UDHDHAVA GITA J K SIVAN

உத்தவ கீதை  -நங்கநல்லூர்  J K   SIVAN

 அவதாரம் முடிந்தது.
கலியுகம் துவாபர யுகத்தை விழுங்கும் சமயம். க்ரிஷ்ணனின் யதுகுலம் சப்ஜாடா அழியப்போகிறது. ஸப்ஜாடா என்கிற வார்த்தையை  ஒட்டுமொத்தமாக  என்ற அர்த்தத்தில்  உபயோகிப்பது எங்கள் குடும்பத்தில் ஒரு வழக்கம்…  இது கிருஷ்ணன் எடுத்த  முடிவு.  ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் சொல்வது அவசியமாகிவிட்டது. அது தான் இந்த சம்பவம்..

துவாரகை  அரண்மனையில் எப்போதும் கிருஷ்ணனைச் சுற்றி அருகிலே  யாராவது இருந்து கொண்டே ருப்பார்கள்.  அன்று கிருஷ்ணன்  தனிமையில் வெகுநேரம்   சிந்தனையில் ஈடுபட்டு  அமர்ந்திருக்கிறான்.  கண்கள் எங்கோ தூரத்தில் எதன் மேலோ  நிலைத்து நிற்கிறது.   கிருஷ்ணனாக எடுத்த அவதார  நோக்கம் வழக்கம்போல் வெற்றிகரமாக நடந்தேறிவிட்டது. தேவர்கள் ரிஷிகள்  வைகுண்டத்தில் காத்திருக்கிறார்கள். போகவேண்டும்..கிருஷ்ணன் மனத்திரையில் காட்சிகள் வேகமாக ஓடியது… கம்சன் அரண்மனையில் வசுதேவர் தேவகி சிறைவாசம்.  தான் சிறையில்  தோன்றியது முதல்… கோகுலம், பிருந்தாவனம், மீண்டும் மதுரை, துவாரகை…. 125 வருஷங்கள் ஓடிவிட்டதே..   இனி ஒரே ஒரு  கடைசி நாடக காட்சி நடக்கவேண்டும்… ஆரம்பாகிவிட்டது அதுவும்.
கலியுகம் அனர்த்தங்களை கொண்டு வரப்போகிறது. அதன்  தீவிர   செயல்களை சற்று கட்டுப்படுத்த, பக்தி பெருக, சில யாகங்களை   செய்ய கிருஷ்ணன் அறிவுறுத்தியபடி  துவாரகை மாளிகையில்  மஹரிஷிகள்  விஸ்வாமித்ரர், அசிதர், கண்வர் ,துர்வாசர், பிருகு ,அங்கிரஸ், காஷ்யபர், வாமதேவர், அத்ரி, வசிஷ்டர், நாரதர் எல்லோரும் சேர்ந்து   யாகம் முடிந்தது.  தவம் செய்ய   பிண்டாரகம்  செல்லலாம் என கிருஷ்ணன் சொல்லிவிட்டார்.
அங்கே  யதுகுல  இளைஞர்கள்  சிலர் விளையாடிக்  கொண்டிருக்கிறார்கள்.  அவர்கள் கண்களில்   கிருஷ்ணன் அனுப்பிய  ரிஷிகள் பட்டுவிட்டனர்.
”அடே  எவ்வளவு கற்றுணர்ந்த ஞானிகள்  இவர்கள்” என்று ஒருவன் சொல்ல,  கிருஷ்ணன் மகன் சாம்பன்  குறுக்கிட்டான்.
”என்னடா அப்படி உசத்தி இவர்கள்?   எல்லாம் அறிந்த  ஞானிகள்  என்கிறாயே,    இவர்களை நாம்  எளிதில் ஏமாற்ற முடியுமே”  என்கிறான் சாம்பன்.
” சாம்பா, எப்படி  சொல்கிறாய்   இதை  நீ?
இப்போது  பாருங்கள் ஒரு  வேடிக்கையை.  குசுகுசு என்று   நண்பன் காதில் சொல்லி ஒரு திட்டம்  தீட்டுகிறான்  சாம்பன்.  அதன்படி,அவன் பெண்  வேடம் பூண்டு, வயிற்றில்   நிறைய வஸ்திரங்கள்  சுருட்டி வைத்து மூடி,  ஒரு கர்ப்பிணி   போல அந்த ரிஷிகள் முன் அந்த இளைஞர்கள்  வருகிறார்கள். ஒருவன்  சாம்பனை நடக்க  முடியாமல் திண்டாடுபவள் போல்  அணைத்து  மெதுவாக அழைத்து  வருகிறான். அனைவரும்  ரிஷிகளை  வணங்குகிறார்கள்.
இந்த  சிறுவர்கள் வந்து  வணங்கும்போதே  அதில் பக்தி, மரியாதை  இல்லை  என்பதை ரிஷிகள் சுலபமாக  அறிகிறார்கள்.
ஒருவன் நாரதரிடம் சென்றான்.
 ”மகரிஷி இந்த  கரிய விழி பெண்  உங்களிடம் ஏதோ கேட்கவேண்டுமாம். அவளுக்கு அறிவுறை  சொல்லுங்கள்” என நண்பன் நடிக்கிறான்.
”என்ன கேட்கவேண்டுமோ  கேட்கட்டும்”
”மஹரிஷி  முக்காலமும் உணர்ந்த மஹரிஷிகள் நீங்கள்.  ஞானிகள், உங்களிடம் பேச  வெட்கமும்  பயமுமாக  இருக்கிறதாம்  இந்த பெண்ணுக்கு,  நானே கேட்கலாமா அவள் சார்பில்”
” கேள் ”
”இவளுக்கு  வயிற்றில் கருவுற்றிருக்கும்  சிசு ஆணாக இருக்க வேண்டும் என்று ஆசை. அது நிறைவேறுமா?”
ரிஷிகளுக்கு  எதிரில் நிற்பது பெண் அல்ல, ஆண் . வயிற்றில் இருப்பது சிசுவும் அல்ல,  கர்ப்ப வேஷம்  என்று துல்லியமாக தெரிந்தது. தம்மை  ஏமாற்ற,   அவமதிக்க திட்டம் என்றும் புரிந்தது.  ஆகவே  நிதானமாக   பதில் அளிக்கிறார்.

