
சிவவாக்கியர் சொல்லாட்சி – நங்கநல்லூர் J K SIVAN
தமிழில் அநேக கவிராயர்கள், புலவர்கள், கவிஞர்கள் இருந்தாலும் ஒரு சிலரின் எழுத்து நம்மை காந்தம் போல் கவர்கிறது. கம்பர், காளமேகம், ஔவையார், போன்றவர்கள் பாண்டித்யம் பெற்றவர்கள். தாயுமானவர், பட்டினத்தார், சித்தர்கள் பலர் வேதாந்தத்தில் தத்துவத்தில் நம்மை கவர்பவர்கள். திருமூலரும் சிவவாக்கியரும் இணையாக நம்மைக் கட்டி பிணைப்பவர்கள். அவர்கள் தமிழ் எளிதாக, உன்னதமான நாலு வரியில் சொல்லவேண்டியதை எல்லாம் சொல்லிவிடும் தன்மை வாய்ந்தவை.
சிவவாக்கியர் இன்றும் ஒரு புதிராகவே இருக்கிறார். அவரே திருமழிசை ஆழ்வாராக பின்னர் பெருமை பெற்றவர் என்று கூறுவது பற்றி என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. சென்னையை அடுத்த திருமழிசையில் பிருகு முனிவர் பரமேஸ்வரனை நினைத்து தவம் செய்தபோது அவர் தவத்தை கெடுக்க இந்திரன் ஒரு அப்ஸரஸை அனுப்பி அவர் அவள் மேல் மையலுற்று ஒரு மகவை ஈன்றுவிட்டு செல்கிறாள்.
குழந்தை சிவநாமத்தை உச்சரித்துக் கொண்டு உயிர் வாழ்ந்தது. பிள்ளைப்பேறு பாக்யம் இல்லாத திருவாளன் என்ற முதிய காட்டுவாசி மனைவியோடு அங்கே வரும்போது மூங்கில் காட்டில் அந்த குழந்தையை கண்டு எடுத்து வளர்க்கிறார்கள். இறைவன் அருளால் அந்த முதிய தம்பதியர் இளமை பெற்று பாலூட்டி அந்த குழந்தைக்கு திருமழிசையான் என்று பெயரிட்டு வளர்க்கிறார்கள். பின்னர் திருமழிசையாழ் வாராகிறார்.
திருமழிசையாழ்வார் பிற்காலத்தில் சிவவாக்கியர் என்கிறார்கள். முன்போ பின்போ, ஆழ்வாரும் சிவனடியாரும் ஒன்றே என்று இந்த சரித்திரம் சாதிக்கிறதா, போதிக்கிறதா?.
சிவவாக்கியரின் அற்புத சில பாடல்களை இன்று ரசிப்போம்.
ஆனவஞ் செழுத்துளே யண்டமு மகண்டமும்
ஆனவஞ் செழுத்துளே யாதியான மூவரும்
ஆனவஞ் செழுத்துளே யகாரமும் மகாரமும்
ஆனவஞ் செழுத்துளே யடங்கலாவ லுற்றவே
வேதங்களின் உட்பொருள் ஓம் நமசிவாய எனும் பஞ்சாக்ஷரம். அஞ்செழுத்து மந்திரம். ஐந்தெழுத்தில் அண்டமாகிய இவ்வுலகமும் அகண்டமாகிய ஆகாய வெளியும் அமைந்துள்ளது. ஆதி பராசக்தியினால் ஆன அஞ்செழுத்தே ஆதியாகி, அதிலேயே பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளும் அமர்ந்திருக்கின் றனர். அந்த அஞ்செழுத்தின் உள்ளேயே அகாரமாகவும் மகாரமாகவும், அறிவும் மனமும், ஒளியும் இருளும், இறையும் மாயையுமாய் அமைந்துள்ளது. ஆதலின் இந்த அஞ்செழுத்தை அறிந்துணர்ந்து ஓதுங்கள். இந்த அஞ்செழுத்துக்குள் தான் அனைத்து தத்துவங்களும் அடங்கி அது நமக்குள்ளேயே பஞ்சாக்ஷரமாகி உற்ற பொருளாய் உட்கலந்து இருக்கின்றது. நம்மை உய்விக்கிறது. புரிந்து கொள்ள கஷ்டமாக இருந்தால் மீண்டும் பின்னர் அமைதியாக படித்து புரிந்து கொள்வோம். மிகப் பெரிய அத்வைத தத்வத்தை நான்கு வரிகளில் திணித்து இருக்கிறார் சிவவாக்கியர். அது தான் அவர் ஸ்டைல்.
” ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்
வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே
அருட்பெருஞ் சோதியான ஆண்டவனாகிய ஈசனை அங்கும் இங்கும் ஓடி ஓடி ஏனய்யா தேடுகின்றீர்கள்?. அவன் உங்கள் உடம்பின் நாடி நரம்பிளெல்லாம் காலத்தவன். அவன் உள்ளே கலந்து சோதியாக ஓடி உலாவுவதைக் கண்டு கொள்ளாமல், அவனை நாடி பற்பல இடங்களுக்கும் ஓடி ஓடி தேடியும் அலைந்தும் காண முடியாமல் உங்கள் ஆயுள் நாட்கள் கழிந்து போய் கொண்டிருப்பதை எப்போதாவது உணர்ந்தீர்களா?. அவனை ஞான நாட்டத்துடன் நாடி அச்சோதியாகிய ஈசன் நம் உடலிலேயே ஆத்மாவாக உட்கலந்து நிற்பதை, மாண்டு போகும் வரை மனிதர்கள் அறியமாட்டேன் என்கிறார்களே. பெறற்கரிய இம் மானிடப் பிறவியை பெற்ற எண்ணற்ற கோடி மக்கள் என்றைக்கு தான் அவர்கள் இதயத்துக் குள்ளேயே சோதியாக
ஆத்மநாதனாக, இறைவன் கலந்து நிற்பதை உணர்ந்து கொள்வார்களோ? தம்முளே உறையும் உயிரை அறியாமல் அவ்வுயிரை ஈசனிடம் சேர்த்து பிறவா நிலை பெற முயலாமல் அவனை அகிலமெங்கும் தேடி ஓடி நாடி வாடி மடிந்து போவதில் என்ன பயன்?
உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீறேல்
விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும்
அருள் தரித்த நாதர் பாதம் அம்மை பாதம் உண்மையே”.
நம் உடம்பில் கழுமுனை நாடியில் குண்டலினி மூலாதாரத்தில் தனஞ்செயன் எனும் பத்தாவது வாயு. காற்று ஒன்று, ஒடுங்கி பாம்பைப் போல் சுருண்டு உறங்கிக் கொண்டிருக்கின்றதே அதைப் பற்றி அறிந்ததுண்டா?
இதையே யோகிகள் குண்டலினி சக்தி என்பர். தாயின் கர்ப்பத்திலிருந்து முழு உருவமாய் வெளிவரும் போது தனஞ்செயன் என்ற இக்காற்றின் செயலால் தான் பிண்டம் பிறக்கின்றது.. அதன் பிறகு எச்செயலும் இன்றி மூலாதாரத்திலேயே ஒடுங்கி உள்ளது. உயிர் உடம்பை விட்டு போன பிறகு மூன்று நாட்கள் இருந்து இவ்வுடம்பை அழுகச் செய்தபின் கபாலத்தைப் பிளந்து அது வெளியேறும். .ஆதலால் இதனை நன்கு அறிந்து வாசியோகம் எனும் யோக தந்திரத்தால் கருத்தோடு இருத்தி அதனை எழுப்பி சுழுமுனையினால் முதுகுத் தண்டின் வழியாக மேலே ஏற்றி கபாலம் எனும் உச்சியில் உள்ள சகஸ்ரதளத்தில் கொண்டு சேர்த்து தியானம் செய்து வரவேண்டும். இது சும்மா எழுதி, படித்து கிடைக்கும் விஷயம் இல்லை ஸார். பல வருஷங்கள்
நிறைய பயிற்சியும் முயற்சியும் வேண்டும். தொடர்ந்து முழுமுயற்சியுடன் பயிற்சி செய்து தியானத்தில் ஈடுபடுபவர்கள் கிழவர்களாக இருந்தாலும் இளமை பெற்று மெய்பரவசத்தால் குழந்தையைப் போல் மாறுவர். அவர்கள் உடல் பொன் நிறமாக மாறும். இந்த யோக தந்திரத்தை முறையாக அனுசரித்து செய்து வந்தால் இறையருள் கிடைக்கப் பெற்று இன்புறலாம். நம் உடம்பே சிவசக்தி அருளால் மெய்ப்பொருள் நிறைந்ததாகும். இது உண்மை என்று கல்பூரத்தை அடித்து சொல்கிறார் சிவவாக்கியர்.
