
பேசும் தெய்வம்- நங்கநல்லூர் J.K. SIVAN
அக்ஷர லக்ஷம்
எனக்கு அடிக்கடி டெலிபோன் பண்ணுவார். நேரில் சந்தித்ததில்லை. சமீபத்தில் சென்னை வருவதாகவும் அப்போது என்னை சந்திப்பதாகவும் கூறினார். வரவேற்றேன். வெள்ளிக்கிழமை சாயந்திரம் ஐந்து மணிக்கு வாசல் கதவு மணி அடித்து திறந்தேன். வழுக்கை தலையோடு, சிறிய வெள்ளை கருப்பு தாடி முகவாய் கட்டையில், மீசை இல்லை. கண்ணில் பட்டையாக frame போட்ட கண்ணாடி, பாண்ட் ஷர்ட்,கையில் பையில் சில வாழைப்பழங்களோடு அப்துல்லா என்ற அறுபது வயதினர் சிரித்தார்.
”வாங்கோ சார்”
”என் பெயர் அப்துல்லா. உங்கள் எழுத்துக்கள் பிடிக்கும். அதுவும் எனக்கு காஞ்சி பெரியவர் சம்பந்தப்பட்ட விஷயங்கள் கொஞ்சம் அதிக பிரியம். நான் வெகு காலமாக பரமாச்சாரியார் படங்களை பார்த்து பிரமித்தவன். அவருடைய எளிமை, காந்த சக்தி, தவ வலிமை, பரந்த அன்பு, எல்லோரையும் நேசிக்கும் ஸ்வபாவம், எல்லாவற்றையும் விட அவருடைய பரந்த ஆழ்ந்த சிந்தனா சக்தி என்னை கவர்ந்தது ஸார்” என்றார் அந்த நண்பர்.
”உங்கள் மேல் எனக்கு அபரிமிதமான மரியாதை ஏற்பட்டுள்ளது” என்றேன்.
”நான் அப்படி என்ன சொல்லிவிட்டேன்?”
”எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அதில் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் கிரஹித்துக் கொள்ளும் ஸ்வபாவம் எனக்கு உண்டு. பிடிக்காதவை பற்றி, பேசவே மாட்டேன். அவர்களை நெருங்க மாட்டேன்”
”சரி, உங்களுக்கு பிடித்த மஹா பெரியவா பற்றிய சில விஷயங்களைச் சொன்னால் நானும் அனுபவிப்பேன் அல்லவா ” என்றேன்.
”இல்லை ஐயா, எனக்கு அதிகம் தெரிந்தது உங்கள் மூலம் தான். ஆகவே உங்களிடம் சில வார்த்தைகள் அவரைப் பற்றி கேட்க வேண்டும் என்று தான் இங்கே வந்தேன்”.
”அவரைப் பற்றி என் வார்த்தை எதற்கு அப்துல்லா?. அவர் வார்த்தைகளே கொள்ளை கொள்ளையாக இருக்கிறதே. இன்று காலை சிலது எடுத்து படித்தேன். அதை சொல்கிறேன் கேளுங்கள். கொஞ்சம் அங்கங்கே என் விளக்கங்களையும் சேர்த்து அவற்றை சுலபமாக புரிந்து கொள்ளச் செய்தது:
அப்துல்லா எனும் முதியவர் உடனே அதை எழுதிக் கொண்டார். அவரிடம் நான் சமர்ப்பித்த சிறு பட்டியல் தான் இது. மஹா பெரியவா வார்த்தைகள் அவ்வளவும் அக்ஷர லக்ஷம் பெறுபவை அல்லவா?
மஹா பெரியவா அடிக்கடி என்ன சொல்வார் தெரியுமா? கேளுங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்:
”தனக்கு மிஞ்சி தான் தான தர்மம் என்று சொல்றோமே, அதுக்கு ஏதோ பணத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு தன்னுடைய தேவைக்கு செலவு பண்ணிவிட்டு எது மீந்து போய் பர்சில் இருக்கிறதோ அதை எவனுக்காவது கொடுப்பது என்று அர்த்தம் இல்லை. தான் எத்தனை கஷ்டப்பட்டாலும் அதைப் பொருட்படுத்தாமல் அதற்கு மேம்பட்டு வெளியிலே வருவதுதான் தனக்கு மிஞ்சுவது. இப்படி வந்து லோகத்துக்கு உபகரிப்பதுதான் ‘தனக்கு மிஞ்சி தர்மம் ’ என்று வைத்துக் கொள்ள வேண்டும். சர்வீஸ், சேவை, தொண்டு என்பது இது தான் . (இந்த அர்த்தம் எப்படி இருக்கு ?)
1. தனக்கு வரும் வருமானத்தில் கொஞ்சம் பிறருக்கு திரவிய ஸஹாயம் செய்வதற்காகவே மிச்சம் பிடிக்கும் விதத்தில் வரவுக்குள் செலவை அடக்கி, கடன் கஸ்தி இல்லாமல் சிக்கனமாக வாழ வேண்டும்.
