
பறக்கும் பாவை – நங்கநல்லூர் J K SIVAN
சென்னையின் அண்ணா சாலை அப்போது மவுண்ட் ரோடு. அதை ஒட்டி மூன்று பிரபல சினிமா கொட்டகைகள் இருந்தன. கேசினோ, CASINO, கெயிட்டி GAIETY என்று அவற்றிற்கு பெயர். ரெண்டு ஒரு பக்கம், மூன்றாவது நடுவில் ஓடும் கூவம் நதிக்கு மறுகரையில். அதற்கு சித்ரா டாக்கீஸ் என்று பெயர். இப்போது அவை அடையாளம் இழந்து விட்டன. சித்ரா டாக்கீஸ் பின்புறம் கோமளீயீஸ்வரன் பேட்டை (இப்போது புதுப்பேட்டை) என்று அழகிய அமைதியான அரை கிராமம், அரை பட்டணம் ஒன்று. நான் அதில் சில வருஷங்கள் ஒண்டு குடித்தனத்தில் வாழ்ந்தேன். அங்கே நான் சென்று வாழ காரணம், ரெண்டு. ஒன்று என்னுடைய அலுவலகம் மவுண்ட் ரோட்டில் பெரிய தபாலாபீஸ் அருகே தன் பில்டிங் என்ற கட்டிடத்தில் இருந்தது. மற்றொன்று என் மனைவிக்கு நெருக்கமான உறவினர்கள் கோமளீஸ்வரன் பேட்டையில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
கோமளீஸ்வரன் பேட்டையில் பழைய சிவன் கோவில் அருகே எனக்கு வீடு. சிவனுக்கு கோமளீஸ்வரர் என்று பெயர். 18ம்-19ம் நூற்றாண்டில், அந்த கோவில் அருகே, பக்தை சக்ரா அம்மா என்று ஒரு யோகினி அங்கே வாழ்ந்திருந்தாள் . சிறந்த ஸ்ரீ வித்யா, சக்தி உபாசகி. சக்தி உபாசகி என்றால் ஸ்ரீ சக்ர வழிபாடு உண்டல்லவா. அம்பாள் லலிதா திருபுரசுந்தரியை சக்ரத்தில், ஸ்ரீ வித்யா உபாசனை பூஜைகள் பண்ணி அம்பாளை சக்ரத்தில் பிரதிஷ்டை பண்ணி பூஜை பண்ணி வழிபடுபவர்கள். அதனால் தான் அந்த பக்தைக்கு சக்ர அம்மா என்று பெயர். பின்னர் சிலர் சக்கரை அம்மாள் என்று அவளை அழைத்ததும் உண்டு. அவள் வாழ்ந்த காலத்தில் கோமளீஸ்வரன் பேட்டை ஒரு சின்ன அக்ரஹாரம். அம்பாள் சக்தி சக்ரா அம்மாளிடம் இருந்ததால் பலர் அவளிடம் வியாதி குணமாக, வீட்டில் கஷ்டம் தீர என்று பல காரணங்களுக்காக அருள் வாக்கு, பரிகாரம், பெற வந்து தரிசித்தனர். பலருக்கு நல்ல பலன் கிடைத்தது. அதிகம் வெளியே தெரியாத மஹான்கள், யோகிகளில் சக்ர அம்மாளும் ஒருவர்.
