
பேசும் தெய்வம் நங்கநல்லூர் J .K. SIVAN
”அடைக்கல” சாமியார்
”வாழ வைத்த தெய்வமே” என்று மனம் நிறைந்து கதறுகிறோமே அர்த்தம் புரியாமலா கதறுகிறோம்.?.
பக்தர்கள் இவ்வாறு இறைவனையே, மஹான்களையோ மனம் திறந்து போற்றுவதற்கு நிறைய நிறைய காரணம் இருக்கிறது. ஏதோ ஒரு விதத்தில் குறை, கஷ்டம் அவர்களை துன்புறுத்தி இருக்கிறது. அது இந்த மஹான்கள் இறைவன் மூலம் எந்த விதத்திலோ தவிர்க்கப்பட்டு இருக்கிறது. நிம்மதி கிடைத்திருக்கிறது. அந்த நன்றிக்கடன் பக்தர்களை இவ்வாறு வாய்விட்டு மனப்பூர்வமாக கதற வைக்கிறது.
மஹா பெரியவா அப்படி எத்தனையோ பக்தர்கள் வாழ்க்கையில் துக்க நிவர்த்தி, ரோக நிவர்த்தி, சோக நிவாரணம் இன்னும் எத்தனை எத்தனையோ பலன்களை கொடுத்ததை அவர்கள் குடும்பங்கள் கதை கதையாக சொல்கின்றன. அவரைத் தெய்வமாக எப்போதும், இன்றும், என்றும் வணங்குகிறார்கள். அவர் நிகழ்த்திய ஒரு அற்புதம் இன்று இப்பதிவில் சொல்லட்டுமா?.
காஞ்சி ஸ்ரீ மடத்தில் மகாபெரியவாள் இருக்கிறார் என்றால் அந்த தெருவே பக்தர்களின் கூட்டம் நிறைந்ததாக காணப்படும். அவர் இருந்த காலத்தில் காஞ்சி மடம் எப்போதும் அலைமோதிக்கொண்டிருக்கும்.
1960 களில் ஒரு நாள் அவரை தரிசிக்க வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அந்த வரிசையில் ஒரு 13 -14 வயசு பையனும் நின்றுகொண்டிருந்தான்.
கொஞ்சம் கொஞ்சமாக வரிசை நகர்ந்து கடைசியில் பையனும் பெரியவா அருகில் இப்போது. எல்லோரும் பெரியவாளிடம் தங்கள் குறைகளை வேண்டுதல்களை தெரிவிப்பதை பார்த்துக்கொண்டே இருந்த சிறுவன் தனது முறை வந்ததும் எப்படி சொல்வது, என்ன சொல்வது என்று தடுமாறிக் கொண்டிருந்ததை தெய்வம் பார்த்து விட்டது.
” அடே பயலே, என்னடா விஷயம், எதுக்கு என்னை பார்க்க வந்திருக்கே?”
”பையன் நமஸ்காரம் பண்ணினான். மெதுவாக தயங்கி தயங்கி தனது மனதில் கொட்டினான்.
” சாமீ எனக்கு அப்பா கிடையாது! நான் ஒரு ஹாஸ்டல்ல தான் தங்கி படிக்கிறேன்! என் அம்மாவும் தங்கச்சியும் கூலிவேலை செஞ்சு பொழச்சுக்கலாம்னு பாம்பே போனாங்க. அங்கே வேலை சம்பளம் நிறைய கிடைக்கும்னு தான் போனாங்க. யாரோ ஒரு பெரிய கம்பெனி முதலாளி வீட்டுலே வேலை கிடைச்சுது. ஆனா கொஞ்ச நாளிலே அந்த முதலாளி வீட்டுலே வேலைக்கு போன எங்கம்மா இடத்துல எங்கம்மா ஒருநாள் மயங்கி விழுந்திட்டாங்க. டாக்டர் கிட்டே தூக்கிக்கிட்டு போன போது அவரு எங்கம்மா செத்துட்டாங்க என்று சொல்லி திருப்பி அனுப்பிட்டாரு. முதலாளி வீட்டுலே நல்லவங்க. எல்லா செலவும் அவங்களே செஞ்சு அம்மாவை கரையேத்திட்டாங்க. இப்போ என் தங்கச்சி மட்டும் தான் பாம்பேல அவங்க வீட்டிலே வேலை செஞ்சுகிட்டு இருக்கா. ஆனா இனிமே என் தங்கச்சியை அங்கே ”வேலைக்கு வேணாம் உங்க அண்ணன் கிட்டே சொல்லி உன்னை உங்க ஊருக்கு கூட்டிட்டுப் போச் சொல்லு” என்கிறாங்க சாமி.”ஓஹோ அதுக்கு நீ என்ன பண்ணப்போறே”
”நான் ஹாஸ்டல்லே படிக்கிறதே கஷ்டமா இருக்கு சாமி. என் தங்கச்சியை எப்படி சாமி கூப்பிட்டு வச்சிக்கிறது? சாப்பாட்டுக்கு என்ன செய்றது? எனக்கு ஒண்ணுமே தெரியலே சாமி. நானு அழுவரத்தைப் பார்த்துட்டு யாரோ ”டேய் , நீ காஞ்சிபுரம் சாமியார் கிட்டே போய் சொல்லுடா”ன்னு சொன்னாங்க. அதனாலே நான் இங்கே நேரா வந்துட்டேன் சாமி. நீங்க என் தங்கச்சிக்கு ஏதாவது ஒரு வழி சொல்றீங்களா?
