குளத்தங்கரை அரசமரம் சொல்லும் கதை. – நங்கநல்லூர் J K SIVAN
வ.வே.சு. ஐயர் பற்றி தெரியுமா? வ. வே. சு. ஐயர் (வீரசாமி வெங்கடசுப்பையர் ஐயர்) 2.4.1881ல் பிறந்து 3.6.1925 மறைந்த 44 வருஷம் வாழ்ந்த சிறந்த சுதந்திர போராட்ட வீரர். தமிழறிஞர். எழுத்தாளர். வழக்கறிஞர். பாரதியாரின் நண்பர். இங்கிலாந்தில் இருக்கும் போதே தேசியவாதக் கருத்துகளை ஏற்றவர். இந்தியாவின் சுதந்திரத்துக்காக ராஷ்பிஹாரி போஸ், சாவர்கர் போன்றோருடன் இணைந்து செயல்பட்ட வர் .”இந்திய விடுதலை சங்கம்” (India House, London) இயக்க வீரர். அவர் எழுத்துக்கள்: “ஆத்திசூடி உரை” – பாரதியாருடன் ஒப்பிடக்கூடிய சிறப்பான உரைநடை.
“ராமாயணம் (சிருகதை வடிவம்)” – தமிழில் சிறந்த மொழியாக்கம்.
“சிறுவர்களுக்கான நாகரிகம் பற்றிய புத்தகம்”
“சீதையின் சரிதை” – ஒழுக்கம், நீதிமீது வலியுறுத்தும் படைப்பு.
“தமிழரின் பழையப் பெருமைகள்” – தமிழ் பண்பாட்டு பாரம்பரியம் குறித்து எழுதியது.
திருக்குறளுக்குரிய நவீன உரையாடலை ஒழுக்கமும், அரசியலும், ஆளுமையும் நுட்பமாக இணைதத்தளித் தவர். திருக்குறளை புதுமையான பார்வையில் அணுகி யவர். வ.வே.சு. ஐயரின் ஒரு சிறுகதை. (கொஞ்சம் நீள மானது. இருந்தாலும் விடாமல் படியுங்கள். இல்லை யென் றால் ஒரு அற்புதமான, கண்ணில் நீர் வரவழைக் கும் கதையை இழந்து விடுவீர் கள்)
++
”நான் ஒரு குளத்தங்கரை மரம். என் மனஸிலுள்ளதை யெல்லாம் சொல்லுகிறதானால் இன்னைக்கெல்லாம் சொன்னாலும் தீராது. இந்த அயுஸுக்குள் கண்ணாலே எத்தனை பார்த்திருக்கிறேன். காதாலே எத்தனை கேட்டிருக்கிறேன். உங்கள் பாட்டிகளுக்குப் பாட்டிகள் தவழ்ந்து விளையாடுவதை இந்தக் கண்ணாலே பார்த்திருக்கிறேன். சிரிக்காதீர்கள். நான் சொல்லுகி றதிலே எள்ளளவேணும் பொய்யில்லை. நான் பழைய காலத்து மரம். தொண்ணூறு நூறு வயசு எனக்கு. உங்கள் கொள்ளுப் பாட்டிகளின் பாட்டிகளெல்லாம் இந்த குளத்தங் கரைக்குத் தான் குடமுங் கையுமாக வருவார்கள். சில பேர் குழந்தைகளையுங் கூடக் கூட்டிக் கொண்டு வருவார்கள். பட்டுப் பட்டா இருக்கிற அழகான குழந்தைகளைக் கரையில் விட்டுவிட்டுப் புடவைகளை அழுக்குப் போகத் தோய்த்து, மஞ்சள் பூசிக் கொண்டு அழகாக ஸ்நாநம் பண்ணுவார்கள். குழந்தைகள் ராஜகோபாலன் போலத் தவழ்ந்து கொண்டு மல்லிகைச் செடி கிட்டே போய் மல்லிகை மொக்குகளைப் பார்த்துச் சிரிக்கும். அந்தக் காலத்திலே ஒரு பவள மல்லிகைச் செடி, முத்து முத்தாய்ப் பூத்து குளத்தங்கரை கம் என்று மணக்கும். இப்போ ஆதரிப்பார் இல்லாமல் பட்டுப் போய்விட்டது. கொஞ்சம் பெரிய குழந்தைகள் அதன் புஷ்பங்களைப் பொறுக்கி ஆசையுடன் மோந்து பார்க்கும்… ஆ! அந்த நாளையெல்லாம் நினைத்தால் என்ன ஆசையாயிருக்கிறது!
ஏழெட்டு நாளாய் எனக்கு ருக்மிணி ஞாபகமாகவே இருக்கு. பதினஞ்சு வருஷமாச்சு. ஆனால் எனக்கு நேற்றுப் போலிருக்கிறது. உங்களுக்கு ருக்மிணியைத் தெரியாது. ஸ்\வர்ண விக்கிரகம் போலிருப்பாள் குழந்தை. அவளுடைய சிரிச்ச முகம்,நெத்தி அழகை இன்னைக்கெல்லாம் பார்க்கலாம். உயரமாக இருப்பாள். கையும் காலும் தாமரைத் தண்டு.சரீரம் மல்லிகைப் புஷ்பம் போல் மிருதுவானது. அவள் மொத்த லாகும் கண்ணிலே தான். என்ன விலாசம்! என்ன தெளிவு! என்ன அறிவு! களங்கமத்த நீல ஆகாசம் தான் ஞாபத்துக்கு வரும். பார்வையில் எத்தனை அன்பு! எத்தனை பரிவு! ஸோம வார அமாவாசைகளில் பரமாத்வைப் பூஜிக்கிறதற்காக என்னைப் பிரதஷிணம் பண்ணுவாள். அவள் என்னைப் பார்க்கும் பார்வையிலிருக்கும் அன்பை என்னால் சொல்ல முடியாது. என்னுடைய காய்ந்துபோன கப்புகளும். கிளைகளும் கூட அவளுடைய பிரேமையான பார்வை பட்டதும் துளிர்த்துவிடுமே! ஐயோ, என் ருக்மணித் தங்கமே! எப்போடி காண்பேன் இனிமேல் உன்னைப் போலக் குழந்தையை?
ஒவ்வொருநாளும் வருவாள். இங்கேயேதான் விளையாடிக் கொண்டிருப்பாள். அவளைப் பார்த்ததும் வாரியெடுத்து முத்தங் கொடுக்க வேணுமென்று நினையாதவர் இல்லை. எத்தனை அவசரமான காரியமி ருந்தாலும் சரி, நம்ம வேணுகோபால சாஸ்திரி இருந்தாரே, அவர் காலமே ஸ்நாநஞ் செய்துவிட்டு, குழந்தை கை நிறைய மல்லிகைப் பூப்பறித்துக் கொடுத்துவிட்டுதான் போவார். நம்மூர் முரட்டு மாடு கன்றுகள் கூட, அவளுடைய சிறிய கைகளால் தடவிக் கொடுக்க வேணுமென்று அவள் பக்கத்திலேயே போய்க் காத்துக் கொண்டிருக்கும்.
