
அம்பா தாயே ஸ்வர்ண லக்ஷ்மி ! – நங்கநல்லூர் J K SIVAN
இன்று தை வெள்ளிக்கிழமை. மஹா லக்ஷ்மி பற்றி ஒரு செய்தி சொல்லாத தோன்றியது.காஞ்சிபுரத்தில் காமாக்ஷி தங்க மழை பொழிந்தவள். “துண்டீர தேசத்தில் ஸ்வர்ண வர்ஷத்தைப் பொழிந்தவள்” எனப்படுபவள். துண்டீரம்; தொண்டைமண்டலம். காஞ்சியை சேர்ந்த பகுதி.பொன் விளைந்த களத்தூர் என்ற ஊர் இருப்பது தெரியுமா. அருமையான கோவில்கள் உள்ளன.
அம்பாள் மஹாலக்ஷ்மி ஆதி சங்கரர் பாடியதும் காலடி க்ஷேத்ரத்தில் பொன்மழை பெய்தது தெரியுமல்லவா. வைணவ மஹான் ஸ்ரீ வேதாந்த தேசிகனுக்காகவும் பொன்மழை பெய்தவள் மஹாலக்ஷ்மி.
பரம ஏழையான ஒரு அசட்டுப் பிராம்மணப் பையன் ஒருவனுக்கு எப்படி கல்யாணம் ஆகும்? ரொம்ப கஷ்டப்பட்டான். பணம், புத்தி இரண்டும் இல்லையே எந்த பெண் கிடைக்கும்? தேசிகரின் விரோதிகள் இந்தத் முட்டாள் ஏழை பிராமணனை உபயோகித்து தேசிகரை அவமானப்படுத்த திட்டம் போட்டார்கள்.
”நீ போய் தேசிகரிடம் ”எனக்கு பொற்காசு பணமுடிப்பு தாருங்கள். உங்களால் தரமுடியும், என்று கேள் ” அவர் கொடுப்பார்என்று அவனை முடுக்கி விட்டு அனுப்பி விட்டு வேடிக்கை பார்த்தார்கள். தேசிகர் பொன்னைக் கையால் கூட தொடாதவர். ரிடம் எப்படி பொன்னோ , பொருளோ இருக்கும்? அந்த முட்டாள் ப்ராமணனுக்காக அவர் போய் எவரிடம் யாஸிப்பவரும் இல்லை. நிகமாந்த தேசிகரை எல்லோரும் ‘ஸர்வதந்திர ஸ்வதந்திரர் ’ என்பார்கள். சகல வித்தைகளும் தெரிந்தவர் என்று அல்லவோ அர்த்தம்? எப்படியோ இந்த ஏழை மூட பிராமனுக்கு தேவைப்பட்ட தனத்தை தேசிகர் உண்டாக்கித் தந்துவிட வேண்டும். ஆனால் அவரால் இப்படிச் செய்யமுடியாது. அவரை தோல்வி அடையச்செய்து உடனே, “எப்படி ஐயாஇவ்வளவு பெரிய பட்டத்தை வைத்துக் கொண்டு ஏமாற்றுகிறீர்கள்?” என்று கேட்டு, அவருடைய மானத்தை வாங்கிவிட வேண்டும் என்பது அயோக்கியர்கள் திட்டம். ஆகவே தான் ஏழை முட்டாள் பிராமணனை தேசிகரிடம் அனுப்பினார்கள். அவனும் அவரிடம் போய்த் தன் கல்யாணத்துக்குப் பணம் வேண்டும் என்று யாசித்தான்.இதிலிருந்து ஒரு விஷயம் நமக்கு தெரிவது என்னவென்றால் தேசிகர் காலத்தில் – அதாவது எழுநூறு வருஷங்களுக்கு முந்தி – பிள்ளை வீட்டுக்காரன்தான் பெண் வீட்டுக்குப் பணம் கொடுத்துக் கல்யாணம் பண்ணிக் கொள்வது முறையாக இருந்தது. பிற்காலத்தில் வந்த பெண்வீட்டாரிடம் வரதக்ஷிணை வாங்குகிற பழக்கமோ வழக்கமோ இல்லை.
