
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K. SIVAN
ஒரு ஸ்டாம்ப் கதை
ஒரு ஒல்லியான, உயரமான, கொஞ்சம் முதுகு கோணலாக வழுக்கை மண்டையில் அங்கஸ்திரத்தை போட்டு வெயிலுக்கு பாதுகாப்போடு ஒரு மனிதர் என் வாசல் கதவைத் தட்டினார். ”வாங்கோ, என்ன வேண்டும், யாரை பார்க்கணும்”” என் பேர் ராதாகிருஷ்ணன், உங்க ஊரிலே இருக்கிற பள்ளிக்கூடத்தில் கணக்கு வாத்தியாரா வந்து சேர்ந்திருக்கேன். பஜனை பாட்டு பாடுவேன். கிருஷ்ண பக்தன்.உங்களைப் பத்தி கேள்விப்பட்டேன். பார்க்கணும்னு தோணித்து.”அடாடா , ரொம்ப சந்தோஷம் வாங்கோ, உக்காருங்கோ, இருங்கோ, கொஞ்சம் ஜில்லுனு மோர் தரேன். வெயிலில் வந்திருக்கிறேளே. சிரம பரிகாரம் பண்ணிக்கோங்கோ”உள்ளே சென்று சில்லென்று பசு மோர் கொண்டு வரும்போது ”கிருஷ்ணா முகுந்தா முராரே” என்று பாடிக்கொண்டிருந்தார். சிலர் இப்படித்தான் சங்கோஜமில்லாமல் பாடுவார்கள் , பழகுவார்கள். நானும் அப்படித்தான்.”எனக்கு மஹா ஸ்வாமிகள் ரொம்ப பிடிக்கும், அவரை நினைக்காத நாளில்லை. அவரைப் பற்றி உங்களோடு பேசவேண்டும். நீங்க அவரைப் பற்றி பேசும் தெய்வம் என்று புத்தகங்கள் எழுதி இருக்கீர்கள் என்று கேள்விப்பட்டேன்.””ஆஹா பேஷாக பேசுவோம்”’இன்று ஒரு இங்கிலிஷ் கட்டுரை படித்தேன்,அதில் நமது முந்தைய பிரதமர் நேரு ஒரு நாஸ்திக வாதி என்றும் அடிக்கடி ஸ்வாமி விவேகானந்தாவை கிண்டல் பண்ணி, நமது ஹிந்து மதத்தை ஒரு “kitchen religion ” “அடுப்பங்கரை மதம்” என்று பரிஹாசம் செய்வார் என்று படிக்கும்போது மனசு கஷ்டப்பட்டது. உங்களுக்கு அதைப்பற்றி தெரியுமா?” வாஸ்தவத்தில் என்னைப் பொருத்தவரை நேரு அவர்கள் படித்தவர். சிறந்த பேச்சாளர், எழுத்தாளர். ஹிந்து மதத்தின் சாரத்தை புரிந்துகொண்டு அதற்கு சரியான certificate தருகிறார் என்று தான் மனதில் படுகிறது. நம் மதம் நிச்சயம் ஒரு அடுப்பங்கரை மதம்தான்” “என்ன சார் சொல்கிறீர்கள் ?நாரதர் சனத்குமாரரிடம் போய் ஆத்ம வித்தையை தனக்கு உபதேசிக்க வேண்டினார். அப்போது சனத்குமாரர், “ஆஹார சுத்தவ் சத்வ சுத்தி;” என்றுதான் ஆரம்பிக்கிறார். சாந்தோக்கிய உபநிஷத்திலேயே இந்த விஷயம் இருக்கிறது. “தூய உணவில் ஆரம்பி; அதுதான் குணம் தூய்மை ஆவதற்கு வழி. இப்படி சித்த சுத்தி ஏற்பட்ட பின்தான் படிப்படியாக ஈஸ்வர ஸ்மரணம், கட்டுக்கள் விடுபட்ட மோக்ஷம் எல்லாம் சித்திக்கும்” என்று சனத்குமாரரே kitchen religion ல்லதான் ஆரம்பிக்கிறார்”நம்முடைய மஹா பெரியவா சொன்னது ஞாபகம் இருக்கா? அவர் வார்த்தையிலே சொல்றேன் கேளுங்கோ;:
”இன்னொருத்தர் உதவியில்லாம அவாவா கார்யத்தை அவாவாளே பண்ணிக்கறா மாதிரி கல்வித்திட்டத்தில கொண்டு வரணும்ன்னுதானே சமூஹ சீர்திருத்தவாதிகள் சொல்லறா? அதுனாலதான், வாழ்க்கைக்கு முக்யமா வேணுங்கற அன்னத்தை அவனவன் ஸ்வயம்பாகம் பண்ணிக்க கத்துக் குடுத்துட்டா அதுதான் நெஜமான சீர்திருத்தம். சாஸ்த்ர வாக்யம் ஒண்ணு இருக்கு…”பஞ்சாசத் வத்ஸராத் ஊர்த்வம் ந குர்யாத் பாணி பீடநம்” அப்படீன்னா அம்பது வயசுக்கு மேல கல்யாணம் பண்ணிக்கக்கூடாது. புருஷாளுக்கே வயசானாவிட்டு, சமையல் பண்ண தெரிஞ்சிருக்கணும்ன்னு சாஸ்த்ரம் சொல்றது. சமையல் தெரிஞ்சுட்டா, வானப்ரஸ்தம் போக வேண்டிய வயஸ்ல தாம்பத்யத்துக்கு திரும்பற ஆபாசம் நடக்காம இருக்குமோல்லியோ?
முன்பெல்லாம் மாதிரி இல்லாம இப்போ பக்ஷிகள் மாதிரி பூலோகத்திலே எங்கெங்கே வேலை உண்டோ, அங்கங்கே போகணுங்கற நெலைமைல ஸ்வயம்பாகம் அத்யாவஸ்யமாகிறது. சுத்தத்துக்கு சுத்தம்; ஸத்வத்துக்கு ஸத்வம்; அதோட வெந்ததும் வேகாததுமா, கண்ட கையால சமைச்சதை ஹோட்டல்ல சாப்ட்டு சாப்ட்டு, சின்ன வயஸ்லேயே அல்சர், அது இதுன்னு அவஸ்தை படாம இருக்கலாம். சின்னதா ரொட்டி, பொங்கல் மாதிரி பண்ணத் தெரிஞ்சிண்டா போறும். இப்போ என்னடான்னா, கணக்கு வழக்கில்லாம வ்யாதிகள் தான் சர்வ வ்யாபகமா இருக்கு.”
முன்பெல்லாம் எங்கேயாவது ரொம்ப தூரம் ப்ரயாணம் பண்ணணும்னாக்கூட பூரி, சத்துமா இதுகளை பண்ணி எடுத்துண்டு, பாலையோ, மோரையோ விட்டு சாப்ட்டுக்கலாம். அரிசியை நன்னா செவக்க வறுத்து பொடிச்சு வெச்சிண்டா அதுதான் சத்துமா. அதுல பாலையோ, மோரையோ விட்டு சாப்டா, புஸ்ன்னு ஊறிண்டு பசியடங்கி, புஷ்டியாவும் இருக்கும். ‘குக்கர், கிக்கர்’ எதவுமே உப்பு, வேண்டாம். சுலபமா நாலைஞ்சு தினுசு அதுல பண்ணிக்கலாம்தான். ஆனா, குக்கர்னு ஆரம்பிச்சா, அப்புறம் அஞ்சறைப்பெட்டி, ரொம்ப புளி, உப்பு, பெருங்காயம் , காரம் ன்னு எல்லாம் கூடவே வரும். உடம்புக்கு வியாதி எங்கேன்னு காத்துண்டு இருக்கும். பரிஹாரமா மருந்து, அந்த மருந்துல அநாச்சாரம்…ன்னு போய்ண்டிருக்கும். அதுனால, ஒரு சாமான், ரெண்டு சாமானை வெச்சிண்டு, ஸாத்வீகமா நம்முடைய பெரியவா சொல்றா மாதிரி, மதுரமா, ஸ்நிக்தமா லேசான ஆகாரத்தை நாமே தயார் பண்ணி சாப்பிடணுங்கறதை “ஜன்ம வ்ரதமா” எடுத்துக்கணும். “ஸ்நிக்தம்” ன்னா பசையுள்ளதுங்கறதுக்காக நெய் சொட்ட சொட்ட இருக்கணும்னு அர்த்தமில்லே.வறட்டு வறட்டுன்னு இல்லாம பால்லையோ, மோர்லையோ ஊறினதா இருக்கணும். அது போதும்”
”சரி. அப்பிடி ரொம்ப சிம்பிளா சமைசுண்டா, அதிதி சம்ஸ்காரம் எப்பிடி பண்ணறது? அதையும் பெரிய தர்மமா சொல்லியிருக்கே? அதுக்கும் வழி இருக்கு. வர்றவாளுக்கு பாலும், பழமும் குடுக்கலாம். நம்ம கையால ஆகாரம் ஏதாவது குடுக்கறது, அவாளோட குக்ஷில போகணும். அவ்வளவுதான். அந்தக் காலத்திலல்லாம் திருடனுக்குக் கூட பால்சாதம் போட்டு விட்டால் , அவன் அந்த ஆத்ல திருடமாட்டான். நல்ல எண்ணத்தை வளக்கறது பால். அதுனாலதான் பாலோட, பழத்தையும் சேத்து குடுக்கச் சொல்றேன்.