ஆனந்தாம்பா என்ற இயற்பெயரோடு 1854ல் திருவண்ணாமலை ஜில்லாவில் போளூர் கிராமம் அருகே தேவிகா புரம் ஊரில் பிறந்தவர் சக்ரா அம்மாள். இளம் வயதில் தேவிகாபுரம் பிரஹந்நாயகி ஆலயத்தில் எப்போதும் அவள் தனிமையில் அமர்ந்துஅம்பாளை நோக்கி பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பாள். தியானம், ஜெபம் ஒன்றும் தெரியாத வயது. அந்த அம்பாள் பிரசித்தி பெற்ற தெய்வம் என்பதால் ஊருக்கே தேவிகா புரம் என்று பெயர். ஆனந்தம்பாவின் அப்பா சேஷு குருக்கள் தான் அம்பாள் கோவில் அர்ச்சகர். சிறிது காலத்தில் அவளுக்கு தியானம், சிவஸ்துதி மனப்பாடம் ஆயிற்று. ஒன்பது வயதில் சேஷு அவளுக்கு கல்யாணம் பண்ணி வைத்தார். 24 வயது மாப்பிள்ளை சாம்பசிவம் சென்னையில் மேலே சொன்ன கோமளீஸ்வரன்பேட்டை யில் ஒரு மடத்தில் உத்யோகஸ்தர் . ஆனந்தாம்பா அவருக்கு ஒரு வேலைக்காரி அவ்வளவு தான் உறவு. அவர் மனம் வேறு யார் மீதோ இருந்திருக்கலாம். ஒருவிதத்தில் தனிமை ஆனந்தாம்பாவை கோமளீஸ்வரன் கோவிலில் அதிக நேரம் தியானத்தில் ஈடுபட உதவியது. அவளுடைய 20வது வயதில் விதவையானாள் . சேஷு குருக்கள் பெண்ணை தேவிகாபுரம் அழைத்து சென்றார்.
அவள் சகோதரன் போளூரில் வசித்ததால் அடிக்கடி நடந்து அங்கே போவாள். அங்கே தான் நக்ஷத்ர குணாம்பா எனும் ஒரு யோகினியை சந்திக்க நேர்ந்தது. அந்த யோகினி நக்ஷத்ர குன்று என்ற ஒரு தனி இடத்தில் வாழ்ந்தவர். அருகே விடோபா சுவாமி எனும் சித்தரும் அங்கே வாழ்ந்திருந்தார். இந்த பகுதி தெய்வீகமானது. அருகருகே சேஷாத்திரி ஸ்வாமிகள், ரமணர், விசிறி ஸ்வாமிகள் ஆகியோர் வாழ்ந்திருந்தனர். ஆனந்தாம்பா நக்ஷத்ர குணாம்பா சிஷ்யை ஆனாள். அவளை தாயாக ஏற்று அந்த யோகினியும் அவளை பெற்ற தாய்ப்பாசத்தோடு நேசித்தார்.
”அம்மா நான் என் கணவன் வாழ்ந்த கோமளீஸ்வரன் பேட்டைக்கு அடிக்கடி செல்ல வேண்டி இருக்கிறதே. உங்களை எப்படி பிரிந்து அங்கே வாழ்வேன். நக்ஷத்ர குன்றுக்கு, இவ்வளவு தூரம் நான் எப்படி வரமுடியும், எனக்கு நீங்கள் அருள வேண்டும்” என்று குருவை ஒருநாள் ஆனந்தாம்பா வேண்டிக் கேட்டாள் .
”கவலையே உனக்கு வேண்டாம் மகளே, உனக்கு மானசீகமாக இரு ரெக்கைகளை தருகிறேன். நீ நினைத்த பொது பறந்து இங்கே வரலாம். திரும்பி போகலாம். உன் றெக்கைகள் பிறர் கண்ணுக்கு தெரியாது.
அஷ்ட மா சித்திகளில் லஹிமா என்று ஒரு சித்தி. அது உடலை லேசாக்கி காற்றோடு உனக்கும். பறக்க முடியும். என் சக்திகளை எல்லாம் உனக்கு கொடுக்கிறேன்” என்று ஸ்ரீ வித்யா உபாசனை பூஜைகளை, மந்திரங்களை உபதேசித்து அருளினாள் குரு யோகினி நக்ஷத்ர குணாம்பா.அன்று முதல் சித்திகள் வரப்பெற்றாள் ஆனந்தாம்பா. தான் வாழ்ந்த வீட்டின் மாடியில் கோமளீஸ்வரன் பேட்டையில் ஆனந்தாம்பா தியானத்தில் ஈடுபட்டாள். அன்னம் ஆகாரம் இன்றி பல நாட்கள் சமாதியில் இருப்பாள். 20 வயதில் கணவனை இழந்த பெண் பைத்தியம் என்று உறவினர் அவளை ஏசினார்கள். அநேக நேரம் அவளை கோமளீஸ் வரன் ஆலய வாசலில் பார்க்கலாம். ஸ்ரீ சக்ர உபாசனை மந்திரங்களை சொல்லிக்கொண் டிருப்பாள்.
