
“ஹே , கோவிந்தா ! நங்கநல்லூர்_J_K_SIVAN
ஆதி சங்கரர்
பஜ கோவிந்தம் ஸ்லோகங்கள் 11–12
11. दिनयामिन्यौ सायं प्रातः शिरवसन्तौ पुनरायातः ।कालः क्रीडति गच्छत्यायुः तदपि न मुञ्चत्याशावायुः ॥ १२॥
Dinayaaminyau saayaM praatha shishiravasantau punaraayaataH kaalaH kriiDati gachchhatyaayuH tadapi na muJNcatyaashaavaayuH
தினயாமின்யூ சாயம் ப்ராத ஷிர வசந்தவ் புனரா யாதாகாலா க்ரீடதி கச்சத் யாயு தபி ந முஞ்சாத் யாஷா வாயு
‘ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்காது’ என்பது தெரிந்த ஒரு வாக்கியம். எவருடைய விருப்பு வெறுப்பையும் எதிர்பார்ப்பையும், எதிர்ப்பையும், லக்ஷியம் பண்ணாமல் இரவும் பகலும், காலையும் மாலையும், வசந்தமும் குளிர் காலமும்,வந்து போய்க்கொண்டே இருக்கிறது. இது காலத்தின் நியதி. மனிதனுக்கோ ஆசை வந்துவிட்டால் போவதே இல்லை. புயல் வந்தால் அது அதன் கர்மா, பேசாமல் வீசிவிட்டு போய்விடும். ஆனால், நமக்குள் நாமே உண்டாக்கிக் கொள்கிற ஆசைப் புயல், பொறாமைத் தீ, காமப் பசி நம்மை விட்டு நீங்குவதே இல்லை. எவ்வளவு ஆச்சர்யம் இது! . கோவிந்தா உன் நாமம் தானே இதற்கு எல்லாம் ஒரே மருந்து. எனவே தான் விடாமல் தினமும், ஏன் எப்போதும் மனதளவிலாவது சொல்வோம் ‘ ஹே கோவிந்தா என்று. சொல்லச் சொல்ல. மெல்ல மெல்ல, மேலே சொன்னதெல்லாம் காணாமல் போய்விடும்.
எனவே இருக்கும் நேரத்தை அது ஓடுவதற்குள் கெட்டியாக பிடித்துக் கொள்ளவேண்டும். நேரத்தை நழுவ விடக்கூடாது.
தமிழுக்கு சிறந்த தொண்டு செய்தவர்களில் ஆழ்வார்கள் முக்யமானவர்கள். அழகு கொஞ்சும் தமிழ் வளம், எளிமை, ஆழ்ந்த கருத்து, அளவிட முடியாத பக்தி, இவற்றின் ஒருங்கிணைப்பு தான் ஆழ்வார்கள் பாசுரம். ஒரு ஆழ்வார் மற்ற ஆழ்வார்களை விட பெரிய்ய்ய ஆழ்வார். வயதாலோ, அதிகாரத்தாலோ அல்ல. பக்தியினால், நிறைய பாசுரங்களை இயற்றியதாலும், இன்னொரு ஒரே ஒரு பெண் ஆழ்வாரை வளர்த்து தமிழுக்கும் திருமாலுக்கும் அளித்ததாலும் தான்.
”எய்ப்பென்னை வந்து நலியும்போது
அங்கேது நான் உன்னை நினைக்கமாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்
அரங்கத்து அரவணை பள்ளியானே”
நிறைய நல்ல விஷயங்களை ரிட்டையர் ஆனப்புறம் படிக்க என்றே அலமாரி நிறைய சேர்த்து வைத்து ரிட்டையர் ஆனபிறகு டாக்டர் வீடே கதி என்று கிடக்கிறவர்கள், பிள்ளை பெண்கள் வீட்டுக்கு மாத தவணையில் பங்கு போட்டு அனுப்பப் படுபவர்கள் எங்கே நீதி நூல்கள் படிப்பது, எப்போது படிப்பது?
ஆகவே, வருமுன் காப்போனாக ஆழ்வார் ”அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் நாராயணா உன் நாமத்தை” என்கிறார். இது எதைக்குறிக்கிறது.? வாழ்வின் அநித்தியத்தை. நேற்றிருந்தார் இன்றில்லை, அல்லது அதிக பட்சம் நாளை இல்லை. வாழ்வும் சாவும் எத்தகையது. இருளும் பகலும் போல், காலையும் மாலையும் போல், வசந்தமும் மாரிகாலமும் போல். காலத்தின் விளையாட்டு என்றும் வாழ்க்கையின் மீது தான். நீட்டிப்பதும் சுருக்குவதும் தான் விளையாட்டே. எது எப்படியிருந்தாலும் அத்தனை நேரத்திலும் ஆசை என்னும் சூறாவளியின் ஆதிக்கத்தில் தான் எல்லாமே. ஆகவே கெட்டியாக பிடித்துக்கொள் அந்த கோவிந்தனை. அவனைப்பிடிக்க சுருக்கு வழி அவன் நாமத்தை உச்சரிப்பதே.