குழந்தைகள் என்றால் எனக்கு கொள்ளை ஆசை. அதுவும் ருக்மணியை பார்த்துவிட்டால் பரம சந்தோஷம். மெய்மறந்து போய்விடுவேன். அவள் பேரில் துளி வெயில் படக்கூடாது என்று என் கிளைகள், இலைகளால் அவளுக்குக் குடை பிடிப்பேன். ருக்மணி தான் குழந்தைகளுக்குள்ளே ராணி. அத்தனை காந்த சக்தி யிருந்தது அவளிடத்தில்.
அவள் அப்பா காமேசுவரையர் நல்ல ஸ்திதியில் இருக்கிறார். கடை வீதியில் பட்டுத்தினுசுகள் புதுசாக வந்தால் ‘நம்ம ருக்மிணி அணிந்து கொண்டால் அழகாக இருக்கும்’ என்று உடனே வாங்கிவி டுவார். முதல் தரமான வைரமும் சிவப்பும் இழைத்து நிறைய நகைகள் ரெடி. அவளுக்குப் பத்து வயசாயிருந்தபோது கோலாட்ட ஜோத்ரைக்கு என்று ஒரு பாவாடையும் தாவணியும் வாங்கியிருந்தார். அவள் குரலைப் பற்றி உங்களுக்குச் சொல்ல மறந்து போய்விட்டேன். குயில் என்னத்துக்கு ஆச்சு! தங்கக்கம்பி போல இழையும் சாரீரம். இன்னைக்கெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாம். ஜோத்ரைகளின் போதுதான் அவள் பாட்டை நான் கேட்டிருக்கிறேன்.ருக்மணிக்கு ஏழைக் குழந்தைகள் பேரில் அதிகமான பாசம். பிச்சைக்காரர்களுக்கு கை நிறைய அரிசி கொண்டு வந்து போடுவாள்.
கண்ணுக்குக் கண்ணான ருக்மிணியின் கதி இப்படியா போகணும்? பிரும்ம தேவனுக்குக் கொஞ்சங்கூடக் கண்ணில்லாமல் போய்விட்டதே! ஆனால் பிரும்மதேவன் என்ன பண்ணுவான், மனுஷாள் செய்யும் அக்கிரமத்துக்கு?
ருக்மணிக்குப் பன்னிரண்டு வயசானதும் நம்மூர் மணியம் ராமசுவாமி ஐயர் குமாரன் நாகராஜனுக்குக் . கல்யாணம் பண்ணினார். கல்யாணம்.வெகு விமரிசையாக நடந்தது. தோழிப் பொங்கலன்னிக்கும், ஊர்கோலத்தன்னிக்கும் அவள் ஸர்வாலங்காரத்துடனும் கிராமப் பிரதஷிணம் வருவதைப் பார்த்தேன். கண்பட்டுவிடும். அத்தனை அழகாயிருந்தது!
காமேசுவரையர் ருக்மிணிக்குக் கல்யாணப் பந்தலில் நிறையச் சீரும் செனத்தியும் செய்திருந்தார். ருக்மிணியின் மாமியாருக்கும் மாமனாருக்கும் ரொம்பத் திருப்தி. கல்யாணத்துக்குப் பிறகு மாமியார் அவளை அடிக்கடி அழைச்சுக் கொண்டு போய் அகத்திலேயே வைச்சுக் கொள்ளுவாள். ஆசையோடு அவளுக்குத் தலை பின்னிப் பூச்சூட்டுவாள். தன் பந்துக்களைப் பார்க்கப்போகும்போது அவளை அழைச்சுக் கொண்டு போவாள். ஜானகி, ருக்மணி மாமியாருக்கு ருக்மிணியின் பேரில் ரொம்ப அபிமானம். மாப்பிள்ளை நாகராஜன் புத்திசாலி. ருக்மணியிடம் மிகவும் பிரியமாய் இருப்பான்.
மூணு வருஷ காலம் சென்றது. அதற்குள் எத்தனை மாறுபாடுகள்! காமேசுவரையருடைய பணம் ரொக்க ஐவேஜியெல்லாம் நாலு கோடிக்கு மேல், ஏதோ அருபுத்நாட் கம்பெனியாம் அது விழுங்கி ஏப்பம் விட்டதாள் ஒரே நாளில் காமேசுவரையர் ஸர்வ ஏழையாகி விட்டார். ருக்மணியின் தாயார் மீனாட்சி யம்மாள் நகைகள் தான் மிச்சம். பூர்வீக சொத்தான வீட்டையும் நிலங்களையும் விற்று கடன்களை அடைத்தார். வாய்க்கால் கரையோரத்திலே குப்புசாமி அய்யர் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார். ‘ஏதோ இத்தனை நாள் சுகமாக வாழ்ந்தோம். யாரைக் கேட்டுக் கொண்டு ஸ்வாமி கொடுத்தார்! அவர் கொடுத்ததை அவரே எடுத்துக் கொண்டு விட்டார். இதனாலே என்ன இப்போ? அவாளும் ருக்மணியும் ஆயுஸோடு இருக்கிற வரையில் எனக்கு ஒரு குறைச்சலுமில்லை. இந்தத் தை மாஸத்திலே ருக்மிணிக்கு சாந்தி முகூர்த்தம் பண்ணப் புக்காத்துக்கு அனுப்பிவிட்டால் அப்புறம் எங்களுக்கு நிர்விசாரம். கஞ்சியோ கூழோ சாப்பிட்டுக் கொண்டு வழக்கம் போல் பகவத்தியானம் பண்ணிக் கொண்டே எங்கள் காலத்தைக் கழித்து விடுகிறோம்”” என்று அவர் மனைவி மீனாட்சி அடிக்கடி சொல்வாள். ஐயோ பாவம், நடக்கப் போகிற சங்கதி அவளுக்கு எப்படி தெரியும்?
