
ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய ராமாயணம். -நங்கநல்லூர் J.K. SIVAN
சிறுவயது முதல் இன்று காலை இதை எழுதுவது வரை எத்தனையோ முறை, எத்தனையோ மஹான்கள் பிரசங்கத்தை, எழுத்தை, ஹரி கதா காலக்ஷேபத்தை, நாடகத்தை, கீர்த்தனைகளை, எல்லாம் கேட்டும் , படித்தும், பார்த்தும் கூட ராமாயணம் 85 வருஷங்களாகியும் இன்னும் எனக்கு அளிக்கவில்லை. நானே எழுதக் கிளம்பி விட்டேன். எத்தனையோ கட்டுரைகள்,கதைகள் ராமனைப் பற்றி எழுதியும் இன்னும் கடலளவு இருக்கிறது அவனைப் பற்றி, அவன் வாழ்க்கையை பற்றி சொல்வதற்கு.
ராமாயணம் என்றால் நமக்கு ப்ரதானமானது ஸ்ரீ வால்மீகி ராமாயணம், ஸ்ரீ துளசிதாசர் ராமாயணமாகிய ஸ்ரீ ராமசரித மானஸ் , அல்லது கம்பராமாயணம் மட்டும் தான். இன்னொரு அற்புத ராமாயணம் இருக்கிறது. அது நான்கு வேதங்கள், மஹா பாரதம், பாகவதம் 18 புராணங்கள் எழுதிய வேத வியாசர் எழுதிய அத்யாத்ம ராமாயணம். அதை எழுத நண்பர் மேற்கு மாம்ம்பலம் ஸ்ரீ R விஸ்வநாதன் எனக்கு ஒரு அத்யாத்ம ராமாயணம் புத்தகம் பரிசளித்தார். அதை படித்துவிட்டு தான் ”ரமே ராமே மனோரமே” புத்தகம் எழுதி வெளியிட்டேன்.
அத்யாத்ம ராமாயண தொடக்கத்தில் ஸ்ரீ ஜானகி ஜீவனாஷ்டகம் என்ற அருமையான எட்டு ஸ்லோகங்களுமே ஸ்ரீ ஜானகி தேவியின் வாழ்வாதாரமான ராமனை வேண்டிக்கொண்டு ஆரம்பிக்கிறது.
आलोक्य यस्यातिललामलीलां सद्भाग्यभाजौ पितरौ कृतार्थौ । तमर्भकं दर्पकदर्पचौरं श्रीजानकीजीवनमानतोऽस्मि ॥ १ ॥
श्रुत्वैव यो भूपतिमात्तवाचं वनं गतस्तेन न नोदितोऽपि । तं लीलयाह्लादविषादशून्यं श्रीजानकीजीवनमानतोऽस्मि ॥ २ ॥
जटायुषो दीनदशां विलोक्य प्रियावियोगप्रभवं च शोकम् । यो वै विसस्मार तमार्द्रचित्तं श्रीजानकीजीवनमानतोऽस्मि ॥ ३ ॥
यो वालिना ध्वस्तबलं सुकण्ठं न्ययोजयद्राजपदे कपीनाम् । तं स्वीयसन्तापसुतप्तचित्तं श्रीजानकीजीवनमानतोऽस्मि ॥ ४ ॥
युद्ध्याननिर्धूत वियोगवह्नि–र्विदेहबाला विबुधारि वन्याम् । प्राणान्ददे प्राणमयं प्रभुं तं श्रीजानकीजीवनमानतोऽस्मि ॥ ५ ॥
यस्यातिवीर्याम्बुधिवीचिराजौ वंश्यैरहो वैश्रवणो विलीनः । तं वैरिविध्वंसनशीललीलं श्रीजानकीजीवनमानतोऽस्मि ॥ ६ ॥
यद्रूपराकेशमयूखमाला- -नुरञ्जिता राजरमापि रेजे । तं राघवेन्द्रं विबुधेन्द्रवन्द्यं श्रीजानकीजीवनमानतोऽस्मि ॥ ७ ॥
एवं कृता येन विचित्रलीला मायामनुष्येण नृपच्छलेन । तं वै मरालं मुनिमानसानां श्रीजानकीजीवनमानतोऽस्मि ॥ ८ ॥
इति श्री जानकीजीवनाष्टकम् ।
இதன் சுருக்கம்:
”ராமன் – பெற்றோர்களை மகிழ்வித்த குழந்தை.
அப்பா ”காட்டுக்கு போடா” என்று சொல்லவில்லை . பெற்ற அம்மா சொல்லவில்லை. வளர்த்தவள், கைகேயி தான் அறிவித்தாள். அவள் மூலம் கேட்டதும், அவள் வார்த்தையைத் தட்டாமல், மகிழ்ச்சியாக வனவாசம் மேற்கொண்டவன்.