“வடிவு கொண்ட பெண்ணை மற்றொருவன் நத்தினால்
விடுவனோ அவனை முன்னர் வெட்டவேண்டும் என்பனே
நடுவண் வந்து அழைத்த பொது நாறும் இந்த நல்லுடல்
சுடலை மட்டும் கொண்டு போய்த் தொட்டி கைக் கொடுப்பரே”.
அழகிய பெண் ஒருவளைக் கண்டவன் எப்படி அவளை ஆசை மனைவியாக மணமுடித்துக் கொள்கிறான்.
அந்த அழகிக்கு காவல்காரன் அவன். எவனாவது வேறு ஒருவன் அவளைத் தொட முயன்றால், ”எங்கே அவன், அவனை விடாதே அவனைப் பிடித்துக் கட்டுங்கள்.முதலில் அவனை வெட்டவேண்டும்” என்று அரிவாளை எடுப்பான். ஒருவேளை அந்த அழகிய பெண்ணை விதிவசத்தால் எமன் வந்து அவள் உயிரை அல்பாயுசில் எடுத்துக் கொண்டு போய்விட்டால் அந்த காவல்காரன் அப்போது யாரை விரட்டி வெட்டுவான்? மிக அழகிய பெண்ணாயிற்றே என்பதற்காக இறந்து போன அந்த பெண்ணின் பிணத்தை அப்படியே வீட்டிலேயே வைத்திருக்க முடியுமா? அவ்வுடம்பில் பிணவாடை வீசி நாற்றமடிக்குமல்லவா? . ஆகவே அதனை அந்த ஆசைப்பட்ட அழகிய உடம்பை, சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று தோட்டியின் கையில் கொடுத்து அவன் அவ்வுடலை தொட்டுத் தூக்கி எரிக்கவோ, புதைக்கவோ செய்யும்போது பேசாமல் பார்த்துக்கொண்டு தானே இருப்பான். அப்படிச் செய்வதற்கு அவனுக்கு காசும் கொடுப்பான். .அப்போது மட்டும் அந்த தோட்டியின் மீது கோபம் வருவதில்லையே? அது ஏன்?. யோசியுங்கள். அந்த அழகின் மீதிருந்த மோகமோ அன்போ அப்போது எங்கே போயிற்று?. சிந்தியுங்கள். . அப்போது புரியும் அழியும் பொருள்களின் மீதுள்ள ஆசை நிலையானதில்லை என்று.
இன்னும் ஒரே ஒரு பாடலைச் சொல்லி நிறுத்துகிறேன்.
“என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது கொண்ட பின்
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே”.
எனக்குள்ளே ஒன்றான மெய்ப்பொருளாக இறைவன் இருக்கின்றான் என்பதை நான் இதுவரை அறியாத மூடனாக அல்லவோ இருக்கிறேன். அப்பரம்பொருளை பல இடங்களில் தேடியும், நல்ல நூல்களைப் படித்தும், நல்லோரிடம் பழகியும், நல்ல குருநாதர் மூலம் அது என்னிடமே இருப்பதை அப்புறம் அல்லவோ நான் தெரிந்து கொண்டேன். தனக்குள் இருந்த உயிரை அறிந்து அதனுள் ஆத்மாவாக உறையும் ஈசனை யார் காண வல்லவர்கள்? என்னிலே இருந்த அந்த மெய்ப்பொருளை அறிந்து அதையே என் உள்ளத்தில் இருத்தி தியானத்தில் ஈடுபட்டு அந்த உண்மையை யான் இப்போது உணர்ந்து கொண்டேன்.பேரானந்தத்தில் திளைக்கிறேன்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.




