

வயோதிக இளஞ்சிங்கங்களே, – நங்கநல்லூர் J K SIVAN
இதை என் போன்ற வயது முதிர்ந்தவர்களுக்கு, அதாவது 65க்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம். 60 வயதுக்காரர்களுக்கும் இதில் தலையை நீட்ட அனுமதி உண்டு, ஸார் .வாழ்க்கையில் ஏதோ ஒரு சுருக்கம் கொண்ட, சலித்த முகத்துடன் கூடியவர்கள் கொஞ்சம் அதிகமாக காணப்படுகிறார்கள். ஏன் வாழ்க்கை சுகமாக, இன்பகரமாக இல்லையா? உடல் நலம் பாதிப்பா? பாதுகாப்பு போதாதா? உதவிக்கு ஆள் தேவைப்படுகிறதா? உங்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லையா?, உங்களை எதுவும் யாரும் கேட்பதில்லையா? உங்கள் கௌரவம், மதிப்பு, மரியாதை, சுய அதிகாரம் கையை விட்டு போய்விட்டதாக நினைக்கிறீர்களா ? சில விஷயங்களை முதலில் நீங்கள் கண்டிப்பாக உணரவேண்டும்.
ஒரு சில விஷயங்கள் மட்டுமே சொல்கிறேன். அதில் எவ்வளவு உங்களுக்கு பொருந்தும் என்று யோசியுங்கள். பின்பற்றுங்கள். என் மீது கோபம் கொள்ளவேண்டாம். நான் காந்தியோ, யேசுவோ, புத்தரோ, இல்லை, உங்களில் ஒருவன். எங்கோ எதையெல்லாமோ படித்து அதை ரசித்து, மற்றவர்களுக்கும் சொன்னால் உபயோகப்படும் என்று தமிழில் எனக்கு தோன்றியபடி எழுதுகிறவன், சொல்பவன், பாடுபவன்.1. நான் வயது முதிர்ந்தவன்/ள் என்ற எண்ணமே முதலில் வேண்டாம். யாருக்கு வயதாகவில்லை?, தென்னைமரத்துக்கும், வாசல் சுற்று சுவர், வீட்டுக்கும் கூட வயதாகிவிட்டது. அது சொல்லிக்கொண்டு திரிகிறதா?’ 90 வயதுக்கு மேலாகியும் இன்னும் வைஜயந்தி மாலா பெரிய அரங்கத்தில் அனைவருக்கும் முன்னால் ஜதி தாளம் தப்பாமல் பரத நாட்டியம் ஆடுகிறாரே , எப்படி? மனதளவில் நாம் எல்லோரும் வாலிப வயதினர் தான்.
ஒவ்வொருவருக்கும் மூன்று வித வயசுகள் . இங்கிலிஷ் தேதி நம்பர் பிரகாரம் பிறந்ததிலிருந்து, குடும்பத்தில் உறவினர்கள், பெரியவர்களை பின்பற்றி உடல் ரீதியில், மற்றும் மனதளவில் என்று வயதை மூன்று விதமாக கணக்கிடலாம். பிறந்த நாள் சர்டிபிகேட் காட்டும் வயது 63 என்றாலும் ஆள் பார்க்க 40 வயது மாதிரி இருப்பவர்கள் உண்டு, குடும்ப உடல் ரீதியில் பலர் 35-40க்கு வழுக்கை, கூனல் முதுகு, பல் விழுந்து, கன்னத்தில் டொக்கு பள்ளம் என்று பார்ப்பதற்கு 70 வயது மாதிரி இருப்பவர்கள், மூன்றாவது மனதளவில். அதற்கு வயதே கிடையாது. மேலே சொன்ன வைஜயந்தி மாதிரி, எப்போதும் ஏதாவது செய்து கொண்டே காலண்டரை பார்க்காமல் இருப்பவர்கள் என்றும் இளைஞர்கள் தான். உற்சாகமானவர்கள்.
நல்ல உணவு, மனதிற்கு அது பிடித்து சாப்பிடுபவர், உடல் பயிற்சி கொஞ்சம் தினமும் செய்பவர், சந்தோஷமாக சிரித்துக்கொண்டே எல்லோருடனும் பழகுபவர், தன்னம்பிக்கை கொண்டவர் , எதற்கும் கவலைப்படாதவர், வியாதியை லக்ஷியம் பண்ணாதவர், மரணத்தை, முதுமையை மறந்தவர். இப்படிப்பட்டவர்கள் வயது வருஷா வருஷம் முதுமையி லிருந்து இளமையை நோக்கி குறைந்து கொண்டே வரும் என்று கூட சொல்லலாம்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். குடும்ப பாசம், குழந்தைகள் உறவினருடன் நேசம் கொண்டவர்கள் உற்சாகமாக இருப்பார்கள். உடல் நலத்தில் எப்போதும் கண்காணிப்பு இருக்கும். கெடாமல் ஜாக்கிரதையாக இருப்பவர்கள்.
