
பேசும் தெய்வம் – நங்கநல்லூர் J K SIVAN பாப புண்யங்கள்
வெள்ளை ஆடை கழுத்திலிருந்து கால்களை மூடும் வரை அணிந்து கொண்டு இடுப்பிலே ஒரு நாடாவை பெல்ட் மாதிரி கட்டிக்கொண்டு சில கிறிஸ்தவ பாதிரியார்கள் நான் வடபழனி பகுதியில் சிறு வயதில் வசித்தபோது தெருவில் வந்து எல்லோரையும் ”பாபிகளே பாபிகளே ” என்று சாயந்திர இருட்டில் பெட்ரோமாக்ஸ் விளக்கொளியில் திட்டுவதைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் சொல்வது சரிதான். நாம் ஒவ்வொருவரும் எண்ணற்ற பாபங்களை தொடர்ந்து செய்து கொண்டே வருகிறோம். நமக்கு கதி மோக்ஷ முண்டா? எப்படி மீள்வது? திணறும் நமக்கு ஆபத்பாந்தவராக மஹா பெரியவாஒரு சுலபமான வழியை சொல்லித் தருகிறாரே.அதை அறிந்துகொண்டு மற்றவர்க்கும் எடுத்துச் சொல்வோமா? மற்றவர்களுக்கும்இதை அனுப்புவது ஒரு லோகார்த்தமான, உபயோகமான செயல் இல்லையா ?
” கிருஷ்ணா, இந்த உலகில் யாருமே பாபியாக இருக்க விரும்பவில்லை. ஆனாலும் பாப காரியமே அதிகம் செய்கிறோம். புண்ய பயன் பெற ஆசை உண்டு, ஆனால் செய்வதெல்லாம் பாப காரியங்களைத்தவிர வேறில்லை. பாபம் செய்ய யாருமே விரும்பவில்லை. ஆனாலும், எதுவோ நம்மை பாபத்திலேயே உழல பலாத்காரமாகத் தூண்டிக் கொண்டிருக்கிறதே. அது என்ன?” என்று கேட்டான் அர்ஜுனன். “அர்ஜுனா, அதற்கு பெயர் தான் ஆசை ” என்றான் கிருஷ்ணன்
ஆசையினால் ஒன்றை அடைய முயல்கிறோம். துடிக்கிறோம், எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்பதால் பல தர்ம அதர்மங்களைப் புறக்கணித்து விடுகிறோம். அந்த ஆசை நிறைவேறிவிட்டால் அதோடு திருப்தி உண்டாகிறதா? இல்லை. அக்னியில் நெய்யை விட்டால் அது அணைந்தா போகும்? மேலும் பெரிதாக வளர்வது போலவே ஒர் ஆசை பூர்த்தியான மனஸில் இன்னோர் ஆசை பெரிதாக மூளுகிறது.
சரி, அப்படியானால் அந்த ஆசை நிறைவேறாவிட்டாலே நல்லது என்று சொல்லலாமா? அப்படியும் இல்லை. ஆசை நிறைவேறாவிட்டால் நமக்கு ஆத்திரம் உண்டாகிறது. சுவரில் எறிந்த ரப்பர் பந்து திரும்புவது போல் நிறைவேறாத ஆசை கோபமாகத் திருப்பி வந்து நம்மைப் பாபத்தை செய்ய மேலும் தூண்டுகிறது. ஆசைக்கு அடுத்தபடி இந்தக் குரோதத்தைத்தான் பகவான் கீதையில் சொன்னார். இதுவும் ஆசையின் விளைவு தான்.
அப்படியானால் பாபம் செய்யாதிருப்பதற்கு ஒரே வழி ஆசைகளை அழிப்பதுதான். இதை எப்படிச் செய்வது?. நாம் காரியம் செய்யாமல் இருக்கமுடியாது. உடம்பு காரியம் பண்ணாதபோதுகூட நம் மனசு ஏதாவது ஒரு காரியம் பண்ணிக் கொண்டேதான் இருக்கிறது. எதையாவது எண்ணிக் கொண்டேயிருப்பதுதான் மனஸின் காரியம். உடம்பு, மனசு ஆகியவற்றால் இந்த இரு வகையிலும் நாம் செய்கிற அத்தனை காரியங்களும் இப்போது நம்முடைய சொந்த ஆசை அபிலாஷைகளையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டு, நம்மை மேலும் மேலும் பாபத்திலே கொண்டு போய்த் தள்ளுகிறது. அப்படியானால் இனி காரியமே எதுவும் செய்யாமல்சும்மாயிருந்து விடலாமா? என்றால் மநுஷ்ய ஸ்வாபாவம் நம்மை அப்படி யிருக்க விடமாட்டேன் என்கிறது.
