
ஸ்ரீ ராம தரிசனம் 6 நங்கநல்லூர் J K SIVAN துளசி தாஸர்
துளசி தாசருடைய சிறிய ஆஸ்ரமத்தில் ஒரு வழக்கம். தினமும் ஆனந்தமாக பூஜை அர்ச்சனை, ஆராதனை, நைவேத்தியம் ஆர்த்தி எல்லாம் முடிந்த பின் துளசிதாசர் முதலில் எல்லோரையும் அமர்த்தி போஜனம் செய்விப்பார். ஆனந்தமாக சந்தோஷமாக அவரே பரிமாறுவார். அதிதிகள் யாராக இருந்தாலும் எந்த வித்தியாசமும் பாராட்டமாட்டார். பகவான் குழந்தைகள் அனைவரும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை அவருக்கு உண்டு. ஆஸ்ரமத்தில் இருந்தவர்கள் மற்ற வெளியூர் உள்ளூர் பிராமணர்கள் போஜனத்துக்கு அமர்ந்திருந்த சமயம் வாசலில் ஒரு குரல் கேட்டது.
”ஜெய்ராம் சீதாராம். பிராமணர்களை கொல்லும் எனக்கும் போஜனம் தருவீர்களா?”யார் இப்படி ஒரு குரல் எழுப்புவது?
துளசிதாசரும் மற்றவர்களும் இந்த குரலை கேட்டு ஆச்சர்யப்படுகிறார்கள். துளசிதாசர் ஓடிச்சென்று அந்த மனிதரை வணங்கி அன்போடு அணைத்து உள்ளே அழைத்து வந்து அவருக்கும் இலை போட்டு போஜனம் செய்விக்க ஏற்பாடு செய்கிறார். அதற்குள் மற்றவர்கள் எதிர்க்கிறார்கள்
”சுவாமி, எப்படி ”பிராமணர்களை நான் கொல்பவன் , கொல்வேன் , கொல்லவேண்டும் , என்று சொல்பவனுக்கு எங்களோடு சரிசமமாக எப்படி நீங்கள் போஜனம் அளிக்கலாம்.?”
”அவர் என்ன சொன்னார் என்று கேட்கவில்லையா. ஜெய்ராம் சீதாராம் ” என்று அவர் சொன்னது உங்கள் காதில் விழவில்லையா. அவர் அப்படி சொன்ன போதே அவர் செய்த சகல பாபங்களும் விலகிவிட்டதே. சகல பாபங்களும் நெருப்பிலிட்ட வைக்கோல் போல் எரிந்து விட்டதே. உங்களைப் போலவே அவரும் அல்லவா உயர்ந்து விட்டார்” ஆகவே நீங்கள் சந்தோஷமாக அவருடன் சேர்ந்து போஜனம் அருந்தலாம்” என்கிறார் துளசிதாசர்.
”எந்த சாஸ்திரத்தை அடிப்படையாக வைத்து இதை நீங்கள் சொல்கிறீர்கள்?”
”ஸ்ரீ பாகவத புராணத்தில் ஸ்ரீ கிருஷ்ணனே உத்தவருக்கு சொல்லி இருக்கிறாரே. கலியுகத்தில் ஒரே சக்தி பகவன் நாமம் ஒன்று தான். குளிக்கும்போதும் சாப்பிடும்போதும் கேசவ நாராயண என்று சொன்னாலே போதும். உடம்பு உள்ளத்தில் இருக்கும் எல்லா அழுக்குகளும் உடனே காணாமல் போய்விடும். விஷ்ணுவின் எந்த பெயருக்கும் இந்த சக்தி உண்டு. ஸ்ரீ பரமேஸ்வரனே பார்வதியிடம் ” ஸ்ரீ ராமா ஸ்ரீராமா ஸ்ரீ ராமா” என்று சொல் அதுவே அவனது ஆயிரம் நாமங்களுக்கு சமம் என்று சொல்லி இருக்கிறாரே. விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் அது ஒரு முக்கிய ஸ்லோகம் ஆயிற்றே. பிங்களா என்கிற வேசி ஒரு கிளி வளர்த்தாள் . அதற்கு ரகு என்று பெயர் வைத்து அடிக்கடி ரகு ரகு என்று கூப்பிட்டதால் மோக்ஷம் அடைந்தாள்.
அஜாமிளன் ஒரு பாபி. ஆனால் அவன் மகனுக்கு நாராயணன் என்று பெயர் வைத்து ‘நாராயணா’ என்று அடிக்கடி பிள்ளையை கூப்பிட்டதால் அவன் எதிர்பார்க்காமல், மோக்ஷ கதவு திறந்து வைத்தார்கள் அவனுக்காக.” என்று விளக்கினார் துளசிதாசர்.
