்டது

1857ல் சிப்பாய் கலகத்தின் போது வெள்ளையன் ஆதிக்கத்தை சிப்பாய்கள் ஒன்று சேர்ந்து எதிர்த்தாலும் தோற்றனர். அதுவே முதல் சுதந்திர போராட்டம். நெருப்பு அணைந்தாலும் புகை பரவிக்  கொண்டு தான் வந்தது. லோகமான்ய பாலகங்காதர திலகர் தலைமையில் விநாயக சதுர்த்தி விழா மூலம் போராட்டத்துக்கு ஆட்கள் ஒன்று சேர்ந்தனர். தேசிய விழாவாக மக்களை இணைக்க பிள்ளையார் உதவினார். பத்து நாள் விழாவாக பட்டி தொட்டியிலெல்லாம் பிள்ளையார் இருந்தார். இன்றும் இருக்கிறார்.  என்றும் அவ்வாறு இருந்து  ஹிந்துக்கள்  நம் அனைவரையும் ஒன்றிணைப்பார். 

கணபதி பப்பா மோரியா, புத்சா வர்ஷி லௌகர்யா ” (பிள்ளையாரே வாழ்க, அடுத்த வருஷம் புதிதாக வா ”) அந்த மாதம் முழுதுமே  கணேஷ் சதுர்த்திக்கு முன்னாலும் பின்னாலும் எங்கும் மஹாராஷ்டிராவில் குஜராத்தில்   கேட்கும்.
பிள்ளையார்  என்றாலே  ப்ரணவஸ்வருபம்,  ஓம்காரவடிவம்.
யானைமுகததான். குறையாவும் அகற்றி நம்மை காப்பவன்.
மன நிறைவையும் , இகவாழ்கைக்கு தேவையான பொருளும்,அக நிறைவுக்கு வேண்டிய அருள்நிறைவையும் அளிப்பவன். நம்பிக்கையோடு தும்பிக்கையானை பணிந்து சரணடைந்தால் வேண்டியவை யாவையும் வேண்டாமலேயே வாரி வழங்கும் வள்ளல்.கொஞ்சம்   களிமண் உருட்டி  நாம் எல்லோரும் கூட  நாளைக்கு குட்டி பிள்ளையாரை உருவாக்கி வணங்கலாம்.
கணபதி அழகன்,  எல்லோருக்கும் பிடித்தவன்.  அவனுக்கு சுவையான பழங்கள் நிறைய பிடிக்கும், அப்பம் அவல் கொடுத்தால் ஆசையாக உண்பான். யானையை யாருக்கு தான்  பிடிக்காது?  நாளெல்லாம் பார்த் தாலும் அலுக்காதே . எண்ணுக்கும் எழுத்துக்கும் முதலான அவன் திருவடிகளை வணங்கி தான் கற்றவர்கள் மற்றவர்கள் எல்லோரும் அவனை மனதில் நிறுத்திக் கொள்கிறார்கள்.  கேட்டதெல்லாம் கொடுக்கும் கற்பக தரு அவன். அவன் அப்பாவின் சிரத்தில் என்ன பார்க்கிறோம்? ஊமத்தை மலர்,  கங்கை, பிறைச் சந்திரன். அப்பாவின் சக்தி எல்லோருக்கும் தெரியுமே. திரிபுரமெரித்தவர் அல்லவா? பிள்ளையும் திரள் புஜன். பலசாலி. மத யானைக்கு ஒப்பானவன்.   பெருவயிறு ஒரு அழகு,  நமக்கு அல்ல, அவனுக்கு. மத்தளம் போன்ற வயிறன்  என்று சொல்வார் கள்.  உமாதேவி மனமுவந்து உயிர்கொடுத்து வளர்த்த பிள்ளை அவன்.  அவனை வேண்டினால் நிறைவேறாதது எதுவுமில்லை. வினை தீர்ப்பவன்,  விநாயகன்,  என்றே அவனுக்கு பெயர்.  அன்றலர்ந்த புத்தம் புதிய மொட்டு அவிழாத மலர்களால் அவனை பூஜிப்போம். மனமார வேண்டுவோம்.  இயல் இசை நாடக மெனும் முத்தமிழுக்கும் அதிபதி அவன்.  சங்கத்தமிழ் மூன்றும் தா என்று ஒளவை அதனால் தானே அவனைக் கேட்டாள் . முழு முதல் கடவுள் அவனை வேண்டி தான் மற்ற தெய்வங்களை வணங்குகிறோம்.  மஞ்சளில் குட்டியாக பிள்ளையார் பூஜைக்கு அப்புறம் தான் எல்லாம்.  அப்பாவே  இதை மறந்ததால் அவருடைய தேர் சக்கரம் அச்சு கழன்று விழுந்து  சக்கரம் ஒடிந்து, தேர் நின்றது. இன்றும் அச்சிறுபாக்கம் ஊர்  இருக்கிறதே அதன் ஞாபகமாக.  ஆனைமுகன்  தம்பி ஆறுமுகன் ஒரு அற்புதன். அவன் ஒரு வேடுவப்பெண்ணை காதலித்தான்.அவனும் வள்ளல், அவளோ வள்ளி.  காதல்  கடிமணமாக  நிறைவேற  அண்ணாவை வேண்டினான். அடுத்த கணம்   தினைப்புனத்தில்  யானையாக தோன்றி  அந்த வேடுவப் பெண்ணை மிரட்டி  விரட்டி வேலவனோடு  சேர்த்தான் விநாயகன்.  எல்லோருக்கும் எப்போதும் அருள் புரியும் விநாயகா  உன்னை வணங்குகிறேன்.
 இது என் கவிதை அல்ல, அருட்கவி, அருணகிரியாரின் அருமையான சந்தப்  பாடல். எல்லோரும் மனப்பாடம் செய்ய வேண்டிய, முக்கியமாக குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய  திருப்புகழ்.  எங்கள் காலத்தில் பள்ளிக்கூடத்தில் தினமும் காலையில் கடவுள் வணக்கம் என்ற பெயரில் நின்று கைகூப்பி  எல்லோரும் சேர்ந்து பாடுவோம். இப்போதைய பள்ளிக்கூடங்களுக்கு  இதெல்லாம் மறந்து போய் விட்டது. வீட்டிலாவது சொல்லிக்கொடுப்போம். 

”கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
     கப்பிய கரிமுக …… னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
     கற்பக மெனவினை …… கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
     மற்பொரு திரள்புய …… மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
     மட்டவிழ் மலர்கொடு …… பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
     முற்பட எழுதிய …… முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
     அச்சது பொடிசெய்த …… அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
     அப்புன மதனிடை …… இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
     அக்கண மணமருள் …… பெருமாளே.”’

சமீபத்தில்  என் பேத்தி கல்யாணம் நிச்சயிக்க   ஏற்பாடு செயதிருந்த ஒரு  மண்டபத்தில்  அழகான தஞ்சாவூர்  வண்ண ஓவியங்களில்  விநாயகர்  அற்புதமாக  காட்சி அளித்தார். இணைத்திருக்கிறேன். 

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;