
குரு சிஷ்ய சம்வாதம் – நங்கநல்லூர் J K SIVAN
கல்கத்தாவில் காளி பவதாரிணி ஆலயத்தில் ராமகிருஷ்ணர் அமைதியாக அவளை மனதில் நிரப்பிக்கொண்டு அமர்ந்திருந்தார். எதிரே நுங்கும் நுரையுமாக கங்கை கண்ணுக்கு தெரிந்தாள் .சலசலவென்று ஓயாமல் சுறுசுறுப்பாக பலர் பாவம் தீர்க்க ஓடிக் கொண்டிருந்தாள் . ”கங்கா மாதா, என் தாய் அல்லவோ நீ. உன் கருணைக்கு எது அளவு? என்று அவளை கை கூப்பி வணங்கினார்.
மாலை நேரம். தென்றல் கங்கைக் குளிர்ச்சியோடு வெளியே எங்கும் இருந்த மரங்களின் நறுமண மலர்களின் வாசத்தை சேமித்துக்கொண்டு வீசியது. அப்போது தான் படிக்கட்டில் அந்த அற்புத வாலிபன் ஏறி வந்தான்.
என்னவோ ராமகிருஷ்ணர் மனதில் இன்று குதூகலம். இன்று அவன் வருவான் என்று உள்ளுணர்வு சொல்லியது.அப்படியே அவனும் வந்துவிட்டானே . அவனைப் பார்க்கும் போதெல்லாம் ராமகிருஷ்ணருக்கு தெய்வத்தையே பார்ப்பது போலிருக்கும். அவனோடு பேச பிடிக்கும். அவன் எப்போதும் தன்னுடனேயே இருக்கவேண்டும் என்று தோன்றும்.சிறிது காலமாக அவன் எத்தனையோ ஜோலிகளுக்கு இடையே முடிந்த போதெல்லாம் அவன் ராமகிருஷ்ணரை பார்க்க வந்து கொண்டிருக்கிறான். என்ன அறிவு, என்ன உயர்ந்த சிந்தனை இந்த சின்ன வயதிலேயே! . சரஸ்வதி கடாக்ஷம் பொங்கியவன்! பவதாரிணி செலெக்க்ஷன் அவன்.இல்லையென்றால் எனக்கு எப்படி கிடைப்பான்?
அவன் ராமகிருஷ்ணரை சாஷ்டாங்கமாக வணங்கினான் எதிரே அமர்ந்தான். கை கட்டியபடி அவரையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான். மனதில் ஆயிரம் சிந்தனைகள் ரேஸ் குதிரை வேகத்தில் ஓடியது.
”என்னப்பா கொஞ்ச நாளாக உன்னைப் பார்க்கவே முடியவில்லையே?”
”குருநாதா, நேரமே இல்லை.வாழ்க்கையில் ஓட்டமும் அவசரமும் தான் என்னை இழுத்துச் செல்கிறது”
”புரிந்து கொள் தம்பி. நீ சிக்கிக்கொண்டு ஈடுபடும் உன் செயல்பாடுகள் தான் உன் நேரத்தைச் சாப்பிடுகிறது. ஆனால் நீ என்ன செய்யவேண்டுமோ அது நிதானமாக காத்திருக்கிறது. ”
”குருநாதா, ஏன் வாழ்க்கை இப்படி சிக்கலாக இருக்கிறது?”
”அதற்கு மதிப்பும் நேரமும் கொடுத்து ஏன் அலசுகிறாய்? அதனால் தான் அது சிக்கலாகிறது. நடப்பது நடக்கட்டுமென்று விட்டு விடு. ”
”குருவே எதனால் எல்லோரும் சந்தோஷமே இல்லாமல் வாழ்கிறார்கள்?”
”கவலைப்படுவது என்ற வேண்டாததை தலையில் சுமந்தால் அதன் விளைவு தான் அது .ஏனோ அதுவே பழக்கமாக போய்விட்டது எல்லோருக்கும்.
”கஷ்டம் ஏன் தொடர்ந்து கொண்டே இருக்கிறது ?”
