
விஷ் யு ஹாப்பி நியூ இயர்” – நங்கநல்லூர் J K SIVAN
இதோ இப்போதிலிருந்தே ஆரம்பித்துவிட்டது.. வருஷா வருஷம் நடக்கிற, நடத்துகிற ஒரு நாடக வேஷம்.. ”விஷ் யு ஆல் ஹேப்பி நியூ இயர்”
இதோ நானும் எல்லோருக்கும் உரக்க சொல்லிவிட்டேன்.
நான் என்ன சொன்னேன்?
எப்படி நான் சொல்வதால் நீங்கள் ஹேப்பியாக இருப்பீர்கள்?
நான் சொல்லாவிட்டாலும் தான் நீங்கள் ஹேப்பியாக இருக்கப்போகிறீர்கள்?
அது ஏன் ஜனவரி 1ம் தேதி மட்டும் இந்த வாழ்த்து?
எந்த விதத்தில் அது ஒஸ்தி?
அது என்ன ஜனவரி 1 ”நியூ இயர்” புது வருஷம்.
முதல்நாள் வரை இல்லாதது எங்கிருந்து முளைத்தது?
புது வருஷம் தொடங்குகிறதாம் அன்றிலிருந்து? எப்படி? எந்தவிதத்தில்?
தலையைச் சொரிந்து கொண்டு தேடினாலும் காரணம் புரியவில்லை
நாம் சிவப்பாக இருந்தாலும் என்றும் வெள்ளைக்காரனின் நீல விழிகளுக்கு கறுப்பர்கள் தான். கிழக்கிந்திய கம்பெனி சென்னையில் கால் ஊன்றியபோது ஜார்ஜ் கோட்டை கட்டி அதை சுற்றி உள்ள அனைத்து பகுதிகளும் ”கறுப்பு நகரம்” blacktown என்று தான் அழைக்கப்பட்டது. நம்மை நன்றாக வேலை வாங்குவதற்கு நமக்கு அவர்கள் பாஷை வேகமாக கற்பிக்கப்பட்டது. அப்போது பேச ஆரம்பித்த இங்கிலிஷ் பாஷையை இன்னும் விடாமல் தொடர்கிறோம். வீட்டில் குழந்தைகள் ”மம்மி டாடி” சொல்லி ஆங்கிலத்தில் பேசாவிட்டால் ‘நறுக்’ என்று குட்டுகிறோம். இவ்வளவு பணம் கூடை கூடை யா கொட்டி இங்கிலிஷ் மீடியத்தில் படிக்க வைச்சா அது என்ன அப்பா அம்மா. தாத்தா பாட்டி??? இனிமே மம்மி டாடி ன்னு சொல்லலேன்னா காதை திருகிடுவேன்….”
ஸாரி தமிழ் (தாய் பாஷை) தெரியாது என்று சொல்லி பெருமைப்படும் தமிழர்கள் இன்னும் நம்மிடையே இருக்கிறார்களே. எல்லாமே வெள்ளைக்காரன் வழக்கம் பழக்கம் நமக்கு அத்து படி ஆகிவிட்டது. அடேயப்பா 300–350 வருஷங்களில் நம்முடைய ஆயிரம் ஆண்டு சம்பிரதாயங்களை எவ்வளவு அழகாக உடைத்து சிதற வைத்து மாற்றி விட்டான் வெள்ளைக்காரன். அதில் ஒன்று தான் ஆங்கில வருஷ வாழ்த்து. ”விஷ் யு ஹாப்பி நியூ இயர்”
ஜனவரி 1ம் தேதி நமக்கு புத்தாண்டு இல்லை. வீட்டில் ஆங்கிலம் பேசும் தமிழ்க் குடும்பங்கள் அதை நாகரிகமாக கருது கிறதா? ஆங்கிலத்தில் பேசாவிட்டால் அநாகரிகமா? அப்படி என்றால் எதற்காக இன்னும் நாம் தமிழை ” தாய் மொழி ” மதர் டங்” mother tongue என்று சொல்லவேண்டும்.பொருந்தாத பெயர் அல்லவா ? தாயே வேண்டாம் என்கிற போது…
அவளை துச்சமாக நினைக்கும் போது ? இதற்கு மேல் ஒரு துரோகம் இருக்கிறதா? புரியவில்லை?
கொஞ்சம் கொஞ்சமாக நாம் மேற்கு நோக்கி முன்னூறு வருஷங்களாக நகர்ந்து வருகிறோம். ஏன்? உடை, உணவு, பாஷை, உறவு முறை எல்லாம் மேனாட்டு பாணியில் இல்லாவிட்டால் நமக்கு கௌரவம் கிடைக்காதா? காட்டு மிராண்டிகளா இன்னும்? எனக்கு இதற்கெல்லாம் விடை தெரியாது. ஏனெனில் நானும் அந்த கும்பலில் ஒருத்தநாகவே தான் வளர்க்கப்பட்டவன் வெள்ளைக்காரன் ஆட்சியில் பிறந்தவன். பள்ளிக்கூடத்தில் எழுந்து நின்று மொட்டைத்தலை ராஜாவை போற்றி பாடிய மாணவர்களில் ஒருவன்.
