
விஷ் யு ஹாப்பி நியூ இயர்” – நங்கநல்லூர் J K SIVAN
இதோ இப்போதிலிருந்தே ஆரம்பித்துவிட்டது.. வருஷா வருஷம் நடக்கிற, நடத்துகிற ஒரு நாடக வேஷம்.. ”விஷ் யு ஆல் ஹேப்பி நியூ இயர்” இதோ நானும் எல்லோருக்கும் உரக்க சொல்லிவிட்டேன்.
நான் என்ன சொன்னேன்? எப்படி நான் சொல்வதால் நீங்கள் ஹேப்பியாக இருப்பீர்கள்? நான் சொல்லாவிட்டாலும் தான் நீங்கள் ஹேப்பியாக இருக்கப்போகிறீர்கள்? உண்மையிலேயே நாக்கு தழுதழுக்க கண்களில் நீரோடு மனப்பூர்வமாக பேச்சு தடுமாறி நீ நீடூழி வாழணுமப்பா என்று வாழ்த்துகிறார்களா? துளியாவது நாம் வாழவேண்டும் என்ற எண்ணமோ விருப்பமோ, வாழ்த்துபவர்கள் நெஞ்சில் ஒட்டிக்கொண்டிருக்கிறதா?
அது ஏன் ஜனவரி 1ம் தேதி மட்டும் இந்த வாழ்த்து? எந்த விதத்தில் அது ஒஸ்தி?
அது என்ன ஜனவரி 1 ”நியூ இயர்” புது வருஷம்.
முதல் நாள் வரை இல்லாதது எங்கிருந்து முளைத்தது?
புது வருஷம் தொடங்குகிறதாம் அன்றிலிருந்து? எப்படி? எந்தவிதத்தில்? ராத்திரி நடுநிசியில் குடித்து விட்டு ஆடும்போதா? பட்டாசு வெடிக்கும்போதா? கேக் வெட்டி தின்னும்போதா? யாரையோ கட்டிபிடித்தது ஆடும்போதா? காசை நீராக்கும்போதா?
தலையைச் சொரிந்து கொண்டு தேடினாலும் காரணம் புரியவில்லை.நானூறு வருஷங்களுக்கு வெள்ளைக்காரபான் வரும் முன்பு புது வருஷம் நமக்கில்லையா? எத்தனையோ ஆயிரம் வருஷம் நாம் ஹாப்பி நியூ இயர் சொன்னவர்களா?தமிழர்களுக்கு, ஹிந்துக்களுக்கு அவர்களுக்கென்று ஆயிரமாயிரம் வருஷங்களாக இருக்கிறதே. சித்திரை முதல் தேதி தானே வருஷப்பிறப்பு கொண்டாடுபவர்கள் நாம். அன்று கசப்பு புளிப்பு இனிப்பு எல்லாம் உணவில் சேர்ப்போம். கோவிலுக்கு போவோம். பெரியவர்கள் ஆசிரியர்கள், குருமார்கள் காலில் விழுந்து ஆசி பெறுவோம். புது வஸ்திரம் கட்டுவது கூட அநேக வீட்டில் கிடையாது.
ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை வருஷா வருஷம் வருகிறது நமது பாரம்பரியத்தில் இல்லை. 2025 இதற்கு முந்திய வருஷங்கள் போலவே, வழக்கம்போல் நல்லது கெட்டது ,மழை,வெயில், வியாதி ஆஸ்பத்ரி இலவசம், லஞ்சம், எல்லாம் வழக்கம் போலவே கை நிறைய அளிக்கப்போகிறது. எந்த விதத்தில் இது புதிது? நாளை முதல் பெண்கள் பாதுகாப்பு அதிகமாகுமோ? எத்தனை வினோத செயல்களை யூ ட்யூப் காட்டப்போகிறதோ?
காலண்டர் என்பது பன்னிரண்டு மாசங்களைக் காட்டும் 12 காகிதங்கள். சிலது ஒரே பக்கத்தில் மேலே படத்தோடு கீழே 12 கட்டங்களோடு. வேறு வகை. தினசரி ஒரு சீட்டு கிழிக்கும் படியாக அட்டையில் சாமி படத்தோடு ஒரு வகை.
மனதில் தெய்வபக்தி, பெற்றோர் மேல் மதிப்பு மரியாதை, அன்பு பாசம் நேசம் பிறருக்கு நன்மை, உதவி புரியும் பரோபகார சிந்தனை ஒவ்வொருவரின் இதயத்திலும் மனத்திலும் இருந்தால் ஒவ்வொரு நாள் சூரியன் உதிக்கும் போதும் ஹேப்பி நியூ நாள் பிறக்கிறது. வருஷம் முழுதும் இல்லை, காலம் பூரா ஹேப்பினஸ் தானே. மறுபடியும் அந்த ஹேப்பினஸ் நீங்கள் ஆனந்தமாக அனுபவிக்க வாழ்த்துகிறேன்.
