
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN
மாதாந்திர உதவி
மஹா பெரியவா அனுபவங்கள் எண்ணற்றவை. கடலினும் பெரிது. பலரது வாக்குகள் மூலம் அவற்றை அறியும்போது ஆச்சர்யம் மேலிடுகிறது. சில புண்ய புருஷர்களின் நேரடி அனுபவங்கள் அவற்றுக்கு மெருகூட்டுகிறது. . மஹாபெரியவா அபர சிவா, நடமாடும் தெய்வம், காஞ்சி பெரியவா, பேசும் தெய்வம் என்றெல்லாம் அழைக்கப் படுபவர்.
அவர் காஞ்சி மடத்தில் வாழ்ந்த காலத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சதஸ் என்று ஒரு ஆன்மீக இந்து சனாதன சம்பிரதாய சம்பந்த கூட்டம் நடக்கும். எங்கிருந்தெல்லாமோ வேத சாஸ்த்ர பண்டிதர்கள் வந்து அதில் பங்கேற்பது வழக்கம். வாத பிரதிவாதங்கள் முன் வைக்கப்பட்டு முடிவில் பரமாச்சார்யாவின் அபிப்ராயங்கள் பெரிதும் மதிக்கப்பட்டு அனுசரிக்கப்படும். பங்கேற்கும் பண்டிதர்களுக்கு தக்க சன்மானம் வழங்குவார்.ஒரு வெள்ளிக்கிழமை என்ன நடந்தது என்று அறிவோம்.
அன்று சின்னகாஞ்சிபுரத்தில் இருந்து ஒரு ஏழை பிராமணர் சதஸில் வந்து கலந்து கொள்கிறார். பெரியவாள் சன்மானம் தருவதை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார். சதஸ் முடிந்து வரிசையாக பண்டிதர்கள் மற்றும் கலந்துகொண்டவர்கள் நின்று பெரியவா ஆசீர்வாதம் பெற காத்திருந்தார்கள். இந்த பிராமணரும் அதில் ஒருவர். மெதுவாக வரிசை நகர்ந்து பெரியவா முன்னால் நின்றார். சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார். புன்னகைத்த பெரியவா அவருக்கு பிரசாதம், சன்மானம் அளித்தார். எல்லோரும் கவனித்துக் கொண்டிருந்தார்கள். பிராமணர் கையில் ஒரு வெற்றிலையில் மடித்த சன்மானம் விழுந்தது. மெதுவாக அந்த ஏழை பிராமணர் வெற்றிலையில் மடித்து வைத்திருந்த தொகை எவ்வளவு என்று பார்த்தபோது அவருக்கு ஏமாற்றம். அது அவர் எதிர்பார்த்ததிற்கு ரொம்பவும் குறைச்சல். அவரது ஏழ்மை, வறுமை தான் அவரது ஏமாற்றத்துக்கு காரணம். குடும்ப நிலைமையை உத்தேசித்து சதஸில் பங்கேற்றால் ஏதாவது வருமானம் கிடைக்காதா என்று வந்தவர்.மஹா பெரியவாளுக்கு மற்றவர் மனதில் ஓடும் எண்ணங்கள் எல்லாம் கூட துல்லியமாக தெரிந்துவிடும். ஏழை பிராமணரின் ஏமாற்றம் புரிந்தது.
”என்ன ப்ராமணரே திருப்தி தானே , சந்தோஷம் தானே ?
”சரி பெரியவா சரி ” என்று மென்று விழுங்கினார் பிராமணர். நமஸ்கரித்துவிட்டு கண்களில் நீரோடு மடத்திலிருந்து வெளியேறினார். கங்கைகொண்டான் பஸ் நிலையத்துக்கு நடந்தார். மடத்தில் மற்ற பக்தர்கள் வரிசையாக தரிசனத்துக்கு காத்திருந்தவர்கள் நகர்ந்தார்கள்.சென்னை வக்கீல் பக்தர் ஒருவரை கவனித்த பெரியவா ஜாடையாக அவரை முன்னால் வரவழைக்கிறார்.எதிரே தட்டில் பழங்கள், முந்திரி திராக்ஷை ருத்ராக்ஷம் வில்வம் எல்லாம் பரத்தி வைத்து வணங்கிய வக்கீல் ”பெரியவா கிட்டே ஒரு விஞ்ஞாபனம்……. என்று சொல்ல வாயெடுத்தபோது .. அவரை நிறுத்தி ஒரு ஓரமாக எதிரில் போய் நிற்க வைக்கிறார் பெரியவா.ஒரு அணுக்க தொண்டரை கூப்பிட்டு ” இப்போ இங்கேருந்து ஒரு பிராம்மணர் சதஸ்லே சன்மானம் வாங்கிண்டு போனாரே அவரை அழைச்சுண்டு வா”
அணுக்க தொண்டர் திரும்பிவந்தார்.. ”பெரியவா அவரை மடத்தில் வெளியே கூட எங்கேயும் காணோம் . பஸ் ஸ்டாண்டிலே கூட தேடினேன் ”
” சின்ன காஞ்சிபுரம் போற பஸ்லே அது புறப்பட காத்துண்டு உட்கார்ந்திருப்பார். போய் அழைச்சிண்டு வா. ”
”தொண்டர் சின்னகாஞ்சிபுரம் செல்லும் பஸ்ஸில் உட்கார்ந்திருந்த பிராமணரை பிடித்து ”மடத்துக்கு வாங்கோ பெரியவா கூப்பிடறா” என்கிறார்
”என்னாலே வர முடியாதே. டிக்கெட் வாங்கிட்டேன். முப்பது பைசா. இறங்கி வந்தா அது நஷ்டம் ”பஸ்ஸில் எல்லோருக்கும் ஆச்சர்யம். இப்படி பெரியவா கூப்பிட்டும் போகாத ஒருவரா… பஸ் கண்டக்டர் காதில் பிராமணர் சொன்னது விழுந்தது. பஸ் கண்டக்டர் பெரியவா பக்தர்…
”சாமி நீங்க இறங்கி போங்க. எங்கிருந்தெல்லாமோ பெரியவாவை பாக்க ஜனங்க வராங்க, காத்திருந்தும் பார்க்க முடியாம திரும்பி போறாங்க, உங்களை அவர் கூப்பிட்றதுக்கு என்ன புண்யம் பண்ணினீங்களோ தெரியல.. அந்த முப்பது காசு டிக்கெட் எங்கிட்ட கொடுங்க. உங்க காசை திருப்பித் தறேன். வேற யாருக்காவது டிக்கெட்டை கொடுக்கறேன்”
முப்பது காசை வாங்கி வேஷ்டியில் முடித்துக்கொண்டு பிராமணர் மடத்துக்கு திரும்புகிறார். பெரியவா முன் நிற்கிறார். பெரியவா முகத்தில் புன்னகை. ”ஓஹோ முப்பது பைசா கிடைக்காட்டா வரமாட்டீளோ ?”