நாம் ஒருவரை ஒருவர் வாழ்த்தும் ஆங்கில புது வருஷம் 2024 வழக்கம்போல் நல்லது கெட்டது ,மழை,வெயில் வியாதி ஆஸ்பத்ரி இலவசம் லஞ்சம் எல்லாம் வழக்கம் போலவே கை நிறைய அளிக்கப்போகிறது. எந்தவிதத்தில் இது புதிது என்று புரியவில்லை. நம்பர் மாறியதாலா? 2023 என்பது 2024 ஆகிவிட்டதாலா? எத்தனை வினோத செயல்களை செய்யப் போகிறதோ?
காலண்டர் என்பது பன்னிரண்டு மாசங்களைக் காட்டும் 12 காகிதங்களோடு உருவெடுக்கிறது. சிலது ஒரே பக்கத்தில் மேலே படத்தோடு கீழே 12 கட்டங்களோடு. வேறு வகை ஒன்று இருக்கிறது. தினசரி ஒரு சீட்டு கிழிக்கும் படியாக அட்டையில் சாமி படத்தோடு. இது கிடைப்பதற்கு சிறு வயதில் நான் எங்கெல்லாம் கடைகடையாக ஓடி தேடி அலைந்து யாசித்தவன் , பிச்சை எடுத்தவன்! காலண்டரை எப்படியாவது நிறைய வாங்கி சேர்த்துவிட வேண்டும் என்று ஒரு பசி வெறியில் கடை கடையாக அலைந்திருக்கிறேன். முட்டாளாக சிறு பையனாக இருந்தவன் , கொஞ்சம் வளர்ந்த வாலிபனாகவும் இருந்த போது , டயரி எழுதும் பழக்கமே இல்லாவிட்டாலும் யாரைப் பார்த்தாலும் டயரி கிடைக்குமா என்று கேட்டதுண்டு. டயரிகள் , எனக்கு தெரிந்து சலவைத் துணி கணக்கு எழுத, பால் தயிர் கணக்கு , மற்றும் அட்ரஸ் எல்லாம் எழுத மட்டும் தான் நிறைய குடும்பங்களில் பயன்படுகிறது.
டயரி என்பது நாட்குறிப்பு. என்ன நாள்? என்ன குறிப்பு?
சிலர் பொன்மொழிகள் எழுதி வைப்பார்கள். அநேக குடும்ப ஸ்த்ரீகள் கையில் இந்த பழைய டயரிகள் ஸ்தோத்ர புஸ்தகமாக, மற்றவர்கள் கையில் சினிமா பாட்டு எழுதி வைத்துக் கொள்ளும் புத்தகமாக தான் பார்த்திருக்கிறேன். சில தாத்தாக்கள் பாட்டிகள் பழைய டயரிகளில் இன்றும் ராம ஜெயம் எழுதுவது எனக்கு தெரியும்.
அடேயப்பா, என்னைப் போல எத்தனையோ காலண்டர் டயரி பைத்யங்கள் பல நாட்கள் காலண்டர்களுக்காகவும், டயரிகளுக்காகவும் இன்னும் நடக்கிறது. பழசை எல்லாம் நினைத்துப் பார்த்தால் நாமா இப்படி செய்தோம் என்று வேடிக்கையாக சிரிப்பு வருகிறது.
காலம் மாறி விட்டது. யாரும் இப்போது காலண்டர் தேடுவதில்லை, ” வீட்டில் மாட்ட இடமில்லை சார். காலண்டர் வேண்டாம். டயரி வேண்டாம். எழுதுவதில்லை” என்று தான் பதில் வருகிறது. எழுதும் பழக்கமே போய்விட்டது. எல்லாம் மொபைலில் இருப்பதால், எல்லோரிடமும் மொபைல் டெலிபோன் இருப்பதால், வீட்டில் கடிகாரம், கைக்கடிகாரம் எல்லாம் நிறைய காணாமல் போய்விட்டது. கைக்கடிகாரம் கட்டும் பழக்கமும் காணோம். கம்பியூட்டர் வந்தபிறகு டைப்ரைட்டர் காணாமல் போனது போல், பழைய கேசட்டுகள், வீடியோ டேப்கள் vhs எல்லாம் யூட்யூப் வந்ததும் காலமாகிவிட்டன. பேண்ட் , பெர்முடா, அரை நிஜார் வந்து வேஷ்டியைத் நின்றுவிட்டது.
