

”நான் வந்தேனே”.
வயது ஏற ஏற சாப்பாடு பிடிக்கவில்லை. தீபாவளி சமயம் என்பதால் ஒரு வாரகாலமாகவே நிறைய பக்ஷணங்கள் வந்து கொண்டே இருக்கிறது. காரம், இனிப்பு என்று பல வகை தின்பண்டங்களை சாப்பிட்டுக்கொண்டே இருந்தால் சாப்பாடு எப்படி பிடிக்கும்? தீபாவளி ஒரு பெரிய ஹிந்து பண்டிகை. கிருஷணனோடு சம்பந்தப்பட்டது. ஏற்கனவே மனதில் ஒரு தீராத ஆசை. எப்படியாவது கிருஷ்ணனை ஒரு தடவையாவது நேரில் பார்த்து விடவேண்டும். ஆசை நிச்சயம் ஒரு பேராசை தான்.. மிகவும் பிரயாசைப்பட்டு எல்லோரிடமும் கிருஷ்ணனைப் பார்ப்பதற்கு வழி என்ன என்று கேட்டு அதன்படி முயற்சி செயது பார்த்தாகி விட்டது. ஆகவே இந்த தீபாவளி அன்றாவது கிருஷ்ணனை எப்படியாவது தரிசிக்க வேண்டும் என்ற ஒரு தீர்மானம்.
வழக்கம்போல தீபாவளி சமயம் நசநச என்று மழை எப்போதுமே நினைவு தெரிந்த நாள் முதல் இருக்கிறது. இந்த வருஷம் முன்பு போல் இல்லை. நேற்று ராத்திரி முதல் பட்டாசு வாண வேடிக்கைகள் ரொம்பவே குறைந்து விட்டது. ஏன்? இந்த தலைமுறைக்கு தீபாவளி ஆர்வம் குறைந்து விட்டதா? விலைவாசி காசை காரியாக்குவதை குறைத்து விட்டதா?.. சீனாக்காரன் பட்டாசு கொள்கை ரீதியாக வாங்க கூடாது என்ற லட்சியமா? அப்படி ;இருந்தால் ரொம்பவே சந்தோஷம். இருந்து அங்கும் இங்குமாக சில நேரம் பலத்த வெடி சத்தம்,, உர்ரென்று ஆகஸஹ்த்துக்கு பறந்துபோகும் வெளிச்சம். மேலே போய் ‘படார்”
சப்தம்விடிகாலை மூன்றரை நாலு மணிக்கே வெந்நீரில் கங்கா ஸ்னானம். பரந்தாமன் புது வேஷ்டி துண்டு அணிந்து கொண்டார்… நிறைய ”என்ன ஸார், கங்கா ஸ்னானம் ஆச்சா?” டெலிபோன் கால்கள் .
(எனக்கு அப்படி தான். பாதிக்கு மேல் புது குரல்கள். நேரில் பார்க்காத மனதில் அன்பு நிறைந்த முகநூல் வாட்ஸாப்ப் நண்பர்களின் வாழ்த்து. எங்கேயோ இருக்கும் சிலருக்கு இன்று என்னோடு பேசவேண்டும் என்ற நினைப்பு வந்ததை உணரும்போது கிருஷ்ணா,உன்னால் சேர்ந்த நண்பர்கள் இவர்கள் என்று அவனுக்கு மனதார நன்றி தெரிவித்தேன். நானும் பரந்தாமனும் ஒரே வயது 87+)
”எண்பத்து ஏழு தீபாவளி பார்த்தாச்சு. ஆனால் கிருஷ்ணா, உன்னை மட்டும் தான் இன்னும் பார்க்கலே. படத்திலே பார்த்த உன்னை நேரில் பார்க்கணுமே? எப்படா வருவே?இன்னிக்கு வரியா’?’
