PESUM DEIVAM DEEPAVALI MSG J K SIVAN

பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN

தீபாவளி விஷயம்

மஹா பெரியவா என் வீட்டில் ஒரு முக்கிய மெம்பர். அப்பா மாதிரி. அவரும் நானும் அடிக்கடி மானசீகமாக, மனதளவில் பேசுவோம். கேள்வி பதில் நடைபெறும். கேள்வி கேட்பது எப்போதும் நானே தான்.பதில் என் மனதில் அவர் தோற்றுவிப்பார். என் ஆத்மா ரூபத்தில் அவர் பதில் சொல்வது என் காதில் மெதுவாக கேட்கும். மஹா பெரியவாளின் குரல் அது. மிருதுவான தெளிவான சுருக்கமான பதிலாக. அது உங்களுக்கும் தெரியவேண்டாமா?
இதோ தீபாவளிஎன்று நடந்த ஒரு சம்பாஷணை.

இந்த வருஷம் தீபாவளி எதிர்பார்த்த அளவுக்கு, பயந்த அளவுக்கு மழை இல்லை. பட்டாசு சப்தமும் ரொம்ப இல்லை.தெருவில் வெடிப்பவர்கள் அதிகம் இல்லை. ஏன்? பட்டாசு விளையா? அல்லது பட்டாசு வெடிக்கும் ஆர்வம் குறைந்து விட்டதா? எதுவாக இருந்தாலும் தெருவில் நடமாட முன்போல் அதிக ஆபத்து இல்லை.

குளித்து பகவானைப் பிரார்த்தித்து புது வேஷ்டி கட்டிக்கொண்டு டவல் மேலே போட்டுக்கொண்டு என் அறையில் வழக்கம்போல் மஹா பெரியவாளை பார்த்துக் கொண்டு உட்கார்ந்தேன்.இருள் முழுதும் விலகவில்லை, விடியவில்லை. சூர்யன் அப்புறம் தான் வருவான்.

அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.தீப ஒளியில் அவர் புன்சிரிப்பு கண்ணைக் கவர்ந்தது.மனதை ஆக்கிரமித்தது.
”தீபாவளி நமஸ்காரம் மஹா பெரியவா”
”கங்கா ஸ்னானம் ஆச்சா? ”
”முக்யமாக தீபாவளி அன்று நான் எல்லோரையும் கேட்க வேண்டிய கேள்வி இது பெரியவா. உங்க ஆசிர்வாதத்தில் புனித நீராடினேன்”
”எதுக்கு வெந்நீரில் இன்னிக்கு குளிக்கணும்னு தெரியுமா?”
”சொல்லுங்கோ பெரியவா”
” தீபாவளி அன்றைக்கு ஒரு நாள் மட்டும் எல்லா வெந்நீரிலும் கூட அருணோதயதிலிருந்து ஸூர்யோதயம் வரை ஒரு முஹூர்த்த காலம் – அதாவது இரண்டு நாழிகை – கங்கா மாதா இருக்கா. கார்பொரேஷன் குழாயில் குளித்தவனைக் கூட கங்காஸ்நானம் ஆச்சா ன்னு நீ கேட்டாலும் அது தப்பே இல்லை.பைத்தியக் காரத்தனம் அல்ல.”
வாய் மலர்ந்து பெரியவா தலையை ஆட்டி வழக்கம்போல சிரிச்சா. மேலே அந்த ம்ருதுவான குரல் தொடர்ந்தது.