ஜடாயுவின் துன்பத்தில் மனமுருகி தன் மனைவியின் பிரிவினையைக் காட்டிலும் வருந்தினவன்,
தன் துயரை விட, வாலியினால் துன்புற்ற சுக்ரீவன் துயர் துடைக்க முடிவெடுத்தவன்,
சதா சர்வ காலமும் ராம ஸ்மரணையில் அசோகவனத்தில் தவத்தில் இருந்தவளின் வாழ்வாதாரமானவன்,
மஹா தவ வலிமை வாய்ந்த விஸ்ரவஸ் புத்திரன் ராவணனை வதம் செய்தவன்,
சகல உயிர்களும் தேவர்கள் உள்பட, மகிழும் சுந்தர ரூபன், காருண்யன்,
மாயையால் மனிதனாக, மன்னனாக, முனிவர்கள் மனம் நிரம்பியவன் ஸ்ரீ ராமன் ” —
இது தான் ஜானகி தனது நாதனைப் போற்றும் ஸ்லோகங்கள்.
அடுத்ததாக அத்யாத்ம ராமாயணத்தின் பெருமை. எல்லோரும் அதை படிப்பதால் பெறும் பலன்.
”மாசற்ற, ஞானவடிவான பகவான் தக்ஷிணாமூர்த்திக்கு நமஸ்காரத்தோடு ரிஷி சுதர், நாரதர் என்ன செய்தார் என்று சொல்வது போல் ஆரம்பமாகிறது. நாரதர் உலகமெல்லாம் சுற்றிவிட்டு பிரம்ம லோகம் சென்று பிரமனை வணங்கினார்.
”என்ன நாரதா, விஷயம் சொல்?”
”நீங்கள் தான் சொல்லவேண்டும்.”
”எதைப் பற்றி நாரதா?” என்றார் பிரமன்.
‘ஏற்கனவே, நல்வினை, தீவினை பற்றி உணர்த்தினீர்கள் . இப்போது கலியுகத்தில் நடக்கும் அக்ரமங்கள் உங்களுக்கு தெரியுமா? நான் போய் பார்த்து வந்ததால் சுருக்கமாக செய்திக் குறிப்பு தருகிறேன். அங்கு என்னவெல்லாம் செய்கிறார்கள், நடக்கிறது பாருங்கள். அவை தீர வழி சொல்லுங்கள்”.
”கலி முற்றிவருகிறதால், மக்கள் பிறர் சொத்து, சொந்தங்களை அபகரிப்பது, துன்புறுத்துவது, உடலே ஆன்மாவென நினைப்பு, கடவுள் நம்பிக்கை இன்மை, மிருக குணம், அந்தணர்கள் வேத சாஸ்த்ரங்களை விற்று காசு பண்ணுவது, பேராசை, அனைவருமே தத்தம் ஸ்வதர்மங்களை காற்றில் பறக்க விடுவது, பெண்கள் தமது பெற்றோர், மாமியார் மாமனாரை அவமதிப்பது, முதியோர் மனதை கடும் வார்த்தைகளால் நோகடிப்பது, கணவனையே மரியாதையின்றி தூஷிப்பது,–
அடாடா ….இன்னும் இதுபோல எத்தனையோ சுவாமி. இதெல்லாம் எப்படிப் போக்குவது? என்று பெருமாள் நீங்கள் தான் அருள வேண்டும்.”
”இவ்வளவு தானே நாரதா?
முன்பு பார்வதி தேவி சிவனிடம் உபதேசம் கேட்டு பெற்றது தான் இப்போதும் ஏன் எப்போதும் கூட உதவும். அது தான் ராம தத்துவம்,
”அத்யாத்ம ராமாயணத்தை இரவும் பகலும் பார்வதி தேவி பாராயணம் பண்ணி அந்த மாதாவே ஆத்மானந்தத்தில் மூழ்கினாள் ” என்றான் பிரம தேவன்.
இந்த விஷயம் பிரசாரமாகி, மக்கள் படித்து, பாராயணம் பண்ணினாலே கலியின் பிடி குறையும். அரை சுலோகம் படித்தாலும் கூட படித்தவன் பாபம் விலகும். முழுதும் படித்தவன் ஜீவன் முக்தன். அதனால் அஸ்வமேத யாகம் செய்த புண்ய பலன், காதால் கேட்டால் கூட பாதகங்கள் வராது. பல புண்ய நதிகளில் ஸ்நானம் செய்த பலன் கிட்டும், பாராயணம் செய்தவனுக்கு தேவர்களே கட்டுப்படுவார்கள். ஏகாதசி , ராமநவமி உபவாசத்தோடு பாராயணம் செய்தவர் இனி பிறவி அற்றவர். காயத்ரி மந்த்ர புரஸ்சரணம் செய்த பலன், சகல கார்ய சித்தி அடைவர். இந்த ராம கீதையால், அத்யாத்ம ராமாயணத்தால் ப்ரஹ்மஹத்தி தோஷம் விலகும்.”
