MAHARISHI’S SCHOOL CLASSMATE J K SIVAN

மஹரிஷியின் பூர்வாஸ்ரம பால்ய நண்பன் –  நங்கநல்லூர்  J K  SIVAN
ஆர்தர் ஆஸ்பார்ன்  என்று  அருமையான  ஒரு  வெள்ளைக்காரர். அவருடைய புத்தகங்கள் நிறைய படித்திருக்கிறேன். அவரை நேரில் பார்த்திருக்கிறேன். பேசி இருக்கிறேன். அவர்  எழுதிய  incredible  saibaba  என்ற புத்தகத்தில் கையெழுத்திட்டு எனக்கு கொடுத்தது ஞாபகம் இருக்கிறது.

அவர்  திருவண்ணாமலை ரமணாஸ்ரமம் அடிக்கடி செல்பவர்.  அவர் மகரிஷியைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரையை   SILENT  POWER  என்ற புத்தகத்தில் சமீபத்தில்  படித்தேன்.

அருணாசலம் எனப்படும் திருவண்ணாமலை  ஒரு தெய்வீக  சிகரம்.  அக்னி க்ஷேத்ரம். பஞ்ச பூத ஸ்தலம். ஒவ்வொரு கோணத்திலிருந்து பார்க்கும்போதும் வெவ்வேறு  மாதிரி தெரிவது. உருவம் கொண்ட அருவம்.
ஐந்து முக மலை,  நான்கு முக அண்ணாமலை என பலவேறு பெயர்கள். சிவனுடைய அம்சம், சிவலிங்க உரு கொண்டது  என்பார்கள்.தெற்கு கைலாச பர்வதம் என்றும் பெயர். ஸ்ரீ சக்ரம்  மாதிரி, ஒவ்வொரு முனையிலிருந்து, கோணத்திலிருந்தும் தரிசிக்கும்போது அருணாசலம் விநோதமாக தோன்றும்.

பகவான்  ரமண மஹரிஷிக்கு  பள்ளிக்கூட காலத்தில் ஒரு நண்பன். சாப் ஜான் என்று  அழைக்கப்பட்ட  அப்துல் வஹாப் என்பவரை   ஆர்தர்  ஆஸ்பார்ன் சந்தித்து அவரிடம் மஹரிஷியின் பால்ய கால நினைவுகள் பற்றி கேட்டறிந்தார். அவர் கேட்ட கேள்விகளுக்கு  சாப் ஜான் பதில் சொன்னவை;

”இளம் வயதில் வெங்கட்ராமனுக்கு  இங்கிலிஷ்லே அதிக ஆர்வம் இல்லை. மற்ற சப்ஜெக்ட்களில் கூட   ரொம்ப  சுமார் தான்.  பள்ளிக்கூட புத்தகங்களில் அப்போதே  வெங்கட்ராமனுக்கு விருப்பம் இல்லை.  விளையாட ரொம்ப பிடிக்கும். கால் பந்து footbaal  ரொம்ப  நன்றாக  விளையாடுவான். ”என்னோடு விளையாட நீயும் வா, சொல்லித்தரேன்” என்று என்னை அழைப்பான். ஒரே  டீம்லே  நாங்க ரெண்டு பேரும்  விளையாடி இருக்கோம்.,

ஒரு தடவை  கால் பந்து விளையாட்டில் வலது காலில் வெங்கட்ராமனுக்கு செம அடி. கால் புஸுபுஸுன்னு  வீங்கி போச்சு. பயந்து போய்ட்டான்.  மெதுவாக  வீட்டுக்கு அழைச்சுண்டு போனேன்.  அங்கிருந்து ஆஸ்பத்திரிக்கு போனோம்.  மருந்து தடவி கட்டு  போட்டார்கள். ரெண்டு நாளிலே  கால் சரியாயிடுத்து. எனக்கு நன்றி சொன்னான்.

