
சிவவாக்கியர் சொல் – NANGANALLUR J . K. SIVAN
ஏதாவது ஒன்று கண்ணில் பட்டால் அதை உணர்கிறோம். அதை தொடுவதோ, முகர்வதோ, பார்ப்பதோ, ரசிப்பதோ, கேட்பதோ முடிந்தால் அதன் தன்மை புரிகிறது.
காற்றை உணர்கிறோம், தீயை உணர்கிறோம், ஒளியை அனுபவிக்கிறோம். ஒலியை கேட்கிறோம்.
இது எதிலும் சேராத கடவுளை பற்றி பேசும்போது மேற்சொன்ன புலன் அனுபவங்கள் எதிலும் அது சம்பந்தப் படாதது. அறிவினால் மட்டுமே உணரக் கூடியது என்று புரிந்து கொள்கிறோம்.
உருவம் இல்லாத அதை, அவன், அவள், என்று உருவம் கொடுத்து, பெயர் சூட்டி, அலங்கரித்து, நம்மைப் போல் பாவித்து உபசரித்து வணங்குகிறோம். இப்படித்தான் ராமன் கிருஷ்ணன் அம்பிகை பிள்ளையார் பெருமாள் என்று ஆயிரம் தெய்வங்கள் நம்மிடையே உள்ளனர்.
இதிலும் நிறைய வித்யாசங்கள், உன் தெய்வம் வேறு, என் தெய்வம் வேறு என்று உருவத்தை, உபாசனையை மாற்றிக்கொள்கிறோம்.
இன்றா நேற்றா எத்தனையோ யுகங்களாக இது தொடர்கிறது. கடவுளை பற்றி நிறைய சிந்தித்தாகிவிட்டது.
இதுவரை எத்தனையோ படித்தாய் விட்டது. நிறைய கேட்டாகிவிட்டது. ஆனாலும் இன்னும் புரியவில்லை. இதுதான் இறைவன். யோசிக்க முயல்வதில்லை. யோசிக்கலாமே என்ற எண்ணம் உள்ளே அடிவாரத்தில் தலைஎடுத்தாலும் சரி அப்பறம் பார்ப்போம் என்று அதை அப்படியே அமுக்கி கீழே தள்ளுகிற ஸ்வபாவம். ஆனால் அப்பப்போ தெரிந்து கொள்ள மெல்லிதாக ஆர்வம் தலை தூக்கும். அதை ஒரே முட்டாக அழுத்தி கீழே தள்ளிவிடுகிறோம். . மீண்டும் கேட்பது, படிப்பது ரசிப்பது, மறப்பது. இது நம்மில் அனேகர் வாழ்வில் தொடர்ந்து நடந்து வருகிறதே.
பல ஆயிரம் வருஷங்களுக்கு முன் — அவரைப்பற்றி இன்னும் சரியாக தெரியக்கூட இல்லை. காலமோ, இயற்பெயரோ, ஊரோ தெரியாத ஒரு சித்தர் . சிவவாக்கியர். அவரைப்பற்றி யார் யாரோ என்னன்னவோ சொல்கிறார்கள். நாத்திகர், சைவராக இருந்து வைணவரானவர் . அவர் தான் பின்னால் திருமழிசை ஆழ்வார் என்று. நாம் அதற்குள்ளே எல்லாம் போகத் தேவையே இல்லை.
‘ஆணியடித்தார்போல’ ”பொட்டுலெ அறைஞ்சாப் போல பளிச் சென்று ” என்று சொல்கிறோமே அப்படி இருக்கிறது அவரது சொல்லின் சக்தி. இது உண்மை தான் என்பது சிவ வாக்கியர் பாடல்களில் தெளிவாகத் தெரியும். இதை ஒவ்வொரு மனிதனும் தனக்குள்ளே அலசினால் தான் புரிபடும். புது அர்த்தமும் கிடைக்கும். கீழே சில மாடல் MODEL பாடுகள் கொடுக்கிறேன். அர்த்தமே சொல்ல தேவையில்லை.
கோயிலாவது ஏதடா ? குளங்களாவது ஏதடா?
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே.
‘கோயில் கோயிலாக போகிறாயே. இதுவரை எத்தனை குளங்களில் ஸ்நானம் செய்து புண்ணியம் தேடியிருக்கிறாய். எங்கெங்கோ சென்று திரிந்து அலைந்து சலித்து களைத்து கோவிலையும் குளத்தையும் நாடினாயே . அந்த கோவில்கள் குளங்கள் எல்லாம் உனக்குள்ளேயே இருப்பதை என்றாவது ஒரு நிமிஷம் உணர்ந்ததுண்டா. பிறந்தான் இறந்தான் என்று ஒவ்வொருவனைப்பற்றியும் பேசுகிறோமே, அதோ பார் நேற்று இருந்தது இன்று இல்லை என்று மாற்றங் களைப்பற்றி மணிக்கணக்கில் பேசுகிறோமே. அந்த மாற்றங்கள், பிறப்பு இறப்பு இவை யாவுமே மாயை. இருப்பது போல் தோன்றும் அது உண்மையிலேயே இல்லாதது.
‘செய்ய தெங்கிலே இளநீர் சேர்த்த கார ணங்கள் போல்
ஐயன்வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டனன்
ஐயன்வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்தர் முன்னம் வாய்திறப்ப தில்லையே.
உன் கண்ணெதிரே நிற்கிறதே உயரமான தென்னை மரம். குலை குலையாக பச்சையும் பழுப்புமாக எத்தனை எத்தனை பெரிய இளநீர்கள் தொங்குகின்றன என்பதை தலை ஒடித்து அண்ணாந்து பார்க்கிறாயே. ஒரு விஷயம் யோசித்தாயா? யாரப்பா அவ்வளவு உயரத்தில் ஒவ்வொரு தேங்காய் உள்ளேயும் இனிமையான சுவையான இளநீரை நிரப்பியது. காரணம் ஏதாவது சொல்ல முடிகிறதா?. இது தான் இங்கேயும். என் மனத்தில் நான் அறியாமலேயே பிறந்தது முதல் என் இறைவன் என்னைக்கேட்காமலேயே என்னுள், என் மனத்தைக் கோயிலாகக் கொண்டு குடியிருக்கிறான். நான் ஏன் இன்னும் அவனைப் புரிந்துகொள்ளவில்லை? புரிந்து கொண்ட அடுத்த கணமே மௌனமாகிவிடுவேன். ஏன் என்றால் என்னால் அதைச் சொல்ல முடியாது. சொல்ல வார்த்தை கிடையாது. அனுபவிக்கவே நேரம் போதாதே.
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டெனே
என் மனத்தில் அந்த பகவான் இருப்பதை நான் இது காலம் உணராமலேயே இருந்தேனே. இந்த பிறவியில் மட்டும் அல்ல. எனது எத்தனயோ பிறவியிலும் கூட இது தான் என் நிலைமையோ?. இப்போது தெளிவு பிறந்துவிட்டதே. நான் நானில்லை. அவன். என்னிலே அவனை இதுவரை கண்டதில்லையே. என்னை விடுங்கள். உங்களிலேயே அவனைக் கண்டதுண்டா? அப்படி மட்டும் ஒவ்வொருவரும் தனக்குள்ளே தானாக, நின்ற, நிற்கும் அவனை அறிந்துகொண்டால் ……… என்னால் யோசித்துக்கூட பார்க்கமுடியாத கற்பனை இன்பம், ஆனந்தம் அல்லவோ இது.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