காமேசுவரையர் ஏழையானதும் ராசுவாமி ஐயர் தனது சிநேகத்தை குறைத்துக் கொண்டார். வீட்டுக்கு அடிக்கடி வருபவர் இப்போது வழியில் பார்த்துவிட்டால் வேறொரு பக்கம் திரும்பினார். அவர் சம்சாரம் ஜானகியும் அதே மாதிரி மீனாட்சியம்மாளிடம் நடந்து கொண்டாள். ருக்மிணி விஷயத்திலும் வேத்துமை பாராட்ட ஆரம்பித்துவிட்டார்கள். கிராமத்தில் எல்லோருக்கும் இந்த விஷயம் பரவியது. ஊரெல்லாம் ‘குசுகுசு’ என்று பேச்சு. எல்லா ரகசியங் களும் குளத்தங் கரையிலே தான், அரை வார்த்தையுங் குறை வார்த்தையுமாகத்தான் என் காதில் விழும். என் மனசில உறுத்தல். என்னவோ கெடுதலுக்குத்தான் இத்தனை ரகசியம் வந்திருக்கிறது என்று எனக்குஉள்ளூர பயம். கடைசியாக அப்படியும் இப்படியுமாய், அத்தையும் இத்ததையும் கூட்டிச் சேர்த்துப் பார்க்கப் பார்க்க, கொஞ்சங் கொஞ்சமாய்ச் சமாசாரம் என் மனசுக்கு அத்துப் படியாச்சு. ராமசாமி ஐயரும் ஜானகியும் ருக்மிணியை வாழா வெட்டியாக பண்ணி நாகராஜனுக்கு வேறு கல்யாணம் செய்து வைக்க நிச்சயித்து விட்டார்கள்! என்ன பண்ணுவேன்! என் மனசு இடிஞ்சு போய்விட்டது. குழந்தை ருக்மிணியைத் தள்ளி வைக்கத் துணியுமா மனுஷாளுக்கு? அடிபாவி! உன்னைப் போலே அதுவும் ஒரு பெண்ணில்லையா! என்ன பண்ணித்து அது உன்னை! அதைக் கண்ணாலே பார்த்தால் கல்லும் இரங்குமே! கல்லையும் விட அழுத்தமா உன் நெஞ்சு! காமேசுவரையருக்கும் மீனாட்சிக்கும் முகத்திலே ஈ ஆடாது, எனக்கே இப்படி இருந்தபோது, பெத்த தாயார் தகப்பானாருக்குக் கேட்கணுமா?””
நாகராஜன் பட்டணத்தில் படித்துக் கொண்டிருந்தான். மார்கழி பிறந்துவிட்டது. அவன் வருகிற நாளை எண்ணிக்கொண்டே இருந்தேன். கடைசியாக வந்து சேர்ந்தான். வந்த அன்னைக்குக் காலமே அவன் முகத்தில் சிரிப்பும் விளையாட்டுமாக இருந்தது. சந்தோஷம் மாறி வேறாகி விட்டது. தாயார் தகப்பனார் அவன் மனதைக் கலைக்க ஆரம்பித்துவிட்டார்கள். நாளுக்கு நாள் முகத்தில் கலக்கம் அதிகரித்துக் கொண்டே வந்தது. கரைப்பார் கரைச்சால் கல்லுங் கரையும் என்பார்கள். அவன் கலங்கின முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு வயித்திலே பகீர் என்னும். ‘இனிமேல் ஏது? இந்த ஆசை இருந்தது. அதுவும் போய்விட்டது. ருக்மிணியின் கெதி அதோகதிதான்’ என்று நினைத்து விட்டேன்.
தை பிறந்தது. வெளிப்படையாகப் பேச ஆரம்பித்து விட்டார்கள். ஏதோ கிழக்கத்திப் பெண்ணாம். தகப்பனா ருக்கு நாலு லட்ச ரூபாய்க்கு பூஸ்திதியாம். பிள்ளை கிடையாதாம். இந்தப் பெண்ணைத் தவிர இன்னும் ஒரே ஒரு பெண் தானாம். காலக்கிரமத்தில் ராமசாமி ஐயர் குடும்பத்துக்கு இரண்டு லட்ச ரூபாய் சொத்துச் சேர்த்து விடுமாம். இதெல்லாம் எனக்குக் கர்ணகடூரமாக இருக்கும். ஆனால் என்ன செய்கிறது? தலைவிதியே என்று கேட்டுக் கொண்டிருப்பேன்.
இந்தப் பேச்சுப் புறப்பட்டது முதல், மீனாட்சி பகலில் வெளியிலேயே வருகிறதில்லை. சூரியயோதயத்து முன்னேயே குளத்துக்கு வந்து ஸ்நாநம் செய்துவிட்டுத் தீர்த்தம் எடுத்துக் கொண்டு போய்விடுவாள். அவள் முகத்தைப் பார்த்தால் கண்ராவியாயிருக்கம். சரியான தூக்கமேது? சாப்பாடேது? ஓஹோ என்று வாழ்ந்து விட்டு, இந்தக் கதிக்கு ஆளானாமே என்கிற ஏக்கம் அவள் அழகை அழித்துவிட்டது. வீடுவாசல் போய் விட்டதே என்றாவது, நகை நட்டெல்லாம் போய், வெறும் உரிசல் தாலியை மாத்திரம் கட்டிக் கொண்டிருக்கும் படியாகி விட்டதே என அவள் வருந்தவில்லை. கிளிபோல் குழந்தை அகத்திலிருக்க, ஜானகி அதன்பேரில் கொஞ்சமேனும் இரக்கம் வைக்கமால் கண்ணுக்கெதிராகவே பிள்ளைக்கு வேறு விவாகம் பண்ணி வைக்க நினைத்து விட்டாளே எனும் ஏக்கந்தான் அவளுக்கு இரவு பகலெல்லாம்.
நாளாக ஆக நாகராஜனுடைய கல்யாணப் பேச்சு முற்றிக் கொண்டே வந்தது. நாகராஜன் மனதில் என்ன எண்ணம் இருக்கிறது? பட்டணத்திலிருந்து வந்த அன்று, மாமனாரையும் மாமியாரையும் நமஸ்காலம் செய்வதற்காக அவர்கள் வீட்டுக்கு வந்ததோடு சரி. அவ்வளவுதான். பிறகு ருக்மிணியை அவன் ஸ்மரித் தான் என்பதற்கு எள்ளளவுகூட அடையாளமில்லை. யாருடனும் பேசாமல் எப்பொழுதும் சுளித்த முகமாயிருப்பான்.
கடைசியாக, நாள் வைத்தாகிவிட்டது. பெண் அகத்துக் காரர்கள் வந்து லக்னப் பத்திரிகையும் வாசித்து விட்டுப் போய்விட்டார்கள். ஐயோ! அன்னைக்கு மேளச் சத்தத்தைக் கேட்க என் பஞ்சப் பிராணனும் துடித்தது. காமேசுவர ஐயருக்கு எப்படி இருந்திருக்குமோ! மீனாட்சிக்கு மனசு எப்படித் துடித்ததோ! ருக்மிணி எப்படிச் சகித்தாளோ? எல்லாம் ஈசுவரனுக்குத்தான் தெரியும்.
