SRIMADH BHAGAVATHAM 10TH CANTO – J K SIVAN

ஸ்ரீமத் பாகவதம்  –  நங்கநல்லூர்   J K   SIVAN
அகாசுரன் தலை வெடித்தது.  

”பரீக்ஷித்,   உனக்கு  ஸ்ரீ கிருஷ்ணன் பால்ய லீலைகளை சொல்லும்போது எனக்கு எவ்வளவு உற்சாகமாக  இருக்கிறது தெரியுமா. நானே  அங்கே மீண்டும் க்ரிஷ்ணனோடு  சேர்ந்து விளையாடியது போல் இருக்கிறது. ஒருவேளை கோகுலத்தில்,  பிருந்தாவனத்தில்,  கிருஷ்ணனின்   கோப குல  நண்பர்களில் நானும் ஒருவனாக  இருந்திருப்பேனோ, அதனால் தான் அந்த அனுபவத்தை  ருசி கண்டதினால் மீண்டும் மீண்டும் மனது அதைப் பெற  விழைகிறதோ?” என்று தோன்றுகிறது.
‘சுவாமி,   எனக்கும் ரெட்டிப்பு சந்தோஷம். முதலில் கிருஷ்ணன் சரித்திரத்தின்  சுகம். ரெண்டாவது அதை உங்கள் வாயால் ஸ்வானுபவத்தோடு  சேர்த்து கேட்கும்போது கிடைக்கிற  சுகம்.  உங்கள் பெயரே  சுகாசார்யர் அல்லவா?”
”பரீக்ஷித்,  கேள்  சொல்கிறேன்.   கிருஷ்ணன்  இப்போது  கொஞ்சம் வளர்ந்து விட்டான். நந்தகோபனுக்கு துணையாக  ஒத்தாசையாக  அவனும்  கன்றுக்   குட்டிகளை வயல்களுக்கு கூட்டிக்கொண்டு போய்  மேயவிட்டு, குளிப்பாட்டி,  அவற்றோடு விளையாடிவிட்டு சாயந்திரம் வீடு திரும்புவான். அவனுடைய நண்பர்களும் கூடவே  இருப்பார்கள்.  வீட்டிலிருந்து ஒவ்வொருவரும் இனிய சுவையான  உணவை பொட்டலங்கள் கொண்டுவருவார்கள்,  ஏக குஷியோடு எல்லோரும் அதை  யெல்லாம்  கலந்து ஒருவருடையதை இன்னொருவர் சுவை பார்த்து  சேர்ந்து உண்பார்கள்.  எல்லார் வீட்டிலுமே  அற்புதமான  தின்பண்டங்கள், உணவு வகைகளை செய்து கொடுப்பார்கள். காரணம். கிருஷ்ணன் அதையெல்லாம் தானும் கொஞ்சம் உண்பான் என்பதால்.
ஒருநாள் வழக்கம்போல  காலையிலேயே  மேய்ச்சல் காட்டுக்கு கன்றுக்குட்டிகளோடு   கிருஷ்ணனும் நண்பர்களும் சென்றுவிட்டார்கள்.
வழக்கம் போல  கிருஷ்ணன் ஒரு சங்கை ஊதினான். அது அந்த கிராமத்தில் எல்லா வீட்டுக்கும் கேட்கும்.  அதாவது ‘ கிருஷ்ணன் ரெடி, கிளம்பி விட்டான்’ என்று அர்த்தம். நண்பர்கள் உடனே  கிளம்பிவிடுவார்கள். அந்த சப்தத் துக்காக கன்றுக்குட்டிகள் எல்லார் வீட்டிலும்  ஆவலாக   கேட்க  காத்திருக்கும். துள்ளிக்  குதித்துக்கொண்டு கிளம்பிவிடும்.  வ்ரஜபூமியில் ஆயிரக்கணக்கான  கோப  சிறுவர்கள். கணக்கற்ற  பசுக்கள், கன்றுக்குட்டிகள். ஒவ்வொருவர் தோளிலும்  ஒரு பெரிய சோற்று மூட்டை தொங்கும்.     புல்லாங்குழல்,  ஊதல்கள் , சங்குகள், வாத்தியங்கள், டமாரங்கள் மாடு பேய்க்கும் கொம்புகள் எல்லாம் வாசிப்பார்கள்.  எல்லோருமே அழகான சிறுவர்கள்.  நந்தகோப  மஹாராஜா வீட்டில் எல்லோரைக்  காட்டிலும் அதிக கணக்கற்ற  செல்வம். எல்லாம் பசுக்கள் கன்றுக்குட்டிகள்.  கிருஷ்ணன்  எல்லோருக்கும் செல்லம்.  மஹா  அழகன். விளையாட்டுப்  பிள்ளைகள்  க்ரிஷ்ணனைப் போலவே துரு துருவென்று ஓடுவார்கள், ஆடுவார்கள்,    ஒருவர்  சாப்பாட்டு மூட்டையை இன்னொருவர்  நைசாக  திருடி  உள்ளே இருப்பதைத் திருடி   சாப்பிட்டுவிடுவார்கள் . விஷமக்காரர்கள்.
