
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN
வீட்டு ரிப்பேர் .
நமக்கு தெரிந்து எண்ணற்றவர்கள் பேசுகிறார்கள், பாடுகிறார்கள், எழுதுகிறார்கள். ஏராளமான படங்கள் வாட்ஸாப்ப், முகநூலில், யூட்யூபில் அனுப்புகிறார்கள். உண்மையிலேயே ஒரு எழுத்தும் சொல்லும் இல்லாமலேயே படங்கள் ஆயிரமாயிரம் விஷயங்களை சொல்பவை. அதுவும் மஹா பெரியவா பற்றி என்றால் கேட்கவே வேண்டாம். மஹா பெரியவாளிடம் ஒரு அபூர்வ சக்தி, ஸாரி , அவரிடம் எத்தனையோ உண்டு, அவற்றில் ஒன்று மஹா பெரியவாளின் கம்ப்யூட்டர் மெமரி. எத்தனையோ வருஷங்களுக்கு முன்பு ஒரு முறை பார்த்திருந்தாலும் மனிதர்களின் பெயர்கள், இடம், அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் சட்டென்று நினைவுக்கு வந்துவிடும். கேட்பவர்கள் அசந்து போவார்கள்.
என் தாய் வழி தாத்தாவை பற்றி அறிமுகம் செய்து கொண்டபோது என்னை அசத்திய ஒரு வார்த்தை ”புரசைவாக்கம் தானே. அவர் பேரனா நீ… கம்ப ராமாயணத்தில், நல்ல ஞானஸ்தர். கண் பார்வை இல்லாட்டடா கூட கேட்டே க்ரஹிச்சுப்பார்” என்று பிரசாதம் கொடுத்தபோது நான் இந்த உலகத்திலேயே இல்லை. என்னைப்போல லக்ஷக்கணக்கானோர் அவருடைய ஞாபக சக்தியை அனுபவித்திருக்கலாம். மஹா பெரியவா ஒரு அவதாரம். யுக புருஷர்.
இதோ ஒரு மஹா பெரியவா பற்றிய விஷயம்.
ஒரு அனுஷதுக்கு நிறைய பக்தர்கள் மஹா பெரியவா தர்சனம் பெற காஞ்சிபுரத்தில் மடத்துக்கு வந்தார்கள். அதில் ஒரு வயசான பாட்டி. பெரியவாளை கிட்டே வந்து நமஸ்காரம் பண்ணினாள். அவர் காது கேட்க ‘ ஸர்வேஸ்வரா,,மஹாப்ரபு” — உணர்ச்சி வசத்தோடு கன்னத்தில் போட்டுக் கொண்டாள் . அவளைப் பார்த்தவுடனேயே மஹா பெரியவாளுக்கு அவள் யார் என்று தெரிந்து விட்டது.
“எப்டி இருக்கான் ஒன் ஸ்வீகாரம்?………”
“ஏதோ இருக்கான்…பெரியவா ” அஸ்வாரஸ்யமாக பதில் பாட்டியிடமிருந்து.
“வயசான காலத்ல ஒனக்கு பிடிப்பே இல்லேன்னியே? அதான் ஒதவியா இருக்கட்டுமே…ன்னுதான் குடுத்தேன்” முகத்தில் சிரிப்பு!
”ஹுக்கும்…பிடிப்பு இருக்கட்டும் னு குடுத்தாராம்!” பாட்டி அங்கலாய்த்தாள் . சுற்றி இருந்தவர்கள் முகத்திலும் சிரிப்பு.
“சரி………ஒன் ஒடம்பு எப்டி இருக்கு?………”
“ஏதோ இருக்கேன்….பெரியவா அனுக்ரஹம்…மழை பெஞ்சா, ஆத்துல முழுக்க ஒரேயடியா தொப்பல் ஒழுகறது….அதை கொஞ்சம் சரி பண்ணிக் குடுத்தா, தேவலை பெரியவா”
”என்னது? இந்த பட்டி இப்படி மஹா பெரியவர் கிட்டே பேசறாளே..” என்று சுற்றி இருந்தவர்கள் பாட்டியின் கோரிக்கையை கேட்டு அதிர்ச்சியடைந்தாள். மஹா பெரியவா கிட்டே கேக்கற விஷயமா இது?. மோக்ஷத்தை தரவல்ல பராசக்தி கிட்ட இப்படி வீட்டை ரிப்பர் பண்ணிக்கொடு என்று ஒரு வேண்டுகோளா ?
பெரியவா புன்னகைத்துவிட்டு பதிலளித்தார்.