எனக்கு கிருஷ்ணனை ரொம்ப பிடிக்கும். ’கிருஷ்ணா கிருஷ்ணா’ என்று தான் வாய் எந்த பையனைப் பார்த்தாலும் கூப்பிடுவேன் . எல்லோரும் என்னை கூப்பிடுவதே ”கிருஷ்ணா மாமா”என்று தான். . வீட்டில் ஒவ்வொரு கிருஷ்ணன் பொம்மைக்கும், படத்திற்கும், ஏதாவது ஒரு பெயர் உண்டு. ஆசையோடு நான் இப்படி கூட சில பேயகர்கள் வைத்தவன்: ”கருப்பண்ணன், குண்டு கோபு , கிட்டு, சுட்டி, கள்ளப்பயல், ப்ளூட்டுக்காரன், வெண்ணை திருடன், புளுகாண்டி, மாயாஜாலன் ”. இன்னும் எத்தனையோ செல்லப் பெயர்களும் இருக்கு.
கிருஷ்ணன் பேசுவானோ? பதில் சொல்வானோ? நேரில் வருவானா? நான் பார்ப்பேனா? ” ஹுஹும்”…. அதெல்லாம் சும்மா. கிழத்துக்கு பைத்தியம்”, என என் காது கேட்க பலர் சொல்கிறார்கள். சொல்லிட்டு போகட்டுமே. ஆஹா, அந்த திருட்டுப்பயல் கேட்டதெல்லாம் கொடுப்பவன் மட்டுமில்லே. கேட்டதுக்கு பதில் கொடுப்பவனும் கூட ”.
”கிருஷ்ணா! உன்னை நான் இன்னிக்கு பார்த்தே தீரணும். படத்திலே பார்த்த உன்னை நேரில் பார்க்கணுமே? எப்படா வருவே? ”
கிருஷ்ணன் பதிலளித்தான்:
” பரந்தாமா, இன்னிக்கு தீபாவளி. இன்னிக்கே உன் ஆசையைப் பூர்த்தி செய்கிறேன்.காத்திரு. இதோ வருகிறேன்”-
வீட்டில் ஒரே சத்தம். நிறைய உறவினர்கள், நண்பர்கள் மாமிகள் கூட்டம். தீபாவளி கும்பல். பக்ஷண பைகள் கை மாறியது. கலகலவென்று சிரிப்பு, புடவை நகை பற்றிய நிறைய பேச்சு. பக்ஷணங்களைப் பற்றிய விமர்சனங்கள்.
எனக்கு கிருஷ்ணனைத் தனியே காண விருப்பம். வீட்டுக்குள் இருந்த சப்தம் பிடிக்கவில்லை. ஆகவே வீட்டின் பின் புறம் கொல்லைப்பக்கம் சென்றேன். எப்போதோ எங்கப்பா கட்டிய பெரிய பழைய தனி வீடு. கொல்லையில் பச் சென்று செடி கொடி மரங்கள். துணி தோய்க்கும் கல் (பல வருஷங்களாகிறது. இப்போது யாரு துணியைக் கல்லில் அடித்து தோய்க்கிறார்கள்?. பழைய கிணற்றில் இன்னும் தண்ணீர் வற்றவில்லை. அமைதியாக காத்திருந்தேன். என்னைத் தவிர அங்கே யாருமில்லை. நிசப்தம்.”கிருஷ்ணா.. முகுந்தா……” என்று ஹரிதாசில் MKT பாடின பாட்டை என்னையறியாமல் வாய் முணுமுணுத்தது.
ஒரு கருப்பு குயில் எங்கிருந்தோ விர்ரென்று பறந்து வந்து எதிரே மாமரத்தில் ஒரு கிளையில் கண்ணெதிரே உட்கார்ந்தது. பார்க்க அழகாக சின்னதாக கருப்பாக இருந்தது. மதுர குரலில் அது சில நிமிஷங்கள் ஏதோ இனிமையாக ஒரு ட்யூன் (tune) என்னவென்று அந்த ராகம் பிடிபடும் முன்பே, குயில் கூவி விட்டு என்ன தோன்றியதோ சட்டென்று பறந்தும் போயிற்று. காத்திருந்தேன். கைக் கடியாரம் காலை 9 மணி என்று காட்டுகிறதே..கிருஷ்ணன் எப்போ வருவான்??