”இன்னிக்கி தீபாவளி. முதலில் அருணோதயத்தில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு கங்கா ஸ்மரணத்தோடு வெந்நீர் ஸ்நானம் பண்ண வேண்டும். அப்புறம் ஸூர்யோதயமானபின், ஆனால் ஆறு நாழிகைக்குள், பச்சை ஜலத்தில் இன்னொரு ஸ்நானம் செய்ய வேண்டும். இந்த கங்கா ஸ்னானத்தில் காவேரி ஸம்பந்தமும் இருக்கிறது ஏனென்றால் துலா (ஐப்பசி) மாஸம் முழுக்கவே அருணோதயத்தில் ஆரம்பித்து ப்ராதக் காலம் முடிகிறவரை, அதாவது ஸூர்யன் உதித்து ஆறு நாழிகை வரை காவேரியில் கங்கை உள்பட ஸகல தீர்த்தங்களும் இருக்கு”

”தீபாவளி விசேஷம் என்னன்னா, கிருஷ்ண ஸ்மரணை தான் உண்மையில் புண்ணிய ஸ்நானம். ”உள்” அழுக்கை யெல்லாம் போக்கி ஜீவனைக் குளிப்பாட்டிப் பளிச்சென்று பரிசுத்தமா பண்ணுவது அதுதான். ‘கோவிந்தேதி ஸதா ஸ்நானம்’ னு சொல்றது. இப்படிச் சொன்னதால் வெளியே இருக்கிற கங்கா, காவேரியெல்லாம் அவசியமில்லை, பிரயோஜனமில்லை னு அர்த்தம் ஆகாதுடா. அந்த கோவிந்தனேதான் நம்மிடம் கருணையோடு நமக்கு கங்கா ஸ்நானத்தைக் கொடுத்து, தானே காவேரி ஸ்நானம் பண்ணிக் காட்டியிருக்கிறான். அவனுடைய ஸ்மரணத்தோடு இப்படி ஸ்நானம் பண்ணினால் அது உள்ளத்துக்கு ஸ்நானம் என்பது மட்டுமில்லை, உள்ளத்துக்குப் புது வஸ்திர அலங்காரம், மதுரமான பக்ஷணம் எல்லாமும் அதுவேதான்! புரிஞ்சுதா?”

சங்கர பகவத் பாதாள் கங்கா ஸ்லோத்ரத்திலே ஒரு ஸ்லோகம் இப்படி சொல்லியிருக்கார் தெரியுமா உனக்கு?
”ஆஹா கேக்கவே திவ்யமா இருக்கு .சொல்லுங்கோ பெரியவா”

रोगं शोकं तापं पापं हर मे भगवति कुमतिकलापम् ।त्रिभुवनसारे वसुधाहारे त्वमसि गतिर्मम खलु संसारे ॥९॥
Rogam Shokam Taapam Paapam Hara Me Bhagavati Kumati-Kalaapam |Tri-Bhuvana-Saare Vasudhaa-Haare Tvam-Asi Gatir-Mama Khalu Samsaare ||9||
பகவதி அம்மா, கங்காதேவி, என்னுடைய வியாதிகள், துக்கம், பாபங்கள், பற்றுக்கள், மனசிலே தீய எண்ணங்கள், எல்லாம் நீக்கி அருளவேண்டும். கங்கா மாதா, மூன்று லோகத்துக்கு சுபிக்ஷம் நீ தானே அம்மா.பூமிக்கே மாலை, ஸம்ஸார பந்தத்திலே இருந்து என்னை காப்பாற்றுகிறவள் நீ அல்லவா” என்கிறார். கங்கா ஸ்னானம் அவ்வளவு ஸ்ரேஷ்டம். .

”இந்த நாளில் தான் போன துவாபர யுகத்திலே கிருஷ்ணர் ஸாக்ஷாத் மஹாவிஷ்ணுவைப் போல் கருடனைக் கூப்பிட்டு து அவன் மேலேறிக் கொண்டு, ஸத்ய பாமாவையும் துணை சேர்த்துக் கொண்டு ப்ராக்ஜ்யோதிஷபுரத்துக்குப் புறப்பட்டார்.”