“இந்த ஊர்ல மழை என்கிறியா ! காஞ்சிபுரந்தான் காஞ்சு போன புர மாயிருக்கே !… கிண்டல் சிரிப்பு.
“இல்லையே பெரியவா …இப்போ கூட ரெண்டு நாள் முன்னால பெஞ்ச மழைல கூட என் வீடு ஒழுகித்தே!…….”
“அப்டியா! சரி ஏற்பாடு பண்றேன்…..” பாட்டி நகர்ந்தாள். இத்தனை உரிமையோடு பெரியவாளிடம் பேசும் அந்த பாட்டி யார்?
எட்டு வயசில் திருமணமாகி சில மாதங்களிலேயே விதவை ஆனவள். கணவர் வழியில் ஏராளமான சொத்து! ஒரு பெண்ணிடம் இத்தனை சொத்து இருந்தால் சொந்தக்காரர்கள் விடுவார்களா? அதே சமயம் தன்னிடம் வரவேண்டிய ஜீவன் ஒரு நாயாக இருந்தால் கூட பகவான் விட்டு வைப்பானா?
அந்த விதவைப் பெண்ணுக்கு விவரம் கொஞ்சம் நன்றாக தெரிந்திருந்ததால், சற்று சுதாரித்துக் கொண்டாள். காஞ்சிபுரத்துக்கு எதேச்சையாக வந்தவள், “தன் சொத்துக்கள் அத்தனையும் காமாக்ஷிக்கு!” என்று சொல்லிவிட்டாள். பெரியவா எவ்வளவோ மறுத்தும், கடைசியில் அந்த பெண்ணின் அன்பான பிடிவாதம் தான் வென்றது. எனவே மடத்துக்கு சொந்தமான வீடுகளில் ஒன்றை அவள் தங்கிக் கொள்ள குடுத்துவிட்டார். அல்லும் பகலும் பெரியவாளை தர்சனம் பண்ணும் பாக்யம் ஒன்றே போதும் என்று பரம த்ருப்தியுடன், பணத்துக்கு துளியும் முக்யத்வம் குடுக்காத அந்த ஆத்மாவை பெரியவா அல்லும் பகலும் ரக்ஷித்தார். இது தான் அவர்களுக்குள் உறவு.
மற்ற பக்தர்கள் மஹா பெரியவா ளை அணுகி வணங்கினார்கள் . ஒரு குடும்பம் அருகே வந்து ஒரு தட்டில் ஏதோ ஒரு பத்திரிகையை வைத்தது. இதுவரை பாட்டியோடு சிரித்துப பேசிக்கொண்டிருந்த மஹா பெரியவா முகம் எதிரே தட்டில் பத்திரிகை வைத்த குடும்பத்தை பார்த்ததும் சட்டென்று மாறியது…….“என்னது இது?”
“காமாக்ஷி அம்மன் ப்ரம்மோத்சவ பத்திரிகை……….” எதிரே காமாட்சியே உட்கார்ந்து கொண்டிருக்கும்போது, முன்பே மஹா பெரியவாளிடம் சொல்லிவிட்டு ஆசி பெற்று அல்லவோ ஏற்பாடுகள் செயதிருக்கவேண்டும். ஏன் அவர்கள் அவ்வாறு செய்ய வில்லை, காஞ்சிபுரம் மடத்துக்கு வந்து பேசவில்லை, சொல்லவும் இல்லை,
பெரியவாளை விட காமாக்ஷி சம்பந்தப்பட்டவர் எவராவது உண்டா? . ஏனோ எதற்கோ அவர்கள் தவறிவிட்டார்கள். பெரியவா என்ன கேட்டார் தெரியுமா?”கலெக்டருக்கு பத்திரிகை குடுத்தாச்சா?”
“குடுத்துட்டோம். பெரியவா”
“இவாளுக்கு?” என்று பக்கத்தில் அமர்ந்திருந்த புது பால பெரியவாள் பக்கம் கை காட்டி கேட்டார்.
“குடுத்தாச்சு. பெரியவா……”
“ஓஹோ…சரி. எல்லார்க்கும் குடுத்துட்டு, இவன் மடத்த விட்டு எங்கேயும் போக மாட்டான்….ன்னுட்டு கடேசில போனாப் போறதுன்னு எனக்கும் ஒரு பத்திரிகை கொண்டு வந்தேளாக்கும்?”
”இல்லை…..அது வந்து……பெரியவா” நிர்வாகிகள் என்ன பதில் சொல்வது என தெரியாமல் தர்மசங்கடத்தில் தவித்தார்கள்.
