MY FIRST DOCTOR J K SIVAN

எனது  முதல்  டாக்டர்.    நங்கநல்லூர்   J K  SIVAN 

என்னுடைய  முதல் டாக்டர்  முனுசாமி.  அவர் தன்னை எப்போதும் டாக்டர் என்று சொல்லிக் கொண்ட தில்லை. அவரைத் தெரியாதவர்கள் சாளிகிராமம் வடபழனியில்  இல்லை என்று  சொல்லலாம். ஓஹோ அவ்வளவு  பெரிய டாக்டரா?  இல்லை அவர்  போட்டோ கிடையாது. இது தான் அவர்:
கருவலாக  முகம் சுருங்கி, முன்  தலை முடி  யிழந்து,  அருகில்  ரெண்டடி  முன்னால் இருந்தாலே   கவர்னர்  பீடி  மணத் தோடு,  சுருங்கிய  கண்கள்   ஒட்டிய  கன்னங்களின்  மேல் இருந்து  விரக்தியாக  ஒரு  பார்வையை  வீழ்த்த  தலையில்  அழுக்கு   நீல  துணியில்  முண்டாசோடு,   நாலரை  அடி உயரத்தில்,  இடுப்பில்  கட்டம்  போட்ட பச்சை லுங்கி, அதை  மடித்து  முழங்காலுக்கு மேலே  டப்பா கட்டு கட்டிக்கொண்டு, காலில் செருப்பில்லாமல்  தாங்கி  தாங்கி  நடந்து கொண்டு    ரெண்டு தோளிலும்    பெரிய  கித்தான்  பைகள், இதோடு   கக்கத்தில்  ஒரு  சிறிய  அலுமினிய  பெட்டியோடு   உங்களுக்கு  யாராவது  தெரியும்  என்றால்  அது  தான்  நான்  சொல்லும்  டாக்டர் முனுசாமி.
அவரை  நீங்கள்  இப்போது  தேடவோ  பார்க்கவோ  முயல வேண்டாம்.  75-80 வருடங்களுக்கு  முன்பு  நான் பார்த்தபோதே  அவர்  50வயது கடந்தவர்.
அவருடைய  கித்தான் பைகள் தான் அவருடைய மொபைல்  டிஸ்பென்சரி. பார்மசி.PHARMACY.

எந்த காலேஜில் படித்தவர், எந்த ஆபரேஷன் செய்பவர்?

 ஸாரி , அவர் பள்ளிக்கூடம் போகாதவர்.  ஆங்கிலம் தெரியாது. அவரிடம் கத்தி கத்திரிக்கோல் கிண்ணம் கண்ணாடி,கத்தியை தீட்டும் தோல் வார்,  பிளாஸ்டிக் சீப்பு,  சரக் சரக்  என்று தலையில்  புல்டோசர் போல் உழும் ஏதோ ஒரு மெஷின்.  இத்யாதி சமாச்சாரங்கள் எல்லாம்   அவருடைய  அலுமினிய பெட்டிக்குள் அடக்கம். 

”என்னய்யா உளறுகிறீர்? டாக்டர்  அலுமினியம்  பெட்டி  கித்தான்  பைகள் சுமந்துகொண்டு செருப்பில்லாமல் லுங்கி டப்பாக்கட்டுடன் நடந்து வருவாரா?  

நான் என்ன பொய்யா சொல்கிறேன்.உங்கள் தலையில் அடித்தே சொல்கிறேன். ஆமாம். அப்படித்தான். 

உங்களுக்கு எத்தனையோ முனுசாமிகள்  தெரிந்திருக் கலாம். எங்கள் ஊரில் எல்லோருக்கும் முனுசாமி என்றால் இவர் ஒருவர் தான். இவர் இல்லாமல் எங்கள் ஊரில் பிரசவம் நடக்காது, தவில் நாதஸ்வரம் வாசிக்காது, மாதாமாதம் க்ஷவரம் நடக்காது. சகல வியாதிகளுக்கும் நிவாரணம், வைத்தியமும்  கிடைக் காது.  சகலத்துக்கும்  முனுசாமியே.