”எதுக்கு கிருஷ்ணன் ஸத்யபாமாவை அழைத்துக்கொண்டு போனார்? ”

”அவசரக்குடுக்கை, குறுக்கே பேசாம சொல்றதைக் கேளு. சத்யபாமா பூமாதேவியின் அவதாரம்.அதனால் தான். பாமாவுக்கு அஹங்காரம் ஜாஸ்தி என்பது தவறு. இப்போது ஸத்ய பாமாவிடம் இருந்த உயர்ந்த குணங்கள் உலகுக்கு தெரிவதற்காகவே அவளை அழைத்துக் கொண்டு போனார். பெற்ற தாய் ஒருத்தி தான் பெற்ற பிள்ளையை கொல்லப் போகிறாள். லோகத்துக்கே விரோதியாகத் தன் பிள்ளை இருக்கிறான் என்பதால் அவன் சாக வேண்டியது தான் என்று ஒரு தாயார் நினைப்பது ரொம்ப ரொம்ப அபூர்வமான தியாகம் நிறைந்த கேள்விப்படாத சிறந்த விஷயம், விசேஷமும் கூட. இப்படி நினைத்துத் தன் துஷ்டப் பிள்ளை தன்னால் தன கண் முன்னே சாவதையும் பார்த்து லோக ‌க்ஷேமத்தை நினைக்கக் கூடிய உயர்ந்த குணம் ஸத்ய பாமாவுக்கு உண்டு என்று உலகத்துக்கு தெரியப் படுத்துவதற் காகவே சத்யபாமாவை தன்னுடன் அழைத்துக் கொண்டு போனார் கிருஷ்ண பரமாத்மா”

”மஹா பெரியவா, எனக்கு உங்களையும் ஸ்ரீ கிருஷ்ணனையும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அப்புறம் என்ன நடந்தது சொல்லுங்கோ ”

”பாரத தேசத்திலே தர்மத்தை ரக்ஷிக்க எத்தனையோ வீராங்கனைகள் உயிரை திரணமாக மதித்து போராடியிருக்கா. சரித்திரம் சொல்கிறது. அநேக ராஜ ஸ்திரீகள் ஆதியிலிருந்து, ஸமீபகால ராணி அஹல்யா பாய், ஜான்ஸி ராணி வரை இப்படி இருந்திருக்கா. கைகேயி ஸம்பராஸுர யுத்தத்தின் போது தசரதருக்கு ரத ஸாரத்யம் பண்ணினவள். அதே போல இங்கே சத்யபாமா கிருஷ்ணனை தேர்த் தட்டில் நிறுத்தி தான் ரதத்தை ஓட்டறாள். ”
ஒரு நிமிஷம் மௌனம். பெரியவா தொடர்கிறார்.
””பழைய காலத்தில் பொறுமையே பூஷணமான பூமாதேவி துஷ்ட ராஜாக்கள் படுத்தும் பாடு தாங்க முடியாமல், பசு ரூபத்தில் மஹாவிஷ்ணுவிடம் பிரார்த்தனை பண்ணிண்டதால் பூபாரம் தீர்ப்பதற்கு விஷ்ணு கிருஷ்ணாவதாரம்
எடுக்கிறார். அதில் கம்ஸன், சிசுபாலன், ஜராஸந்தன், துர்யோதனன் போன்ற துஷ்டர்களைத் தீர்த்துக் கட்டினால் மட்டும் போதாது. இவர்களையெல்லாம் விட க்ரூரமான நரகாஸுரனையும் வதம் பண்ணணும் னு தான் கிருஷ்ணனும் சத்யபாமாவும் தம்பதியாகப் போறா”

ஆவலாக காத்திருந்தேன். மேலே பெரியவா தொடர்கிறார்.