அந்த பிராமணன் வந்து தனக்கு பணம் வேண்டும் தா என்று கேட்டபோதே வேதாந்த தேசிகருக்கு இது விரோதிகள் சூழ்ச்சி என்று தெரிந்துவிட்டது. இருந்தாலும், அவர் தன்னை அவமானப்படுத்த வந்தவனிடமும் அவர் கருணை கொண்டார். “ஸ்ரீஸ்துதி” என்கிற உத்தமமான ஸ்தோத்திரத்தால் மஹாலக்ஷ்மியைப் பிரார்த்தித்தார். உடனே பொன் மழை பொழிந்தது. அதை பிரம்மச்சாரிக்குக் கொடுத்தார். விரோதிகளாலும் கூட மகான்களுக்கு பெருமையே உண்டாகும். தேசிகருக்கும் அப்படிப் பெருமை உண்டாயிற்று. சங்கரர், தேசிகர் இவர்களின் கருணையிலிருந்து வாக்கு மழையாகப் பொழிந்தது; பொன்னும் மழையாகப் பொழிந்தது. ஆதி சங்கர அத்வைத ஆசார்யாள், பக்த அநுக்ரஹமாக லக்ஷ்மியை ஸ்தோத்திரம் செய்தார் என்றால், விசிஷ்டாத்வைத ஆசார்யர் தேசிகரோ விரோதிகளின் ஆளாக வந்தவனுக்கும் லக்ஷ்மியை அனுக்ரஹிக்க வேண்டினார்.
மஹாலக்ஷ்மியின் பரமாநுக்கிரஹம் பெற்ற இன்னொரு மஹான் ஸ்ரீ வித்யாரண்யர். ஸ்ரேஷ்டமான அத்வைத ஆசாரியர். சதுர் வேதங்களுக்கும் பாஷ்யம் பண்ணினவர். அவருக்கு தெரியாத வித்தையே இல்லை. ஜோதிஷம், வைத்தியம் , தர்ம சாஸ்திரம், ராஜரீகம். அர்த்த சாஸ்திரம் என்று பல வித சாஸ்திரங்களில் நிபுணர். வித்யாரண்யர் என்றாலே ஞானக் காடர் என்பது காரணப் பெயரோ?
வித்யாரண்யர் பால்ய வயதில் ஒரு ஏழை பிரம்மச்சாரி. மஹாலக்ஷ்மியை நோக்கி தபஸ் இருந்தார். மஹா லக்ஷ்மி ப்ரசன்னமானாள் “நீ வித்யாரண்யன், இந்த ஜன்மாவில் உனக்கு என்னிடமிருந்து த்ரவியம் பெற பாக்யம் இல்லை. உன் அடுத்த ஜென்மத்தில் என்னிடமிருந்து தனம் பெற யோக்யதை” என்று சொல்லிவிட்டாள் . வித்யாரண்யர் விடுவாரா மஹா லக்ஷ்மியை? ஆதி சங்கரர் அம்மா ஆர்யாம்பாவிடம் செய்த அதே காட்சி அரங்கேறியது. ”அம்மா என் காலை முதலை பிடித்துக் கொண்டு விட்டது. நான் இந்த பிறவியில் இறப்பது நிச்சயம். நான் தப்பி உயிர் வாழவேண்டுமானால் எனக்கு சன்யாசம் பெற அனுமதி கொடு. சந்நியாசி ஆகிவிட்டால் அது வேறு பிறவி.” என்கிறார். ஆர்யாம்பா மகன் உயிரோடு இருக்கவேண்டுமானால் சன்யாசி ஆக அனுமதித்தாள். அதே போல் வித்யாரண்யரும் மஹாலக்ஷிமியிடம் ” அப்படியானால் நான் இதோ துறவறம் பூணுகிறேன் என்று சாமியாராகி விட்டார்.அடுத்த பிறவி இப்படி நிறைவேறியது.”மஹாலஷ்மி தேவி, இதோ எனக்கு அடுத்த ஜன்மா வந்துவிட்டது இப்போது நீ எனக்கு ஐஸ்வரியத்தைக் கொடு” என்று கேட்க அவளும் மகிழ்ந்து ஸ்வர்ணத்தை வர்ஷித்தாள் .