THIRUMOOLAR 9 – J K SIVAN

திருமந்திரம்  9  – #நங்கநல்லூர்  J K  SIVAN

திருமூலர்.

இறைவன் யார் தெரியுமா?  உண்மையிலேயே யாராவது அவனைப் பார்க்கவேண்டும் என்ற  மனமார்ந்த ஆசை கொண்டவர்களா? கடவுளை தூர வைத்து பார்க்கிறோம். அவர் நம்மை காக்க வேண்டும். நமக்கு வரும் கஷ்டங்களை தீர்க்கவேண்டும் என்ற  சுயநலம்  ஒன்று தான் நம்மிடம் காணப்படுகிறது. எல்லோரையும் அவர்  காப்பாற்றவேண்டும் என்று உளமார நினைப்பவர் எத்தனை பேர்?
திருமூலரைப்போல பக்தியை எளிய தீந்தமிழில் சொற்கட்டோடு சொல்பவர் விரலை விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் தான். ஒளவை, சிவவாக்கியர், கம்பர், பாரதி  என்று நான் எப்போதும் வியக்கும் தமிழ்த்  தூண்கள் அவர்களில் அடக்கம்.
பிள்ளையாரப்பனை திருமூலர் வர்ணிப்பது அவனை  நம் எதிரே கண் முன் கொண்டு நிறுத்தும். கணேசனுக்கு ஐந்து கைகள்,  ஐங்கரன்.   ஒன்று அதில் தும்பிக்கை, முகமோ விசித்திரமானது. யானையின் அழகு முகம். அர்த்த சந்திரன் போல் வெள்ளை வெளேரென்று வளைந்து இருக்கும் இரு  கம்பீரமான  தந்தங்கள்.  ஓங்கார ப்ரணவஸ்வரூபனான அவனைப் போல் ஞானவானைக் காண முடியாது என்பதால் ஞானக் கொழுந்து என்கிறார். அவனை மனதில் இருத்தி வணங்காமல் வேறென்ன வேலை? . எல்லா குழந்தைகளும் மனப்பாடம் செய்து தினமும் சொல்லவேண்டிய அற்புத பிரார்த்தனை செய்யுள். கட்டாயம் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுங்கள். எங்கள் காலத்தில் பள்ளிக்கூடத்தில் தினந்தோறும்  எழுந்து நின்று கை  கூப்பி பாட வைப்பார்களே .

”ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே.

அவன் ஒரே ஒருவன். ஆனால்  சகலத்திலும், சகலமாகவும் இருப்பவன்.
ரெண்டு என்பதும் அவனே. அவனுள் அவள். சக்தியும் சிவனும்சேர்ந்தல்லவோ அருள் பாலிக்கிறார்கள்.
மூன்று என்றாலும் அவன் தான். பதி பசு பாச தத்துவம் அவனே அல்லவா? நேற்று, இன்று நாளை எனும் காலம் கடந்து எங்கும் எப்போதுமானவன்.
நான்கு என்று சொன்னாலும் அது அவனையே. ” வேதத்தின் உட்பொருள் ஆவான்” அல்லவா? இன்னொரு நான்கு இச்சா, கிரியா, ஞான, புருஷா சக்தி அனைத்தும் அவனே என்று குறிக்கும்.
ஐந்து என்றால் ஐம்பொறிகள், ஐம்புலன்கள் அனைத்தையும் கட்டுப்பாட்டில் கொண்டவன். பஞ்ச பிராணனாக சகல ஜீவர்களிலும் இருப்பவன்.
ஆறு என்றாலும் ஷட் சக்ரம் என்று நம் உடலில் ஆட்சி செலுத்தும் ஆறு நிலைகளை குறிக்கும். மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, சஹஸ்ராரம் எனும் குண்டலினி பிரயாணம் செய்யும் ரயில்வே ஸ்டேஷன்கள் அவனே.
ஏழு என்றாலும் இந்த மேலேழு கீழெழு, லோகங்களை படைத்து, காத்து நிர்வகிக்கும் அவனே.
எட்டு என்றாலும் திரும்ப திரும்ப இந்த பஞ்ச பூதங்கள், ஆன்மா, சூரிய சந்திரர்கள் ஆகிய எட்டும் அவனே என்பதில் துளியும் சந்தேகமே இல்லை. இதை திருமூல தமிழில் எப்படி இருக்கிறது என்று படிப்போமா?

”ஒன்று அவன் தானே, இரண்டு அவன் இன் அருள்,
நின்றனன் மூன்றின் உள், நான்கு உணர்ந்தான், ஐந்து
வென்றனன், ஆறு விரிந்தனன், ஏழ் உம்பர்ச்
சென்றனன், தான் இருந்தான் உணர்ந்து எட்டே. ”.

