
பூணூலைப் பற்றி கொஞ்ச விஷயம். நங்கநல்லூர் J K SIVAN
இன்று 9.8.2025 சனிக்கிழமை ஆவணி அவிட்டம். யஜுர் உபா கர்மா. யஜுர் வேத பிராமணர்கள் மற்றும் பூணல் போட்டுக் கொள்பவர்கள் புது பூணல் போட்டுக்கொள்ளும் நாள். ஆகவே பூணூல் பற்றி சில விஷயங்களை பகிர்கிறேன்.
பூணூல் ப்ராமணர்கள் மட்டும் அணிவதில்லை, வைசியர்கள், க்ஷத்ரியர்கள், ஆசாரி வகுப்பினர் கூட அணிகிறார்கள். ஆனால் உபநயனம், சந்த்யா வந்தனம், நித்ய கர்மாநுஷ்டானம் முறையாக பின்பற்றுபவர்கள் அந்தண வகுப்பினர். எல்லோரும் அல்ல. ஒருகாலத்தில் தான் எல்லோரும். இக்காலத்தில் சிலரே அதை அனுஷ்டிக்கிறார்கள்.
பூணூல் வெளுப்பாக இருந்தாலே தெரிந்துவிடும், அதை அணிபவர் அனுஷ்டானம் பண்ணுபவர் என்று. சில பேர் பூணூல் ஆணியில் தான் தொங்கும். எல்லாம் காலத்தின் கோலம்.
இந்த உடம்பு ஒன்பது வாசல் கோவில்,அதற்குள் ஹ்ருதயத்தில் இருக்கும் ஆத்மா தெய்வம். அதை கோயிலை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்கிறோமோ அப்படி பராமரிக்க வேண்டும். அதற்கு தான் குளியல், சுத்த மடி வஸ்திரம், விரதம், உபவாசம், அனுஷ்டானம், த்யானம் போன்றவை கோவிலில் பூஜை போல் அவசியமாகிறது. பூணூல் அணிந்து நித்ய கர்மானுஷ்டானம் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது போல் அனுசரிப்பது தான் முறை.
பூணூலை எப்பொழுதெல்லாம் மாற்ற வேண்டும் ?
மாதம் ஒரு முறையாவது மாற்றிக்கொள்ள வேண்டும் . அமாவாசை தர்ப்பணத்தின் போது பூணூல் மாற்றிக்கொண்டு தர்ப்பணம் பண்ணலாம் . நாம் சொன்னால் வாத்தியார் மாற்றி விடுவார் .
தீட்டு உள்ள இடங்களுக்குச் சென்று வந்தால் பூணூல் மாற்ற வேண்டும் பத்து நாட்களுக்குள் துக்கம் விசாரிக்கச் சென்று வந்தால் பூணூல் மாற்ற வேண்டியது அவசியம் . மயானத்திற்கு சென்று வந்தால் கண்டிப்பாக பூணூல் மாற்றிக் கொள்ள வேண்டும் .
பிரசவம் ஆன வீடுகளுக்கு , புண்யாஹ வசனத்திற்கு முன் போய் வந்தால் மாற்றிக்கொள்ள வேண்டும் . பொதுவாக பத்து நாட்கள் வரை பிரசவத்தீட்டு . இது அவரவர்கள் வீடுகளிலும் உண்டு. பதினோராவது நாள் புண்யாஹ வசனம் ஆன பிறகு தான் தீட்டு போகும் . அறுவை சிகிச்சை செய்து குழந்தை பிறக்கும் சில வீடுகளில் , தாயின் உடல் நலம் கருதி 21 ம் நாள் புண்யாஹ வசனம் செய்வதும் உண்டு . அது வரை தீட்டுத்தான் . புண்யாஹ வசனம் என்று நடக்கிறதோ அன்றைக்குத்தான் தீட்டுப் போகும் . அன்றைய தினம் பூணூல் மாற்றிக்கொள்ள வேண்டும் .
இது தவிர , உறவினர்கள் இறந்தால் , பங்காளிகளுக்கு பத்து நாள் தீட்டு . அதற்கு மறு நாள் பூணூல் மாற்றிக்கொள்ள வேண்டும் . இந்த தீட்டுக்கள் விஷயத்தில் பலருக்கு அடிக்கடி சந்தேகம் வரும் . யார் இறந்தால் யாருக்கு.. எத்தனை நாட்கள் தீட்டு .. ? தீட்டு என்றால் என்ன .. ? யார் யார் தீட்டு அனுசரிக்க வேண்டும்.. ? தீட்டு என்பது பேய் பிசாசு என்பது போல ஒன்றா .. ? தீட்டு என்று சொன்னால் பலர் பயப்படுவதற்கு என்ன காரணம் .. ?