12. यावत्-पवनो निवसति देहे तावत्-पृच्छति कुशलं गेहे | गतवति वायौ देहापाये भार्या बिभ्यति तस्मिन् काये
yāvat-pavano nivasati dehe tāvat-pṛcchati kuśalaṃ gehe | gatavati vāyau dehāpāye bhāryā bibhyati tasmin kāye
யாவத் -பவனோ நிவஸதி தேஹே த்வத்ப்ருச்சதி குசலம் கேஹே கதவதி வாயவ் தேஹாபாயே பார்யா பீப்யதி தஸ்மிந் காயே .
நாம் எல்லாருமே நடிகர் திலகங்கள் தான். இந்த உலக வாழ்க்கை தான் பெரிய முடிவில்லாத நாடக மேடை. ஷேக்ஸ்பியர் எப்படியோ இதை சங்கரரிடமிருந்து தெரிந்து கொண்டுவிட்டான். வேக வேகமாகவே மனிதனின் வாழ்க்கையில் 7 நிலைகள் என்று ஆங்கிலத்தில் ஒரு கவிதை எழுதி பேரும் புகழும் பெற்றுவிட்டான். நம்மவர் செய்யாததைச் செய்த அவன் புகழ் நீடூழி தொடரட்டும்.
எவ்வளவோ ஆசை ஆசையாக ”உங்களுக்கு பிடிக்குமே இந்தாருங்கள் மசாலா தோசை… என்று வாயில் ஊட்டி விட்டவள் கமலா, ஆசை மனைவி, இதோ மாதவனைக் கண்டு ஓடுகிறாள். ”ஐயோ வேண்டாம் நான் கிட்டே வரவில்லை, பார்க்க வில்லை, பயமா இருக்கு. அந்த முகத்தை என்கிட்டே காட்டாதீர்கள்” என்று பயந்து ஓடுகிறாள்.. அவன் தான் இறந்து பல மணி நேரங்கள் ஆகிவிட்டதே. இனி சுற்றம் உறவு பந்து என்று எவனும் அண்ட மாட்டான். அவனைப் பற்றிய பேச்சு நின்று விடும். அவனைப் பார்த்ததால் குளித்து விட்டு தான் எவனும் தனது வீட்டுக்குள்ளே நுழைவான். இது தான் ப்ராணன் போன பின் நமக்குள்ள மதிப்பு. உயிரோடு இருந்தாலும் பணம் இல்லாவிட்டால் ஒருவன் பிணம் தான். பிராணன் போய்விட்டாலும் பிணம் தான்.
காயமே இது பொய்யடா காற்றடைத்த பையடா என்பது எவ்வளவு பெரிய உண்மை. அதெப்படி குப்புசாமி உடம்பில் ஒன்பது துவாரங்கள் இத்தனை வருஷமாக இருந்தபோதிலும் வெளியே தப்பாத பிராணன் எனும் வாயு, மூச்சுக் காற்று, ஒருநாள் மட்டும் ஏன் திடீரென்று வெளியேறி விட்டது?. அதை எந்த டாக்டராலும் தடுத்து பிடித்து நிறுத்தி தேகத்தினுள்ளே மீண்டும் வைக்க முடியவில்லையே!. காரணம்: குப்புசாமிக்கு இலவசமாக கொடுக்கப்பட்ட தேஹத்தின் இலவச நேரம் அவ்வளவு தான். டப் என்று கேஸ் சிலிண்டரில் முன்னெச்சரிக்கை இன்றி சமையல் கேஸ் பாதி சமையலில் திடீரென்று தீர்ந்து போய், சிலிண்டர் காலி ஆவது போல் குப்புசாமி என்ற பெயரோடு இருந்த அவன் காலம் அதோடு முடிந்து விட்டது. இலவசமாக அவனுக்கு 72 வயஸு வரை அவனுக்கு உடம்பு கிடைத்ததே அவன் செய்த புண்யம், பாக்யம், அதிர்ஷ்டம். இனி அவன் பிராணன் எந்த புதிய உடம்பில் போய் குடியேறுகிறதோ, அது அவனுக்குத் தெரியப் போவதில்லை. அந்த உடல் நாயோ, நரியோ, காக்கையோ, மீனோ, நண்டோ, மீண்டும் மனிதனோ, ஆணோ, பெண்ணோ? அதற்கு ஒரு புதுப்பெயர் காத்திருக்கும். குப்புசாமிக்கும் அது இனிமேல் தெரியாது. முந்தைய பிறப்பில் குப்புசாமியாக இருந்ததும் மறந்து, மறைந்து போய்விடும். எவருக்கும் இது தான் இறைவன் சட்டம், திட்டம். விதி. அறியமுடியாத ப்ரம்ம ரஹஸ்யம்.
உடலில் உயிர் இருக்கும் வரை தான் உறவு, சொந்தம், பந்தம், நட்பு எல்லாமே. அப்புறம் குப்புசாமிக்கு அவன் பெயர் கூட சொந்தமில்லை. பிராணன் இருந்தவரை அவனை பேர் சொல்லி கூப்பிட்டவர்கள் அவனை இப்போது ”பாடி” body உடல் என்பார்களே.
ஆகவே வாழ்வின் அநித்யத்தை உணர்ந்து இப்போதாவது,இனிமேலாவது கோவிந்தா என்று நித்ய வஸ்து வான அவனை நினைக்கவேண்டாமா, துதிக்க வேண்டாமா? என்கிறார் ஆதி சங்கரர்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



