
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN
பாதி உடம்பு தங்கம். மீதி ??
மஹா பாரதத்தில் ஒரு அருமையான கதை. மஹா பெரியவா ஒரு பிரசங்கத்தில் சொன்னது: ”பாண்டவராஜா யுதிஷ்டிரன் அஸ்வமேத யாகம் பண்ணும்போது, கணக்கில்லாமல் பல நாள் அன்னதானம் செய்தான். அடேயப்பா, இப்படி எல்லோருக்கும் வயிறும் மனஸும் ரொம்பும்படி எவருமே அன்னதானம் பண்ணினதில்லை என்று ராஜ்யத்தில் எல்லோரும் ஒருமுகமாக போற்றினார்கள். வயிறு ரொம்ப சாப்பாடு போடுவது பெரிசில்லை. மனஸும் ரொம்புகிற மாதிரி பரம அன்போடு போடுவதுதான் விசேஷம்.
அன்னதானம் பண்ணுவது யாகத்தின் அங்கம். இதைப் பண்ணினால்தான் தனக்குப் பலன் கிடைக்கும்’ என்று காரியார்த்தமாக எண்ணாமல், கடனே என்று இராமல், நிஜமான பரிவோடு பாண்டவர்கள் இப்படிப் பெரிய அன்னதானம் செய்து லோகமெல்லாம் ஸ்தோத்திரம் பண்ணுகிறபோது, இதனால் பாண்டவர்களுக்கு கர்வம் வந்துவிடக் கூடாதே என்று கிருஷ்ணனுக்கு தோன்றியது. கர்வம் வந்ததோ அவ்வளவு தான். செய்த அத்தனை தான தர்மமும் அதிலே ”ஸ்வாஹா” ஆகிவிடுமே. ஆகவே சமயத்தில் பாண்டவர்களைக் கொஞ்சம் மட்டம் தட்டினாலும் நல்லதுதான் என்று கிருஷ்ணன் நினைத்தார். வெறுமனே மட்டம் தட்டினால் மட்டும் போதாது; அதோடு ஸர்வ லோகத்துக்கும் தானத்தின் உத்க்ருஷ்டமான தத்வம் தெரியும்படியாகவும் பண்ண வேண்டும் என்று சங்கல்பித்தார். இந்த இரண்டு லக்ஷ்யங்களையும் பூர்த்தி பண்ணுகிற ஒரு ஸம்பவம் அப்போது அவரது ஸங்கல்பத்தால் நடந்தது.
ஏகப்பட்ட ஜனங்கள் சேர்ந்து யுதிஷ்டிரனை புகழ்ந்து உன்னை மாதிரி உண்டா, என ஸ்தோத்ரம் பண்ணினார்கள். அப்போது அங்கே ஒரு விசித்திரமான கீரிப்பிள்ளை ஓடிவந்தது. விசித்ரம் என்னவென்றால் அந்தக் கீரிப்பிள்ளையின் உடம்பில் சரியாக ஒரு பாதி மட்டும் பளபளவென்று தங்கம் மாதிரி பிரகாசித்தது. ஓடிவந்த கீரிப்பிள்ளை போஜன சாலையில் சிந்தியிருந்த அன்னாதிகளின்மேல் புரண்டுவிட்டு, மநுஷக் குரலில், ”இது என்ன பெரிய தானம்? இதென்ன பெரிய யாகம்? அந்தக் குருக்ஷேத்திரத்து உஞ்சவ்ருத்தி பிராம்மணர் பண்ணின தானத்துக்கு இது வீசம்கூடக் காணாது” என்று தூக்கி எறிந்து பேசிற்று.
பார்வைக்கே பாதித் தங்கமாக அது விசித்ரமாக இருந்தது என்றால், மநுஷக் குரலில் வேறு உரக்க பேசினது அதைவிட விசித்ரம். பேசிய விஷயமோ எல்லாவற்றையும் விட அதி விசித்ரம். இந்த லோகம் முழுவதையும் கட்டி ஆள்கிற ஸார்வ பௌமரான யுதிஷ்டிரன் செய்ததை விடப் பெரிய தானத்தை எந்த உஞ்சவ்ருத்தி பிராம்மணன் எப்படிப் பண்ண முடியும்?