ஆஸ்பத்ரி, HOSPITAL போய் விட்டு வந்தால் பூணூல் மாற்ற வேண்டும். அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு பஸ், ரயிலில் பயணம் செய்து விட்டு வந்தாலே பூணூல் மாற்றி கொள்வர் . இது இப்போது சாத்தியம் இல்லை. காலத்தோடு க்ருத்யங்களும் மாறுவது காலத்தின் கட்டாயம்.
ஸ்ராத்த தினத்தன்று வேறு பூணூல் மாற்றிக் கொண்டுதான் ஸ்ராத்தம் ஆரம்பிக்க வேண்டும் . இன்று பொது இடங்களில் , மடங்களில் ஸ்ராத்தம் பண்ணினால் பல வாத்தியார்கள் கண்டு கொள்ளாமல் ஸ்ராத்தம் பண்ணி வைத்து விட்டுப் போய் விடுகிறார்கள் . பூணூல் மாற்றி விடுங்கள் என்று சொல்ல வேண்டும் . முதல் நாள் ஆவணி அவிட்டம் என்றாலும் , அடுத்த நாள் ஸ்ராத்தம் வந்தால் , அன்றைக்கும் புதிய பூணூல் போட்டுக் கொண்டுதான் ஸ்ராத்தம் பண்ண வேண்டும் .
இது தவிர வீட்டில் நடக்கும் எந்த ஒரு வைதீக காரியம் என்றாலும் புதிய பூணூல் மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம் .
சட்டை , பனியன் கழட்டும் பொழுது சில சமயங்களில் அதோடு பூணூலும் சேர்ந்து உடம்பை விட்டு கழன்று விடும் . அப்பொழுது அதை உடனடியாக மாட்டிக் கொள்கிறோம். ஒரு தடவை பூணல் உடலை விட்டு விலகினால் பூணல் போட்டுக்கொள்ளும்போது சொல்லவேண்டிய மந்திரம் சொல்லிவிட்டு தான் வேறு பூணலை மாற்றிக்கொள்ளவேண்டும். சும்மா மாட்டிக்கொள்வதால் பூணல் போட்டுக்கொள்வதால் எந்த பயனும் இல்லை.
பூணூல் என்பது கர்ணனின் கவச குண்டலங்கள் போன்றது . அதை அணிந்திருப்பவனை தீய சக்திகள் மற்றும் பேராபத்து களிலிருந்து காக்கும் சக்தி பூணலுக்கு உண்டு. அதில் உள்ள முடிச்சுக்கு பிரம்ம முடிச்சு என்று பெயர் .
பூணூலில் காயத்ரி மந்திரத்தைச் சொல்லி சக்தி ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் . அப்படி வைத்திருந்தால் தான் ஆபத்துக்களிலிருந்து நாம் காப்பாற்றப்படுவோம் என்பது நம்பிக்கை. . எனவே அதற்கு உரிய மரியாதை கொடுத்து பராமரிக்க வேண்டும் .சாதாரண நூல் தானே என்று அலட்சியமாக , அதை முதுகு அரிப்பை சொரிந்து கொள்வதற்காக உபயோகிப்பது தப்பு.
குழந்தையாயிருந்த பையனுக்கு ஐந்து, ஏழு, ஒன்பது என்று ஒற்றைப்படை வயதில் , அவன் தானே மந்திரங்களைச் சொல்கிற சமயத்தில் உபநயனம் எனும் பூணூல் கல்யாணம் நடக்கிறது. “பிக்ஷாசர்யம் சர” (பிக்ஷை எடு) என்று இந்தச் சடங்கில் சொன்னால் பூணூல்காரப் பையன் “அப்படியே செய்கிறேன்” என பதிலளிக் கிறான். உபநயனத்துக்கு முன்பே “பிக்ஷாசர்யம் சர” என்று சொன்னால் அதைப் புரிந்து கொள்வதற்கான ஸம்ஸ்கிருத ஞானம் தேவைப்படுமே . வேதகாலத்தில் பேச்சு ஸமஸ்க்ரிதத்திலேயே இருந்ததால் எளிதாக போய்விட்டது. ஐந்து வயதில் படிக்க ஆரம்பித்தால் இரண்டு அல்லது மூன்று வருஷத்தில் ஸமஸ்க்ரித பாஷா ஞானம் வந்துவிடும். ஆதலால் ஒன்பது வயதில் பூணூல் போடவேண்டும் என்றாகிறது.