பிசு பிசுவென்று மழைத்தூத்தல். வானில் சூரியனைக் காணோம். பனி மூட்டம் மாதிரி கருப்பு மேகங்களும் எங்கோ ஒரு பேரிடி முழக்கமும். உள்ளே டிவியில் காலையிலேயே ”மழை பெய்யலாம். சில பகுதிகளில் கனத்த மழையாகவும் இருக்கலாம். பெய்யாமல் இருக்கவும் வாய்ப்புண்டு ” என்ற வழக்கமான ஆரூடம் கேட்டு சிரிப்பு வந்தது.
”மழை எவ்வளவு பெய்தாலும் உன்னைப் பார்க்காமல் வீட்டுக்குள் போகமாட்டேன். கிருஷ்ணா, உன்னைப் பார்த்துவிட்டு தான் மற்றது எல்லாம். மழையில் நனைந்தால் என்ன? பரவாயில்லை. ”வரேன்” என்றவன் இன்னும் ஏன் நீ வரவில்லை?. கிருஷ்ணா, உன்னைப் பார்க்க, கேட்க ஏன், தொட கூட முடியுமாமே? எங்கோ புஸ்தகத்தில் எழுதி இருந்ததை அடிக்கடி படித்திருக்கிறேன்.
ஒரு குரல் கேட்டது;
”ஐயா உங்களை எங்கே ல்லாம் தேடறது. இங்கே வந்து தனிச்சு குந்திக்கிட்டிருக்கீங்க?
”யாரு?”
திரும்பிப் பார்த்தேன். பல வருஷங்களாக வீட்டில் வேலை செய்யும் பெரியாயி ஒரு சிறு குழந்தையை பொட்டலமாக மடியில் அணைத்துக்கொண்டு அருகில் வந்தாள்.
”என்னம்மா வேணும் ?”
” அம்மா கிட்டே புதுசா பொறந்த என் பேராண்டியைத் தூக்கியாந்து காட்டி ஆசீர்வாதம் கேட்டேன். ஐயா தோட்டத்திலே இருக்கார் அவர் கிட்டேயும் காட்டு ”ன்னு சொன்னாங்க.”
”ஆஹா! பேஷ் பேஷ். குழந்தையை ஜாக்ரதையா சீக்ரம் உள்ளே எடுத்துண்டு போ. மழை வரும்போல இருக்கு..” வாய் மட்டும் பேசியதே தவிர மனம் கவனம் எல்லாம் இன்னும் வராத கிருஷ்ணனின் மேல் தான் இருக்கிறது . துணிப் பொட்டலத்தில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கிட்டே நெருங்கி பார்க்கவே இல்லை. காசு எதிர்பார்க்கிறா போலிருக்கு. மாமியே கொடுப்பா… குடுக்கட்டுமே ..
”எங்கிருந்தோ ஒரு பாதி அணில் கடித்த கொய்யா பழம் வலது தோளின் மேல் தொப்பென்று மரத்தின் மீதிலிருந்து விழுந்தது. மேலே பார்த்தேன் . மனதில் பெருமையோடு சிரிப்பு வந்தது. எப்படி காலம் ஓடறது? இப்போது தான் செடி வைச்ச மாதிரி இருக்கு பதினைந்து இருவது வருஷத்தில் எப்படி கொய்யா மரம் இவ்வளாம்பெரிசு வளர்ந்துட்டுது. பழம் காய்ச்சு தொங்கறது.