‘ உனக்கு யாராவது உதவி செய்ய சொந்தக்காரா இருக்காளா?”
” எனக்குன்னு இந்த உலகத்துல யாரும் இல்லீங்களே சாமி. நா அப்படி என்ன பாவம் பண்ணேன் னு தெரியலே சாமி ”
பந்த பாசம் நேசம் உறவு எல்லாம் துறந்த அந்த தெய்வீக சந்நியாசியின் கண்கள் துளிர்த்தன. சந்யாசிகள் கண்ணீர் பூமியில் விழக்கூடாது. ததும்பிய ஜலத்தை காஷாய வஸ்த்ரத்தால் ஒத்தி கண்களை துடைத்தார்.
மஹா பெரியவாளின் தீர்க்க பார்வை பையன் மேல் விழுந்தது. சில நிமிஷங்கள் மௌனம். பையன் கண் கொட்டாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.
” பையா, இதோ பார்டா, நீ ஒண்ணும் கவலைப்படவேண்டாம். இந்த மடத்துலயே ஒரு வாரம் தங்கிக்கோ ! அப்புறம் பாத்துக்கலாம். சரியா?” அருகில் இருந்த ஒருவரை கூப்பிட்டு அந்த பையன் தங்க இடம், உணவு வசதிகள் பற்றி உத்தரவு இட்டார்.
பெரியவா சொன்ன ஒரு வார காலம் நெருங்கியது.
அன்று வெள்ளிக்கிழமை.
மகாபெரியவாளைத் தரிசிக்க சில உயர் அதிகாரிகள் வந்திருந்தனர். எல்லோரும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்க அலுவலகத்தை சேர்ந்தவர்கள். ( NEYVELI LIGNITE CORPRATION) . மொத்தம் அவர்கள் நான்கு அதிகாரிகள். அந்த நான்கு பேரும் பழ வகைகள், இனிப்பு வகைகள் என பலவிதமான காணிக்கைப் பொருள்களோடு மஹா பெரியவாளை தரிசிக்க வந்தவர்கள். அவற்றை எல்லாம் அவர் முன் வைத்து வணங்கினார்கள். அவர் ஆசி வேண்டினார்கள்.
இவற்றையெல்லாம் பார்த்த மஹா பெரியவா அருகே இருந்த ஒருவரைக் கூப்பிட்டு ”அந்த பையனை இங்கே அழைத்து வா” என்கிறார்
மடத்தில் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்த அந்த ஏழைச் சிறுவனை அவரிடம் அழைத்து வந்தார்கள். தன்னை வணங்கி கை கட்டி நின்று கொண்டிருக்கும் அந்த நான்கு அதிகாரிகளையும் ஒவ்வொருவராக உற்றுப்பார்த்த பெரியவா என்ன தோன்றியதோ, அந்த நால்வரில் நான்காவதாக நின்றிருந்த அந்த அதிகாரியிடம் கையை காட்டி ”பையா, என்கிட்ட சொன்னியே உன்னுடைய கதையை அதை அப்படியே இப்போ இதோ இவர் கிட்டே சொல்” என்றார் .
சிறுவனும் தன்கதையைக் கூறுகிறான்!
அதைக் கேட்ட அந்த அதிகாரி மஹா பெரியவாளின் முன்பு கண்ணீர் விட்டு தேம்பி தேம்பி அழுதார். பெரியவா காலின் கீழ் எதிரே தடால் என்று விழுந்தார்.