நாம் நல்ல உயிர்கள் இல்லை என்றால் இனியாவது நல்லுயிராக முயற்சிப்போம். ஏன் என்றால் நம்மில் அவன் இருக்கிறானே? அதற்காகவாவது நாம் உயரவேண்டாமா?  நாலு திசைகளிலும் எங்கும் வியாபித்து இருக்கும் பராசக்தியோடு சேர்ந்துள்ள உமா நாதன் இல்லையா அவன்?
மேலே சொன்ன நாலு திசையில் தெற்கு ஒன்று என்று நம் எல்லோருக்கும்  தெரியும். தென் திசைக்கு  அதிபதி யமன். அப்படிப்பட்ட   யமனை,  மறலியைக் காலால் உதைத்த கால சம்ஹார மூர்த்தி அல்லவா சிவன்? காலகாலனை, சர்வேஸ்வரனைத்  தான் நான் இறைவன் என்று போற்றுகிறேன் என்று அழுத்தம் திருத்தமாக கூறுகிறார் திருமூலர் இந்த பாடலில்: அது இதோ:

”இன் உயிர் மன்னும் புனிதனை
நால் திசைக்கும் நல்ல மாதுக்கும்  நாதனை
மேல் திசைக்குள் தென் திசைக்கு ஒரு வேந்தனாம்
கூற்று உதைத்தானை போற்றி இசைத்து யான் கூறுகின்றேனே”.

திருமூலர் எழுதிய மூவாயிரத்தையும் நான் விளக்கப் போவதில்லை. நேரமும் இல்லை. முடிந்த வரை சில அற்புதமான பாடல்களை எளிதில் புரியக்கூடிய விஷயங்களை மட்டும் தொடுகிறேன். சில சமயம் எனக்கு திருமூலரின் எழுத்தும் அதன் பலமும் சிவவாக்கியரை நினைவு படுத்தும். ஒன்றை ஒன்று மிஞ்சுவது போல் இருக்கும். திருமூலர் பாடல்களில் உபமானம் உபமேயம் அசாத்தியமாக ஆழ்கடலில் மிதக்கும் கப்பலாக பயணம் செய்ய வைக்கும். சிவவாக்கியர் தமிழ் வேகமாக ஓடும் ரயில் வண்டி. அது ஒரு சுகமான பிரயாணம். 

இன்னொரு  திருமூலர்  திருமந்திரம் ருசிப்போம்:

”பெண் அல்ல ஆண் அல்ல பேடு அல்ல மூடத்துள்
உள் நின்ற சோதி ஒருவர்க்கு அறி ஓணாக்
கண் இன்றி காணும் செவி இன்றி கேட்டிடும்
அண்ணல் பெருமையை ஆய்ந்து மூப்பே ”

இந்த பாடலின் கருத்து நம்மாழ்வாரை நினைவு படுத்து கிறதா? அப்படியென்றால் நாம் இருவரும் ஒரே படகில் பயணிக்கிறோம்.   நம்மாழ்வாரை விட முந்திய காலத்தவர் திருமூலர். ஆகவே ஆழ்வார் முதலில் எழுதினாரா திருமூலரா என்றால் நிச்சயம் திருமூலர் தான். சந்தேகத்துக்கு இடமில்லை .திருமூலர் மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தவர் எத்தனையோ நூற்றாண்டுகள் முன் மறைந்தவர் எனும்போது பழமை இங்கே தான் ஜொலிக்கிறது.
கடவுள் என்பவன் ஒரு ஆண் உருவம் கொண்டவனோ, பெண் உருவம் கொண்டவளோ அல்ல . இரண்டும் கெட்டானும் இல்லை. எந்த வித்தியாசமும் அற்றவன். நமக்கு உள்ளே நிறைந்து நின்று ஒளி வீசும் அவனை நமது மனதில் பஞ்ச கோஸங்கள் எனும் திரைகள் மறைத்து விடுவதால் உள்ளிருந்து வீசும் ஒளி நமக்கு வெளியே புலப்படுவதில்லை. உள் நின்று ஒளிரும் அவனை உணர்ந்து விட்டால் மனிதனின் தேகத்திலும் முகத்திலும் ஒரு தனி ஒளி வீசும். அவனை உணர, அனுபவிக்க, சாதாரண வஸ்துக்களை காட்டும் கண் வேண்டாம். அகக்கண் மூலம் ஆனந்தமாக காணலாம். உலக சமாச்சாரங்களைக் கேட்டு மகிழும் செவிகள் இல்லாமலேயே அவன் நர்த்தனம், தாண்டவம் காதில் ஒலிக்கும். ரிஷிகளும் யோகிகளும் ஞானிகளும் அப்படி ஆனந்தமாக அனுபவித்தவர்கள். ஆஹா அந்த பரமேஸ்வரன் புகழை எவன் நன்றாக உணர்ந்து அனுபவிக்கிறானோ அவனே முதிர்ந்த ப்ரம்ம ஞானி.

Disclaimer
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.

The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.

Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.

No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.

All trademarks, logos, and brand names are the property of their respective owners.



Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 2563

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

;