நாகராஜனுக்குக் கூடத் துளி இரக்கம் பச்சாத்தாபமில் லாமற் பய்விட்டதா? இப்படியெல்லாம் பண்ணினால் இவன் மாத்திரம் நன்றாக இருப்பானா என்று கூட எனக்கு தோணும். என் மனசு தளும்பித் தத்தளித்துக் கொண்டிருக்கிறபோது, ஒரு நாள் வயித்திலே பால் வார்த்தாப்போல ஒரு சங்கதி காதில் விழுந்தது. நாகராஜனோடு கூடப் படித்துக் கொண்டு இருந்த ஸ்ரீநிவாசன் என்ற பையன் நாகராஜனைப் பார்க்க இங்கே வந்தான். ரகசியமாகப் பேச இடம் வேறெங்கே? நம்ம குளத்தங்கரை என் வேரின் மேல் தானே?
ஒரு நாள் சாயங்காலம் ஏழெட்டு மணிக்கு இவர்கள் இரண்டு பேரும் இங்கே வந்தார்கள். ஸ்ரீநிவாசன் ரொம்ப நல்லவன். அவன் ஊர் ஐம்பது அறுபது கல்லு தாண்டி இருக்கிறது. நாகராஜன், மனைவி இருக்க வேறு பெண் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறான் என்ற சேதி அவன் காதுக்கெட்டியதால் தபால் வண்டி மாதிரி ஓடிவந்து விட்டான். குளத்தங்கரைக்கு வந்ததும், தான் கேள்விப்பட்டதைச் சொல்லி
” இதெல்லாம் வாஸ்தவமா நாகராஜா” என கேட்டான்
.”அம்மாவும் அப்பாவும் சேர்ந்து நிச்சயம் செய்துவிட் ட போது நான் மாட்டேன் என்றால் தீருமாடா ? தவிர, பெண்ணும் லக்ஷணமாக இருக்காம். அவள் தகப்பனார், லட்ச ரூபாய் ஆஸ்தி அவள் பேருக்கு எழுதி வைத்திருக்கிறாராம். அவருக்குப் பிற்காலத்தில் இன்னொரு லட்சரூபாய் சொத்துச் சேருமாம். இப்படி, தானே வருகிற சீதேவியை எதற்கு வேண்டாமென்று சொல்லணும்?””
இதைக் கேட்டதும் ஸ்ரீநிவாசன் முகம் போன போக்கை என்ன என்று சொல்லுவது? நாகராஜன் நிறுத்தினதும் அரைமணி தேச காலம் ஸ்ரீநிவாசன் பேசினான்
. ”எத்தனை லக்ஷந்தான் வரட்டுமே, ஒரு பெண் பாவத் தைக் கட்டிக் கொள்ளலாமா? கல்யாணப் பந்தலில் மந்திர ரூபமாகச் செய்த பிரமாணத்தையெல்லாம் அழித்துவிடலாமா?
ஸ்ரீனிவாசன் நானாவிதமாய்த் தர்மத்தையும் நியாயத் தையும் எடுத்துச் சொல்லி, கல்லுங் கரையும்படியாக ருக்மிணிகாகப் பரிஞ்சு பேசினான். அவன் நன்றாக இருக்க வேணும். க்ஷேமமாக இருக்க வேணும், ஒரு குறைவுமில்லாமல் வாழ வேணும் என்று நிமிஷத்துக்கு நிமிஷம் நான் வாழ்த்திக்கொண்டே இருந்தேன்.
‘ஸ்ரீநிவாசா, உன்னிடம் இதுவரை விளையாடினேனடா. நான் காசுக்காக இவ்வளவு அற்பமாகப் போய்விடுவேன் என்று நீயுமா நினைக்கிறாயா? இந்த விஷயத்தை நான் யாருக்கும் தெரியாத ரஹஸ்யமாக வைத்துக் கொண்டி ருக் க வேணும் என்றிருந்தேன். ஆனால் எப்போ இவ்வளவு தூரம் பேசி விட்டோமோ, இனிமேல் உனக்குத் தெரியாமல் வைப்பதில் அர்த்தமில்லை. இதை நீ யாரிடமும் சொல்லாதே. இவர் களெல்லாம் ஆரியத் தன்மையை விட்டு மிலேச்சத்தனமாய் நடக்க உத்தே சித்திருக் கிறபடியால், இவர்களை நன்றாக அவமானம் செய்துவிட வேண்டியதென்று நிச்சயித்து விட்டேன். நான் எத்தனை மறுத்தும் அப்பாவும் அம்மாவும் ஒரே பிடிவாதமாக இருக்கிறார் கள. ஆகையால் மன்னார் கோவிலுக்கே போகிறேன். அங்கே போயும் மாட்டேனெ ன்றே சொல்லுவேன். ஆனால் கட்டாயப் படுத்தத் தான் போகிறார்கள். முகூர்த்தப் பந்தலிலும் உட்காருவேன். ஆனால் என்ன இருந்தாலும் திருமங்கலியத்தில் நான் தானே முடிச்சப் போடவேணும்? வேறு ஒருவரும் போட முடியாதே. அந்த சமயத்தில் கண்டிப்பாக மாட்டேனென் று சொல்லிவிடப் போகிறேன். எல்லோரும் இஞ்சி தின்ற குரங்கு போலே விழிக்கட்டும். ருக்மிணியைத் தொட்ட கையினாலே இன்னொரு பெண்ணையும் நான் தொடவே மாட்டேன்”
‘நாகராஜா, நீ விவாகரத்துக் கென்று போகுங் காலத்தில், ருக்மிணி, அவள் அப்பா அம்மா மனதெல்லாம் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தாயா?””
”யோசித்தேன். ஆனால் எல்லாம் போய்விட்டதென்று அவர்கள். நிராசையாய்த் தவித்துக் கொண்டிருக்கும் சமயத்தில், திடீரென்று நான் ஓடிவந்து மாமியார் மாமனாரை வணங்கி, துயரப்படாதீர்கள்! என் ருக்மி ணியை நான் ஒரு நாளும் கைவிட மாட்டேன்! பணத் தாசை பிடித்தவர்கனையெல்லாம் மணப் பந்தலில் மானபங்கம் செய்துவிட்டு இங்கே வந்துவிட்டேன்” என்று நான் சொல்லும் போது அவர்களுக்கு எத்தனை ஆனந்த மாக இருக்கும்! அதைப் பார்த்து அனுபவிக்க விரும்புகி றேன்” என்றான் நாகராஜன்.
‘நாகராஜா, அந்த நாள் வரையில் அவர்கள் மனசு எப்படி அடித்துக் கொண்டிருக்கும்? நினைத்துப்பார்”” என்றான் ஸ்ரீநிவாசன். ”
இன்னும் ஐந்து நாளில்லை ; இன்று வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை இவ்விடமிருந்து எல்லோரும் புறப்படப் போகிறோம். அடுத்த நாள் முகூர்த்தம் அன்றைக்கே புறப்பட்டு அடுத்த நாள் காலையில் இங்கே திரும்பிவிடுவேன். இத்தனை நாள் பொறுக்க மாட்டார்களா?