”மடத்து சம்ப்ரதாயம்” னு ஒண்ணு இருக்கு. பத்திரிகை மொதல்ல எங்க தரதுன்னு தெரியணும். எல்லா சம்பிரதாயத்தையும் மீறி நடந்துண்டா எப்டி? ” பெரியவா பத்ரிகையை தொடவில்லை! மடத்து நிர்வாகிகள் நடுங்கிப் போய்விட்டனர். ஆம். தவறுகளை தெரிந்து செய்தால் கண்டிக்க வேண்டும். தெரியாமல் செய்தால் திருத்த வேண்டும். “எப்டி அழைக்க வரணுமோ இனிமே அப்டி வாங்கோ” என்கிறார் மஹா பெரியவா. நிர்வாகி நடுங்கி மெதுவாக நகரும்போது நிறுத்தினார்.
“நீ எங்கே குடியிருக்கே?”
“வடக்கு சன்னதிப் பக்கம் ஒரு ஆத்துல…….”
“அங்க வேற ரெண்டு மூணு வீடு இருந்ததே…”
“அங்க சுப்புராமன் இருக்கார்……”
பெரியவாளுக்கு எந்தெந்த வீடு, யார் யார் இருக்கிறார்கள் எல்லாம் அத்துபடி!
“சுப்புராமன்தான் மேல போயிட்டாரே……அவரோட வாரிசுகள் மடத்ல வேலை செய்யறாளா என்ன?”
“இல்லை……….”
“மடத்ல வேலை செய்யறவாளுக்குத்தான் நாம வீட்டை குடுத்திருக்கோம். இங்க வேலை செய்யாதவாளுக்கு எதுக்கு வீடு? நாளைக்கு மறுநாள், இந்த பாட்டி அந்த வீட்டுக்கு குடி போகணும் !..டேய்! நாளன்னிக்கு நல்ல நாளா…ன்னு பாரு”
“ஆமா பெரியவா நல்ல நாள்தான்”
“அப்போ சரி. இந்த பாட்டி நாளன்னிக்கு அந்தாத்துக்கு போறதுக்கு ஏற்பாடு பண்ணிடுங்கோ”
பெரியவா சங்கல்பம் நிறைவேறியது!
இதற்கப்புறம் மூன்று மாசம் கழித்து காமாக்ஷி கோவிலில் தர்சனம் பண்ணிவிட்டு சன்னதி தெரு வழியாக நடந்து வந்து கொண்டிருந்த பெரியவா, சட்டென்று ஒரு வீட்டின் முன் நிற்கிறார்.பின்னால் வந்து கொண்டிருந்த பக்தர் குழாம் குழம்பியது. ஒரு பக்தரிடம், ”எங்கே ரெண்டு மூணு நாளா பாட்டியை காணும்…..உள்ள போய் பாரு. ஒடம்புக்கு கிடம்புக்கு முடியலையோ என்னவோ…..”
உள்ளே….ஏழ்மையான எளிமையான வாஸம். ஒரே ஒரு குமுட்டி அடுப்பு. ரெண்டே ரெண்டு பாத்ரம். வேறு எதையுமே காணோம். பாட்டி ஒரு ஓரத்தில் முடங்கிக் கிடக்கிறாள். பக்தர் மெதுவாக பாட்டியிடம் பெரியவா வாசலில் நிற்கும் விஷயத்தை சொன்னதுதான் தாமதம்! தடாலென்று எழுந்து, தன் நார்மடியை சரி பண்ணிக் கொண்டு வாசலுக்கு ஓடோடி வருகிறாள்.
இரைந்து…….”சர்வேஸ்வரா மஹாப்ரபு…நீயே என்னைத் தேடிண்டு வந்துட்டியா?” பாட்டி அலறிக் கொண்டு பெரியவா பாதத்தில் விழுந்தாள். மூன்று முறை வலம் வந்து நமஸ்கரித்தாள். இதை உண்மையான பக்தனும் பகவானும் மட்டுமே அனுபவிக்க முடியும்.
தினம் தினம் ஆயிரக்கணக்கானோர் வந்து தர்சனம் பண்ணுகிறார்கள். ஆனால், தன்னிடம் ஆத்மார்த்தமாக ப்ரேமை பூண்டவர்கள் ஒரு நாள் பார்க்க வராவிட்டால் கூட பகவானால் தாங்கிக்கொள்ள முடியாமல், தானே அவர்களைப் பார்க்க வந்துவிடுவான். அந்த பாட்டிக்கு கிடைத்த பாக்யம் எல்லோருக்கும் கிடைக்குமா? தன்னையே பெரியவாளிடம் முழுவதுமாக அர்ப்பணித்தவர்களுக்கு மட்டுமே இந்த அனுபவம் நிச்சயம் புரியும், கிடைக்கும்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