ஒன்பது வயசுக் குழந்தைகள் அர்த்தம் தெரிந்து பூணூல் போட்டுக் கொண்டு ஜபம் பண்ணிவிட்டால் லோகமெல்லாம் நன்றாக ஆகிவிடும். இப்போதோ இளம் மனசுகளில் நாஸ்திகத்தைத் தான் ஏற்றி யிருக்கிறோம்! ஸமஸ்க்ரிதம் வெறுக்கப்படுகிறது. அப்படியும் சிலர் பாடசாலைகள் நடத்தி சிறு குழந்தைகளுக்கு ஸமஸ்க்ரித ஞானம், சாஸ்திர , வேத ஞானம் அளித்து வருவது லோகத்துக்கு க்ஷேமம் தரும். கொஞ்சமாவது நமது காலத்தில் அதனால் தான் மழை பெய்கிறதோ?
பூணூல் இடது தோளில் அணிவது “உபவீதம்” என்று அழைக்கிறோம். தேவர்களுக்கு செய்யும் காரியங்களுக்கு பூணூல் இடது தோளில் (உபவீதமாக) இருக்க வேண்டும். நம் முன்னோர்களுக்கு செய்யும் காரியங்களுக்கு பூணூல் வலது தோளில் இருக்க வேண்டும். நம் ரிஷிகளுக்கு செய்யும் காரியங்களுக்கு பூணூல் மாலையாக இரு தோள்களில் இருக்க வேண்டும்.
முன்னோர்கள் பித்ரு லோகம் தென்திசையில் உள்ளது. அதுபோல, தேவ லோகம் வட திசையில் உள்ளது. பொதுவாகவே, எந்த வேத சம்பந்தமான பூஜையோ, யாகமோ கிழக்கு திசை பார்த்துதான் செய்ய வேண்டும். ஒருவருக்கு நமஸ்காரம் செய்தால் கூட, பொதுவாக கிழக்கு திசை பார்த்து தான் செய்கிறோம். கிழக்கு திசை பார்த்தே பெரும்பாலும் வேத காரியங்கள், நல்ல காரியங்கள் செய்வதால், கிழக்கு நோக்கி நிற்கும்போது நமக்கு இடப் பக்கம் வடக்காக இருப்பதால், பூணூல் இடமாகவே போட்டு கொள்கிறோம். நமக்கு வலப்பக்கம் தெற்குதிசை இருப்பதால், முன்னோர்களுக்கு தர்ப்பணம், திவச காரியங்கள் செய்யும்போது, பூணூல் வலமாக போட்டுகொள்கிறோம். ரிஷிகள் எங்கும் இருப்பதால், இரண்டு தோளும் படுமாறு மாலையாக போட்டு ரிஷி கடனை அடைகிறோம்.
பூணூல் முப்புரி நூல் எனப்படும். மூன்று நூல்கள். அந்த மூன்று நூலும் சேர்ந்து ஒரு முடிச்சு. அதை “ப்ரம்ம முடிச்சு” என்கிறோம். . மூன்று நூல்கள் எதற்கு? ஒவ்வொரு மனிதனும் மூன்று கடன் பட்டவன். ஒன்று பித்ரு கடன், இரண்டு, ரிஷி கடன், மூன்றாவது, தேவ கடன்.
மோக்ஷம் அடையாத கோடிக்கணக்கான ஜீவாத்மாக்களாக இருக்கிறோம் நாம். இன்று வரை மோக்ஷம் அடைய முடியாததால் உலகத்தில் பல பிறவிகள் எடுக்கிறோம். 84 லக்ஷம் ஜென்மங்கள் நாம் ஒவ்வொருவரும் எடுக்கிறோம் என்கிறார்கள். நமக்கு, “மனித உடல் கொடுத்து” இந்த உலகில் வாழ வழி செய்தவர்கள்” நம்பெற்றோர்கள்”. நமக்கு கொடுக்கப்பட்ட இந்த உடலை வைத்துகொண்டு, நாராயணனிடம் பக்தி செய்து மோக்ஷம் அடைந்து விட முடியும்.. இந்த உடலை வைத்து கொண்டு, உலக விஷயங்களில் ஈடுபடவும் முடியும்.. “உடலை கொடுத்த நம் பெற்றோர்களுக்கு, நாம் நன்றி செய்ய கடன்பட்டுள்ளோம்”. இதை நமக்கு எப்பொழுதும் “நினைவுபடுத்தவே”, பூணூல் அணிகிறோம்.
