
தினையும் வினையும் – நங்கநல்லூர் J K SIVAN
நாம் எல்லோருமே சரியாக புரிந்து கொள்ளாமல் நொடிக்கொருதரம் ‘கர்மா கர்மா’ என்று அலுத்துக் கொள்கிறோமே அதைக் கொஞ்சம் கிட்டே போய் பார்க்கலாமா ? இந்த கர்மா விஷயம் எல்லாம் ஏதோ சாஸ்த்ரத்தில், நம்பிக்கையில் பாரம்பரியமாக வருகிறதே தவிர நாமாக உண்டாக்காத ஒரு சமாசாரம் இது என்று நினைக்கிறோம்.
முதலில் தெரிந்துகொள்ளவேண்டியது. நம்முடைய இப்போதைய வாழ்க்கை நம்முடைய இந்த பிறவி, மற்றும் இதற்கு முன்பு எடுத்திருந்த எத்தனையோ பிறவிகளில் நாம் சொத்தாக சேர்த்து வைத்துக் கொண்டிருந்த நம்முடைய சொல், செயல், எண்ணத்தின் பிரதிபலன் என்பது தான் கர்மவினை. இதிலிருந்து தப்பிப்பது எப்படி என்று அமெரிக்காவில் கூட இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இதனால் தான் நம்முடைய சந்தோஷம் , துக்கம் சகலமும் விளைகிறது. இந்த கர்மாவை மூன்றாக பிரித்து வைத்திருக்கிறார்கள் நமது முன்னோர்.
1. சஞ்சிதம் (பல பிறவிகளில் நாம் சேர்த்து வைத்த மொத்த சொத்து) 2. பிராரப்தம் ( ஒவ்வொரு பிறவியிலும் நாம் அனுபவிக்க வேண்டிய சஞ்சித கர்மாவில் ஒரு பங்கு) 3. ஆகாமி (ஒவ்வொரு பிறவியிலும் நாம் புதிதாக செயகிற கர்மா . இது சஞ்சிதத்திடம் போய் சேரும்.
இன்னும் கொஞ்சம் சாவதானமாக உள்ளே போவோமா?
1. சஞ்சித கர்மா
ஒவ்வொரு பிறவியியிலும் நல்ல ஆசாமிகளோடு அல்லது கெட்ட பேர்வழிகளோடோ சேர்வதால் விளையும், எண்ணங்கள், பழக்கம், செயல்பாடுகளின் தாக்கம் (சம்ஸ்காரம் என்பது இந்த தாக்கம் தான் ) நமது மண்டைக்குள் புகுந்து ஆழமாக பதிந்து, புதைந்து விடுகிறது. பல ஜன்ம ஜன்மாந்தரங்களாக நாம் இப்படி சேர்த்துக் கொண்டவை திருப்பி நமக்கு வட்டியோடு பலனளிக்க தக்க சமயம் பார்த்துக் கொண்டிருக்கிறது. எதாவது ஒரு ஜன்மத்தில், ஏன் இந்த ஜென்மத்திலேயே கூட கொஞ்சம் பழைய சகவாச சந்தர்ப்பம் கிடைத்தவுடனேயே தலையைத் தூக்கும். நிறைய சேர்த்து வைத்துக்கொண்டிருந்த அந்த விளைவுகள் (நல்லதாக இருந்தால் நல்ல விளைவு, கேட்டதாக இருந்தால் கேட்கவே வேண்டாம்) நம்மை ஆட்படுத்தி மூழ்கவைத்து, நன்மையையோ, தீமையையோ தகுந்தபடி பரிசளிக்கும். பழைய வாசனை கிடைத்த சந்தர்ப்பத்தில் புகுந்து கொண்டு ”பழக்கம்” வழக்கமாகிவிடும். புரிகிறதா? ஆகவே தான் நாம் ”அவர் ஒரு மஹான் சார். எப்படி அருமையான மனிதனாக இருக்கிறார் பார்த்தீர்களா என்கிற பேரோ, சரியான கேப்மாரி” என்கிற பேரோ சம்பாதிக்கிறோம். பெரிய குடும்பம், பணம் காசு, குலம் கோத்ரம் நல்ல படிப்பு இதெல்லாம் இதில் சம்பந்தப்பட்டதில்லை என்கிறது தெரிகிறதா? சகவாசம் எவ்வளவு முக்கியம் என்பது நிதர்சனமாகிறதா?