”நரகாசுரனின் ராஜ்யத்துக்கு தலைநகரம் ப்ராக்ஜ்யோதிஷபுரம். யாரும் உள்ளே நுழைய முடியாதபடி அநேக கோட்டை கள், சுற்றி அகழிகளைக் கட்டிக் கொண்டு உள்ளே பாதுகாப்பாக வஸித்தான் நரகன். வெளி எல்லையில் முதலில் மலைகளையே கோட்டையாக அமைத்துக் கொண்டவன் அதற்குள்ளே ஆயுதங்களாலேயே ஆன கோட்டை, அப்புறம் ஜலத்தை மந்திர சக்தியால் எழுப்பி நிறுத்தி அமைத்துக் கொண்ட ஜலக் கோட்டை, அதற்கப்புறம் உள்ளே நெருப்பாலேயே ஆன அக்னிக் கோட்டை, அப்புறம் வாயுக்கோட்டை என்று நிறைய பாதுகாப்போடு உள்ளே இருந்தான் ராக்ஷஸன் நரகன்..

”கிருஷ்ணன் தனியா எப்படி இதை எல்லாம் எதிர்த்தார்?””
”பகவான் கிருஷ்ணன் ஒவ்வொரு கோட்டையையும் தவிடு பொடியாக்கிண்டு கோட்டைக்குள்ளே பிரவேசிச்சு, பூம் பூம் என்று பாஞ்சஜன்ய (சங்க)த்தை முழக்கி நரகாசுரனை யுத்தத்துக்குக் கூப்பிட்டார்.

ரொம்ப கோபத்தோடு முதலில் நரகாஸுரனுடைய ஸேனாதிபதி முரன் என்கிற ராக்ஷஸன் கிருஷ்ணனோடு மோதி னான். அவனுக்கு ஐந்து தலை. வீர பராக்கிரமன். கடும் யுத்தத்தில் பகவான் ஸுதர்சன சக்ராயுதத்தால் அவனுடைய ஐந்து தலைகளையும் அறுத்து அவனை ஸம்ஹாரம் செய்தார்.

”மஹா பெரியவா கிருஷ்ணன் பூர்ணாவதாரம் என்கிறாளே ஏன்?”
”கேள்வி மேலே கேள்வி கேட்டுண்டே காலத்தை ஒட்டாதே. சொல்றதை முதலில் கேளு. நீ இதை எல்லாம் மத்தவாளுக்கும் எடுத்துச் சொல்றவன் என்கிறதனாலே உனக்கு பொறுமையா நான் பதில் சொல்றேன்.குறுக்கே பேசாதே.

”கருடன் எப்படி விஷ்ணுவின் வாஹனமோ, அப்படியே ஸுதர்சன சக்ரம் விஷ்ணுவின் ஆயுதம். கருடாரூடரான கிருஷ்ணர், விஷ்ணு சக்கரம், சுதர்சனம் னு பேர். கௌமோதகீ என்கிற கதாயுதம், நந்தகி என்கிற கூரான வாள், இப்படி பல ஆயுதங்களை எல்லாம் இருக்கு அவர் கிட்டே”.

” கிருஷ்ணரை மஹாவிஷ்ணுவின் பூர்ணாவதாரம் என்பது க்கு காரணம் கிருஷ்ணன் அந்த அவதாரத்தில், தான் கடவுள் என்கிற பிரஞையோடு மனிதனாக உருவெடுத்தவர். ராமாவதாரம் அப்படி இல்லை. மனிதனாக பிறந்தால் தான் மனித குணங்கள் கொண்டவனாக இருந்தால் தான் ராவணன் வரத்தை மீறாமல் அவனை சம்ஹாரம் பண்ணவேண்டும் என்கிற நிர்ப்பந்தம். அதனால் அவர் தன்னை பூர்ண அவதாரமாக காட்டிக்கவில்லை ”

மறுபடியும் தலையை குனிந்து கொண்டு ஒரு நிமிஷம் மௌனம். பிறகு பெரியவாளின் குரல் ஒலிக்கிறது.