”‘என்னவோ அப்பா, எனக்கு இது சரியில்லை’ என்று தோன்றுகிறது”” என்று ஸ்ரீநிவாசன் பேசிக் கொண்டிருக் கும் போதே இருவரும் நகர ஆரம்பித்து விட்டார்கள். எனக்கு மேலே ஒன்றும் கேட்கவில்லை.
அன்னைக்கு ராத்தியெல்லாம் எனக்குத் தூக்கமே வரவில்லை. எவ்வளவு நல்லவன் நாகராஜன். அவனை நான் வையக் கூட செய்தேனே பாவி, ‘அவனைப் போலே ஸ்த்புத்திரன் உண்டா உலகத்திலே’ என்று மகிழ்ந்தேன். நாகராஜன் பிடிவாதக்காரன் ; சொன்ன படியே செய்து விடுவான். ருக்மிணிக்கு இனிமேல் ஒரு குறைச்சலுமில்லையென்று பூரித்துப் போய்விட்டேன்.
ஞாயிற்றுக் கிழமை ; இவர்களெல்லாம் மன்னார் கோவிலுக்குப் புறப்பட்டார்கள் . ஊரெல்லாம் அல்லோல கல்லோலப் பட்டது. ராமஸ்வாமி ஐயரையும் ஜானகியையும் வையாதவர்கள் கிடையாது. ஆனால் அவர்களைக் கூப்பிட்டு நல்ல புத்தி சொல்லுவதற்கு மாத்திரம் ஒருவரும் இல்லை. அப்படியே யாரேனும் சொன்னாலும் அவர் கட்டுப்படுகிறவர்களும் இல்லை.
காமேசுவரையரும் மீனாட்சியும் சனிக்கிழமை மத்தியானமே புறப்பட்டு மணப்பாறைக்குப் போய் விட்டார்கள். ருக்மிணிக்கு அவள் அத்தை சுப்புலட்சுமி அம்மாள் தான் துணை.
சனிக்கிழமை ராத்திரியாச்சு. ஊரடங்க ஆரம்பித்து விட்டது. ஒன்பது ஒன்பதரை மணி இருக்கும். நாகராஜன் தனியாகக் குளத்தங்கரைக்கு வந்தான். வந்து வேப்ப மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு ஏதோ யோசித்துக் கொண்டிருந்தான். சில நாழிக்கெல்லாம் தூரத்தில் ஒரு பெண் உருவம் தென்பட்டது. அது குளத்தங் கரைப் பக்கம் வந்து கொண்டிருந்தது. ஆனால் அடிக்கொரு தடவை பின் பக்கம் பார்த்துக் கொண்டே வந்து, கடைசியாக நாகராஜன் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்தில் வந்து நிற்கும் போதுதான் அது ருக்மிணி என்று நான் அறிந்து கொண்டேன். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. ஆனால் உடனே தெளிஞ்சு கொண்டு என்ன நடக்கிறது பார்க்கலாம் என்று கண்ணைத் துடைத்துக் கொண்டு உன்னிப்பாய்க் கவனிக்கலானேன்.
ஐந்து நிமிஷம் வரையில் நாகராஜன் கவனிக்கவே யில்லை. ஆழ்ந்த யோசனையில் இருந்தான். ருக்மிணி அசைவற்று அப்படியே நின்று கொண்டிருந்தாள். எதிர்ச்சையாய் நாகராஜன் தலையைத் தூக்கினான். ருக்மிணியைப் பார்த்தான். பார்த்ததும் அவனும் திடுக்கிட்டுப் போய்விட்டான். ஆனால் உடனே நிதானித்துக் கொண்டு,
”ருக்மிணி, இத்தனை நாழிகைக்கு மேலே தனியாக இங்கே வரலாமோ நீ?””
”நீங்கள் இருக்கிற இடத்தில தனியாக நான் இருக்க வேண்டிய நாள் இன்னும் வரவில்லையே!”” என்று பதில் சொல்லிவிட்டு ருக்மிணி நின்றாள். இரண்டு பேர் மனதும் குழம்பிக் கொண்டிருந்தது. ஆனால் எப்படி ஆரம்பிக்கிறது, என்ன பேசுகிறது என்று அவர்களுக்கு ஒன்றுந் தோன்றவில்லை.
”இந்த வேளையில் நாம் இங்கேயிருப்பது தெரிந்தால் ஊரில் ஏதாவது சொல்லுவார்கள் ; வா, அகத்துக்குப் போய்விடலாம்”” என்றான்.
ருக்மிணி, ”உங்களிடத்தில் சில வார்த்தைகள் சொல்ல வேணுமென்று இந்த ஒரு மாதமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னைக்குத்தான் நேர்ந்திருக் கிறது ; அதைச் சொல்ல உத்தரவு கொடுக்க வேணும்”
” ”சொல்லேன்”” என்று நாகராஜன் சொல்ல,
”எனக்கு உங்களிடத்தில் என்ன சொல்லுகிறது என்று தெரியவில்லை. இந்த மூணு மாசமாய் மனசு படுகிற பாடு அந்த அகிலாண்டேசுவரிக்குத் தான் தெரியுமே யொழிய மனுஷியாளுக்குத் தெரியாது. நீங்கள் பட்ட ணத் திலேயிருந்து வந்தவுடன் என் கலக்கமெல்லாம் போய்விடும் என்றிருந்தேன். மாமாவும் மாமியும் என்ன செய்தாலும் நீங்களும் என்னைக் கைவிட்டு விட்டால் அப்புறம் எதை நம்பிக்கொண்டு நான் வாழ்வேன்? வேலியே பயிரை அழித்துவிட ஆரம்பித்தால், பயிரின் கதி என்னவாகும்? இது வரையில் நடந்ததெல்லாம் என் மனசை உடைத்துவிட்டது. நீங்கள் அதைச் சேர்த்து வைத்தால் உண்டு, இல்லையானால் என் ஆயுசு இவ்வளவுதான், அதில் சந்தேகமில்லை.””
ருக்மிணியின் கண்களில் ஜலம் வந்துவிட்டது. நாகராஜன் பேசவில்லை. ருக்மணி கண்ணீரோடு அவனை பார்த்தாள் .,
”நாளைக்கு உங்கள் பயணம் வைத்திருக்காப் போலிருக் கிறதே ; நீங்கள் மன்னார்கோயில் போகத்தானே போகிறீர்கள்? நாகராஜன்
”ஆமாம், போகலாம் என்று தான் இருக்கிறேன்””அவன் சொன்னதும் ருக்மணிக்கு நெஞ்சை அடைத்துக் கொண்டு துக்கம் வந்துவிட்டது. உடம்பு கிடுகிடு என்று நடுங்கியது. கண்ணில் ஜலம் ததும்பிவிட்டது. ஆனால் பல்லைக் கடித்துக் கொண்டு அதையெல்லாம் வெளியில் காட்டிக் கொள்ளாமல்
”அப்படியானால் நீங்கள் என்னைக் கைவிட்டு விட்டீர்கள்தானே?””