வேகமாக ஓடும் ரேஸ் குதிரைகள் இடையே ஒரு சப்பாணி குதிரை இருந்தால் அதுவும் ஜோராக ஓடுவது இதனால் தான். சொத்தை விதையாக இருந்தாலும் நல்ல மண்ணில், நிறைய நீரோட்டம் உள்ள பூமியில் விதைக்கப்படும்போது கொஞ்சமாவது துளிர்க்கும்.
அதற்காக தான் நல்ல எண்ணங்களை குழந்தைகள் மனதில் பதிய வைக்க, புதைக்க முயல்கிறோம். நல்ல எண்ணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே புதைந்துள்ள தீய எண்ணங்களைக்கூட (சம்ஸ்காரங்களை) மாற்ற சக்தி உள்ளவை யாயிற்றே. நாம் மாற முடியுமே. எப்படி நல்ல சம்ஸ்காரங்களை சம்பாதிப்பது? நிறைய புண்ய ஸ்தலங்களுக்கு போகலாம். நல்ல விஷயங்களை சேகரித்து படிக்கலாம். சிந்திக்கலாம். நல்ல நண்பர்களோடு உறவாடு. டிவியை சீரியல் வரும்போது மூடு. சத் சங்கத்தில் ஈடு படு. ரொம்ப பேசாதே. தனிமையில் இருக்க பழகு. தனித்திரு, விழித்திரு, பசித்திரு. (உனக்கோசரம் தானே சிவன் எழுதறான்!!)
2.பிராரப்தம்
இது ரொம்ப சிம்பிளாக விளக்க முடியும். நமக்கு அடக்க முடியாத சில உணர்ச்சிகள் தோன்றுகிறதே. கட்டுப்படுத்த முடியவில்லையே. காம, க்ரோத, மோக, மத மாற்சர்யங்கள் நம்மை ஆட்டிவைக்கிரதல்லவா. அப்போது நமது விவேகம் ஏதோ ஒரு பஸ்ஸில் ஏறி எங்கோ போய் விடுகிறதே.? அதால் விளைவது தான் இந்த பிராரப்த கர்மா. இந்த ஜென்மத்தில் நாம் அனுபவிக்கவேண்டிய நல்லது கெட்டதுகள். தெரிந்தும் நாமாக செய்யும், சொல்லும், என்னும் ஸம்ஸ்காரங்களின் விளைவு. இது இந்த ஜென்மத்திலேயே விளைகிறது. கோபத்தில் வெட்டுவது, திட்டுவது, , கொள்ளை, இன்னும் என்னென்னவோ செய்தவன் பிறகு யோசித்து என்ன பயன் ? விளைவை அனுபவித்து துடிக்கிறான். பிறகு நல்ல சம்ஸ்காரங்களை வளர்த்துக்கொண்டு திருந்துகிறான் என்று வைத்துக்கொள்வோம்.
தெரிந்துகொண்டாயா? சஞ்சிதம் உன்னை அமுக்கும் பெரிய மூட்டை, நீ தூக்கி மூச்சு திணறவேண்டிய எடையுள்ளது. பிராரப்தம் அந்தந்த பிறவியில் நாம் அனுபவிக்க வேண்டிய சஞ்சிதத்தின் பங்கு. கண்டிப்பாக உன்னை தொடர்ந்து பலனை கொடுக்கும். நல்லதோ கெட்டதோ அததற்கேற்ப நீ அனுபவித்தே ஆகவேண்டும். ஞாபகம் இருக்கிறதா தினை விதைத்தவன், வினை விதைத்தவன் பழமொழி. அது தான் இது. .
3. ஆகாமி கர்மா
ஒவ்வொரு பிறவி நாம் எடுக்கும்போது நாம் சும்மா இருக்கிறோமா? ஏதோ செய்கிறோம் இல்லையா? அது நல்லதோ கெட்டதோ அதற்கேற்ப பலனை சம்பாதிக்கிறோம். அது ஏற்கனவே நமது முதில் சுமக்கும் மூட்டையில் சென்று சேர்ந்து விடுகிறது. அதாவது சஞ்சிதத்தில் அடக்கமாகிறது. அப்போதைக்கப்போது பலன் தரும் சமாசாரம் இது.