விஷ் யூ ஹேப்பி நியூ இயர் சொல்வதில் ஒரு காலத்தில் முக்கியம் வகித்தது வாழ்த்து அட்டைகள், எனும் GREETING CARDS. முன்பு காசு கொடுத்து வாங்கி முக்யமானவர்களுக்கு அனுப்புவேன் . போஸ்ட் கார்டில் புத்தாண்டு வாழ்த்துகள் வண்ணம் தோய்த்து கலர் கலராக படம் வரைந்து எழுதி நிறைய பேருக்கு அனுப்பி இருக்கிறேன். 15 பைசாவில் முடிந்த விஷயம்.
இப்போது வாட்சாப் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டு விட்டது. வித விதமான வினோத வகையில் புத்தாண்டு வாழ்த்துக்கள், இதுவும் எத்தனை நாளைக்கோ.?
எது எப்படியோ, சரி, வழக்கம் போலவே பழக்க தோஷத்தில் ”ஹாப்பி நியூ இயர்” சொல்கிறேன். க்ஷேமமாக இருங்கள், சுபிக்ஷமாக தேக ஆரோக்கியத்தோடு இறைவன் அருளால் குடும்பத்தில் எல்லோரும் சுகமாக வாழ்க. குடும்பங்களில் பாசம் குறைந்து வராமல் பெறுக வேண்டும். குடும்பங்கள் உடையாமல் ஒற்றுமையாக இருக்க கிருஷ்ணன் அருள் புரியட்டும். ”லோகா சமஸ்தா சுகினோ பவந்து”: உலகத்தில் எல்லா உயிர்களும் சுகமாக வாழ இறைவனை பிரார்த்திக் கிறேன்.
மனதில் தெய்வபக்தி, பெற்றோர் மேல் மதிப்பு மரியாதை, அன்பு பாசம் நேசம் பிறருக்கு நன்மை, உதவி புரியும் பரோபகார சிந்தனை ஒவ்வொருவரின் இதயத்திலும் மனத்திலும் இருந்தால் ஒவ்வொரு நாள் சூரியன் உதிக்கும் போதும் ஹேப்பி நியூ நாள் பிறக்கிறது. வருஷம் முழுதும் இல்லை, காலம் பூரா ஹேப்பினஸ் தானே. மறுபடியும் அந்த ஹேப்பினஸ் நீங்கள் ஆனந்தமாக அனுபவிக்க வாழ்த்துகிறேன்.
வாசலில் பார்த்தால் ஒரு நாள் மழையில் சென்னை நாறிவிட்டது. முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி தெப்பக்குளம் வீட்டில் இருக்கிறேன். மாடியில் தங்கி இருப்பதால் கீழே ஜலகண்டாபுரம் காட்சி அளிக்கிறது.
வரும் புது வருஷமாவது இதுகள் எல்லாம் இல்லாத சிறந்த வருஷமாக அமையட்டும் என்ற நம்பிக்கை தோன்றுகிறது. ஒருவரை ஒருவர் ”விஷ் யு ஆல் ஹேப்பினஸ் ” என்று கை குலுக்கி வாழ்த்துகிறோம். ஹாப்பினஸ்க்கு அர்த்தம் தெரியவில்லை.
மேலே கிருஷ்ணன் சிரித்துக்கொண்டு பார்க்கிறான் (போன வருஷ காலண்டரிலும் இருந்தவன் இப்போது புது வழவழ பேப்பர் காலண்டரிலும் சிரிக்கிறான்).
”தம்பி உன் சந்தோஷம் (happiness) உன் கையில் தானடா இருக்கிறது” என்று சொல்லாமல் சொல்கிறான். கையில் என்று அவன் சொல்வது நமது மனதில் என்று புரிந்துகொள்ளவேண்டும். மனது சொல்வதைத் தானே கை செய்கிறது.
பண்டைய காலங்களில் புது வருஷங்களில் — ஆங்கிலேயர் தொடங்கி வைத்த இந்த மாதிரி வருஷங்கள் அவர்களை நெருங்க வில்லை. சித்திரை மாதம் பிறந்த அன்று, எல்லோரும் ஒன்று கூடி இறைவனை பிரார்த்தித்து நன்றி கூறினார்கள். ஒற்றுமை நிலவியது. தான தருமங்கள், அன்ன தானம், அனைவருக்கும் உணவு என்று இருப்பதை பகிர்ந்து கொண்டார்கள். ஆலயங்களில் விசேஷ வழிபாடு நடத்தினார்கள். அவனருளால் அவன் தாளை வணங்கினார்கள்.
