
நாமதேவர் – நங்கநல்லூர் J K SIVAN
பாண்டுரங்கனை அறியாதவனுக்கு பக்த விஜயம் தெரியாது. நாமதேவர்,துக்காராம், ஜனா, ஞானதேவர், போன்ற பெயர்கள் ஏதோ குமுதம் ஆனந்த விகடன் சிறு கதைகளில் வரும் பாத்திரங்களாக தெரியும்.
நாமதேவர் வளர்ந்தார், சிறந்த விட்டல பக்தனாகவே திகழ்ந்தார். துணி தைத்து விற்கும் அப்பா அம்மா அவருக்கு ஒரு நல்ல குடும்ப ஸ்திரீயை கல்யாணம் பண்ணி வைத்தார்கள்..அவருக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. குழந்தை பிறந்த பன்னிரெண்டாம் நாள் அவர்கள் குடும்ப வழக்கப்படி பேர் சூட்டும் விழா. விட்டலனே நாமதேவர் குழந்தைக்கு ஒரு பரிசுடன் வந்தான்.
நாமதேவர் அம்மா கோனை, பாண்டுரங்கனோடு பலகாலம் பழகியவன் அல்லவா. அந்த குடும்பமே விட்டல பக்தர்கள் குடும்பம் அல்லவா? ஆகவே தான் கேட்டாள் .
”விட்டலா, உன் பக்தன் நாமதேவன் இப்போது ஒரு சிசுவுக்கு அப்பா. அதற்கு என்ன பெயர் வைப்பது என்று நீயே சொல்லு?”
”என்ன யோசனை உனக்கு ? நாராயணன் என்ற என் பெயரையே அந்த பிள்ளைக்கு சூட்டு.சந்தோஷமாக அவனைக் கொஞ்சி விளையாடு.” என்றான் விட்டலன்.
கோனைக்கு, நாமதேவர் மனைவிக்கு புடவை, தாமாஜிக்கு, நாமதேவருக்கு வேஷ்டி, துண்டு,குழந்தைக்கு சொக்காய், தலைக்கு குல்லா எல்லாம் விட்டலன் பரிசு கொண்டுவந்து தந்தான்.
புண்யாஹவாசனம் சாஸ்த்ரோக்தமாக நடந்தது. பிராமணர்களுக்கு போஜனம் தக்ஷிணை எல்லாம் அளித்தார்கள்.கோனை நாமதேவரைக் கூப்பிட்டு ” நாமா,எங்களுக்கு வயதாகி விட்டது. நீயோ எப்போதும் விட்டலனையே ஸ்மரித்துக் கொண்டு அவன் கோவிலிலேயே பழியாக கிடக்கிறாய். உன்னைப்பற்றியோ, குடும்பத்தைப் பற்றியோ நினைப்பதே இல்லையே. எவ்வளவுக்கெவ்வளவு பண்டரிநாதனை நீ நினைக்கிறாயோ, அவ்வளவுக்கவ்வளவு ஏழ்மை, கஷ்ட ஜீவனம் இங்கே தொடர்கிறது. குடும்பம் நடக்கவேண்டாமா? எதிலும் பட்டுக்கொள்ளாமல் இருக்கிறாயே,? மற்றவர்களை பார், குடும்பத்திலும் ஈடுபட்டு நாலு காசு சம்பாதித்து குடும்பமும் க்ஷேமமாக நடக்கிறது. இங்கே குடும்பமே அன்னம், ஆடைக்கு தடுமாறுகிறதே அப்பா, நீ ஏதாவது வேலை செயது அன்றாட ஜீவனத்துக்கு பணம் சம்பாதித்துக் கொண்டு வா” என்று அனுப்பினாள் .
நாமதேவருக்கு ஒன்றுமே புரியவில்லை. நேராக பண்டரிபுர விட்டலன் எதிரே போய் நின்றார்.