அப்படியும் திருப்தி அடையாத பிராமணர்கள் ”இதற்கு சரியான கண்கூடான ஒரு அத்தாட்சி இருந்தால் நம்பலாம். ” என்கிறார்கள்
”என்ன சாட்சியம் வேண்டும் உங்களுக்கு?” என்று துளசி தாசர் கேட்கிறார்.துளசிதாசரை சுற்றி நின்ற பிராமணர்கள் எல்லோரும் ஒன்றாக குரல் கொடுத்தார்கள்.
”சுவாமி நீங்கள் சொன்னால் போதாது. இந்த பாபி ”பிராமணனை கொன்றவன் நான், கொல்வேன்” என்று சொன்ன பாபம் அவன் ஸ்ரீ ராமன் நாமத்தை சொன்னதால் உடனே நீங்கி விட்டது என்கிறீர்களே. எந்த சாஸ்திரத்தில் இது சொல்லி இருக்கிறது? இதற்கு சரியான கண்கூடான ஒரு அத்தாட்சி இருந்தால் நம்பலாம். இல்லாத போது இந்த பாபியோடு எங்களை போஜனம் அருந்த சொல்கிறீர்களே? அந்த பாபம் எங்களை பிடித்துக் கொள்ளுமே ” என்றார்கள்.
”பிராமணர்களே, பக்தியோடு மரியாதையோடு உங்களை நமஸ்கரித்து சொல்கிறேன். எனக்கு தெரிந்து, என் அனுபவத்தில், ஸ்ரீ ராமனின் நாமத்தை விட சிறந்த பாப , சோக, துக்க, நிவாரணி எதுவுமே இல்லை. எனக்கு வேறெந்த சாஸ்திரமும் தெரியாது. உங்களுக்கு என்ன சாட்சியம், ஆதாரம் வேண்டும் என்று சொன்னால் என்னால் முடிந்த வரை உங்களை திருப்திப் படுத்துகிறேன். ஸ்ரீ ராமன் அருள் புரிவான்” என்றார் துளசிதாசர்.
பிராமணர்களுக்கு என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை. ஆனால் துளசிதாசரை விடக்கூடாது என்று நிச்சயம் பண்ணிக் கொண்டு அவர்களில் தலைவன் போல் ஒருவன் பேசினான். ஆஸ்ரமத்துக்கு எதிரே இருந்த ஒரு பழைய கால சிவன் கோவில் அந்த பிராமணன் கண்ணில் பட்டதும் அவனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது.
”துளசி தாசரே நீங்கள் சொல்வதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ஆனால் அது மட்டும் போதாது. இதற்கு ஈஸ்வர அனுக்ஞை வேண்டும். அதோ பாருங்கள் எதிரே சிவன் இருக்கிறார். அவர் எதிரே நந்திகேஸ்வரர் அமர்ந்திருக்கி றார்.. சிவனின் வாஹனம். ஒரு பாத்திரத்தில் கீரை, தானியங்கள் வைத்து ஜலம் நிரப்பி அதை அந்த நந்தி கேஸ்வரருக்கு நைவேத்யம் செய்யுங்கள் உங்கள் கையால் நிறைய புல் கீரை எடுத்து எங்கள் கண் எதிரே அந்த நந்திகேஸ்வரனுக்கு கொடுங்கள். உங்கள் கையிலிருந்து அதை அவர் வாங்கி சாப்பிடுவதை நாங்கள் பார்த்து விட்டால் பிறகு என்ன உங்கள் வாக்கை ஒப்புக்கொண்டு இந்த பிராம்மண கொலைகார பாபி எங்களோடு அமர்ந்து சாப்பிடட்டும். ஆக்ஷேபணை இல்லை. நீங்கள் நிறைய படித்தவர். எதையாவது சொன்னால் அதை சரியா என்று அறியக்கூட முடியாதவர்கள் நாங்கள். ஆகவே நிதர்சனமாக இந்த உண்மை போதும்.” என்றான் அந்த பிராமணர் களின் தலைவன். (இந்த மாதிரி கல்நந்தி புல் கட்டு சாப்பிட்ட கதை திருவிளையாடல் புராணத்திலும் வருகிறது, பாண்டுரங்கன் பக்தர்கள் சரித்திரத்திலும் வருகிறதே, ஒரே நந்தி இல்லை, ஒரே ஊரில் இல்லை, பல ஊர்கள், பல்வேறு கால கட்டத்தில் இதெல்லாம் ஒரே மாதிரி நிகழ்ந்திருக்கலாம், கட்டுக்கதை என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. நம்பிக்கை வைப்பதால் ஒரு நஷ்டமும் இல்லை.லாபம் தான்.)
தொடரும்
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