இன்னும் வராத கிருஷ்ணன் மீது எனக்கு கொஞ்சம் கோபமும் வந்தது.வெகு நேரம் ஆகியும் ஏன் அந்த கருப்புப்பயல் கிருஷ்ணன் வரவில்லை? மஞ்சள் கருப்பு புள்ளிகளோடு ஒரு பட்டாம்பூச்சி முகத்திற்கு நேரே பறந்து வந்தது. அதுக்கு என்ன தைரியமோ? ரெக்கையை அடித்துக்கொண்டு வலது கைமேல் வந்து உட்கார்ந்தது. ”சூ சூ ” என்று என்று அதை விரட்டி வெடுக்கென்று கையை உதறினேன். மழை சிறு தூற்றல் இப்போது பெரிய மழையாக வலுத்தது. ”
மழை தூற்றல் வலுத்து மழை பெரிதாக வந்ததால் பரந்தாமன் வீட்டுக்குள் ஓடினார். அவருக்குள் ஒரு பெரும் ஏமாற்றம்.
”வரேன்” என்று சொன்ன கிருஷ்ணன் வராவிட்டால் சந்தோஷமாகவா இருக்கும்? உள்ளே இன்னும் தீபாவளி கும்பல் கலையவில்லை. . சிலர் பாடினார்கள். பூஜை அறையில் பெரிய ராதா கிருஷ்ணன் படம். நிறைய அலங்காரம் செய்து, மலர் மாலைகள் சூட்டி தூப தீபங்களோடு காட்சியளித்தது. தீபாவளி அல்லவா? எதிரே தட்டுகளில் பக்ஷணங்கள் பழங்கள், நைவேத்யம். புல்லாங்குழல் ஊதிக்கொண்டு புன்னகைத்த கிருஷ்ணனைப் பார்த்ததும் எனக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. பின்னே என்ன?கிருஷ்ணன் பேசாமல் படத்தில் சிரித்தான்
கிருஷ்ணன் பதில் பேசினான். அவன் குரல் பரந்தாமன் காதில் மட்டும் விழுந்தது.
‘என்னையா பொய் சொல்றவன் என்கிறாய் நீ . உன் கிட்ட உடனே வரேன் என்று சொல்லி விட்டு தான் நான் உடனேயே வந்தேனே.”
”ஹாஹாஹா… இது தான்டா கிருஷ்ணா, நீ சொன்னதில் எல்லாம் ரொம்ப பெரிய அண்ட புளுகு, ஆகாச புளுகு. எப்போ வந்தாய் நீ? நான் உனக்காக எவ்வளவு நேரம் காத்திருந்தேன் தெரியுமா ? ‘உடனே’ ன்னா என்ன அர்த்தம்னு தெரியாதா உனக்கு?
”நான் தான் வந்தேனே . நீ என்னைப் பார்த்தாய். என் குரல் கேட்டாய். நான்தான் அந்த கருப்பு சின்ன குயிலாய் வந்து உனக்கருகிலேயே அமர்ந்து பாடினேன். என் குரலை கேக்கணும் னு சொன்னே. உன் அருகே வந்து பாடினேன் ஆனால் நீ என் குரலைக் கேட்கவில்லை. சரி, ஒருவேளை வயசான உனக்கு காது கேட்கவில்லையோ என்று ஒரு ”பேரிடி” யாக சத்தம் போட்டேன். உன் டமார காதில் அதுவும் கேக்கலியா? .
”ஓஹோ, நீ என்னைத் தொட விரும்பவில்லையா? பரவாயில்லை , நானாவது உன்னை வந்து தொடறேனே” என்று தான் ஒரு அழகிய பட்டாம்பூச்சியாய் வந்து ஆசையாக உன் கையைத் தொட்டேன். ஏண்டா ஆசையா உன் கைமேல் வந்து உட்கார்ந்த என்னை ”சூ சூ ”என்று வெடுக்கென்று உதறி தள்ளிட்டியே .இவ்வள வையும் நீ செய்து விட்டு என்னை குறை சொல்கிறாயே? ஞாயமாடா பரந்தாமா?’ என் பேரை மட்டுமே வச்சிண் டிருக்கே….”
நண்பர்களே இந்த தீபாவளி நன்னாளில் ஒரு வார்த்தை சொல்ல அனுமதியுங்கள்…
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