மேலே கிருஷ்ணன் சிரித்துக்கொண்டு பார்க்கிறான் (போன வருஷ காலண்டரிலும் இருந்தவன் இப்போது புது வழவழ பேப்பர் காலண்டரிலும் சிரிக்கிறான்).
”தம்பி உன் சந்தோஷம் (happiness) உன் கையில் தானடா இருக்கிறது” என்று சொல்லாமல் சொல்கிறான். கையில் என்று அவன் சொல்வது நமது மனதில் என்று புரிந்துகொள்ளவேண்டும். மனது சொல்வதைத் தானே கை செய்கிறது.
வருஷங்கள் எல்லாமே ஒன்று தான். இயற்கை என்றும் மாறவில்லை. நமது பார்வையில் தான் வித்தியாசம், எதிர்பார்ப்பு. மனிதனின் வாழ்க்கை அவனது மனம் போன வழியில் அமைகிறது. மனதின் விருப்பு வெறுப்பு, எதிர்பார்ப்பு, அதால் வரும் ஏமாற்றம், அது உற்பத்தி செய்யும் கோபம், தாபம், பழி வாங்கும் உணர்ச்சி, மன்னித்தல், மறத்தல், இவை கலந்து கட்டியாகி அவனை அலைக்கழிக்கின்றது. அமைதி இழக்கிறான். உடலும் உள்ளமும் ஆரோக்யத்தை தொலைத்து விடுகின்றன. அவதிப்படுகின்றன. ”நான்”, ”எனது” , இருக்கும் வரை இந்த நிலை நீடிக்கத்தான் செய்யும்.
எது நடக்கிறதோ அதில் நமக்கொரு பங்கும் இல்லை. அது இறைவன் சித்தப்படியே ஒரே சீராகவே என்றும் அமைந்து வருகிறது. ஜனவரி டிசம்பர் எல்லாம் நாம் போடும் மனப்பால் கணக்குகள்.
இறைவன் படைப்பில் மாமரம், தென்னை, வாழை, ஜந்துக்கள் உயிரினங்கள் எல்லாமே ஒன்றே போல், மாறுதல் இன்றி தோன்றி மறைகின்றன. மனிதன் மட்டும் மாறிக் கொண்டே வருவதன் காரணம் அவன் மனத்தில் தோன்றும் எண்ண சுழல்களின் வித்யாசங்கள் .. ”மனசு” தான் மனிசன், ”மனது” தான் மனிதன், mind தான் man. எனவே ஆதாரம் அதே. அதன் இயக்கத்தில் தான் நாம் இயங்குகிறோம். தவறுகள் நம்மால் தான் நிகழ்கின்றன. சந்தோஷம் நாம் உண்டாக்கிக் கொள்வது தான். மற்ற எதன் மேலோ, எவர் மேலோ, நமது காரிய விளைவுகளை சாட்டுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் ஒரு அல்ப திருப்திக்காக. இதால் ஏற்படும் திருப்தி, பொறுப்பின்மை, குறிப்பிட்ட காலத்திற்கு வேண்டு மானால் நிம்மதியைத் தரலாம்.
வேரில் தான் ஒரு மரத்தின் உச்சாணிக்கிளை இலையின் வளர்ச்சி உள்ளது என்ற ரகசியம் புரிந்து விட்டால் ”எல்லாம் உன் அடிமையே, எல்லாம் உன் உடைமையே, எல்லாம் உன்னுடைய செயலே” பிரார்த்தனையில் அர்த்தம் புரியும். வரப்போகும் வருஷங்களையும் சென்ற வருஷங்களோடு ஒப்பிட தோன்றாது. வருங்கால வருஷத்திய பலனை ஜோசியரிடம் கேட்க தோன்றாது. ”உன்னை நீ அறிவாய்” என்பது ஒவ்வொருவரும் தத்தம் ஆன்ம சோதனையில் ஈடுபடுவதை உணர்த்தும் வாக்கியம்.வெளி உலகைவிட உள் உலகம் மிக பிரம்மாண்டமானது. மௌனம் தான் சகலமும் விவரமாக உணர்த்தும் மொழி. எது கிடைத்ததோ அந்த கிடைத்ததில் திருப்தி தான், அதற்கு அவனிடம் செலுத்தும் நன்றி தான் மிகச் சிறந்த ஆரோக்யமான செல்வச் செழிப்பு.
பண்பட்ட மனம் தான் புது வருஷ பரிசு. காணும் யாவும் அவனே, கருத்தில் உறைபவனும் அவனே என்னும்போது உள் நின்று ஒளிரும் அந்த சக்தி தான் வெளியேயும் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது என்பது தெரியும். அன்பு எவரிடமும் எதனிடமும் சுரக்கும். இயற்கையோடு ஒன்றி வாழ வழி தெரிந்துவிடும். அது தான் அவனும் எதிர்பார்ப்பது.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