சென்ற எத்தனையோ இங்கிலிஷ் காரனின் புது வருஷங்களும் ஆரம்பிக்கும்போது நிறைய எதிர்பார்ப்புகளோடு, வாழ்த்துகளோடு தான் உதயமாயின. முடியும்போது ”அப்பப்பா, இதுபோல் இனி வரும் வருஷமோ, வருஷங்களோ இருக்கக் கூடாது என்று அவமானப்பட்டு, அவமதிப்பை பெற்றன. அங்கலாய்ப்பது நமக்கு என்று நின்றது?
இதிலிருந்து என்ன புரிகிறது?. வருஷங்கள் எல்லாமே ஒன்று தான். இயற்கை என்றும் மாறவில்லை. நமது பார்வையில் தான் வித்தியாசம், எதிர்பார்ப்பு. மனிதனின் வாழ்க்கை அவனது மனம் போன வழியில் அமைகிறது. மனதின் விருப்பு வெறுப்பு, எதிர்பார்ப்பு, அதால் வரும் ஏமாற்றம், அது உற்பத்தி செய்யும் கோபம், தாபம், பழி வாங்கும் உணர்ச்சி, மன்னித்தல், மறத்தல், இவை கலந்து கட்டியாகி அவனை அலைக்கழிக்கின்றது. அமைதி இழக்கிறான். உடலும் உள்ளமும் ஆரோக்யத்தை தொலைத்து விடுகின்றன. அவதிப்படுகின்றன. ”நான்”, ”எனது” , இருக்கும் வரை இந்த நிலை நீடிக்கத்தான் செய்யும்.
எது நடக்கிறதோ அதில் நமக்கொரு பங்கும் இல்லை. அது இறைவன் சித்தப்படியே ஒரே சீராகவே என்றும் அமைந்து வருகிறது. ஜனவரி டிசம்பர் எல்லாம் நாம் போடும் மனப்பால் கணக்குகள்.
இறைவன் படைப்பில் மாமரம், தென்னை, வாழை, ஜந்துக்கள் உயிரினங்கள் எல்லாமே ஒன்றே போல், மாறுதல் இன்றி தோன்றி மறைகின்றன. மனிதன் மட்டும் மாறிக் கொண்டே வருவதன் காரணம் அவன் மனத்தில் தோன்றும் எண்ண சுழல்களின் வித்யாசங்கள் .. ”மனசு” தான் மனிசன், ”மனது” தான் மனிதன், mind தான் man. எனவே ஆதாரம் அதே. அதன் இயக்கத்தில் தான் நாம் இயங்குகிறோம். தவறுகள் நம்மால் தான் நிகழ்கின்றன. சந்தோஷம் நாம் உண்டாக்கிக் கொள்வது தான். மற்ற எதன் மேலோ, எவர் மேலோ, நமது காரிய விளைவுகளை சாட்டுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் ஒரு அல்ப திருப்திக்காக. இதால் ஏற்படும் திருப்தி, பொறுப்பின்மை, குறிப்பிட்ட காலத்திற்கு வேண்டு மானால் நிம்மதியைத் தரலாம். ஆனால், வேரில் தான் ஒரு மரத்தின் உச்சாணிக்கிளை இலையின் வளர்ச்சி உள்ளது என்ற ரகசியம் புரிந்து விட்டால் ”எல்லாம் உன் அடிமையே, எல்லாம் உன் உடைமையே, எல்லாம் உன்னுடைய செயலே” என்பதின் அர்த்தம் புரியும்.
வரப்போகும் வருஷங்களையும் சென்ற வருஷங்களோடு ஒப்பிட தோன்றாது. வருங்கால வருஷத்திய பலனை ஜோசியரிடம் கேட்க தோன்றாது. ”உன்னை நீ அறிவாய்” என்பது ஒவ்வொருவரும் தத்தம் ஆன்ம சோதனையில் ஈடுபடுவதை உணர்த்தும் வாக்கியம்.
வெளி உலகைவிட உள் உலகம் மிக பிரம்மாண்டமானது. மௌனம் தான் சகலமும் விவரமாக உணர்த்தும் மொழி. எது கிடைத்ததோ அந்த கிடைத்ததில் திருப்தி தான், அதற்கு அவனிடம் செலுத்தும் நன்றி தான் மிகச் சிறந்த ஆரோக்யமான செல்வச் செழிப்பு.
பண்பட்ட மனம் தான் புது வருஷ பரிசு. காணும் யாவும் அவனே, கருத்தில் உறைபவனும் அவனே என்னும்போது உள் நின்று ஒளிரும் அந்த சக்தி தான் வெளியேயும் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது என்பது தெரியும். அன்பு எவரிடமும் எதனிடமும் சுரக்கும். இயற்கையோடு ஒன்றி வாழ வழி தெரிந்துவிடும். அது தான் அவனும் எதிர்பார்ப்பது.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


