

என் முன்னோர்கள்- நங்கநல்லூர் J K SIVAN
என் தாய் வழி தாத்தா ப்ரம்ம ஸ்ரீ வசிஷ்ட பாரதியார் கம்ப ராமாயணம், தமிழ் இலக்கியங்களில் பாண்டித்யம் பெற்று ப்ரவசனங்கள் பல ஊர்களில் நிகழ்த்தி பெருமை பெற்றவர். மஹா பெரியவாளிடம் ரொம்ப நெருக்கமான பக்தர். மஹா பெரியவா தாத்தாவின் பிரசாங்கங்களைக் கேட்டு அவருக்கு கொடுத்த விருது: ”புராணசாகரம்”. தாத்தாவைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். தாத்தா ரொம்ப கெட்டிக்காரர். அற்புதமாக தனது முன்னோர்களைப் பற்றி அவர் எழுதிய நினைவுகள் அக்காலத்திய தமிழ் பத்திரிகை இந்து நேசனில் தொடர்ச்சியாக வெளிவந்தததை என் மாமாக்கள் சேகரித்து வைத்தது எனக்கு ”எங்கள் பாரதி வம்சம்” என்று தாத்தாவின் நினைவுகள் பற்றி ஒரு புத்தகம் எழுத உறுதுணையாக இருந்தது. அதில் ஒரு சம்பவம் என் மனதை கசக்கி பிழிந்து கண்ணீரை பெருக்கியது. அதை மீண்டும் பகிர்கிறேன்.
சென்னப்பட்டணத்தில் ராமாயண பிரசங்கம்
கணபதி சாஸ்திரிகளை மணலி சின்னையா முதலியாருக்கு ரொம்ப பிடித்துவிட்டது. அன்று ராமநவமி உற்சவம் என்பதால் முதலியார் மாளிகையில் வெகு விமரிசையாக தென்னை ஓலை பந்தல் போடப் பட்டு தோரணங்கள் எல்லாம் கட்டி தொங்கவிட்டு அலங்காரங்கள் படு ஜோர். ஒரு பெரிய ராமர் படம், ராமாயண புஸ்தகம் எல்லாம் வைத்து கோலாகலமாக பூஜை செய்து பாடி பிரசங்கம் செய்தார் சாஸ்திரிகள்.
அக்காலத்தில் ஆந்திரா கர்நாடகம், கேரளா என்று தென்னிந்தியா பிரியவில்லை. சென்னைப்பட்டணம் பெரிய ஊர். அதில் அனேக தெலுங்கர்களும் தமிழர்களும் கலந்து வாழ்ந்தனர். அனேக தெலுங்கர்கள் இருந்தனர் என்பதால் தெலுங்கு பாஷை பரவலாக பல பேரால் பேசப்பட்டு வந்தது. முதலியார் மற்றும் பலருக்கும் தெலுங்கு தெரியும். சாஸ்திரிகளுக்கு தெலுங்கு தெரியாவிட்டாலும் தமிழில் கொஞ்சம் கொஞ்சமாக கதை சொல்லி, பாட்டுகள் நிறைய நடுவில் பாடி எல்லோரும் மகிழ்வுற பிரசங்கம் செய்தார். ஸ்ரீ ராம ஜனனம், சீதா கல்யாணம், பாதுகா பட்டாபிஷேகம், சுக்ரீவ பட்டாபிஷேகம், ஹனுமான் கணையாழி தந்த அங்குலிய பிரதானம், சீதை சூடாமணி தந்தது போன்ற உபன்யாசங்கள் நடக்கும்போது பிரசங்கத்தின் நடுவிலே முதலியார் எல்லோருக்கும் செமர்த்தியாக பரிசுகள் , வரிசைகள் அளித்தார். முதலியார் குடும்பம், அவர் உறவினர், நண்பர் குடும்பங்கள் எல்லாமே, கணபதி சாஸ்திரிகளையும், அவர் மனைவி லக்ஷ்மி அமமாளையும் ராமனாகவும் சீதையாகவும் பாவித்து, பூஜித்து, நேசித்தனர். அந்த குடும்பங்களோடு பழகியதில் சில நாட்களிலேயே சாஸ்திரிகள் தெலுங்கு நன்றாக பேச பழகிக்கொண்டார்.