மாணவனாக இருந்த காலத்திலேயே  வெங்கட்ராமன் ரொம்ப  பக்தி உள்ளவன். ஒவ்வொரு சனிக்கிழமை, ஞாயிக்கிழமை திருப்பரங்குன்றம் போவான். சுப்ரமணிய சுவாமி கோவிலை சுற்றி வருவான். அதுலே ரொம்ப சந்தோஷம். என்னையும் கூட  அழைத்து போவான். ”பகவான் ஸ்ரிஷ்டியிலே வித்தியாசம் எதுவும் கிடையாது” என்று சொல்வான்.  வெங்கட்ராமனோடு சேர்ந்து இருக்கும்போது எனக்கு  மசூதிக்கும் முருகன் கோவிலுக்கும் வித்தியாசமே தெரியலே. அவனாலே எனக்கு ஹிந்து கடவுளுக்கும் மற்ற  மத  சாமிகளுக்கும்   இடையே எந்த வித்தியாசமும் தெரியவே இல்லை. ஒரு முக்கியமான விஷயம்.  என் பிற்கால வாழ்க்கையில் எனக்கு  காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் மேல் அதீத பக்தி உண்டாவதற்கு வெங்கட்ராமன் தான் காரணம்.
என் கனவில் வரதராஜன் அடிக்கடி தரிசனம் தருவார்.  எனக்கு அநேக  உதவிகள் கிடைத்தது.
ஆஸ்பார்ன்  இதை கொஞ்சம் விளக்கமுடியுமா என்று சாப் ஜானைக்  கேட்டபோது கிடைத்த பதில்;
”பன்னிரண்டு வருஷம்  கருட சேவை உத்சவத்திலே  நான் நான்  ஸ்ரீ பாதம் தாங்கியாக  பெருமாளை தூக்கிக்கொண்டு  காஞ்சிபுரம் சாலைகளில் நடந்து  இருக்கிறேன். அது எனக்கு வாழ்வில் கிடைச்ச  வரம், பாக்யம்னு நினைக்கிறேன். சில  வைஷ்ணவர்கள் நான் முஸ்லீம் என்பதாலே இதை எதிர்த்தபோதும் எப்படியோ விஷயம் சமரசமாக  முடிந்திருக்கிறது.  ஒண்ணா  ரெண்டா, பன்னிரண்டு வருஷம் பெருமாள் நான் அவரைத் தூக்கிக் கொண்டு போக  உதவி இருக்கிறாரே.
இன்னொரு சம்பவம் சொல்றேன்;
”நான் குப்பம் என்கிற ஊரில் வேலையா இருந்தபோது   திருப்பத்தூரில்  எங்கள் வீட்டில்  என் மனைவிக்கு அபார்ஷன், குறைப்பிரசவம் என்று  தந்தி வந்தது. அவள் உயிருக்கு ஆபத்து நேரலாம் என்ற கவலை எனக்கு பயம்  உண்டாக்கியது. வாடினேன். அன்று இரவு வரதராஜ பெருமாள் என் கனவில் வந்தார். ”அவளுக்கு ஒரு ஆபத்தும் உண்டாகாது. கவலைப்படாதே” என்று ஆறுதல் அளித்தார். லீவு போட்டுட்டு  திருப்பத்தூர் போனேன். அவள் சாதாரணமாக என்னை வரவேற்றாள்.பெருமாள் தான் காப்பாற்றினார்.

”பதினாறு வயசிலே  ஒருநாள் வெங்கட்ராமனைக் காணோம், வீட்டை விட்டு போய்ட்டான் என்று கேள்விப்பட்டதும் எனக்கு ரொம்ப விசனம். அழுது கொண்டே வெங்கட்ராமன் வீட்டுக்கு போனேன். அவன் அம்மா அழகம்மாவுக்கு என்னை பிடிக்கும். எப்போதும் என்னை அன்பாக வரவேற்று  தின்பண்டங்கள் தருவார்.

சில  சனிக்கிழமைகள் ஞாயிறுகளில் மதுரையிலிருந்து திருச்சுழி கிரமஹத்துக்கு வெங்கட்ராமன் வருவான். அம்மாவோடு சகோதரர்களோடு இருப்பான். அப்போதெல்லாம் நானும் அவன் வீட்டுக்கு போவேன். அழகம்மா என்னை இன்முகத்துடன் வரவேற்பார்கள்.  ”வெங்கட்ராமா உன் முஸ்லீம் பிரென்ட் வந்திருக்கான் பாரு  ” என்று அவனைக் கூப்பிடுவாள்.

எப்போதாவது வார காடைசியில் நான் வீட்டுக்கு வரவில்லை என்றால்  அழகம்மா ”உனக்கு  என்னடா  ஆச்சு ஏன் நீ போனவாரம் வரலே என்று கேட்பார்கள். வெங்கட்ராமா  இதை உன் முஸ்லீம் பிரென்ட் க்கு  கொடு என்று அவனிடம் எனக்கு வீட்டில் செய்த பக்ஷணங்களை கொடுத்தனுப்புவார்கள்.  நான் ஒரு முஸ்லீம் என்றாலும் அழகம்மாவின் தாயன்பு என்னால் இந்த ஜென்மத்த்தில் மறக்க முடியாது.

”சாப்ஜான்  எப்போது  நீங்கள் மகரிஷியை மீண்டும் பார்த்தீர்கள்?”.

 ”1903ல்  எனக்கு போலீஸ்  டெபார்ட்மெண்ட்லே  வேலை கிடைத்தது. உத்திரமேரூருக்கு  ஏதோ வேலையா போகும்போது அங்கே ஒரு மருந்து கடையில் வெங்கட்ராமன் படம் மாட்டி இருந்தது. அதிலே ரொம்ப வித்யாசமாக உருவத்தோடு  இருந்ததை பார்த்தேன். அந்த கடைக்காரரிடம்  இந்த படம்   யாருடையது? உங்களுக்கு எங்கே கிடைத்தது என்று கேட்டபோது அவர்  ”இந்த  படம்  திருவண்ணாமலை  ப்ராம்மணஸ்வாமி  என்ற  மௌன ஸ்வாமியின்  படம்”  என்றார் .
எப்படியாவது வெங்கட்ராமனை  மீண்டும் பார்க்க ஆசை.  பல மாதங்கள்  கழித்து ஒரு சந்தர்ப்பத்தில்   என் பழைய  சிநேகிதன் வெங்கட்ராமனைப் பார்க்க  திருவண்ணாமலை  ரமணாஸ்ரமம் சென்றேன். வாசலில் தயங்கிநின்ற   என்னைப்  பார்த்த ஒரு பால்காரம்மா ( ஆஸ்ரமத்தில் பகவானுக்கு  பசும்பால் கொடுக்க வந்தவர்) உள்ளே  அழைத்து போனார்கள்.