குரு உபதேசித்தபடி அவளுக்கு முழுமையாக ஸ்ரீ வித்யா ஆகர்ஷண சக்தி வாய்த்தது. அவளை சுற்றி உள்ளும் வெளியேயும் ஞானப்பிரகாசம் சூழ்ந்திருப்பதை உணர்ந்தாள். மற்றவர் கண்ணுக்கு தெரியாதே. சதா தியானம், ஜபம், சமாதிநிலை என்று இருந்தாள் . திடீர் திடீர் என்று உரக்க ஹா ஹா என்று சிரிப்பாள். பைத்தியம் முற்றிவிட்டது என்று சகலரும் நம்பினார்கள்.
அவள் சகோதரன் அருணாச்சலமும் கோமளீஸ்வரன் பேட்டையில் வாழ்ந்திருந்தவனுக்கு உடலில் ஏதோ நோய் என்பதால் எப்போதும் தியானம் ஜபம். அடிக்கடி உரக்க ஹா ஹா என்று சிரிப்பாள். பைத்யம் முற்றி விட்டது என்று உறவினர்கள் கருதினார்கள்.
அக்காலத்தில் ஒரு பிரபல மருத்துவர் டாக்டர் M C நஞ்சுண்டராவ். சுவாமி விவேகானந்தர் பக்தர். அடிக்கடி கோமளீஸ்வரன் பேட்டை வருவார். அருணாசலத்துக்கு மருத்துவம் பார்க்க டாக்டர் அவன் வீட்டுக்கு வந்தபோது அந்த வீட்டு மாடியில் ஆனந்தாம்பாளின் நிலையும் அவருக்கு புரிந்தது. அவளை அடிக்கடி கோமளீஸ்வரன் பேட்டை சிவாலய வாசலில் பார்த்திருக்கிறார்.
ஒருநாள் அவளிடம் ”அம்மா நீ ஏன் அடிக்கடி இப்படி உரக்க தனிமையில் அமர்ந்து சிரிக்கிறாய்?” என்று கேட்டார்.
”மகனே, ஆத்மா எப்போதும் ஆனந்த மயத்தில் திளைப்பது. சுக துக்கங்கள் உடலை மட்டுமே பாதிப்பவை. நீ உடலில்லை. நீ சூக்ஷம உடலில் வசிப்பவன். சதானந்தத்தில் இருக்கும் ஆத்ம உடல் எனும் கூட்டில் இருந்தாலும் சிரிப்பு என்பது ஆனந்தமாக சந்தோஷமாக இருக்கும்போது தானே வரும்.. சொல்?” .
ஆத்மாவின் சிரிப்பை தேகத்தின் சிரிப்பாக கருதி மற்றவர்கள் பைத்திய பட்டம் கட்டட்டும் ” என்றாள் .
அன்றுமுதல் டாக்டர் நஞ்சுண்டராவோ அடிக்கடி ஆனந்தம்பாவை சந்தித்து அவள் சீடரானார். அவர் தான் வெளி உலகத்துக்கு அவளை ஸ்ரீ சக்கரத்தம்மா என அறிமுகப்படுத்தியவர். பாமரர்கள் அவளை சர்க்காரை அம்மாள் என்பார்கள்.