இப்போதெல்லாம் ராமாயண பிரசங்கங்கள், உபன்யாசம் எல்லாம் சில மணி நேரம் மட்டும் நடக்கிறதே அது போல அப்போதில்லை.
ராமநாடக கீர்த்தனை பிரசங்கம் ஏறக்குறைய ரெண்டு வருஷம் மணலி சின்னையா முதலியார் வீட்டில் நடந்தது. 3வது வருஷத்தில் ஸ்ரீ ராம பட்டாபிஷேக வைபவம் மகோற்சவமாக நடைபெற்றது. பல ஜோடி மேள தாளங்கள் எங்கும் ஒலித்தன. பல பந்துக்கள், பக்தர்கள், பொது ஜனங்கள் எல்லோரும் ஒன்று சேர, அந்த வருஷம் ராமநவமி உத்சவம் ஜாம் ஜாம் என்று நடந்தது.
சாஸ்திரிகள் புகழ் சென்னையில் பரவியது. கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் வேங்கட சுப்பன் என்கிற ஒரு கோமுட்டி செட்டியாருக்கு கணபதி சாஸ்திரிகளின் பிரசங்கம் கேட்க ஆவல் ஏற்பட்டு அவர் ஏற்பாடு செயது அங்கேயும் ஒரு வருஷ காலம் கணபதி சாஸ்திரிகள் ராமாயண பிரசங்கம் செய்தார். மேற்கொண்டு ஒரு 250 ரூபாய் சன்மானம் சேர்ந்தது. (300 வருஷங்கள் முன்பு .. இப்போது பல லக்ஷங்களுக்கு சமம்)
அந்த காலத்தில் பிரபுக்கள் சன்மானம் கொடுத்தால் எப்படி கொடுப்பார்கள் என்று ஒரு சிறு உதாரணம் சொல்கிறேன். சின்னையா முதலியார் கணபதி சாஸ்திரிகளுக்கு கொடுத்த சன்மானம் :
ஒரு ஜோடி பெரிய கருங்காலி பலகை 2 1/2 அடி அகலம் x 3அடி நீளம் அவற்றின் நாலு பக்கத்திலும் வெள்ளிப் பூண்போட்டது.
ஜரிகை வேஷ்டி அங்கவஸ்திர ஜோடிகள் , பட்டு, பீதாம்பரங்கள், சால்வைகள், ஒரு ஜோடி வைர கடுக்கன், கைகளுக்கு 2 ஜோடி வைர மோதிரங்கள் , சிங்க முகம் பதித்த தோடா, (இதற்கு சிம்ம லலாடம் என்று பெயர்).
லக்ஷ்மி அம்மாளுக்கு பன்னிரண்டு சவரனில் ரெட்டை வட தங்க சங்கிலி, 6 பட்டு புடவைகள், ரவிக்கைதுணிகள் , தலைக்கு ராக்கொடி, ஜடை பில்லை, காதுக்கு கீழ் பக்கத்துக்கு ஓலை, ஜிமிக்கி, மேல் பக்கத்துக்கு பஞ்சகலசவாளி அன்னக்கொப்பு, மாட்டல் , மூக்குக்கு புல்லாக்கு, நல் முத்துவாலான நத்து , கைகளுக்கு காப்பு, விரல்களுக்கு மோதிரங்கள், கழுத்துக்கு அட்டிகை, பதக்கம், திருமாங்கல்யம், காலுக்கு கொலுசு, பாடகம், காலாழி பீலி. இது போதாதென்று, பக்கம் ஒன்றுக்கு, 6 வடம் கல்லிழைத்த முகப்பு கொண்ட, கையகலம் கல்லிழைத்த பதக்கம் இட்ட நல் முத்து ஹாரம்.
இதெல்லாம் ஏறக்குறைய 300 வருஷங்களுக்கு முன் நமது முன்னோர் அணிந்த ஆபரணங்கள். மேற்கண்டவற்றை எல்லாம் ஒரு வெள்ளித் தாம்பாளத்தில் வைத்து இருவருக்கும் அளித்து ஷோடசோபசாரம் செய்து முதலியார் தம்பதி பூஜித்து நமஸ்காரம் செய்து வணங்கினார்கள்.