உஞ்சவ்ருத்தி என்றால் வீடு வீடாகப் போய்த் தான்ய பிக்ஷை வாங்குவது இல்லை. ஆதி காலத்தில், நம் தர்ம சாஸ்திரங்களின்படி உஞ்சவ்ருத்தி என்றால் சாஸ்த்ரப்படி, களத்திலே நெல்லடித்து, சொந்தக்காரன் அந்த தான்யத்தைக் கொண்டு போகிறபோது, அடிவரைக்கும் வழித்து வாரிக்கொண்டு போகாமல், கொஞ்சத்தை அப்படியே களத்திலேயே விட்டுவிடுவார்கள். பிராம்மணர்கள் தினமும் நெல் காலங்களுக்கு வந்து கீழே கிடைக்கும் நெல் தானியங்களை பொறுக்கி எடுத்துக் கொள்வார்கள். ‘உஞ்சம்’ என்றால் ‘சிதறிப் போனதைத் திரட்டி எடுப்பது’ என்றே அர்த்தம்.
கீரிப்பிள்ளை உஞ்சவ்ருத்திப் பிராம்மணனை ஓஹோ என்று புகழ்ந்ததும் ஸபையில் கூடியிருந்தவர்கள் அதை கேட்டார்கள்.”ஏ கீரிப்பிள்ளையே.நீ யார்? நீ சொல்கிற உஞ்சவ்ருத்தி பிராம்மணன் யார்? அவன் பண்ணின மஹா பெரிய தானம் என்ன?” ”குருக்ஷேத்திரத்தில் ஒரு பெரிய பஞ்சம் ஏற்பட்டது. பெரிய பெரிய ப்ரபுக்களே அன்னத்துக்குப் பரிதவிக்கும்டியான ஸ்திதி ஏற்பட்டது. அப்போது உஞ்சவ்ருத்தி பிராம்மணன் நிலை எப்படி இருக்கும்? எப்போதோ எங்கேயோ பொறுக்கி வந்த கோதுமையில் கொஞ்சம் குப்பையும் கூளமுமாக மட்கி, நாற்றமெடுத்துக் கை வசம் இருந்தது. அதை மாவாக அரைத்து வைத்துக் கொண்டிருந்தார்கள். அவனுடைய குடும்பத்திலே நாலு ஜீவன்கள். பிராம்மணன், அவனுடைய பத்னி, பிள்ளை, மாட்டுப்பெண் – இந்த நாலு பேருக்கு ஒரு வேளைக்குத் தான் இந்த கோதுமை மாவு போதும். ‘ஏதோ இந்த வேளையை இப்படித் தள்ளுவோம்; அடுத்த வேளை இதுவும் இல்லாமல் ப்ராணன் போக வேண்டியதுதான்’ என்று நினைத்து நாலு பேரும் வெறும் மாவை ஆளுக்கு ஒரு பிடி தின்னலாம் என்று உட்கார்ந்தார்கள்.
இந்த ஸமயம் பார்த்து ”தேஹி!” என்று சொல்லிக்கொண்டு ஒரு யாசகர் அங்கு வந்து சேர்ந்தார்.
‘கலத்திலே சோற்றை இட்டுக் கைப் பிடித்து வெளியே இழுப்பது’ என்பார்களே, அந்த மாதிரியான நிலைமை. .
அந்த நிலையிலும் கூட அந்தக் குடும்பத்தில் ஒருத்தராவது அதிதி உபச்சாரத்தில் பின்வாங்கவில்லை. பிராம்மணன், அவனுடைய பத்னி, புத்திரன், மாட்டுப்பெண் ஆகிய நாலு பேருமே போட்டி போட்டுக்கொண்டு அதிதிக்குத் தங்கள் பங்கு மாவைக் கொடுக்க முன்வந்தார்கள்.