”பெரியவா, பெரியவா, நான் என்ன சொல்றது. ஆஹா, இந்த பையனுடைய தாயார் அவனுடைய சகோதரி ரெண்டு பேருமே பம்பாயில் இருக்கும் என்னோட சொந்த அக்காள் வீட்டில் தான் வேலையா இருந்தானு இப்போ தான் தெரியறது. என் அக்கா சொல்லியிருக்கா யாரோ ஒருத்தி தமிழ்க்காரி வேலை செய்ய வந்தா. ஒருநாள் வீட்டிலேயே நெஞ்சு வலி வந்து செத்து போய்ட்டா. காரியம் எல்லாம் நாங்க தான் பண்ணோம். இப்போ அந்த சின்ன பொண்ணை எப்படி வேலைக்கு வச்சிக்கிறது. எப்படியாவது அதை அவளோட அண்ணன் கிட்ட அனுப்பிடணும்னு என்கிட்டே கூட சொல்லி இருக்கா”
எனக்கு இப்போ ஞாபகம் வருது. நான் தான் இவன் ஹாஸ்டலை விசாரிச்சு போன் பண்ணி ”ஒங்க அம்மா வேலை செஞ்சுகிட்டிருக்கும்போதே இறந்து போய்டாங்க பா! நீ உடனே வந்து உன் தங்கச்சியை போய் கூட்டிக்கிட்டு வந்துடு”என்று சொன்னவன்” என்று அழுகைக்கு நடுவிலே விவரித்தார் அந்த அதிகாரி.பரமாச்சார்யர் அவரை நோக்கி தலையை ஆட்டினார்.
”ஓ அப்படியா விஷயம். சரி நீ எனக்காக ஒரு உபகாரம் பண்ணுவியோ?”
” உத்தரவு கொடுங்க பெரியவா எது வேணாலும் நான் செய்யக் காத்துக்கிட்டுஇருக்கேன்” என்கிறார் அந்த அதிகாரி.
”அப்படின்னா, நீ தான் இனிமே இந்த பையனையும் இவனோட தங்கையையும் ஒன்னோட ரெண்டு குழந்தைகள் மாதிரி நீ பத்திரமா பாதுகாத்து வளர்க்கணும். அவா ரெண்டு பேரையும் நன்னா படிக்கவைக்கனும்! அந்த பொண்ணை ஒரு நல்ல எடத்துல கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும் ! எனக்காக இத நீ பண்ணுவியாடா?”
இப்படி தெய்வமே மனமுருகி கேட்ட போது அந்த அதிகாரி நிலைமையில் ஒரு கருங்கல்,பாறாங்கல் இருந்தாலும் உருகி ஓடாதா?
கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓட மஹா பெரியவாளின் திருவடிகளில் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார் அந்த அதிகாரி.
”பெரியவா இது எனக்கு உங்களால் கிடைத்த மிகப்பெரும் பாக்கியம்” என்று வாக்களித்து தன்னுடனேயே அந்தச் சிறுவனை அழைத்துச் சென்றார்.
சிறுவனும் அவன் தங்கையும் பத்திரமாக நன்றாகப் பாதுகாக்கப்பட்டு வளர்ந்தார்கள். நன்றாகப் படிக்க வைத்து அந்த பெண்ணை ஒரு நல்ல இடத்தில் திருமணமும் செய்துகொடுத்துவிட்டார் அந்த அதிகாரி!
அப்படிப்பட்ட மஹா பெரியவாளின் பூரண அருட்கடாக்ஷத்தைப் பெற்றவர்கள் எத்தனையோ பேர். அந்த மகானின் அதிஷ்டானத்தில் இன்றும் கஷ்டமென்று வருபவர்கள் மனக்குறையெல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல் ஓடி ஒளிந்து விடுகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இப்படி அற்புதமான மஹா பெரியவா விஷயங்களைப் பற்றி எல்லாம் கேட்கும்போதோ, படிக்கும் போதோ, எழுதும் போதோ அவருடைய தீர்க்க தரிசனம், தபோ பலம், காருண்யம் சகலமும் நம் மனதை சக்கையாக பிழிந்து விடுகிறது நன்றிக்கண்ணீர் பக்தியில் கலந்து பெருகி ஓடுகிறது என்பதில் என்ன சந்தேகம்?
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