பூணூலில் உள்ள ஒரு நூல் “பித்ரு கடன் உனக்கு உள்ளது” என்று நம்மை ஞாபகப்படுத்துகிறது. தந்தை, பாட்டி, தாத்தா, பாட்டனார்கள் அனைவருக்கும் இந்த உடல் கடன் பட்டுள்ளது. அவர்கள் உயிருடன் இருக்கும் வரை, அவர்களை அனாதையாக விட்டு விடாமல், அவர்களுக்கு சேவை செய்து இந்த கடனுக்கு பதில் செய்ய வேண்டும். அவர்கள் உயிர் பிரிந்து “பித்ரு லோகம்” சென்றாலும், அவர்கள் வேறு பிறவியே எடுத்தாலும், அவர்கள் எங்கு இருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என்று பித்ரு தேவதைகளிடம் வேண்டி, அவர்கள் உயிர் பிரிந்த நாட்களில் திதி (திவசம்/சிரார்த்தம்) செய்து பித்ரு கடனை அடைக்க வேண்டும். மாதாமாதம் அமாவாசை அன்று தர்ப்பணம் பண்ணுகிறோம். நமக்கு உடல் கொடுத்த பெற்றோருக்கு நாம் செய்யும் நன்றிக் கடன்.
சூரிய தேவன், “கண்” என்ற உறுப்பிற்கு “பார்க்கும்” சக்தியை கொடுக்கிறார். அக்னிதேவன், மனித உடலுக்கு ஏற்ற சூட்டை கொடுத்து, உறுப்புகளை வேலை செய்ய உதவுகிறார். வாயுதேவன், ஐந்து வித வாயுவாக, அதுவும் பிராணவாயு என்ற முக்கியமாக உயிரை கொடுத்து, உடல் முழுவதும் இருந்து, உடல் உறுப்புகள் அசைந்து வேலை செய்ய உதவுகிறார். இப்படி முப்பத்து முக்கோடி தேவர்களும், நம் உடலை இயங்க செய்ய உதவுவதால், உடலை அழுகிவிடாமல் காக்கும் தேவர்களுக்கும் நாம் “கடன்” பட்டு இருக்கிறோம்.
தினமும் மூன்று வேளை சந்தியாவந்தனம் செய்வதன் மூலமாகவே “தேவ கடனுக்கு” நாம் நன்றி செய்ய முடிகிறது. சந்தியாவந்தனத்தில், நவ க்ரஹங்களை திருப்தி செய்கிறோம்.. எமனுக்கு கூட வந்தனம் செய்கிறோம்.. “யோவ: சிவதமோரஸ:” என்று சிவபெருமானை தியானித்து கொண்டே நம்மை சுத்தி செய்து கொள்கிறோம்… “சர்வாப்யோ தேவதாப்யோ நமோநம:” என்று அனைத்து தேவதைகளுக்கும் சேர்த்து நமஸ்காரம் செய்கிறோம்… சந்தியாவந்தனம் ஒழுங்காக செய்தாலே, நாம் “தேவ கடனை ” அடைத்து விடலாம்.
“சிவாய நம, நமோ நாராயணா, முருகா போற்றி” என்று சொல்வதும், ஆழ்வார்களின் திவ்ய பிரபந்தங்கள், நாயன்மார் பதிகங்கள் போன்றவை , நாம் செய்யும் ஸ்தோத்திரங்களே. இதன் மூலம் “தேவ கடனை” அடைக்கிறோம். அது தவிர ,தினமும் பூஜை அறையில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் நன்றியுடன் பூஜை செய்வது மூலமாகவும், குல தெய்வத்தை மறந்து விடாமல் வழிபடுவதின் மூலமாகவும், கோவில் திருப்பணிகளில் உடல் ரீதியாகவும், பொருள் ரீதியாகவும் முடிந்த உதவி செய்வதாலும், “தேவ கடனை” அடைக்கிறோம்.
DisclaimerThis blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.