அதிதி ஸத்காரம் – அதாவது விருந்தோம்பல் – என்பது ஸமூஹ தர்மம், social duty . இதோடு குடும்ப தர்மம், domestic duty என்றும் ஒன்று இருக்கிறது. ஒரு குடும்பத்தில் இன்னின்னார் இன்னின்ன கடமைப்பட்டிருக்கிறார்கள் என்று நிர்ணயிக்கிற தர்மம் இது. நாலு பேருமாக ஸோஷல் ட்யூட்டியைப் பண்ண முன்வருகிறபோதே, தங்களுக்குள் டொமெஸ்டிக் ட்யூட்டியை எடுத்துக் காட்டிக் கொண்டார்கள். ”புருஷன் இல்லாமல் ஒரு பத்னி இருப்பாளா? உங்கள் பங்கைக் கொடுத்துவிட்டு நீங்கள் உயிர் விட நான் பார்ப்பேனா? அதனால் என் பங்கை நான் தருகிறேன்” என்று பத்னி பிடிவாதம் பிடித்தாள். பிள்ளையோ, ”ப்ரத்யக்ஷ தெய்வமான மாதா பிதாக்களுக்குப் பிராணாபத்து என்கிறபோது ஒரு புத்ரன் அதைப் பார்த்துக் கொண்டிருக் கலாமா?” என்று அவர்களைத் தடுத்து, அதிதிக்குத் தன் பங்கைத் தரப்போனான். உஞ்சவ்ருத்தி பிராம்மணனிடம் அவனுடைய பத்னி எந்தப் பதிவிரதா தர்மத்தை எடுத்துச் சொன்னாளோ, அதையே மாட்டுப்பெண் பிள்ளையிடம் சொல்லி, ”நான்தான் என் பங்கைத் தருவேன்” என்று பிடிவாதம் பண்ணினாள்.
நாமாக இருந்தால் ஏதாவது ஒரு வஸ்து நமக்குக் கிடைக்கிறதென்றால் நான் முந்தி, நீ பிந்தி என்று போட்டி போடுவோம். கொடுக்கிறதென்றால் அவரவரும் பின் வாங்கத்தான் செய்வோம். இந்த ஏழை பிராம்மணக் குடும்பத்திலோ உயிரையே கொடுப்பதற்கு, பிராணத்யாகத்துக்குப் போட்டி போட்டார்கள். த்யாகம், தானம் எல்லாம் பணக்காரர்களால்தான் முடியும் என்றில்லை! பரம ஏழைகளாலும் முடியும். பெரிய ராஜாவான ரந்திதேவன் குடும்பத்தினர் செய்த அதே த்யாகத்தைத்தான் இப்போது பரம தரித்திரர்களான இவர்களும் செய்கிறார்கள்!
கடைசியில் பிராம்மணன் மற்றவர்களை அடக்கிவிட்டு, ”குடும்பத் தலைவன் என்று பேர் வைத்துக் கொண்டிருக்கிற என் கடமை உங்கள் மூவரையும் ரக்ஷிப்பது. மனஸறிந்து உங்களில் எவரையும் பட்டினி போட்டு மரணத்துக்கு ஆளாக்கினால் நான் ப்ரஷ்டனாகி விடுவேன்” என்று தீர்மானமாகச் சொல்லித் தன் பங்கு மாவை யாசகருக்கு அன்போடு தானம் செய்தான்.
அவர் அதைச் சாப்பிட்டுவிட்டுப் பசி தீரவில்லை என்றார்.
உடனே பத்னி தன் பங்கை அவருக்கு மகிழ்ச்சியோடு கொடுத்தாள்.
அதையும் சாப்பிட்டுவிட்டு, ‘இன்னமும் கொண்டா!’ என்று உட்கார்ந்துவிட்டார் அதிதி.
கொஞ்சம்கூடக் கோபமே இல்லாமல் பிள்ளையும் தன் பங்கு மாவை அவருக்குக் கொடுத்தான்.
அதையும் ஏப்பம் விட்டுவிட்டு, இன்னும் வந்தாலும் கொள்ளும் என்று உட்கார்ந்துவிட்டார் அதிதி.
கடைசியில் மாட்டுப்பெண்ணும் அவருக்கு மனஸாரத் தன் பங்கு மாவைக் கொடுத்தாள்.
அதிதி அதைச் சாப்பிட்டு முடித்தாரோ இல்லையோ, ஆளைக் காணவில்லை!