எல்லாத்துக்கும் மேல, நாம சமைச்சதை பகவானுக்கு நிவேதனம் பண்ணிட்டு அதுல இருக்கற கொஞ்ச நஞ்ச தோஷத்தையும் போக்கிடணும். வேற மூர்த்தி, விக்ரஹம் இல்லாட்டா கூட, ப்ரத்யக்ஷ தெய்வமா இருக்கும் சூர்ய பகவானுக்கு நிவேதனம் பண்ணிடணும். அது போறும்.”
மேலே சொன்னது மஹா பெரியவா உபதேசம்.
என் வீட்டில் விளையாட வரும் அடுத்த வீட்டு பையன் ஏதோ ஒரு லெட்டரை கவரில் போட்டு ஒட்டிக் கொண்டிருந்தவன் திடீரென்று அந்த கவரை நாக்கில் தடவி ஓட்டினதை பார்த்தேன்.
”டேய் பாலு, நாக்கில் கண்டதை எல்லாம் படும்படியாக செய்யாதே. சிலர் ரூபா நோட்டுகளை எண்ணும் போது நாக்கில் விரலால் எச்சில் தொட்டு அதை எண்ணுகிறார்கள். எந்த பேங்குக்கு போனாலும் ஒரு சிலராவது இவ்வாறு செய்வதையும், சிலர் ஸ்டாம்ப் ஓட்டும்போதும் ஸ்டாம்பை எச்சில் படுத்தி கவரில் ஒட்டி கையால் அமுக்கி தபால் பெட்டியில் போடுவதையும் அன்றாடம் தபால் அலுவகங்களிலும்,கடைகளிலும் காணலாம்.
உடல் ஓர் அபூர்வ பரிசு. அதை நேர்த்தியாக வைத்துக்கொள்ளவேண்டும். நிறைய வியாதிகளை நாமே வரவழைத்துக் கொள்வதால் அவதிப்படுகிறோம்.
”மஹா பெரியவா பற்றி கூட ஒரு ஸ்டாம்ப் கதை இருக்குன்னு கேள்விப்பட்டிருக்கேன்.அது தெரியுமா சார்.’
”நானும் படிச்சிருக்கேன். சொல்றேன்”மகா பெரியவாளுக்கு ஆதி சங்கராச்சார்யா மேலே அதீத பக்தி மரியாதை. 1983 வாக்கிலே, சதாராவிலே பெரியவா தங்கியிருந்தபோது சங்கர ஜெயந்தி சமயத்திலே அப்போது பிரதமரா இருந்த இந்திரா காந்தி அம்மையாருக்கு, ஒரு எண்ணம் தோன்றிற்று. அவருக்கு காஞ்சி பெரியவாமேலே ரொம்ப பக்தியும் மரியாதையும் உண்டே. சங்கர ஜெயந்தியை கொண்டாட ஒரு விசேஷ போஸ்டல் ஸ்டாம்ப் ஆதிசங்கரருடைய படம் போட்டு வெளியிடலாம் என்று எண்ணம். அந்த ஸ்டாம்ப் வெளியிடும் முன்பு பெரியவா அனுக்ரஹம் அவசியம் என்று பட்டதினால், ஸ்ரீ C சுப்பிரமணியம் அப்போது அமைச்சர் ஆனதால் அவரை விட்டு பெரியவாளைப்போய் பார்த்து அவாளுடைய ஒப்புதல் வாங்கினதற்குப் பிறகு ஸ்டாம்ப் வெளியடலாமே” என்று சுப்ரமணியத்தை சதாராவுக்கு அனுப்பினார். பெரியவா யார் வந்தாலும் அவர்கள் எல்லோரையும் ஒன்றாகத் தான் நடத்துவார்.