”முரனை சம்ஹாரம் பண்ணதாலே கிருஷ்ணனுக்கு முராரி, முரஹரி என்ற பெயர்கள். முரனுக்கு அரி (சத்ரு) முராரி. த்ரி-புரம் என்ற மூன்று புரங்களில் உருவமாயிருந்த அஸுரர்களுக்கு விரோதியானதால் ஈச்வரனுக்குப் புராரி என்று பெயர். முரஹரி என்றாலும் முரனை அழித்தவர்னு தான் அர்த்தம் .

முரன் கதையை இப்படி முடிச்சதும் அவனுடைய ஏழு பிள்ளைகள் கிருஷ்ணனோடு யுத்தத்துக்கு வந்தார்கள். அப்பா போன கதிக்கே தாங்களும் போய்ச் சேர்ந்தார்கள். கடைசியில் ஒரு பெரிய யானை மேல் ஏறிண்டு நரகாஸுரனே யுத்த பூமிக்கு வந்தான். பகவான் அவனோடு யுத்தம் பண்ணினார். அவனுடைய ஸைன்யத்தை வதம் பண்றதுக்கு கருடன், ஸத்யபாமா இரண்டு பேரும் அவருக்கு ஸஹாயம் பண்ணினா. தாமே எதையும் ஸாதித்துக் கொள்ள முடியும் என்று இருந்தாலும் அவர்கள் வெறுமனே வேடிக்கை பார்த்ததாக இருக்கக் கூடாது என்று நினைத்து, அவர்களுக்கும் இப்படி ஸேவா பாக்யத்தைக் கொடுத்தார் கிருஷ்ணன்.”

”அஸுர ஸைன்யம் முழுவதும் நிர்மூலமான பின் பகவானுக்கும் நரகாஸுரனுக்கும் நேரடியா உக்ரமான யுத்தம் நடந்தது. பகலோடு முடியாமல் ராத்திரியெல்லாம் சண்டை நீடித்தது. ராத்திரி வேளையில் அஸுரர்களுக்கு பலம் விருத்தியாகும். ஆனாலும் பரமாத்மாவானதால் சர்வஞானதால் சத்யபாமாவை விட்டு அவனைத் தாக்குகிறார். அவன் தாக்குதலைச் சமாளித்தார். அவனால் ஒரு நேரத்தில் கிருஷ்ணன் சத்யபாமாவுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. முடிவிலே அருணோதய காலத்தில் பகவான் சத்யபாமாவை உபயோகித்து நரகாஸுரனைச் சக்ராயுதத்தால் ஸம்ஹாரம் செய்துவிட்டார். அன்று பொழுது விடிந்தபோது லோகத்துக்கே பெரிய விடிவு காலமாயிற்று!

’தனது பிள்ளை போன நாளைப் பண்டிகையாக எல்லோரும் எந்தக் காலத்திலும் நின்று போகாமல் நினைக்க வேண்டும்’ என்று பூமாதேவி ஆசைப்பட்டாள். பண்டிகை என்பதால் மங்கள ஸ்நானம், புது வஸ்திர தாரணம், பக்ஷண போஜனம் எல்லாவற்றையும் ஏற்படுத்திக் கொடுத்தாள். இதிலே பிள்ளை நினைவு வரும்படி புதிசாக, நூதனமாக ஏதாவது இருக்க வேண்டுமென்று உதயத்துக்கு முந்தியே தைல ஸ்நானம் செய்ய வேண்டும் என்று வரம் வாங்கினாள். பகவானே இதற்கு ஒப்புக் கொண்டும் கூட, இப்படி சாஸ்திர விரோதமாக அப்யங்கனம் பண்ண யாராவது பயப்படப் போகிறார்களே என்று நினைத்து, பயம் போகும்படியாக என்ன செய்யலாம் என்று பார்த்தாள். ‘அன்றைக்கு அந்த வேளையில் தேய்த்துக் கொள்கிற எண்ணையில் லக்ஷ்மியும், குளிக்கிற வெந்நீரில் கங்கையும் வஸிக்கும்படி செய்துவிட்டால் யாரும் பயப்பட மாட்டார்கள்; லக்ஷ்மியும் கங்கையும் வேண்டாம் என்று எவருமே நினைக்க மாட்டார்கள். இதனால் ஸகல ஜனங்களுக்கும், பண்டிகை என்ற ஸந்தோஷத்துடன் புண்ணியம் என்பதும் கிடைக்கும்’ என்று நினைத்தாள். இதனால்தான் அந்த ஸ்நானத்துக்கு கங்கா ஸ்நானம் என்றே பேர் ஏற்பட்டது.