அவள் அடிக்கடி கோமளீஸ்வரன் பேட்டையிலிருந்து திருவண்ணாமலை ஜில்லா தேவிகாபுரம் நக்ஷத்ர குன்றுக்கு பறந்து போவாள். அப்படி அவள் பறந்துபோவதை தமிழ் பேரறிஞர் திரு வி.க அவர்கள் தன்னுடைய உள்ளொளி என்கிற புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
’உள்ளொளி’ (மணிவாசகர் பதிப்பகம், தமிழ் மண் பதிப்பகம்) என்ற நூலில் திரு .வி.க.எழுதியது;
“சென்னை கோமளீசுவரன் பேட்டையில் ஓர் அம்மையார் இருந்தார். அவர் காலஞ்சென்ற டாக்டர் நஞ்சுண்டராவின் குரு என்று உலகம் சொல்லும். அவ்வம்மையார் பறவையைப் போல வானத்தில் பறப்பர். ஒருமுறை யான் வசித்த கல்லூரியின் மேல் மாடியில் பறந்து வந்து நின்றனர். மானுடம் பறக்கிறதெனில் உலகம் அதை எப்படி வியக்குமென்று சொல்ல வேண்டுவதில்லை. அக்காலத்தில் சென்னையில் வதிந்த விஞ்ஞானியர் பலர் சூழ்ந்து சூழ்ந்து அம்மையார் நிலையை ஆராய்வர். அப்பொழுது சென்னை மியூஸியத் தலைவராயிருந்த ஓர் ஐரோப்பியரால் பறவையார் நிலை பெரிதும் ஆராயப்பட்டது. அம்மையார் பறவை இனத்தைச் சேர்ந்தவரென்றும், அவரிடம் பறவைக் குரிய கருவி கரண அமைப்புகள் சில உள்ளன என்றும், கூர்தல் (Evolution) அறப்படி அத்தகையப் பிறவி இயற்கையில் அமைதல் கூடும் என்றும் அவரால் விளக்கப்பட்டன. அவர் விளக்கம் மற்றவரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. யான் ‘தேசபக்தன்’ ஆசிரியனாகியபோது டாக்டர் நஞ்சுண்டராவிடம் நெருங்கிப் பழகுதல் நேர்ந்தது. பறவையாரைப் பற்றி அவரை நான் விசாரித்தேன். அவர், ‘அம்மையார் சித்தரினத்தில் சேர்ந்தவர்’ என்று கூறினர். பறவை நாயகியார் நிலை மனோ தத்துவத்துக்கு எட்டுவதா? உன்னிப் பாருங்கள்”.
பரிபக்குவம் பெற்ற ஞானிகள், சித்தர்கள் இருந்த இடத்திலிருந்தே அனைத்து இடங்களுக்கும் செல்ல முடியும். அந்த வகையில் தான் பெற்ற ‘இலகிமா’ என்ற சித்தின் மூலம், தனது உடல் எடையைக் காற்றை விட எடைகுறைந்ததாய் மாற்றிக் கொண்டு, வானத்தில் பறந்திருக்கிறார் அம்மா என்றே நாம் அனுமானிக்க முடிகிறது.”
1940ல் டாக்டர் நஞ்சுண்டராவ் சக்கரத்தம்மாளை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்துக்கு அழைத்து சென்றார். வெளியே வந்ததும் ஒரு இடத்தை அங்கே காட்டினாள். சவுக்கு தோப்பு இடம் அது. ஒரு குறிப்பிட்ட இடத்தை காட்டி ”ஐயா டாக்டரே, என்னுடைய தேகத்தை இங்கே அடக்கம் செய்வீர்களா? என் சமாதியை வெகு சிலரே கவனிப்பார்கள். பரவாயில்லை அப்படி தான் இருக்க வேண்டும். இங்கே அதீத ஆன்மீக சக்தி இருக்கும். அதற்கு அமைதி கோவில் என்று பேர் சூட்டுங்கள்.” டாக்டர் தனது குருவின் வார்த்தையை செயலாக்கினார். 1901 பிப்ரவரி 28அன்று அம்மாள் முக்தியடைந்தார். அம்மாள் சொன்ன இடத்தை வாங்கி வைத்திருந்த டாக்டர் அங்கே அம்மாளின் சமாதி கட்டி அது ஒரு சிறிய அமைதிக்கோவிலானது. இன்றும் உள்ளது. திருவான்மியூர் சென்று சக்கரத்தம்மாள் சமாதியை பார்ப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். நான் பார்த்திருக்கிறேன்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