முனுசாமி  யார்?   இந்த கேள்விக்கு  உடனே  ஒரு  வார்த்தையில்  பல  பதில்கள்  கிடைக்கும்.
அவர்  ஒரு  டாக்டர்,  நாவிதர்,  கிருஷ்ணன் வேஷதாரி,  ஜோசியர். நாதஸ்வர வித்வான்.  இது  அத்தனையுமே  சரியான  விடைகள்.
வேப்பமரத்தடியில்  எங்களை உட்கார வைப்பார்  அப்பா.  எங்கள் தலையில் தண்ணீரை தெளித்து  பிளாஸ்டிக் சீப்பால் வாரி  அந்த  ஒரு  பயங்கர  மெஷின். புல்டோசர் போல  நெற்றியிலிருந்து  பின் மண்டை  வரை  ஊர்ந்து செல்லும். அப்போது   மண்டையை  அது படுத்தும்  பாடு  எனக்கு தான்  தெரியும்.  ஒரு  கட்டிங்  ப்ளேயர்  போல்  அதை  அமுக்கி அமுக்கி  முனுசாமி  அதை  நகர்த்தியபோது  தலை முடியை  வேரோடு அது  பிடுங்கும்.  ”கிருஷ்ணா  நீ  அப்போதெல்லாம்  எங்கு  போனாய்  என்னை  காப்பாற்றாமல்?  புல் வெட்டுவது போல்  வெட்ட வேண்டிய அந்த  பயங்கர  ஆயுதம்  ஏனோ  வேரோடு  பிடுங்கும்  ஆபத்தான உபகரணமாக  இருந்தது.  அதை  எங்கள் எல்லோர்  தலையிலும் செலுத்தினால்  தான்  எங்கள்  அப்பா  காசு  கொடுப்பார்.
”முனுசாமி  மெஷின்  கொண்டு வந்திருக்கியா?  என்பது  தான் அவர் கேட்கும்  முதல்  கேள்வி.   ஆகவே  அந்த  ஹிட்லர் முனுசாமி எங்களை  படாத  பாடு படுத்தி னான்.    ஒரு  தலைக்கு  நாலணா.  இதை மாதத்திற் கொருதரம்  ஏன்  செலவு  செய்யவேண்டும்  என்று என்  தந்தையார்  விருப்பப்படி  மூன்று மாதம்   முடி வளரா தபடி பண்ணுவதற்கு  அந்த  மெஷின்  உதவியது.
நாங்கள்  எவ்வளவோ கெஞ்சியும்  முனுசாமி இரக்கமின்றி  ஒரு  அங்குலம்  நீளம்  முடி  கூட  விட்டு வைக்க மாட்டான்.  படு பாவி.  கத்தி  வேறு  பல  இடங்களில்  காதிற்கு பின்னால்  பின்னந்தலையில்  எல்லாம்  காயப்படுத்தும்.  எரிச்சல் உள்ளேயும்  வெளியேயும்  எங்களுக்கு.  முடி  திருத்த  அமரும்  முன்பே  எங்கள்  ஆடைகள்  அகற்றப்பட்டு  நாங்கள்  மூன்று  சகோதரர்களும்  பழனி  ஆண்டியாக  கோவண தாரிகள்.   முடி எடுப்பு   விழாவுக்குப்  பிறகு  நேராக  வீட்டின்  பின்புறம்  கிணற்றடியில்  அமர்ந்து  எங்கள்  அம்மா  வாளியால்  ராட்டினம்  ஓசைப்பட  நீர்  மொண்டு  எங்கள்  தலைகளில்  கொட்டி  அபிஷேகத் திற்கு  பிறகு தான்  வீட்டில்   உள்ளே அனுமதி.   இந்த  எல்லா  அக்ரமமும்  எங்கள்  வீட்டு  வேப்ப மரத்தின்  அடியில்  தான் நடக்கும்.   அது  தான்  ”முனுசாமி முடி திருத்தகம்.”