”அடாடா,  இந்த  பெண் வயிற்றில்  ஒரு  இரும்பு உலக்கை அல்லவோ பிறக்கப்போகிறது. அதால் தான் உங்கள்  யதுகுலமே முற்றிலும் அழியப்போகிறது”  என்று சாபமிடுகிறார் ரிஷி.
பயந்து போன  இளைஞர்கள் அவசர அவசரமாக  வேஷம்  கலைக்கும்போது  சாம்பன் வயிற்றோடு ஒரு பெரிய  இரும்பு தடி இணைந்திருக்கிறதை கண்டதும் நடுங்குகிறார்கள்.
 ”ஐயோ  இப்படி  செய்துவிட்டோமே இனி என்ன ஆகுமோ, என்று  ஓடி அந்த  இரும்பு உலக்கையை ராஜா  உக்ரசேனன் அரசவைக்கு  கொண்டு சென்று  அழுதுகொண்டே  நடந்ததை சொல்கிறார்கள்.   நடந்ததை கேட்டு அனைத்து யாதவர்களும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
உக்கிரசேனன் மந்திரிகளை கலந்தாலோசித்து  இந்த இரும்பு தடியை  உடைத்து  பொடி செய்து அந்த பொடியை  கடலில் கரைத்து விடுவிங்கள்”என்கிறான்.இரும்பு தடியை முழுதும் பொடியாக்க  முடியாமல், சிறு தூள்களாக, துண்டுகளாக்கி கடலில் எரிந்து   விட்டார்கள்.கடலில் ஒரு மீன் ஒரு பெரிய துண்டை  விழுங்கி விட்டது. கடலின்  அலைகள் பொடிகளையும்  துகள்களையும்  கரையெல்லாம் கொண்டு சென்று ஒதுக்கி விட்டன.அந்த துகள்கள் கடற்கரை பிரதேசம் முழுதும்  கூறிய இரும்பு  ஈட்டிகளாக,அம்புகளாக  வளர்ந்து விட்டன.
 ஒருநாள்  ஜரா என்கிற  வேடுவன்   செம்படவன் ஒருவனிடம்  இருந்து அவன் கடலில் பிடித்த  ஒரு மீனைப்  பெறுகிறான். அதன் வயிற்றில் சற்று  நீண்ட  அம்பு, ஈட்டி  முனைக்கு  பொருத்தமான இரும்பு துண்டு  இருப்பதை பார்த்து,  அதிசயித்து,  அதை கூறாக்கி ஒரு கம்பின் முனையில் செருகி  அம்போ, கையில் இருந்து எறியும்   ஈட்டி முனையாகவோ மாற்றிவிட்டான். நடந்தது அனைத்தும்  நன்றாகவே  கிருஷ்ணனுக்கு  தெரிந்தும்,  நடக்கப்போகும் எந்த ஒரு செயலும்  எண்ணமும் தடை படாமல் நடக்கும்படி  விட்டு விட்டான். இனி தனது முடிவு ஒன்றே  தான் பாக்கி  என்று தெரிந்து அதற்கும் தயாராகி விட்டான் கிருஷ்ணன்.கிருஷ்ணனுக்கு நடக்கப்போவது எது? என்ன? எப்போது நடக்கும்? என்று நிச்சயமாக தெரியும். எதையும் தனது மாயையின் சங்கல்பமாக எடுத்துக் கொள்பவன் அல்லவா?
யது குலத்தவர்கள் ப்ரபாஸ க்ஷேத்ரத்துக்கு குடியேறினார்கள். செல்வம் கொழிக்கும் இயற்கை வளமிக்க துவாரகை வைகுண்டம் போல அல்லவா காட்சி அளித்தது.  கிருஷ்ணன் பிரம்மாவுக்கு கொடுத்த வாக்கு  நினைவுக்கு வந்தது: 