 கிருஷ்ணன் புதுப் புது விளையாட்டுகளை சொல்லிக் கொடுப்பவன்.   ‘ அலகிலா விளையாட்டுடையான்’  அல்லவா?  கிருஷ்ணன் வேகமாக ஓடுவான். மற்றவர்கள் அவனை ஓடிச் சென்று தொடவேண்டும்.    யார் முதலில் தொடுவது என்று போட்டி.  இந்த பையன்களில்  சிலர்  புல்லாங்குழல், சிலர்  ஊதல்கள் , சிலர்  காச் மூச் என்று கத்துபவர்கள்,  சிலர்  பறவைகள் போல் ஓசை எழுப்புபவர்கள் சிலர்  பறவைகளின் நிழலை பிடிக்கிறேன் என்று ஓடுபவர்கள்,  சிலர்  தாவியும் குதித்தும்  வேடிக்கை காட்டுபவர்கள்.  தவளை மாதிரி தத்தி தத்தி நகர்பவர்கள்,  குரங்கு மாதிரி மரங்களில் தாவி ஏறி அந்தர்பல்டி அடிப்பவர்கள். மொத்தத்தில் சந்தோஷமான ஒரு கூட்டம். மாடுகளை, கன்றுகளை மேயவிட்டு இவர்கள் அடிக்கும்  கும்மாளம் சொல்லி முடியாது. ஒருவன் கிருஷ்ணனின் தோள்  மீது இரு கால்களை போட்டுக்கொண்டு ஜம்மென்று வட்கார்ந்து கொண்டு   ”என்னைத்  தூக்கிக்கொண்டு ஓடு கிருஷ்ணா”    என்று கட்டளையிட்டான். கிருஷ்ணன் ஓடினான்.  என்ன பாக்யம் செய்த சிறுவன் அந்த பையன்!
கிருஷ்ணனின் எண்ணம் வேறு. அவன் இன்று எதிர்பார்த்தது வேறு. அது நிறைவேறப்போகிறது. வேறு யாருக்கும் அது தெரியாது. ஒவ்வொரு நாளும் யாராவது ஒரு  கொடிய அரக்கன் கிருஷ்ணனைக் கொல்ல  கம்சனால் அனுப்பப்பட்டு  விளக்கில் வந்து விழும்  விட்டிலாக  அப்படிப்பட்ட அரக்கன் மாய்வது வழக்கமாகிவிட்டது.
முதலில் கம்சனால் அனுப்பப்பட்டு ஒரு தாயாக வந்த கொடிய பேய் பூதனை.  அவளது கோர  மறைவுக்குப் பிறகு அவள் சகோதரன் பகாசுரன் கொல்லப்பட்டான்.  ஆகவே  மற்றொரு சகோதரன் அகாசுரன்   எப்படியாவது கிருஷ்ணனைக்  கொன்று பழி தீர்க்க முயன்றான். ஆகவே  பிருந்தாவனத்தில்  கிருஷ்ணன் நண்பர்களோடு விளையாடும் இந்த  நேரம் சரியானது என்று முடிவெடுத்து வந்துவிட்டான்.   பல இரவுகள் யோசித்து  ஒரு பெரிய  மலைப்பாம்பு உருவம் எடுத்து பிருந்தாவனத்தில் அகாசுரன் காத்திருந்தான். ஆவென்று  வாய் திறந்து ஒரு  மலைக்குகை போல்  அசையாது நின்றான்.
கீழ் உதடு  மண்ணைத்  தொட, மேலுதடு விண்ணைத்தொட  அகண்ட வாயோடு நின்றான் அகாசுரன். மூச்சு அனலாக  வீசியது.