”விட்டலா என் அம்மா சொன்னதை எல்லாம் உன்னிடம் சொல்கிறேன். என்னை ஏன் இப்படி சம்சார சாகரத்தில் மூழ்கி துன்பப்பட வைக்கிறாய்.எங்கள் துயர் தீர்க்க மாட்டாயா? ஏன் என்னை கைவிடுகிறாய்?
”நாமா, யார் உன்னை கஷ்டப்படுத்துவது என்னிடம் சொல்?” என்றான் பாண்டுரங்கன் .நாமதேவரை கட்டி அணைத்து அவர் கண்ணீரை துடைத்தான்.”வேறு யார்? என் அம்மா தான். எனக்கு உன் திருவடியைத் தவிர வேறு எதிலும் புத்தி போகவில்லையே. என் மீது கருணை வை. ”நாமா நீ என்னோடு இரு. நீயும் நானும் இணை பிரியாதவர்கள். விளக்கும் ஒளியும் போல. சர்க்கரையும் இனிப்பும்போல.”என்னிடம் உன் நிலையை சொல்லிவிட்டாயே, இனி எனக்கு தானே பொறுப்பு”
”விட்டலா, உன் பேச்சும் சர்க்கரை போல் தான் இனிக்கிறது. உன் நாமம் என் நாவில் இருக்கும் போது எனக்கு வேறு உலக சிந்தனை எதுவுமே இல்லையப்பா. உன்னைப்பார்த்துக் கொண்டே இருந்தால் அதுவே போதும் எனக்கு” என்கிறார் நாமதேவர்.
பாண்டுரங்கன் ருக்மணியிடம், பார்த்தாயா ருக்மணி, இந்த நாமா என்னை உருவத்தோடு தான் பார்க்கவேண்டுமாம். அவனுக்கு வேதாந்தம் எல்லாம் சொன்னால் ஏறவில்லை. திருப்தி இல்லையாம். நாம தேவரைக் கட்டித் தழுவிக்கொண்டு தனது இதயத்தோடு இணைத்துக் கொண்டான் விட்டலன்.
”உன் வீட்டு நிலையை நீ சொல் நாமா?”
”விட்டலா நீ வைகுண்ட வாசி, நான் ஏழை. குடிசை வாசி. உன் வீட்டில் அஷ்ட மா சித்தியும் உன் அடிமை.என் வீட்டி லோ எலிகள் தான் என்னோடு வாசம் செய்பவை. நீ பட்டு பீதாம்பரம் தரிப்பவன். என் குழந்தைகள் கிழிசல் துணி யை சுற்றிக்கொண்டிருப்பவை. நீ பார்க்கடலில் பாம்பணை மேல் படுப்பவன். என் வீட்டில் கோரைப் பாய்க்கே பஞ்சம். நீ தங்க தாம்பாளத்தில் சாப்பிடுபவன் என்றால் நான் இலைக் கிழிசலில் உண்பவன். உனக்கு வைர வைடூர்ய கோமேதகம் எல்லாம் சர்வ சாதாரணம்.. எனக்கோ உன் நாமம் ஒன்று தான் ஆபரணம்.நகைகள்.”
பாவம் . நாம தேவரின் மனைவி பரம சாது. மாமியார் கோனையிடம் ” அம்மா ,ஒரு சத்புத்ரனைப் பெற்று என்னிடம் தந்தீர்கள். இருக்கும் ஓரிரண்டு பழம் புடவைகளும் நைந்து போய் கிழிந்து விட்டன. பாதிநாள் பட்டினி. உங்களை எல்லாம் பணிந்து வணங்கி இங்கே வந்து ஏழ்மையில் நாமெல்லாம் வாடுகிறோம் . இந்த குடும்பத்தில் இனி சுபிக்ஷம் என்பது கிடைக்காத ஒன்றாக இருக்கிறதே. என்ன செய்வது என்று வழியே தெரியவில்லையே ” என அழுதாள். கிழவி கோனையும் அழுதாள். அது பாண்டுரங்கனுக்கு தெரியாமல் போகுமா? என்ன நடந்தது என்று அடுத்த பதிவில் அறிவோம்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