எங்களுக்கு   –  எனக்கு,  என்  அண்ணன்கள்  ரெண்டு பேருக்கு,  அப்பாவுக்கு, இவ்வளவு  பேருக்கும்  முனுசாமி உதவிக்கொண்டிருக்கும்போதே  பக்கத்து  வீட்டிலிருந்து  ஆள்  வந்து விடும்.  ”என்ன  முனுசாமி,   ஆச்சா  சீக்கரம்  வா! ”  சுப்ரமணிய அய்யர்  குரல்  எதிரொலிக்கும்.   ”வந்துட்டேன்  சாமி.  இதோ…  இதோ”..
‘ இதோ.”நேரம்  ஓடிக்கொண்டே  இருக்கும்.  அப்பா  எல்லார்  தலையும்  பார்த்து முழு திருப்தி (திருப்பதி!!) பெற்ற பின்னே  தான்  ஒரு  ரூபாயை கொடுப்பார்.  முனுசாமி பேரம்  பேசுவான்.  எங்கப்பா  தான்  ஜெயிப்பார்.  நாலு  பேருக்கு என்பதால்  டிஸ்கவுன்ட் கேட்பார்.  முனுசாமி  கஸ்டமர்  ஸேடிஸ்பேக்ஷன் என்பதற்காக  கொடுத்ததை  வாங்கிக்கொண்டு  நகர்வான்.

நகர்வதற்கு  முன்பு  க்ஷவரத்தில்   விட்டதை  வைத்தியத் தில்   பிடிப்பான்.  இப்போது  முனுசாமி  டாக்டர்.  எனக்கு என் சகோதரர்களுக்கு  எங்காவது  சொத்தைப்பல்,  அஜீரணம்,  வயிற்று வலி, சுளுக்கு, அடிபட்ட  காயம், சிரங்கு,  இது  போன்ற  எந்த  வியாதி  இருந்தாலும் தானே  கண்டுபிடித்து  எல்லாவற்றிற்கும்  வெள்ளை வெள்ளையாக  சில  பொடிகள்,  சூரணங்களை, உருண்டை உருண்டையாக  மிளகு சைஸ் ரவுண்ட்  உருண்டைகள்.  சிறுசாக  பொட்டலம்  கட்டி  கித்தான்  பையில்   இருப்பதிலிருந்து  சிலவற்றை  எங்களுக்கு  வழங்குவான்.  தேனில்  குழைத்து  சாப்பிட வேண்டும்.  

பல்லில்  குழி  இருந்தால், லேகியம்  போல,  புளி  போன்ற கெட்டியான  ஒன்றை  பல்லில்  வைத்து  ஒரே  அழுத்து அழுத்துவான்.  வலிக்கும்.   எரியும்  கூட.  இதற்கு  அப்பா  கேட்டதை  கொடுத்திடுவார்.  

நான்கு பேருக்கும்  வீட்டில்  பெண்கள்  சொன்ன  வியாதிகள்  அனைத்திற்கும்   ஏறக்குறைய  ஒரே சூரணம்  மாதிரி பல அளவில்,  பல  பொட்டலங்கள்  கை மாறும்.  அனைவரின்  வியாதிக்கும்  மருந்திற்கான   பீஸ்   அதிக  பட்சம்  நாலு  ரூபாய் கொடுப்பார்.  எனது  கடை வாய் பல்  ஒன்று  இடது பக்கம்  வெகுநாட்களாக  குழி  விழுந்து கொண்டு வந்ததை  முதலில்  மூடிய  டாக்டர்  முனுசாமி என்னால் மறக்க முடியாதவர்.

 

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2569

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;