”பெரியவாளைப் பார்க்க டெல்லி மந்திரி C..சுப்பிரமணியம் வந்திருக்கிறார்” என்று பெரியவாளிடம் சொன்னார்கள்..”எதற்கு?” என்று கேட்டார். அதற்குள் சுப்ரமணியமே அருகில் வந்து நமஸ்கரித்து பேச்சை ஆரம்பித்தார்.’ டில்லி அரசாங்கத்திலே ஆதி சங்கர பகவத் பாதருடைய படம் போட்டு ஒரு ஸ்டாம்ப் சங்கர ஜெயந்தியை ஒட்டி வெளியிட தீர்மானம். அதை பெரியவாளுடைய அங்கீகாரத்துடன் செய்ய அனுமதி கேட்டு வந்திருக்கிறேன்”
பெரியவா கண நேரம் சிந்தித்து புன்னகையோடு ” அங்கீகாரம், ” என்றால் நீங்கள் ஏற்கனவே ஸ்டாம்ப் போட தீர்மானம் பண்ணியாகி விட்டதே. என்னிடம் சொல்லி விட்டுப்போகலாம் என்று அர்த்தமா. என்னுடைய அபிப்ராயம் கேட்டுட்டு தீர்மானத்தை முடிவு பண்ணப்போகிறீர்களா. என் அபிப்ராயம் உங்கள் தீர்மானத்தை கட்டுப்படுத்துமா?”
” பெரியவர்கள் என்ன அபிப்ராயம் சொல்கிறீர்களோ அதைக் கலந்து ஆலோசித்து தான் முடிவெடுக்க எண்ணம். உங்கள் அனுமதி கிடைக்கும் என்று நம்பிக்கை ” என்றார் சுப்பிரமணியம்.
”என் அபிப்ராயம் என்று கேட்டீர்களானால் எனக்கு இதில் உடன்பாடு இல்லை. ஆதி சங்கரர் மஹா உன்னத புருஷர். பரமேஸ்வரன் அவதாரம்.அவரது படம் பூஜிக்க தகுந்தது. அதை அனாசாரமாக தொட்டு தக்க மரியாதை இன்றி கண்ட இடத்தில் வைத்து, நாக்கினால் நக்கி அசுத்தப்படுத்த நான் ஒப்புக்கொள்ள முடியாது. நாம் (தன்னையும் சேர்த்துக்கொண்டு) ஸ்டாம்ப் போட்டு, முத்திரை குத்துகிறேன் என்று அதன் மேல் முத்திரை ஸ்டாம்ப் குத்தி அவரைக் கௌரவிக்காததால் அவர் மகோன்னதம் மேன்மை எல்லாம் இம்மியும் குறையாது” மஹா பெரியவர் உடனே வேறு யாரிடமோ பேச தொடங்கிவிட்டார்.
சுப்பிரமணியம் அவரை வணங்கி விட்டு ”நான் உங்கள் கருத்தை உடனே பிரதமரிடம் தெரிவிக்கிறேன்” என்றார்..
பெரியவா அவரை ஆசிர்வதித்து ” அப்படி பிரதமர் ஸ்டாம்ப் வெளியிட முடிவெடுத்தால்,நீங்கள் அவ்வளவு தூரம் வந்து என்னை மதித்து என் அபிப்ராயம் கேட்டதால் என் கருத்தை தெளிவாக சொல்லிவிட்டேன்” என்றார்.
அந்த ஸ்டாம்ப் இன்றுவரை வெளிவரவில்லை. அம்மையாருக்கு பெரியவா மேல் அத்தனை மரியாதை.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