அந்த நாலு பேர் மேலே ஆகாசத்திலிருந்து புஷ்ப வ்ருஷ்டி பொழிந்தது.
”நான்தான் தர்மதேவதை. உங்களைப் பரிசோதிக்கவே யாசகப் பிராம்மணனாக வந்தேன். பரீக்ஷையில் நீங்கள் அற்புதமாக ஜயித்துவிட்டீர்கள். உயிரைக் கொடுத்தாவது விருந்\தோம்பலை நடத்திக் காட்டுவதில் உங்கள் குடும்பத்தைப்போல் எங்குமே கண்டதில்லை. அவரவரும் கொடுத்த பிடி மாவு உங்களுக்கு ஸ்வர்கத்திலேயே இடம் ‘பிடி’த்துக் கொடுத்துவிட்டது. எல்லாரும் ஆனந்தமயமான தேவலோகத்துக்கு வந்து சேர்வீர்களாக” என்று அசரீரி கூறிற்று.அசரீரியா, தர்மதேவதை நேரில் சொன்னதா என்பது சரியாக நினைவில்லை. எல்லாம் ஒன்று தான்.
தேவர்கள் அலங்கார விமானத்தோடு வந்தார்கள். உஞ்சவ்ருத்தி பிராம்மணக் குடும்பத்தினர் அதிலே ஏறிக்கொண்டு ஸ்வர்கத்துக்குப் போய்ச் சேர்ந்தார்கள். ஸ்வர்கத்துக்குப் போனார்கள் என்றால் இந்த லோகத்தில் ப்ராணனை விட்டார்கள் என்று அர்த்தம். ஸ்வர்கவாஸம் கிட்டவேண்டும் என்று எண்ணி அவரகள் தானம் செய்யவில்லை. விருந்தோம்பல் பண்புக்காகவே உயிரைவிட்டார்கள். ஆகவே தானாக ஸ்வர்க்கம் ஸித்தித்தது.
இந்தக் கதையைச் சொன்ன கீரிப்பிள்ளை, ”அந்த மையத்தில் நான் குருக்ஷேத்திரத்தில் அந்த வீட்டில்தான் இருந்தேன். அவர்கள் தானம் கொடுத்த மாவு ஏதோ துளித் துளி கீழே சிந்தியிருந்தது. நான் அந்த இடத்துக்கு மேலாக ஓடுகிறபோது என் சரீரத்தின் இந்தப் பக்கத்தில் அந்த மாவு பட்டதனால்தான் இந்தப் பக்கமே ஸ்வர்ண வர்ணமாகி விட்டது”….
இப்போது கூட ரொம்ப நல்லவர்களைத் ‘தங்கமான மனஸு’ என்றுதான் சொல்கிறோம். இங்கிலீஷில்கூட ‘Golden hearted’ என்கிறார்கள் அல்லவா? தங்க மனஸு படைத்த த்யாகக் குடும்பம் செய்த தானத்தில் இது ஸ்தூலமாகவே நிஜமா யிருக்கிறது!
”அதற்கப்புறம், இப்படி ஒரு பக்கம் மட்டும் தங்கமாக இருக்கிறதே, இதே மாதிரி வேறெங்காவது பரம உத்க்ருஷ்டமான தானம் நடக்கிற இடத்தில் சிந்திப்போனது இன்னொரு பக்கத்தில் பட்டால் அதுவும் தங்கமாகி, முழுக்கத் தங்கமாகலாமே என்கிற ஆசையில் நானும் பெரிய பெரிய ஸந்தர்ப்பணைகள், அன்னசாலைகள், தர்மசத்திரங்களுக்கெல்லாம் போனபடிதான் இருக்கிறேன். ஆனால் என் மறுபாதி தங்கமாக மாறவேயில்லை. தர்ம புத்ரர் மஹா பெரிய யாகம் பண்ணி, அன்னதானம் செய்கிறாரே இங்கே சிந்திப் போனதிலாவது என் சரீரத்தின் பாக்கி பாதி தங்கமாகுமாக்கும் என்றுதான் இங்கும் வந்து புரண்டு பார்த்தேன். இங்கேயும் பலனைக் காணோம்!”என்று கீரிப்பிள்ளை முடித்தது.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