உயிர் வாழ உலகில் பணம் அவசியம் தேவை. அன்றாட வாழ்க்கைக்கு அத்யாவசியமானவற்றை மற்றும் தேவைக்கேற்ப வாங்க பணம் இருந்தால் போதும். ஊதாரித்தனமாக செலவு வேண்டாம்.
உடலுக்கும் உள்ளத்துக்கும் ஒய்வு தேவை. போதிய தூக்கம், சங்கீதம், ஹாஸ்ய உணர்வு அவசியம். வாழ்க்கையை ரசிக்க கற்றுக் கொள்ளவேண்டும்.
போனால் வராத விஷயம் நேரம். அதை உணர்ந்து தக்கபடி உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகம் தரும்படி செலவிட வேண்டும். குதிரையை கடிவாளத்தைப் பிடித்து ஓட்டத்தை கட்டுப்படுத்துவது போல் நேரத்தை வீணாக்காமல் பொறுப்போடு உபயோகிக்க வேண்டும். நாம் வயதானவர்கள். ஒவ்வொரு நாளும் நமக்கு கிடைத்த ஒரு உபரி நாள். போனஸ் நாள்.
மாற்றம் எப்போதும் இடைவிடாமல் நிகழ்ந்து கொண்டே இருப்பது தான் உலகத்தில் இயற்கை. மாற்றம் ஒன்று தான் ‘மாறாமல்’ தன் வழியே ஒரே சீராக நகர்ந்து கொண்டு இருப்பது. அதன் போக்கில் பழையன கழிதலும் புதியன புகுவதும் நியதி.
தன்னைப் பற்றியோ, தனது குடும்பத்தைப் பற்றியோ, தனது நலத்தையோ, கொஞ்சமாவது லாபத்தையோ எதிர்பாராத மனிதனை பார்ப்பது அரிது. சுயநலம் முழுதும் இல்லாத ஜீவன் தான் யோகி, துறவி, மஹான். எல்லோருமே எதையாவது எதிர்பார்த்து தான் எந்த காரியமும் செய்பவர்கள். நல்லதைச் செய்வதும் அப்படிச் செய்பவர்களுக்கு துணையாக நிற்பதும் நல்லொழுக்கம். அப்படிச் செய்வதால் தனக்குள் ஏற்படும் சந்தோஷம் திருப்தி கூட வேண்டாமே என்று மஹான்கள் யோகிகள் நினைப்பவர்கள். பலனெதிர் பாராது பிறர்க்கு அருள்பவர்கள்.
”மறந்து விடு, மன்னித்து விடு”- ஒரு சிறந்த உன்னத கோட்பாடு. கடைப்பிடிப்பது தான் கஷ்டம்.ஆனால் முடியாதது இல்லை. அதிக பொறுமை, தாராள மனம். பெருந் தன்மை வேண்டும். பிறரிடம் குறை காணாதவர்கள் இதை எளிதில் நிறைவேற்ற முடியும். மறு கன்னம் காட்ட யாரும் ஏசு நாதர் இல்லை என்றாலும் ஒரு கன்னத்தில் அடித்ததை மறந்துவிடலாம். குழந்தை தெரியாமல் விளையாட்டாக அம்மா வின் கன்னத்தில் அறைவதை அவள் சீரியஸ் ஆக எடுத்துக் ள்வதில்லை. BP இதனால் எகிறாது. உலகில் எதுவுமே ஏதோ ஒரு காரணத்தினால், காரியத்துக்காக நிகழ்கிறது. இது நியதி. வருவதை ஏற்று நடப்போம். பிறர் எப்படி இருக்கிறார்களோ அப்படியே அவர்களை அரவணைப்போம். ஒவ்வொரு ஜீவனும் ஏதாவது ஒரு விதத்தில் உயர்ந்தது. சிறந்தது. எல்லோருக்கும் சம உரிமை உண்டு. அவரவர் செய்வது அவரவருக்கு சரி. தப்பில்லை.
இன்னொரு விஷயம். வயதானவர்கள் குறிப்பாக மரண பயம் இன்றி ஒவ்வொருநாளும் சுகமாக, இன்பமாக வாழ வேண்டும். மரணம் ஒரு அனுபவம். எல்லோருக்கும் ஒருநாள் கட்டாயம் நேர்வது. நாமாக அதை வரவேற்கவும் வேண்டாம், வருவதை தடுக்கவும் முயற்சிக்க வேண்டாம். நிச்சயம் முடியாது. அதை நினைத்து பயமோ, கவலையோ கொள்வது அருமையான அரிய நேரத்தை வீணடிக்கும்.
காலம் என்பது சிறந்த ஒளஷதம். சகலத்தையும் ஆற்றி விடும் சக்தி கொண்டது. புரிந்து கொள்வோம்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.