”நாரதா, நான் ஒன்று ஒன்றாய் ஒவ்வொரு பலனையும் அடுக்கி அடுக்கி சொல்வதை விட ஒரே வார்த்தையில் சொல்லட்டுமா? என்ற பிரமன் தொடர்கிறான்.
”ஆஹா சொல்லுங்கள் பிரபு” என்கிறான் நாரதன்.
”வேதம், ஸ்ம்ரிதி, இதிஹாச, புராணம் சகலமும் படிப்பதால் அடையும் பெரும் பயன்கள் எல்லாம் அத்யாத்ம ராமாயணம் கேட்பதால் வரும் ஒரு சிறு பலனுக்கு கூட ஈடாகாது . ”
பிரமன் இவ்வாறு நாரதன் மூலம் சொன்னது நமக்கும் உபயோகப்படவேண்டும் என்பதற்காக இந்த அத்யாத்ம ராமாயணத்தை தமிழில் சுருக்கமாக எழுத எனக்கும் தோன்றியது.
ராமன், ராமாயணம் என்பது இந்தியாவில் மட்டும் அல்ல உலகில் பல தேசங்களில் இன்னமும் போற்றப்பட்டு வருகிறது. இந்த நாட்டை ஆள்பவர்கள் இதை முன்னர் சிறப்பாக ஆண்டு ராம ராஜ்ஜியம் என்று பேர் வாங்கித்தந்த ராமனை நன்றாக அறியவேண்டும், அவனிடமிருந்து ராஜ்ய பரிபாலனம் கற்றுக்கொள்ளவேண்டும். மக்கள் சுகமடைய வேண்டும். நேர்மை, நீதி, ஞாயம், அன்பு எல்லாம் பரவ வேண்டும். எல்லோரும் ஓரினம், எல்லோரும் சகோதரர் என்ற உணர்வு பெருகவேண்டும் என்ற படிப்பினை ராமாயணத்தில் இருந்து அறிந்து மக்கள் பயன் பெறுதல் வேண்டும்..
ராம ராஜ்யத்தை பற்றி சொல்லும்போது அயோத்தியில் எந்த வீட்டுக்கும் கதவு கிடையாது என்பது ஞாபகத்தில் இருக்க வேண்டும். ”கொள்வார் இல்லை என்பதால் கொடுப்பவரும் இல்லை”, அதாவது தானம் யாருமே கொடுக்கின்ற வழக்கம் இல்லை. ஏனென்றால் கொடுத்தால் அதை வாங்குவதற்கு எவருமே இல்லை. எல்லோரிடத்திலும் எல்லாமே இருந்ததே என்பார் கம்பர். போட்டது போட்டபடியே கிடக்கும். எடுத்தால் கை வெட்டுவார்கள் என்ற அரபு நாட்டு தண்டனை பயத்தால் அல்ல.
நான் சிறுவனாக இருக்கும்போது ராஜாஜி எழுதிய ”சக்ரவர்த்தி திருமகன்” தொடர் கல்கியில் வந்தது. கல்கி விலை அப்போது நாலணா. எங்கள் வீட்டில் வாங்க மாட்டார்கள். ரெண்டுதெரு தண்டி ஜாக்கரியா காலனி என்ற இட த்தில் வசித்த ராமநாதன் என்ற ஒரு பள்ளிக்கூட வாத்யார் மாமா வாங்குவார். அவர் வீட்டு மாமி என்னை ஓடிப்போய் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் சத்தார் கடையில் கல்கி வாங்கி கொண்டு வர சொல்வாள். படிக்க எனக்குத் தருவாள். நன்றிக் கடனாக அவளுக்கு கடையில் தேவையான மளிகை சாமான்கள் வாங்க, மிஷினுக்கு போய் மாவரைத்து கொடுக்க நான் உபயோகப்பட்டதே இந்த காரணத்தால் தான். ஒவ்வொரு வாரமும் படிப்பேன். ராமனை எனக்கு பிடித்தது. பின்னர் ஒரு ரூபாய்க்கு பவன்ஸ் ஜர்னல் நிறுவனம், பாரதீய வித்யா பவன், இதை ஆங்கிலத்தில் வெளியிட்டது. ஸ்ரீ கே எம் முன்ஷி செய்த பெரிய புண்ணியம் இது. ராமாயணம் என்று ஆங்கிலத்தில் பெயர். நிறையப்பேர் கல்யாணங்களுக்கு வீட்டு விசேஷங்களுக்கு இந்த ஒரு ரூபாய் புத்தகத்தைத் தான் பரிசளிப்பார்கள். இப்போது கிடைத்தாலும் அனைவரும் படிக்க வேண்டிய பொக்கிஷம் இது.
எனது ”ரமே ராமே மனோரமே” புத்தகம் சில பிரதிகள் உள்ளன. தேவைப்படுவோர் அணுகவும் J.K. SIVAN வாட்ஸாப்ப் நெம்பர். 9840279080. விவரம் அனுப்புகிறேன்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.