மொத்தத்தில் கர்ம வினை என்பது கையிலே காசு வாயிலே தோசை. மது குடிக்கிறாயா, உடனே மதி மயங்குகிறது. விஷம் குடிக்கிறாயா. நாலுபேர் ரெடி. நெருப்பை தொட்டாயா சுட்டுக்கொள்வாய். பர்னால் தேடு. பஞ்ச இந்த்ரியங்களும் கட்டுப்பாடின்றி இயற்கையை மீறி செயல்பட்டால் அதற்குண்டான பலன் காத்திருக்கும். கைமேல் பலன். உணவு, பேச்சு, தூக்கம் போன்ற இயற்கை விதி முறைகளை மீறினால் தண்டனை கிடைக்கிறதே அது தான் க்ரியமாண கர்மா. செய்ததற்கு கூலி. நல்ல வேலை செய்தால் அதற்கேற்ற புகழ் தவறு செய்தால் தண்டனை. ஆகவே இது சஞ்சிதம் பிராரப்தம் போன்று மனம் சம்பந்தப்பட்டதல்ல. உடல் ரீதியானது.
கடைசியில் முடிவாக சுருக்கமான ஒரு விளக்கம்;
சஞ்சித கர்மா (Sanchita Karma):
முந்தைய பிறவிகளில் நாம் செய்த அனைத்து கர்மங்களின் சேகரமே சஞ்சித கர்மா. இது ஒரு குடத்தில் தேங்கியுள்ள நீர் போல், ஏராளமான புண்ணிய, பாப கர்மங்களை உள்ளடக்கியது.
பிராரப்த கர்மா (Prarabdha Karma):
சஞ்சித கர்மாவில் இருந்து இந்த பிறவியில் அனுபவிக்க வேண்டிய கர்ம பலன்கள், அதாவது ஒரு சின்ன பாகம் மட்டு,மே பிராரப்த கர்மா. இது ஏற்கனவே தொடங்கிய வில்லில் இருந்து விடப்பட்ட அம்புபோல், தடுக்க முடியாதது. இதுவே மனிதரின் தற்போதைய வாழ்க்கையின் நிகழ்வுகளை தீர்மானிக்கிறது.
ஆகாமி கர்மா (Agami Karma):
இந்த பிறவியில் நாம் செய்கிற புதிய கர்மங்களின் பலனே ஆகாமி கர்மா. இது எதிர்கால பிறவிகளில் அனுபவிக்க வேண்டியதோடு சேர்க்கப்படும். இதனை அறிந்திருப்பதால், நல்ல கர்மங்களைச் செய்து தீய கர்மங்களை தவிர்க்க முயல வேண்டும். அதனால் அந்தந்த ஜென்மங்களில் நல்லதே செய்து தீய கர்ம வினைகளை குறைத்துக் கொள்ள வசதி இருக்கிறதே.அதை விடலாமா? அதற்காகத்தான் பாபம், புண்யம், தண்டனை, என்றெல்லாம் நமக்கு சொல்ல பட்டிருக்கிறது. ஒவ்வொருவருக்குள்ளும் பகவான் கடவுள் நமக்கு மனசாக்ஷி என்ற ஒரு காவல்காரனை சம்பளமில்லாமல் நியமித்து கொடுத்திருக்கிறார். பாவம். நல்லா வேலை செய்பவன். யாருமே அவனை லக்ஷியம் பண்ணுவதில்லை.புறக்கணிக்கிறோம். அவஸ்தைப் படுகிறோம். மன சாக்ஷி அவ்வப்போது எடுத்து சொல்வதை கேட்டாலே நிறைய கர்மாக்களில் நல்ல ஸம்ஸ்காரம் கிடைக்குமே. சஞ்சித பாப மூட்டை சின்னதாகும்.