”’ப்ரம்மதேவா, யதுகுல வீரர்கள் தங்கள் பலத்தினால், என் ஆதரவால் கொடுமைகளும் தீய சக்திகளும் செய்ய வலுத்து விட்டார்கள் என்பதால் அவர்களையும் அழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு அவர்களை ஒடுக்கியாகி விட்டது. எனக்கு இங்கே புரிய வேண்டிய பணி எதுவும் இனி இல்லை.   நானும் வைகுண்டம் திரும்புகிறேன். நீங்கள் சந்தோஷமாக செல்லலாம்.”
துவாரகையில் கிருஷ்ணன் யதுகுல வீரர்களை தலைவர்களை அழைத்தார்.
”உயிர் நண்பர்களே, பெரியோர்களே, நமது யது வம்சத்தை  ரிஷிகள் அழிந்து போக சபித்து விட்டனர் என்பது உங்களுக்கு தெரியும். இதைத்  தடுக்க வழியில்லை. அதன் விளைவாக எங்கும் விநாசம் தலை விரித்தாடுகிறது. உயிர் வாழ வேண்டும் என்றால் இனியும் நாம் யாரும் இங்கு வசிக்க வழியில்லை. துவாரகையை விட்டு எல்லோரும் ப்ரபாஸ க்ஷேத்ரம் செல்வோம். நேரம் கடத்தக் கூடாது” என்கிறார் கிருஷ்ணன்.  யாதவர்கள்  மூட்டை முடிச்சுகளுடன் எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு துவாரகையை விட்டு வெளியேறுகிறார்கள். ப்ரபாஸ க்ஷேத்ரம் நோக்கி செல்கிறார்கள்.

உத்தவர் கிருஷ்ணனின் தாசர். அவரை பக்தியோடு பின்பற்றுபவர். ஏன் எல்லோரும் துவாரகையை விட்டு வெளியேறு கிறார்கள் என்று அறிந்து உத்தவர் திடுக்கிட்டார்.  கிருஷ்ணரை அணுகி தனியே சந்திக்கிறார். சாஷ்டாங்கமாக கிருஷ்ணன் தாள்களை வணங்குகிறார்.
”வா உத்தவா நான் உன்னை எதிர்பார்த்தேன்”
” கிருஷ்ணா, துர்வாசர் முதலான ரிஷிக்களின் சாபத்திற்கு உள்ளாகி யதுகுலம் முற்றிலும் அழியும் என்று உனக்கு தெரியுமே, அதை தடுக்கும் சக்தியும் உனக்கு உண்டே, எதற்கு அவர்களை அழியச் செய்து விட்டு நீ வைகுண்டம் செல்ல உத்தேசித்தாய். முடிவெடுத்தாய்? எனக்கு காரணம் வேண்டாம். ஆனால் தயவு செய்து என்னையும் உன்னுடன் அழைத்து செல்வாயா கிருஷ்ணா?”
” இல்லை உத்தவா நீ இன்னும் பூமியில் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. உனக்கு நான் ஆத்ம உபதேசம் செய்வேன். நான் இங்கிருந்து சென்றபின் இந்த பூமியில் கலியின் பிடி அதிகரிக்கும். இந்த உலகில் மனம் வாக்கு காயம் என்று ஐம்புலன்களால் அடையப்படும் எதுவுமே சாஸ்வதம் இல்லை, அழியும் தன்மை கொண்டது என்பதை நீ உணர்ந்து மற்றவர்க்கும் உபதேசம் செய்யும் பணி உன்னால் நிறைபெறவேண்டும்.