2. சிலர் பசிக்காமலேயே ஊதாரித்தனமாக செலவு செய்வதற்கென்றே கூட்டமாக எங்காவது ஒரு சோற்றுக் கடை (ஆங்கிலத்தில் புது புது பெயராக வைத்து அங்கங்கே இருக்கும் உணவுச் சாலைகள்) க்கு சென்று உட்கார இடம் பிடிக்க சில மணி நேரம் காத்திருந்து உள்ளே போய் வரவழைக்கும் உணவுப் பண்டங்களுக்கான செலவை மிச்சம் பிடிக்கலாமே. பசித்தால் தேவைக்கு மட்டும் சாப்பிடலாமே.
பசிக்கு ருசி தெரியாது. வயிற்றை ரொப்ப எது கிடைக்கிறதோ அதை உடம்புக்கு கெடுதல் தராததாக தேர்ந்தெடுத்து சாப்பிடலாமே. . அடிக்கடி எதற்கு காபி, டீ . இதை நிறுத்தலாமே.
ஸ்வயம்பாக நியமத்தால் (தன் சாப்பாட்டைத் தன் கையாலேயே சமைத்துச் சாப்பிடுவது நல்ல பழக்கம். நான் அடிக்கடி அப்படி செய்பவன். முடியாத பக்ஷத்தில் யாரிடமாவது தேவையான உணவை மட்டும் சமைக்க சொல்லி வாங்கி சாப்பிடுவது. இதனால் மற்றவருக்கு உதவி. ஹோட்டல் செலவும் அடியோடு குறைந்து போகும்.
3. பட்டுத் துணி வேண்டாம் என்று வைராக்கியமாக இருப்பது.
4. ஸினிமாவுக்குப் போவதை நிறுத்துவது. வீட்டில் டிவி வீடியோ சினிமா பார்த்து பல வருஷங்கள் ஓடி விட்டது.
இந்த நாலை மட்டும் செய்து விட்டால் போதும். எவனும் கடன் கஷ்டப்படாமலிருப்பதோடு, பிறத்தியாருக்கும் திரவிய ரூபத்தில் ஏதோ கொஞ்சமாவது உபகரிக்க முடியும்.
வரதக்ஷிணை கிடையாது, கல்யாணத்துக்காக ஆயிரம் பதினாயிரம் (இப்போது லக்ஷங்கள்) என்று செலவழிப்பதில்லை என்றால் எந்தக் குடும்பத்திலும் பணமுடை, கடன் உபத்ரவம் ஏற்படவே ஏற்படாது. பொதுப் பணிகளுக்கு உதவ ஸம்ருத்தியாகக் கிடைக்கும்.
எது இன்றியமையாததோ அதை மட்டும் உபயோகப்படுத்தலாம். சிலது இல்லாவிட்டாலும் வாழ்க்கை நடத்த முடியும்; எதெதுகள் இல்லாமலேயே நம் அப்பன் பாட்டனெல்லாரும் ஸந்தோஷமாகவே வாழ்ந்தார்கள் என்று ஆலோசித்துப் பார்த்து நம்முடைய தேவைகளைக் குறைத்துக் கொண்டு வாழவேண்டும். முதலில் சிரமமாக இருக்கும். சபலங்கள் இழுத்துக் கொண்டுதான் இருக்கும். இருந்தாலும் தாயான அம்பாளை வேண்டிக் கொண்டு, அநுக்ரஹ பலத்தில் தேறித் தெளிந்து ஜயிக்க வேண்டும். அப்புறம் தெரியும், அந்த எளிய வாழ்க்கையில்தான் எத்தனை நிம்மதி இருக்கிறதென்று! மனதில் வைராக்கியத்தை திட சித்தத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும். அநாவசியங்களை எல்லாம் கழித்துக் கட்டிவிட்டால் நமக்கும் நிம்மதி , பிறருக்கும் உதவியாக ஜன்மாவை உயர்த்திக் கொள்ளலாம்.
அம்பாள் தாயாக, அந்த ஒரே தாயாருக்கு நாம் அத்தனை பேரும் குழந்தைகளாக, ஒரு குடும்பத்தில் பத்துக் குழந்தைகள் இருந்தால் அவை ஒட்டிக் கொண்டு இருக்கிறாற்போல், ஒருத்தருக்கொருத்தர் உபகாரம் பண்ணிக்கொண்டு வாழலாம். இந்த உபகாரம்தான் என்று generalise பண்ண வேண்டியதில்லை; அவரவர்கள் ஸ்திதியில் எது ஸாத்யமோ அந்த உபகாரத்தைச் செய்து கொண்டு ஆனந்தமாக வாழலாம்.”
”ஐயா இரவு மன்னார்குடி செல்லவேண்டும். இன்னும் ஒன்றரை மணிநேரத்தில் கோயம்பேடிலிருந்து பஸ் செல்கிறது. அடுத்த முறை சென்னை வந்தால் நங்க நல்லூரில் உங்களோடு குறைந்தது ரெண்டு மணி நேரம் நிச்சயம்”அப்துல்லா புறப்பட்டு போவதை கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னும் எத்தனை அப்துல்லாக்கள் நாம் அறியாமல் இருக்கிறார்களோ. எங்கிருந்தாலும் வாழ்க.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.