”உன்னை நான் கை விடுவேனா ருக்மிணி? ஒரு நாளும் விடமாட்டேன். ஆனால் அம்மா அப்பாவைத் திருப்தி பண்ணி வைக்க வேண்டியதும் கடமை தானே? அதற்காகத்தான் அவர் பேச்சைத் தட்டாமல் புறப்படுகி றேன். ஆனால் நீ கவலைப்படாதே, உன்னை ஒருநாளும் தள்ளிவிட மாட்டேன்””
”நீங்கள் மறுவிவாகம் பண்ணிக் கொண்டுவிடுகிறது! நான் கவலைப்படாமலிக்கிறது! என்னை ஒரு நாளும் கைவிட மாட்டீர் கள்! ஆனால் அம்மா அப்பா சொல்லுகி றதை இது விஷயத்தில் தட்டமாட்டீர்கள்! நான் சொல்லக்கூடியது இனிமேல் என்ன இருக்கு? என் கதி இத்தனை தானாக்கும்!”.
நாகராஜன் ஒன்றும் பேசவில்லை. கல்யாணத்தை நிறுத்திவிடுகிறேன் என்கிற ஒரு வார்த்தையைத் தவிர வேறே எந்த வார்த்தை சொன்னால் தான் ருக்மிணியின் மனதைத் தேத்தலாம்? அந்த வார்த்தையை இப்போது சொல்லவோ அவனுக்கு சம்மதமில்லை. ஆகையால் அவன் வாயால் ஒண்ணும் பேசாமல் தன் மனதிலுள்ள அன்பையும் ஆதரவையும் சமிக்கினை யினால் மாத்திரம் அவளுக்கு ஒரு மாதிரி காட்டினான். அவள் கையைத் தன்னுடைய கைகளால் வாரி எடுத்து மடியில் வைத்துக் கொண்டு மிருதுவாய்ப் பிடித்தான். குழந்தையைத் தட்டி கொடுத்துத் தேத்துவது போல், முதுகில் ஆதரவோடு தடவினான். அப்பொழுது அவள் தலைமயிர் அவன் கையில் பட்டது. உடனே திடுக்கிட்டுப் போய்,
”என்ன ருக்மிணி, தலை சடையாய்ப் போய் விட்டதே ;
இப்படித்தானா பண்ணிக் கொள்ளுகிறது? உன்னை இந்த அலங்கோலத்தில் பார்க்க என் மனசு சகிக்கவில் லையே! எங்கே, உன் முகத்தைப் பார்ப்போம்! ஐயோ, கண்ணெல்லாம் செக்கச் செவேர் என்று சிவந்து போயிருக்கிறதே! முகத்தின் ஒளியெல்லாம் போய் விட்டதே! என் கண்ணே இப்படி இருக்காதே, உன்னை நான் கைவிடமாட்டேன் என்று சத்தியமாய் நம்பு. உன் மனசில் கொஞ்சங்கூட அதைரியப்படாதே. என் ஹிருதய பூர்வமாகச் சொல்லுகிறேன்
; எனக்குப் பொறுக்க வில்லை உன்னை இந்த ஸ்திதியில் பார்க்க, சின்ன வயது முதல் நாமிருந்த அன்னி யோன்ய த்தை மறந்து விட்டேன் என்று கனவில்கூட நீ நினையாதே. வா, போகலாம், நாழிகை யாகிவிட்டது ; இனிமேல் நாம் இங்கே இருக்கக்கூடாது”” என்று சொல்லி முடித்தான்.
ருக்மிணி எழுந்திருக்கவில்லை. ஏக்கம் பிடித்தவள் போல் உட்கார்ந்திருந்தாள். அதைப் பார்த்ததும் நாகராஜனுக்குக் கண்ணில் ஜலம் ததும்பிவிட்டது. தன் மனதிலுள்ள ரகசியத்தைச் சொல்லித்தான் விடலாமே என்று அவன் புத்தியில் தோன்றியது. அவனுடைய விளையாட்டுத்தான் பெரிதாய்ப் பட்டது. ஆகை யினாலே அதை மாத்திரம் அவன் வாய் விடவில்லை. ஆனால் அவனுக்குத்தான் எப்படித் தெரியும். இப்படியெல்லாம் வரும் என்று? அத்தனை வயசாகி எனக்கே தெரியவில்லையே, அந்தச் சமயத்திலே, அவனுக்கு எங்கே தெரிந்திருக்கப் போகிறது குழந்தைக்கு?
அப்படி நினைத்துபோய் உட்கார்ந்திருந்த ருக்மிணியை நாகராஜன் மெல்லப் பூத்தாப் போலே தூக்கி மார் போடே அணைத்துக் கொண்டு,
”என்ன ஒன்றும் பேசமாட்டேன் என்கிறாயே ருக்மிணி. நான் என்ன செய்யட்டும்?”