”ஏன் தீபாவளி என்று பெயர் பெரியவா?”

”ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, பூமாவாகிய என் பிள்ளை பௌமாசுரன் மேல் எனக்கு பிரியம் ஜாஸ்தி என்பதால் இன்று அவன் மறைந்த இந்த நாளுக்கு ‘நரக சதுர்த்தசி’ அவன் பெயர் நரகாசுரன் என்றே அழைக்கப்பட வேண்டும் . வரம் தாருங்கள் ப்ரபோ” என்று வரம் கேட்டு வாங்கிக் கொண்டாள்.இந்த பேரைக் காட்டிலும் ”தீபாவளி” என்கிற பேர் நிலைத்துவிட்டது. காரணம் ‘தீபாவளி’ என்றால் தீப ஒளி, தீப வரிசை. வடக்கே தான் இப்படி விளக்கேற்றி வைத்து நிஜ தீபாவளியாகக் கொண்டாடுகிறார்கள். நாம் கார்த்திகை தீபோத்ஸவம் என்று வைத்துக் கொண்டு விட்டோம்.

”துலா ஸ்னானம் பத்தி சொல்லுங்கோ பெரியவா ”
”சொல்றேன் கேளு .காவேரி முழுவதிலும் இப்படி துலா(ஐப்பசி) மாஸத்தில் ஸகல தீர்த்த ஸாந்நித்யம் இருப்பதாகச் சொன்னாலும், ஏதாவது, ஸ்பெஷல் ஆக ஒன்று வேணுமே, அதனால் – மாயவரத்தில், மயிலாடுதுறையில் மட்டும் துலா ஸ்நானம் அதி விசேஷமாக பண்ணுகிறா. மாயூரம் என்பது அதன் சரியான பெயர். மயில் என்று அர்த்தம். மயிலாப்பூரில் எப்படி கற்பகாம்பாள் மயிலாகி பரமேச்வரனைப் பூஜித்தாளோ அப்படியே அபயாம்பாள் மயிலாக ஈச்வராராதனை செய்ததால் மாயூரம், கெளரீ மாயூரம் என்று அந்த க்ஷேத்திரத்துக்குப் பெயர் . அங்கே ஒரு படித்துறைக்கு ‘லாகடம்’ என பெயர். ‘துலா கட்டம்’ என்பதுதான் இப்படி முதலெழுத்தை தொலைத்து விட்டு ”லாகட” மாகியிருக்கிறது! ‘தொள்ளாயிரம்’ என்பது ‘த்ளாயிரம்’ ஆனது போல். ‘மாயவரம்’ என்பதை ‘மாயரம்’, வியாபாரம்’ என்பதை ‘யாவாரம்’ என்கிறாளே அது போல் தான் , ‘மூட்டை’யில் ‘ட்’ போய் ‘மூடை’ என்கிறது போல ‘லாகட்டம் ”லாகட ’மாகியிருக்கிறது!

இந்தத் துலா கட்டத்தில் ஐப்பசி மாஸம் பூராவும் ஸ்நான விசேஷத்துக்காக ஜனங்கள் சேருவார்கள். அங்கேதான் கிருஷ்ணரை வீரஹத்தி நிவ்ருத்திக்காக ஈச்வரன் ஸ்நானம் பண்ணச் சொன்னார். சொன்ன தோடில்லாமல் தாமும் கூட வந்தார்.