நான் மகரிஷியிடம்  ”நான்  சாப் ஜான். திருச்சுழி” என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன். அடையாளம் தெரிந்ததை புரிந்துகொண்டதாக  தலையாட்டினார்.  முகத்தில் புன்னகை. பேசவில்லை. மௌனம். முகத்தில் தெய்வீக களை  பளிச்சிட்டதை கண்டேன்.

அடுத்த முறை  திருப்பத்தூர்  போலீஸ் இன்ஸ்பெக்டராக  ஆஸ்ரமத்துக்கு போனேன். என் தாய் இறந்து விட்ட துக்கம் எனக்கு.  ”அம்மா போய்ட்டாங்க”  என்று கண் கலங்க சொன்னேன்.  மகரிஷி கையை நீட்டி எதிரே  இருந்த  அழகம்மா சமாதியை காட்டினார்.  அது எத்தனையோ விஷயங்களை என் மனதில் அறிவூட்டியது. ஆறுதலாக  இருந்தது.  மனித உடலாக பிறந்தால் மரணம் இன்றியமையாதது என உணர்ந்தேன்.  எனக்கு உணவுஅளித்தார். சில நாட்கள் அங்கே தங்கி இருக்க ஜாடை காட்டினார்.  எனக்கு  வேலை பளு இருந்ததால் அங்கே தங்க என்னால் முடியவில்லை.

அதற்கு அப்புறம் கூட சில சந்தர்ப்பங்களில் ஆஸ்ரமம் சென்றபோதெல்லாம் என்னை ஞாபகம் வைத்துக்கொண்டு இன்முகம் காட்டி வரவேற்றார்.  என் பால்ய நண்பன் என்று அருகே இருந்தவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தினார். கருணையும் அன்பும்  அவரிடம் நிரம்ப இருந்தது. சாப்பிடும்போது அருகே என்னையும் அமர்த்தி சாப்பிட செய்தார்.”

”நான் திடீரென்று  மாறிவிட்டேன். பகவானின் பக்தனாகி விட்டேன். ஆரமப கால நண்பனாக இருந்து பக்தனாவது எனக்கு தனி அதிர்ஷ்டம். என் உள்ளே  ஆத்ம  அமைதி  பகவானால் கிடைத்த வர பிரசாதம்.  என் மனைவி  திடீரென்று  இறந்து போகப்போவதை   என் கனவில் வந்து ஜாடை காட்டி உணர்த்தி, எனக்கு முன்கூட்டியே  தைர்யம் அளித்து   ஆறுதல் கொடுத்தார். பற்றுகள்  விட எனக்கு பக்குவம் அளித்தவர்

1950  ஏப்ரல் 14ம் தேதி  மகரிஷி மகரிஷி  முக்தி அடைந்த சமயம் திருவண்ணாமலை போக எனக்கு விருப்பம். ஆனால் வேறே எங்கோ ஒரு ஊரில்  டூட்டி என்பதால் திருவண்ணாமலை  போக முடியாதே என்று வருந்தியபோது  எப்படியோ ஒரு சந்தர்ப்பம் எனக்கு கிடைத்து திருவண்ணாமலை செல்ல முடிந்தது. நேரம் காலம்  தப்பி அவசரமாக  ஓடினேன். சாப்பிட ஓட்டலோ  வசதியோ இல்லை.  என் பழைய நண்பன் சமாதிக்கு வணக்கம் தெரிவித்தேன். அங்கே அவர் இன்றும்  இருக்கும்  உணர்வு எனக்கு புரிந்தது.  கண்களில் கண்ணீரோடு  கை  கூப்பி நின்றேன்.  யாரோ என் தோளைத் தொட்டு  நீங்கள் சாப்பிடவில்லை போலிருக்கிறதே வாருங்கள் என்று உள்ளே அழைத்துச் சென்றார். பசியில் எனக்கு அப்போது மயக்கம் வந்தது  என்றாலும் அவரிடம் ”என்  ஆரம்ப கால ஆத்ம நண்பனாக இருந்த  என் குரு, மஹா ஸ்வாமிக்கு நன்றியும் வணக்கத்தையும் செலுத்தும் இந்த நாள் நான் உபவாசமாகவே இருக்க விரும்புகிறேன் என்று சாப்பிட மறுத்தேன்.”
 

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;