ருக்மிணி தலை நிமிர்ந்து அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அந்தப் பார்வையின் குறிப்பை உங்களுக்கு எப்படிச் சொல்லுவேன்? பிரவாகத்தில் அகப்பட்டுக் கை அலுத்துப் போய் ஆத்தோடு போகிற ஒருவனுக்கு தூரத்தில் கட்டை ஒன்று மிதந்து போவது போலே தென்பட, அவனும் பதைபதைத்துக் கொண்டு ஆசையும் ஆவலுமாய் அதன் பக்கம் நீந்திக் கொண்டு போய், அப்பா பிழைத்தோம்டா ன்னு சொல்லிக்கொண்டு அதைப் போய்த் தொடும்போது, ஐயோ பாவம், அது கட்டையாக இராமல், வெறும் குப்பை செத்தையாக இருந்துவிட்டால் அவன் மனசு எப்படி விண்டுவிடும். அவன் முகம் எப்படியாகிவிடும். அப்படி இருந்தது ருக்மிணியின் முகமும், அந்த முகத்தில் பிரதிபிம்பித்துக் காட்டிய அவள் மனசும். எல்லையில்லாத துன்பம். எல்லையில்லாத கஷ்டம். அந்தப் பார்வையில் இருந்தது. அதைக் கண்டும் நாகராஜன் மௌனமாக இருப்பதைப் பார்த்து ருக்மிணி மெல்ல ஒதுங்கிக் கொண்டு
”நான் சொல்லக் கூடியது இனிமேல் ஒண்ணுமில்லை. மன்னார்க்கோவிலுக்குப் போகிறதில்லை என்கிற வார்த்தையை நீங்கள் எனக்குச் சொல்லமாட்டேன்… என்கிறீர்கள் ; இன்றோடு என தலை விதி முடிந்தது. நீங்கள் எப்போது என்னை இவ்விதம் விடத் துணிந்தீர்க ளோ, நான் இனிமேல் எதை நம்பிக் கொண்டு யாருக் காக, உயிரை வைத்துக் கொண்டிருப்பது? உங்கள் மீது எனக்கு வருத்தமில்லை. உங்கள் மனது இந்தக் காரியத்துக்குச் சம்மதியாது. என்னுடைய விதிவசம், என் அப்பா அம்மாவுடைய கஷ்டம். உங்களை இப்படியெல்லாம் செய்யச் சொல்லுகிறது. இனிமேல் ருக்மிணி என்று ஒருத்தி இருந்தாள் ; அவள் நம்பேரில் எல்லையில்லாத அன்பு வைத்திருந்தாள், பிராணனை விடுகிற போதுகூட நம்மையே நினைத்துக் கொண்டு தான் பிராணனை விட்டாளென்று எப்பொழுதாவது நினைத்துக் கொள்ளுங்கள். இதுதான் நான் உங்களிடம் கடைசியாகக்கேட்டுக் கொள்வது”” என்று சொல்லிக் கொண்டு நாகராஜன் காலில் விழுந்து காலைக் கெட்டி யாகப் பிடித்துக் கொண்டு தேம்பிதேம்பி அழுதாள். நாகராஜன் உடனே அவளைத் தரையிலிருந்து தூக்கியெடுத்து, “
”பைத்தியமே, அப்படி ஒன்றும் பண்ணிவைத்து விடாதே, நீ போய் விட்டால் என் ஆவியே போய்விடும். அப்புறம் யார் யாரை நினைக்கிறது? மழைத்தூற்றல் போடுகிறது. வானமெல்லாம் கறுங்கும் மென்றாகி விட்டது. இன்னும் சற்றுப் போனால் சந்தரத்தாரையாய்க் கொட்டும் போலிருக்கிறது ; வா அகத்துக்குப் போகலாம்” என்று அவள் கையைப் பிடித்துக் கொண்டு ரெண்டடி எடுத்து வைத்தான்.
ஆகாயத்தில் சந்திரன், நட்சத்திரம் ஒன்றும் தெரியவில் லை. எங்கே பார்த்தாலும் ஒரே அந்தகாரம். சித்தைக் கொருதரம் மேகத்தை வாளால் வெட்டுகிற போலே மின்னல் கொடிகள் ஜொலிக்கும். ஆனால் அடுத்த நிமிஷம் முன்னிலும் அதிகமான காடாந்த காரமாகி விடும். பூமியெல்லாம் கிடுகிடு என்ற நடுங்க ஆகாயத் தையே பிளந்துவிடும் போலே இடி இடிக்கும். காற்று ஒன்று சண்டமாருதம் போல அடித்துக் கொண்டிருந்தது.
தூரத்தில் பிரமாதமாக மழை பெய்து கொண்டிருந்த இரைச்சல் அதிகமாகவே நெருங்கிக் கொண்டு வந்தது. இந்தப் பிரளய காலத்தைப் போல இருந்த அரவத்தில் ருக்மிணியும் நாகராஜனும் பேசிக்கொண்டு போன வார்த்தைகள் என் காதில் சரிவரப்படவில்லை. அவர்களும் அகத்துப்பக்கம் வேகமாகச் சென்று கொண்டிருந்தார்கள். ஒரு மின்னல் மின்னும் போது ருக்மிணி வீட்டுக்குப் போக மனமில்லாமல் பின் வாங்குவதும், ஆனால் நாகராஜன் தடுத்து முன்னால் அழைத்துச் செல்வது மாத்திரம் கண்ணுக்குத் தென்பட்டது. அவர்கள் வார்த்தையும் ஒண்ணும் ரெண்டு மாகத்தான் என் காதில் பட்டது.
”பிராணன் நிற்காது… அம்மாவுடைய ஹிருதயம் திருப்தி… வெள்ளிக் கிழமை காலமே… ஸ்திரீர்களின்… உடைந்துவிடும்… சொல்லாதே… கொடுத்து வைத்து தானே… அந்தப் பெண்ணையாவது நன்றாய் வைத்துக் கொள்ளுங்கள்… மனப்பூர்த்தி யாக வாழ்த்துகிறேன்… அன்றைக்குத் தெரிந்துகொள்ளுவாய்… கடைசி நமஸ்காரம்… வரையில் பொறுத்துக் கொள்…””
இந்த வார்த்தைகள் தான் இடி முழக்கத்திலும், காற்றின் அமலையிலும், மழை இரைச்சலிலும் எனக்குக் கேட்டது. மழை தாரை தாரையாகக் கொட்ட ஆராம்பித்துவிட்டது. ருக்மிணியும் நாகராஜனும் என் கண்ணுக்கு மறைந்து போய்விட்டார்கள்.
ஆச்சு, அடுத்த நாள் காலமே பொழுது விடிந்தது, மழை நின்றுவிட்டது. ஆகாயத்திலே தெளிவு இல்லை மேகங்களின் கருக்கல் வாங்கவில்லை. காற்று, ஸமா தானஞ் செய்ய மனுஷா இல்லாத குழந்தைபோல, ஓயாமல், கதறிக் கொண்டே யிருந்தது. என் மனசிலும் குழப்பம் சொல்லி முடியாது. எப்படி நிதானித்துக் கொண்டாலும் மனசுக்குச் சமாதானம் வரவில்லை. என்னடா இது, என்னைக்கும் இல்லாத துக்கம் இன்னைக்கு மனசில் அடைத்துக் கொண்டுவருகிறது.