யமுனாதீர விஹாரி கிருஷ்ணன் தீபாவளியன்று நம் எல்லோருக்கும் கங்கா ஸ்நானம் கிடைக்கும்படியாக அநுக்ரஹம் செய்துவிட்டுத் தாம் காவேரிக்கு வந்து துலா ஸ்நானம் பண்ணினார். வீரஹத்தி தோஷம் போய்விட்டது. அதற்கு [பிரத்யக்ஷ நிரூபணமாக] ஹத்தி தோஷத்தால் மங்கியிருந்த அவருடைய தேஹ காந்தி இப்போது முன் மாதிரியே பளீரென்று ஜ்வலிக்கிற நல்ல நீலமாக மாறிற்று.

ஸகல தேவதைகளும் இந்த ஆச்சரியத்தைப் பார்த்து, ஈச்வரன், பெருமாள் இரண்டு பேரையும் ஒன்றாகத் தரிசிக்கிற பாக்யத்தைப் பெற்று, தாங்களும் காவேரி ஸ்நானம் செய்தார்கள்.

பூமாதேவி இந்த ஸந்தர்ப்பத்தில்தான் நரகாஸுரன் ஞாபகமாக கங்கா ஸ்நானம் முதலான வரங்களைக் கேட்டதாகக் காவேரி புராணத்தில் இருக்கிறது.

பூர்வாவதாரத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தது போலவே, இப்போதும் கிருஷ்ண பரமாத்மா வீரஹத்தி போக என்ன வழி என்று பரமசிவனிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள கைலாஸத்துக்குப் போனார். “பரமேஸ்வரா, என்னுடைய வீரஹத்தி தோஷம் விலகுவதற்கு ஒரு பிராயச்சித்தம் சொல்லுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.

சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் ‘தாங்கள் இரண்டு பேருமே ஸாரத்தில் ஒன்றுதான். லீலைக்காகவும், லோகாநுக்ரஹத் துக்காகவும், நிர்வாஹம் – ஸம்ஹாரம் என்று தொழில் பிரிவினைக்காக வேறு வேறு மாதிரி வேஷம் போடுகிறோம்’ என்று தெரியும். ஆகவே இருவரும் ஒருவர் காலில் இன்னொருவர் விழுவார்; அடித்துக் கொண்டு சண்டையும் போட்டு ஒரு ஸமயம் ஒருவர் தோற்பார்; இன்னொரு ஸமயம் மற்றவர் தோற்பார். அன்பிலே நெருக்கமாகித் தாங்கள் இரண்டு பேருமே ஒரே தேஹத்தில் பாதிப்பாதியாகச் சேர்ந்தும் இருப்பார்கள்.

ப்ராயச்சித்தான்–யசேஷாணி தப: கர்மாத்மகாநி வை யாநி தேஷாம் அசேஷாணாம் க்ருஷ்ணாநுஸ்மரணம் பரம்.

அதாவது, “ப்ராயச்சித்தங்களாக அநேக வித தபஸ்கள், கர்மாநுஷ்டான்ங்கள் என்று எத்தனையோ இருக்கின்றன. இவை எல்லாவற்றுக்கும் மேலான ஸர்வப்பிராயச்சித்தம் என்னவென்றால் க்ருஷ்ண ஸ்மரணை தான்” .
+++++
வாசலில் பால்காரன் கதவை படார் என்று திறந்த சப்தத்தில் என் மூடியிருந்த கண்கள் திறந்தன.. எதிரே மஹா பெரியவா அபய ஹஸ்தத்தோடு படம். அவர் அருளிய அருள்வாக்குகளை படித்ததை அவர் சொல்வது போலவே மனதில் கேட்டனுபவித்த தொடர் சிந்தனை நின்றது.
அவரை மனதார நன்றியுணர்ச்சியோடு வணங்கினேன்.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2561

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;