இந்த ஷோடசோபசாரம் பற்றிய ஒரு கவிதை இருக்கிறது;
”கோதறு கலவை கூட்டி , குங்குமக் குழம்பினாட்டி
சோதிலா மகுடம் சூட்டி, சுடர்மணி ஆறாம் பூட்டி
ஓதனம் அறுசுவை, தோடூட்டி,நல்ல முத்தோடு
தீதிலா தூப தீபம் ஈரெட்டும் தெரிந்து செய்தார் ”
எனவே மங்களகரமாக சின்னையா முதலியார் தம்பதி அளித்த நகைகளையும் பொருள்களையும் வைக்க ஒரு கைப்பெட்டி, ஆடைகளை வைக்க பிரம்பில் செய்த பூட்டு போட்ட ஒரு கட்டுப்பெட்டி, எல்லாம் வேறு கிடைத்தது.
அநேக பிராமணர்களுக்கும் வந்திருந்த எல்லோருக்கும் அன்னதானம் நடைபெற்றது. வந்தவர்கள் வேறு சாஸ்திரிகளுக்கு சம்பாவனை, காணிக்கைகள் கொடுத்தார்கள். எல்லோரும் அன்று சாஸ்திரிகளையும் லக்ஷ்மி அம்மாளையும் ஸ்ரீ சீதா சமேத ராமனாகவே கண்டனர். பணிந்தனர். அனைவரும் அவர்களிடம் ஆசிர்வாத மங்கள அக்ஷதை பெற்றுக்கொண்டார்கள். மேற்கண்ட சன்மானங்கள் காணிக்கைகள் தவிர சாஸ்திரிகள் கையில் அன்று ரொக்கம் ரூபாய் 1250 வேறு சேர்ந்து விட்டது. முன்னூறு வருஷங்களுக்கு முன்பு பெற்ற இந்த ரொக்கம் இன்று ரூபாய் மதிப்பில் பல லக்ஷங்கள்!
”சாஸ்திரிகளே உங்களால் இந்த பணம் ஜாக்ரதையாக வைத்துக்கொள்ள முடியாது. முதலியாரிடம் கொடுத்து வையுங்கள் நாங்களும் மேற்கொண்டு போட்டு நீங்கள் புறப்படும்போது தருகிறோம்” என்றால் முதலியார் மனைவி.
”அப்படியே தாயே ” என்று சாஸ்திரிகள் அவளிடம் ரூபாய் 1500 கொடுத்தார். சில நாட்களுக்கு பிறகு ஒரு மத்யானம் சாப்பாட்டுக்குப் பிறகு முதலியாரம்மாள் தாம்பூலம் போட்டுக் கொண்டிருந்த போது திடீர் மார்வலியில் மரணமடைந்தாள் . அவளுக்குக் காரியங்கள் எல்லாம் ஆயின. பிறகு ஒருநாள் சாஸ்திரிகள் அவளிடம் கொடுத்து வைத்திருந்த பணத்தை பற்றி முதலியார் வீட்டில் கேட்டபோது அதை யாரும் நம்பவில்லை. சேர்த்து ஜாக்கிரதையாக இருக்கட்டும் என்று கொடுத்த எல்லா பணமும் காலி.
சாஸ்திரியார் மனைவி கர்பமடைந்த சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும் பட்டாபிஷேகம் செய்த திருப்தியைத் தவிர சாஸ்திரிகளுக்கு அவர் ஈட்டிய , காணிக்கையாக வந்த பொருள் அத்தனையும் இழந்தது அவருக்கு மிக்க வருத்தத்தை அளித்தது.
கையில் இருந்த எல்லா சாமான்களையும் மூட்டை கட்டிக்கொண்டு கால்நடையாக சென்ன பட்டணத்திலிருந்து சாஸ்திரி தம்பதிகள் தஞ்சாவூர் திரும்பினார்கள். ரெண்டு மாதத்தில் தஞ்சாவூரும் வந்து சேர்ந்தது!
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.




I am residing at Tambaram sanatorium Chennai. I am regular reader of your article.