”டேய்  இதோ பாருங்கடா,  ஒரு புது  மலைக் குகை. நாம் இதுவரை பார்த்ததே இல்லையே இதை” அருகில்  சென்றார்கள்  பையன்கள். ”குகை இல்லை, இது ஒரு பெரிய  பாம்பு” என்றான் ஒருவன்.”இங்கே  பாம்பு எதுவும் இல்லை, பாம்பு மாதிரி தோன்றும் கல் குகை தான்.” வாருங்கள் உள்ளே சென்று பார்ப்போம்”  சில  பையன்கள் அருகில் வந்துவிட்டார்கள்.
”கிருஷ்ணா,  இது நிஜமா பொம்மையா, நம்மை விழுங்கவா இங்கே இருக்கிறது? நீ பார்த்து சொல்?””வாங்கடா  இந்த குகை உள்ளே போய் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம்…ஏதாவது ஆபத்து என்றால் கிருஷ்ணன் பார்த்துக் கொள்வான்”  என்கிறார்கள் சிலர். கிருஷ்ணன் யோசித்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் சில  பையன்கள் கிடுகிடுவென்று அகாசுரனின் திறந்த வாய்க்குள் சென்று விட்டார்கள்.
அகாசுரன் மற்ற பையன்களை விழுங்குவதில் அக்கறை கொள்ளவில்லை. அவன் இலக்கு கிருஷ்ணன்.  ஆகவே  காத்திருந்தான்.
எல்லோரும்  அகாசுரன் வாய்க்குள் நுழைந்தாகிவிட்டது. இனியும் தன்னுடைய  நண்பர்களை பிரித்திருப்பது சரியில்லை என்று கிருஷ்ணனும் அகாசுரன் வாய்க்குள் நுழைந்தான்.   கிருஷ்ணன்  அனந்த  வீர்ய சர்வஞன்… அவனால் முடியாதது எதுவுமில்லை. கிருஷ்ணன்  வாய்க்குள்  நுழைந்த மறு  வினாடியே  அகாசுரன்  வாயை மூடிக்கொண்டான். எங்கும் அந்தகாரம். கிருஷ்ணன் தன்னையும் நண்பர்களையும் காக்கும் நேரம், அதாவது அகாசுரனை  அழிக்கும் நேரம் வந்து விட்டது என்பதை  உணர்ந்து,  தன்னை பலமடங்கு  பெரிய  பலமுள்ள  உருவமாக  மாற்றிக்கொண்டான். அகாசுரன் தனது தொண்டைக்குள் இப்படி ஒரு  மலை அடைத்துக் கொண்டு மூச்சு விடுவதை தடுக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. மூச்சு திணறியது அவனுக்கு.  அகாசுரன் மாயாஜாலக்காரன். தானும் உருவத்தை பெரிதாக்கிக் கொண்டான்.  ஆனாலும் கிருஷ்ணன்  அளவுக்கு உருவத்தை அவனால் எடுக்க முடியாமல் திணறினான்.  கண்கள்  இருந்தன.  ஸ்வாசம்  தடை பட்டது.  கிருஷ்ணன் இன்னும் பெரிய  உருவெடுத்ததால்  அகாசுரன் தலை வெடித்தது.  அவன் உயிரும் வெளியே பறந்தது.  அகாசுரன் உடலுக்குள்ளே  மயங்கி கிடந்த அத்தனை  ஆயர்பாடி  சிறுவர்களையும் மீண்டும் நினைவு பெறச்செய் தான் கிருஷ்ணன். வெளியே  அவர்களோடு வந்தான் கிருஷ்ணன்.  கிருஷ்ணன் அகாசுரன் வாய்க்குள் நுழைந்ததைக் கண்டு  வெளியே பயந்து நடுங்கி நின்றுகொண்டிருந்த  கன்றுகள், பசுக்கள்  கிருஷ்ணன் அருகே ஓடிவந்தன.  அகாசுரன் கிருஷ்ணனால்  மோக்ஷம் அடைந்தான்.  தேவர்களும்  விண்ணவர்களும்  கிருஷ்ணனின்  சாகசத்தில் மயங்கி  அகாசுரனை அவன்  மாய்த்ததில்  மகிழ்ந்தனர்.
சுக மஹரிஷி இதை விவரித்ததில் பரீக்ஷித் ஆனந்தமடைந்தான். ஆஹா  என்னே என் பாக்கியம், உங்கள் வர்ணனை என்னை நேரில் சென்று கண்டதைப் போல  சந்தோஷம் அடையச் செய்கிறது என்று போற்றினான். 

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2562

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;