”எப்படி தான் சின்ன காஞ்சிபுரம் போகும் பஸ்ஸில் உட்கார்ந்திருந்தது, அங்கு நடந்தது எல்லாம் நேரே பார்த்தது மாதிரி மஹா பெரியவா சொல்கிறார் ” பிராமணருக்கு உடல் நடுங்கியது. பெரியவா ஜாடை காட்ட ஓரமாக நின்ற வக்கீல் முன்னே வந்து நின்றார். மறுபடியும் வக்கீல் வாய் திறந்து ” பெரியவா கிட்ட ….” ஏதோ சொல்ல ஆரம்பிக்க பெரியவா ”கொஞ்சம் இருங்கோ” என்று ஜாடை காட்டுகிறார்.
”ஐயர் இங்கே வந்து அந்த வக்கீல் பக்கம் நில்லுங்கோ”
”இவருடைய அட்ரஸ் வாங்கிக்கோங்கோ ” என்று வக்கீலிடம் சொல்கிறார் பெரியவா. எல்லாம் நாடகம் மாதிரி நிகழ்கிறது. வக்கீல் பாக்கெட் நோட்டில் பிராமணர் பெயர் விலாசம் எல்லாம் எழுதிக் கொள்கிறார்.பெரியவா இப்போது வக்கீலிடம் திரும்பி:”என்ன? வேத சாஸ்திரம் படித்த யாராவது ஒரு ஏழை பிராமணனுக்கு மாதா மாதம் உதவித் தொகை கொடுக்கவேண்டும் என்று தானே எண்ணம் ?சரியா? அப்படின்னா இவர் சரியானவர் . இவருக்கு மாசா மாசம் இருநூத்து ஐம்பது ரூபாய் அனுப்புங்கோ . அவருக்கு அபார ஞானம். வறுமையால் இந்த ரத்னம் சோபிக்கவில்லை. இந்த மாதிரி படிச்சவாளை பாதுகாக்கணும். அது நாட்டுக்கு செல்வம். பணக்கஷ்டம் அவர்களை புதைந்து மறைந்து போக செய்ய விடக்கூடாது, சரித்திரம் என்ன சொல்றது தெரியுமா . எந்த ராஜ்யத்தில் பிராமணன் கஷ்டப்பட்டு தவிக்கிறானோ அங்கே சுபிக்ஷம் இருக்காது. இந்த தர்மம் பண்ணுங்கோ காமாக்ஷி அனுக்ரஹம் உண்டாகட்டும். மேலேமேலே சௌக்யமா இருப்பீர்கள்”
”என்ன பிராமணரே இப்போ திருப்தியா?”
”வக்கீல் மண்டப தூண் போல் சிலையாக நின்றார். எப்படி நான் ஒரு ப்ராமண பண்டிதருக்கு மாதாமாதம் நிதி உதவி, குறைந்தது இருநூற்று ஐம்பது ரூபாய் தர முடிவு செய்தது பெரியவாளுக்கு தெரிந்தது? யாராவது தகுந்த ப்ராமணப்பண்டிதரை எனக்கு அறிமுகம் செயது வையுங்கோ என்று சொல்ல வந்ததை நான் சொல்லாமலேயே எப்படி மஹா பெரியவா தெரிந்து கொண்டார்? எப்படி எப்படி எப்படி?”
வக்கீல் கண்களில் நீர் தாரைதாரையாக வழிய சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணி எழுந்தார். ”பெரியவா ஆக்நை நான் உயிரோடு இருக்கிறவரை அவருக்கு மாதா மாதம் அனுப்பறேன்.. நான் போனப்புறமும் தொடர்ந்து அனுப்ப ஏற்பாடு செய்றேன்…காமாட்சி அருள் ”
ஏழை பிராமணருக்கும் கண்களில் ஜலத்திரை… எதிரே பெரியவா காமாக்ஷி ஸ்வரூபமாக தெரிந்தார்..இதெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த மற்ற பக்தர்கள் ஏகோபித்து ”ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ” என்று மட்டுமே வழக்கம்போல் சொல்ல முடிந்தது.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