காரணம் ஒண்ணும் தெரியவில்லையே என்று நான் எனக்குள் யோசித்துக் கொண்டேயிருக்கும் போது மீனா, “என்னடியம்மா, இங்கே ஒரு புடைவை மிதக்கிறது?”” என்று கத்தினாள். உடனே பதட்டம் பதட்டமாய், அந்தப் பக்கம் திரும்பினேன். குளத்திலே குளித்துக் கொண்டிருந்த பெண்களெல்லோரும் அப்படியே திரும்பிப் பார்த்தார்கள். பார்த்துவிட்டு என்னவோ காதோடு காதாய் ரகசியம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். எனக்குப் பஞ்சப் பிராணனும் போய்விட்டது. புடைவையைப் பார்த்தால் காமாஷியம்மாள் புடவை போல் இருந்தது. சரி, அம்மா, அப்பா தலையிலே கல்லைக் தூக்கிப் போட்டுவிட்டு ருக்மிணிதான் மறுபடியும் வந்து குளத்திலே விழுந்துவிட்டாள் என்று நினைத்தேன் அதுதான் தெரியும். அப்படியே மூர்ச்சை போய்விட்டேன். சித்த நாழி கழித்து எனக்குப் பிரக்கினை வந்தது. அதற்குள்ளே குளத்தங்கரை யெல்லாம் கும்பலாய்க் கூடிப் போய்விட்டது. ஜானகியையும் ராமசுவாமி ஐயரையும் வையாதவர் இல்லை. இனிமேல் வைதாலென்ன, வையாதே போனாலென்ன? ஊரின் சோபையையும் தாயார் தகப்பனார் ஜீவனையும், என்னுடைய சந்தோஷத் தையும் எல்லாம் ஒண்ணாய்ச் சேர்த்துக் கட்டிக் கொண்டு ஒரு நிமிஷத்தில் பறந்து போய்விட்டாளே என் ருக்மிணி! கீழே, அந்த மல்லிகைக்கொடி ஓரத்திலேதான் அவளை விட்டிருந்தார்கள். எத்தனை தடைவ அந்த மல்லிகை மொக்குகளைப் பறித்திருக்கிறார்கள் அவள் பொன்னான கையாலே! குளத்தங்களையெல்லாம், அவள் குழந்தையாயிருக்கிற போது அவள் பாதம் படாத இடம் ஏது, அவள் தொடா மரமேது, செடியேது! ஐயோ, நினைக்க மனம் குமுறுகிறது. அந்த அழகான கைகள், அந்த அழகிய பாதங்கள், எல்லாம் துவண்டு, தோஞ்சு போய்விட்டன. ஆனால் அவள் முகத்தின் களை மாத்திரம் மாறவே இல்லை. பழைய துக்கக் குறிப்பெல்லாம், போய் முகத்தில் ஒருவித அத்தியாச் சரியமான சாந்தம் வியாபித்திருந்தது!
”நாகராஜன் வறான், நாகராஜன் வறான்”” என்ற ஆரவாரம் கூட்டத்தில் பிறந்தது. ஆமாம் நிசந்தான். அவன் தான் தலைகால் தெரியாமல் பதைக்கப் பதைக்க ஓடி வந்து கொண்டருந்தான். வந்துவிட்டான். மல்லிகைச் செடியண்டை வந்ததும், கும்பலையாவது, கும்பலில் இருந்த தாயார் தகப்பனாரையாவது கவனிக்காமல்,
”ருக்மிணி, என்ன பண்ணிவிட்டாய் ருக்மிணி!”” என்று கதறிக் கொண்டு கீழே மரம் போல சாய்ந்துவிட்டான். கூட்டத்தில் சத்தம், கப் என்று அடங்கிப்போய்விட்டது. எல்லோரும் நாகராஜனையே பார்த்துக் கொண்டிருந் தார்கள்.ரொம்ப நாழி வரைக்கும் அவன் தரையில் மூர்ச்சை போட்டே கிடந்தான். ராமசுவாமி ஐயர் பயந்து போய் அவன் முகத்திலே ஜலத்தைத் தெளித்து, விசிறியால் விசிறிக்கொண்டிருக்கையில் அவனுக்குக் கடைசியாய்பிரக்கினை வந்தது. கண்ணை முழித்தான். ஆனால் தகப்பனாரிடத்திலே ஒரு வார்த்தைக் கூடப் பேசவில்லை. ருக்மிணியின் உயிரற்ற சரீரத்தைப் பார்த்து,
”என்னுடைய எண்ணமத்தனையும் பாழாக்கிவிட்டு ஜூலியெத் மாதிரி பறந்தோடிப் போய்விட்டாயே ருக்மிணி! ஸ்ரீ நிவாசன் சொன்னது சரியாய்ப் போய்விட்ட தே! பாவி என்னால்தான் நீ உயிரை விட்டாய், நான் தான் உன்னைக் கொலை செய்த பாதகன்! நேற்று நான் உன்னிடம் ரகசியம் முழுவதையும் சொல்லியிருந்தால் இந்தக் கதி நமக்கு இன்று வந்திருக்காதே!
”குஸும ஸத்ருசன்… ஸத்ய : பாதி ப்ரணயி ஹருதயம்”” என்கிற ஆழமான வாக்கியத்தை வேடிக்கையாக மாத்திரந்தான் படித்தேனேயொழிய அதன் சத்தியத்தை நான் உணரவில்லையே! இனிமேல் எனக்கென்ன இருக்கிறது? ருக்மிணி! நீயோ அவசரப்பட்டு என்னை விட்டுவிட்டுப் போய்விட்டாய். எனக்கு இனிமேல் சம்சார வாழ்க்கை வேண்டாம். இதோ சன்னியாசம் வாங்கிக் கொள்ளுகிறேன்!”” என்று சொல்லிக்கொண்டே யாரும் தடுப்பதற்கு முந்தித்தான் உடுத்தியிருந்த வேஷ்டியை யும் உத்தரீயத்தையும் அப்படியே தாறாய்க் கிழித்து விட்டான். அவன் தாயார் தகப்பனார் ஒருவரும் வாய் பேசவில்லை. நாகராஜனும் அவர்கள் திடுக்கிட்டதி லிருந்து சுதாரிச்சுக் கொள்ளுகிறதற்குள்ளே அவர்கள் காலில் சாஷ்டாங்கமாய் விழுந்து, நமஸ்காரம் பண்ணிவிட்டு யாருடனும் பேசாமல் கௌபீனதாரி யாய்ப் புறப்பட்டுப் போய்விட்டான்.
இப்படி முடிந்தது என் ருக்மிணியின் கதை! என் அருமைக் குழந்தைகளே! பெண்கள் மனசு நோகும்படி ஏதாவது செய்யத் தோணும்போது இனிமேல் இந்தக் கதையை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டுக்காகக் கூடப் பெண்ணாய்ப் பிறந்தவர்களின் மனதைக் கசக்க வேண்டாம். எந்த விளையாட்டு என்ன வினைக்குக் கொண்டு விடும் என்று யாரால் சொல்ல முடியும்?
+++
வ.வே.சு. ஐயரின் இந்த கதை தான் தமிழின் முதல் சிறுகதை என்கிறார்கள். இக் கதை ‘விவேக போதினி’ மாதஇதழில் வெளிவந்தது. ஒரு உண்மையை மறக்கக்கூடாது. அக்காலத்தில் பெண்களுக்கு உரிமை, சுதந்திரம் இல்லை. அடிமைகளாக வாழ்ந்தார்கள். எத்தனையோ பெண்கள் வாழ்வு இவ்வாறாக சோகமாக முடிந்திருக்கிறது. அப்புறம் சட்டம் வந்து அவர்கள் உயிர்கள் காப்பாற்றப்பட்டது. இப்போதுள்ள பெண்கள் கொடுத்து வைத்தவர்கள். வ.வே. சு ஐயரின் முடிவும் சென்னை மெரினா பீச்சில் தான் ……

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2562

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;