வித்யாரண்யரைச் சுற்றி எங்கும் நிறைய தங்கமும் நவநிதியும் கிடந்து என்ன பயன்? அவர் தான் சன்யாசியாச்சே. துறவி அதை தீண்டக்கூடாதே. வித்யாரண்யர் மகா புத்திமான். அம்பாளின் விளையாட்டு இது என்று புரிந்தது. அப்போது மாலிக்காபூரின் தட்சிண தேசப் படை எடுப்பு ராமேசுவரம் வரை பரவி எத்தனையோ ஹிந்து கோவில்கள் நாசமாயின. விக்ரஹங்கள் உடைக்கப்பட்டு ஹிந்துக்கள் கொல்லப்பட்ட காலம். தர்மங்கள் அழிக்கப்பட்டன. மாலிக்காபூரை எதிர்க்கும் வீர ஹிந்து சாம்ராஜ்யம் எதுவுமில்லையுயே? வித்யாரண்யர் மனதில் ஒரு தீவிர எண்ணம் தோன்றியது. அந்த புண்ய காரியத்தை நிறைவேற்ற முனைந்தார். மஹா லக்ஷ்மி கொடுத்த இவ்வளவு நிதியையும் உபயோகித்து அம்பாள் அநுக்ரஹத்தால் ஒரு ராஜ்ய பரிபாலனத்துக்கு உதவி பண்ணும் அளவுக்கு அவருக்கு புத்தி தீக்ஷண்யமும் இருந்ததால் செல்வ பலம், அறிவு பலம் இரண்டையும் கொண்டு ஒரு ஹிந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். ஸநாதன ஹிந்து தர்மத்துக்கே இது ஒரு பெரிய லாபமாயிற்று.
வித்யாரண்யருக்கு சகுன சாஸ்திரமும் தெரியும். ஒரு பெரிய ஹிந்து ஸநாதன தர்ம சாம்ராஜ்ஜியம் ஸ்தாபிக்கும் சமயம் வந்துவிட்டதே. அவர் எதிரே ஆடு மேய்க்கிற ஹரிஹரன் புக்கன் என்ற இரு குறும்பர்களைப் பார்த்தார். இவர்களே நான் ஸ்தாபிக்கும் புதிய ராஜ்ஜியத்தில் அரசாள வேண்டியவர்கள் என்று தீர்மானித்தார். அவர் இருந்த அந்த துங்கபத்திரா பிரதேசத்திலேயே ஓரிடத்தில் ராஜதானி ஸ்தாபிதம் ஆயிற்று. ஹரிஹரன் புக்கன் இருவரையும் ராஜாக்களாகப் பட்டாபிஷேகம் செய்து வைத்தார். அதுவே நாம் இன்று காணும் ஹம்பி. பம்பா ஸரஸ் என்பது ராமாயணத்தில் வரும்.கிஷ்கிந்தா. பம்பா ஹம்பா எனப்பட்டு காலப்போக்கில் ஹம்பியாகிவிட்டது. கன்னடத்தில் ‘ப’ ‘ஹ’ ஆகும்.
மஹாலக்ஷ்மியின் அநுக்ரஹத்தால் கிடைத்த ஐஸ்வரியம் வித்யாரண்யரால் ஒரு பலம் மிகுந்த வித்யா நகர சாம்ராஜ்யம் பிறந்தது. பெரிய சைனியம் திரட்டித் துருக்கரை எதிர்த்துப் போரிட்டு அவர்களை வென்று விரட்டியது.அதுவே சரித்திரத்தில் பின்னர் விஜயநகர சாம்ராஜ்யம். பெரிதாக வளர்ந்து விஸ்தரிக்கப்பட்டது.
சுயநலமில்லாமல் அம்பாள் அருளை பெற பிறருக்குதவ நல்ல காரியங்களுக்கு நிதி கிடைக்க நாம் இந்த தை வெள்ளிக்கிழமை மஹாலக்ஷ்மியை உபாசிப்போம். ஆசாரியாள், வித்யாரண்யாள், ஸ்ரீ தேசிகன் மாதிரி பரோபகாரமாக அவளைத் துதிக்க வேண்டும். எந்த செல்வம் வந்தாலும், வராவிட்டாலும், நம்மிடம் பாபமே சேராமல் நிர்மலமாக இருக்கிற செல்வத்தை விரும்பி அவளை நமஸ்கரிப்போம்.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