கர்மாக்கள் அனைத்தையும் அனுபவிக்கும் வரை , சம்ஸ்காரங்களை தொலைப்பதற்காக நாம் தொடர்ந்து பல பிறவிகள் எடுக்க வேண்டியிருக்கிறது. புழுவாக, தேளாக, பாம்பாக, நண்டாக, பசுவாக, மனிதனாக, தேவனாக எந்த பிறவி தேவையோ அதை அடைகிறோம் . எல்லாம் நமது ஸம்ஸ்காரத்தை பொறுத்தே அமைகிறது. நல்ல சம்ஸ்காரம் நம்மை நன்றாக வைக்குமே அதை அடைய வேண்டாமா? துன்பம் ஏன் அடைகிறோம். என்றோ எங்கோ எதற்கோ எவருக்கோ துன்பம் தந்ததால் தானே. துன்பத்தில் தவிப்பவன் மாட்டிக் கொண்டவன் எல்லாரும் தானாகவா சிக்கினான். அவனது பிராரப்தம் அல்லவோ அவனை அலைக்கழித்து துன்புறுத்தியது. அல்பாயுசு, விபத்து, பிறவியிலேயே ஊனம் இதெல்லாம் ப்ராரப்தத்தின் கைவேலை. எங்கோ எவருக்கோ என்னவோ செய்ததின் வட்டியும் முதலும்.
எப்படியிருந்தான் இப்போது பார் அவனை அடையாளம் தெரியவில்லை. ஏதோ ஒரு மாற்றம் அவனை நல்வழிப்படுத்தியிருக்கிறதே என்று சிலரை மெச்சுகிறோம். அது அதிக பட்ச நல்ல ஸம்ஸ்காரங்களின் கூட்டு முயற்சி அவனுக்கு கொடுத்த நற்பயன் அல்லவா.
ஒன்று நிச்சயம். அரசன் அன்று கொல்வான் . தெய்வம் நின்று கொல்லும் . ”நின்று” தான் ப்ராரப்த+ சஞ்சித+ ஆகாமி கர்ம பலன். மண வாழ்க்கை கூட சிலருக்கு மரண அனுபவமாவது கூட இதாலேயே. நிமிஷத்துக்கு நிமிஷம் படு வேதனை, யாருக்கோ எங்கோ எப்பவோ செய்ததின் எதிரொலி என்று எடுத்துக் கொள்ளவேண்டும். அடி மேல் அடியாக இடி போன்று துன்பச்சுமை சிலருக்கு நேர்வதே இந்த ஸம்ஸ்கார காரணமாகத்தான். விதி என்கிறோம் இதை. விதி எப்போது நேர்கிறது தெரியுமா? மோசமான பிராரப்த சம்ஸ்காரம் நிறைய சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறோம் அது காய் நிலையிலிருந்து பழுத்து கீழே விழுகிற சமயம் நாம் எந்த ஜன்மத்தில் இருக்கிறோமே அப்போது வந்து வாய்க்கும்.
கடவுளைப் போய்த் திட்டுகிறோம். நான் நிறைய உனக்கு அபிஷேகம் அர்ச்சனை நல்லது செய்கிறேனே, எனக்கு எதற்கு இந்த தண்டனை? உனக்கு கண்ணில்லையா? ஒரு பாவமும் அறியாத எனக்கு எதற்கு இந்த துன்பம்? —
”ஆஹா. நீ இப்போது செய்த கடுகளவு நல்ல ஸம்ஸ்காரம் எத்தனை ஜன்ம ஜன்மாந்திரங்களாக நீ சேர்த்து வைத்த மலையளவு தீய ஸம்ஸ்காரங்களை போக்கிவிடுமா. கான்சர் நோய்க்கு மிளகு ரசம் மருந்தா? சிலந்தி தான் கட்டிய வலையில் தானே அழியவில்லையா. அதைப் பார்த்து புரிந்துகொள்”.
இனியாவது மனதை இறைவன் பால் வை. நல்ல விஷயங்களை தேடு. நல்லவர்களை நாடு. நல்லதே செய். பலன் எதிர்பாராதே. பலன் உனக்குள்ளேயே இருக்கிறது. அதை நீ உணரும் காலம் வருமே.
இது நல்ல விஷயம் என்றால், உன் நண்பனுக்கு, உறவினனுக்கு எல்லாம் தெரிவி. இது ஒருவனை தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பினால் எழுந்தவனுக்கு மட்டுமல்ல எழுதியவன் எனக்கும் பலன் (நல்ல ஸ ம்ஸ்காரம் !!!) கிடைத்ததாகும் இல்லையா?
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.