”நம்மை பரிசுத்தமாக்க. வைரம் ஜொலிக்க வேண்டுமானால் அதை விடாமல் தேய்த்துக் கொண்டே,செதுக்கிக் கொண்டே இருக்கவேண்டும்,இல்லையா?’ தங்கத்தை நெருப்பில் வாட்டி ,இரும்பினால் அடித்த பிறகு தானே வளையல்,சங்கிலி நகைகள் கண்ணைப் பறிக்கிறது. ஞானிகள் மஹான்கள் இதைப் புரிந்தவர்கள், இடுக்கண் வருங்கால்,நகுக என்று அதை பெரிது பண்ணாமல் ஏற்றுக் கொள்பவர்கள். அனுபவம் தான் வாத்தியார். முதலில் பரிக்ஷை வைத்து விட்டு அப்புறம் பாடம் சொல்லித்தருபவர். வெளியே பார்க்கிறாய், நாலா பக்கம் பாதைகள். நீ எங்கே செல்கிறாய் என்பதைப் பொறுத்து அங்கே ஏதோ உனக்காக காத்திருக்கும். கண் தான் வழியை கண்டுபிடிக்கிறது. இதயம் அந்த வழியில் நடக்க விடுகிறது.
”குருநாதா, சரியான வழி நடக்கும் கால் வலியை விட தோல்வி அதிக மன வலியை தருகிறதா?”
‘அப்பனே, வெற்றி தோல்வி என்பது மற்றவர் உன் செயலை கணித்து அளந்து சொல்வது. திருப்தி என்பது உன் மனதில் தானாகவே நீ முடிவு செய்வது.
”கஷ்டமான காலங்களில் எப்படி ஊக்கம் பெறுவது?”
”நீ எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறாய் என்று திரும்பிப் பார். அப்போது தான் இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது என்பது கொஞ்சமாக தெரியும்..உனக்கு கிடைத்த ஆசி, அனுக்ஹத்தால் தான் இவ்வளவு தூரம் முன்னேறி வந்திருக்கிறாய் என உணர்ந்து மகிழ். எது கிடைக்கவில்லை என்று தேடவோ, யோசிக்கவோ வேண்டாம். ”
”குருவே மக்களிடம் எதைக் கண்டு நீங்கள் ஆச்சர்யப்படுகிறீர்கள் ?”
”நல்ல கேள்வி கேட்டாயடா மகனே, சாதாரண மக்கள் எப்போதும் கஷ்டம் வந்தால் மட்டும் ”பகவானே, ஏன் எனக்கு மட்டும் இந்த கஷ்டம் கொடுத்தாய்?’ என புலம்புகிறார்கள். சுகம் அதிர்ஷ்டம் வந்தால் ஏன் அதே கேள்வியை கேட்பதில்லை?” இது தான் என் ஆச்சர்யம்.
”குருநாதா, வாழ்க்கையில் எப்படி அருமையானதை பெறுவேன்?”
”கடந்ததில் நடந்த எதையும் பற்றி வருந்தாதே, நிகழ்வதில் தன்னம்பிக்கை இருக்கவேண்டும் மனமார ஏற்றுக் கொள்ள வேண்டும். வரப்போவதில் எதைப் பற்றியும் பயமே வேண்டாம்.. இதுதான் வாழ்வில் அருமையான பாடம் ”
”குருநாதா, என் சந்தேகங்களுக்கெல்லாம் பட் பட்டென்று உடனே பதில் சொன்னீர்கள். நன்றி. ஒரே ஒரு கடைசி கேள்வி.”என்னுடைய பிரார்த்தனைகள் பகவான் காதில் விழவில்லை என்று ஏன் சில சமயம் எனக்கு தோன்றுகிறது?”
”பகவான் செவி மந்தம் இல்லை. எல்லோருடைய பிரார்த்தனைகளும் கோரிக்கைகளும், வேண்டுதல்களும் நிச்சயம் பகவான் கேட்டு தக்க பதில் அளிக்கிறார். நம்பிக்கை தொடரட்டும். பயம். சந்தேகத்தை விடு. வாழ்க்கை ஒரு புதிர். விடை தேடு. வாழ்க்கை ஒரு சங்கடம் ,பிரச்னை அல்ல, தீர்வு காண்பதற்கு. என்னை நம்பு தம்பி. வாழ்க்கை எப்படி வாழ வேண்டுமென்று உனக்கு தெரிந்தால் அது எவ்வளவு அதிசயமானது என்று உணர்ந்து நீ மகிழ்வாய்.”
சிறிய தூற்றலாக இருந்த மழை பெரிதாக வலுத்தது. காற்று வீசி தொடர்ந்தது.கதவுகள் படார் படார் என காற்றில் ஆடி மூடிக் கொண்டன. வாசலில் குதிரை வண்டி வந்து நிற்க நரேந்திரன் என்ற பிற்கால விவேகானந்தர் வேகமாக வாசலுக்கு ஓடி வண்டியில் தாவி உட்கார்ந்து கொண்டார். இரு கரமும் சிரம் மேல் குவித்து ஆலய வாசலில் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த ராமகிருஷ்ண பரமஹம்சரை வணங்கினார். குதிரை ஓட ஆரம்பித்தது.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