”ப்ரபோ, தாங்கள் யது வம்சத்திற்கு முடிவு நிச்சயம் என்று அறிவித்து தாங்களும் விடைபெறுவீர்களா? யோகீஸ்வரா, தங்கள் சக்தி நான் அறிவேன். சர்வ வல்லமை பொருந்திய தாங்கள்  ரிஷிகளின் சாபத்தை விலக்க முடியாதா? அதை சக்தி இழக்க செய்ய இயலாதா?  தங்கள் பூவுலக யாத்திரையும்  சீக்கிரம் முடிவுக்கு வரும். நீங்கள் இல்லாமல் யார் இங்கு வாழ முடியும் ப்ரபோ? உங்களைப் பிரிவது என்பது நினைத்து க்கூட பார்க்க முடியவில்லையே. எங்கள் செயல், எண்ணம் எதுவுமே உங்களால் அல்லவோ நடைபெறுகிறது. உங்களது ஒவ்வொரு அசைவையும் கண்ணால் கண்டு ரசித்த உங்கள் பக்தர்கள் இதை எவ்வாறு ஜீரணிப்பார்கள்?
கிருஷ்ணன் புன்முறுவல் செய்தார். உத்தவரை அன்போடு பார்த்தார்.

”என் பிரியமான உத்தவா, என் முடிவை நீ சரியாகவே உணர்ந்திருக்கிறாய். நான் வைகுண்டம் திரும்பும் நேரம் வந்து விட்டது. ப்ரம்மா சிவன், இந்திராதி தேவர்கள் அனைவருமே என்னை மீண்டும் அங்கே அடைய காத்திருக்கிறார்கள். நேரம் அதிகமாகவே எடுத்துக் கொண்டுவிட்டேன். நூற்று இருபத்து ஐந்து ஆண்டுகள் கொஞ்சம் அதிகம் தான். அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றவே இங்கே பலராமனோடு வந்தேன். என் வேலையும் அவர்கள் விருப்பமும் நிறைவேறி விட்டதே. நான் மீண்டும் என் இடத்துக்கு செல்லவேண்டாமா.?

இதைக் கேள் உத்தவா. யது குலத்தினர் தங்களுக்குள் தாங்களே போரிட்டு அனைவரும் மடியபோகிறார்கள். எவரும் மிஞ்சப் போவதில்லை. இன்றிலிருந்து சரியாக ஏழாம் நாள்  இங்கே  சமுத்திரம் பொங்கும். இந்த துவாரகை கடலில் மூழ்கும். துவாரகை நகரத்தில் எதுவும் தப்பாது. நான் இந்த உலகை விட்டு அகல்வேன். கலி முழுதுமாக உலகை ஆக்கிரமித்து விடுவான். நான் மறைந்த பிறகு நீயும் இங்கு இருக்க வேண்டாம். கலியில் அதர்மம், அநீதி, பாப காரியங்கள் பெருகும். நீ அதில் சிக்க வேண்டியதில்லை. உன் பந்த பாசம், பற்று அனைத்தையும் நீக்கி என்னை நினைப்பாயாக. சம நோக்கோடு என் மீது உன் சிந்தையை செலுத்தி பூமியில் எங்கும் செல்வாயாக. ஏனென்றால் காண்பது, கேட்பது, செய்வது, தோன்றுவது நிகழ்வது அனைத்தும் மாயை, அநித்யமானது, என்று அறிவாய். ஐம்புலன்களையும் வென்று மாயைக்கு அடிமையாகாமல் ஆத்ம சிந்தனையோடு என்னை உன்னில் கண்டு ஆனந்தமாக இரு.

தயை, கருணை, அன்பு சம தர்சனம் இவற்றோடு எல்லோரையும் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்பவன் என்னை அடைகிறான். எல்லாவற்றிலும் எல்லோரிலும் என்னையே காண்பான். ஜனன மரணம் அவனை அணுகாது.

”பகவானே,  எனக்கு இன்னும் அவசியம் உபதேசம் செய்யுங்கள் என்கிறார் உத்தவர். கண்ணன் தொடர்கிறான். ஆகவே  நானும் தொடர்ந்து சொல்கிறேன்..

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2562

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;