சிந்தையை அடக்கி சும்மாயிருக்கும் திறம் அரிது என்று தாயுமான ஸ்வாமிகள் சொன்னார். உடம்பின் காரியத்தைக் கொஞ்சம் நிறுத்தினால் கூட சித்தத்தின் காரியம் நிற்கமாட்டேன் என்கிறது. தான் காரியம் செய்வதோடு உடம்பையும் அந்த காரியத்தில் ஏவி விடுகிறது.
ஆசையை நேராக நிறுத்த முடியவில்லை. காரியத்தையும் நிறுத்த முடியவில்லை என்றால் நமக்கு கதிமோ க்ஷமே இல்லையா? இந்த Problem ப்ராப்ளம் தீராதா, விடை, SOLUTION, இல்லையா? இருக்கிறது. அதாவது இப்போது நாம் இருக்கிற நிலைமையில் காரியத்தை அடியோடு நிறுத்திவிட வேண்டாம். ஆனால் நாம் சொந்த தேவையை பூர்த்தி செய்ய காரியம் செய்கிறோம் என்ற நிலைமையை மாற்றி, சுயநலமில்லாத காரியங்களில் ஈடுபட வேண்டும். லோகோபகாரமாகவும், ஆத்மார்த்தமாகப் பலன் தருவதாகவும் இருக்கிற காரியங்களில் ஈடுபட வேண்டும். அதில் ருசி வந்துவிட்டால் மேலும் மேலும் ஈடுபட செய்யும். ஆசைகளும் குறைந்து கொண்டே வருகின்றன. பாபம் குறைகிறது. புண்ணியம் ஏறுகிறது. எனவே, நாம் செய்ய வேண்டி யது என்னவென்றால் லோகார்த்தமாக காரியம் செய்யப் பழக வேண்டும். ஆசையில்லாமல் செய்வதுதான் புண்ய காரியம்.
நாம் நான்கு விதங்களில் பாபம் செய்கிறோம். உடம்பால் கெட்ட காரியம், . வாயால் புரளி, வதந்தி, பொய் பேசுவது, மனத்தினால் கெட்ட நினைவுகள், பணத்தினால், பணத்துக்காக, நாம் செய்கிற பாபத்தைப் சொல்லவே வேண்டாம்.
எந்த 4 லினால் பாபம் செய்தோமோ, அந்த நான்காலுமே புண்யம் செய்ய பழகிக் கொள்ள வேண்டும். உடம்பைப் பரோபகாரம், பகவானைப் பிரதக்ஷிணம் செய்து நமஸ்கரிப்பது ஆகியவற்றில் ஈடுபடுத்திப் புண்யம் தேடவேண்டும். வாயால் பகவத் நாமாவைச் சொல்லிப் புண் யம் செய்ய வேண்டும். சம்பாதிப்பதிலேயே நமது பொழுதெல்லாம் போகிறது. டைமே இல்லை என்கிறோம். சம்பாதிப்பது உலக வாழ்க்கைக்கு அவசியம் தான். ஆனால் யோசித்துப் பார்த்தால் அதற்கே, அதற்கு மட்டுமே, அதற்காகவே, எல்லா பொழுதும் நேரமும் முழுசாக போய் விடவில்லை. இருக்கும், கிடைக்கும், நேரத்தில் எவ்வளவு வீண் பேச்சு, பரிகாசம், வேடிக்கை, நியூஸ் பேப்பர், யு ட்யூப், வாட்ஸாப்ப், மொபைல் வம்பு வீணாகிறது.
கொஞ்சமாவது அதை குறைத்துக்கொண்டு பகவத் நாமஸ்மரணையில் செலவிடலாமே. தனியாக அதற்கென்று பொழுது வேண்டாம். ஆபிஸ் போக பஸ்ஸிலோ, ரயிலிலோ, காரிலோ, போகும்போது, நடக்கும்போதோ, பகவத் நாமாவை ஜபிக்கலாம். . ஒடி ஒடி சம்பாதிப்பதில் ஒரு பைசா கூட அப்புற மாக நம்மோடு வரப்போவதில்லை. மறு உலகத்தில் செலாவணி பகவத் நாமா ஒன்றுதானே. மனசு என்பது பகவானின் இடம். அதை எதற்கு குப்பைத் தொட்டியாக்கணும் ?.
This blog is dedicated to the study, appreciation, and devotional exploration of Indian deities, traditions, and spiritual practices. All content published here is intended solely for educational, informational, and research purposes.
The views, interpretations, and information presented reflect personal understanding and publicly available sources, and are not intended to offend or misrepresent any religion, community, sect, or belief system. Readers are encouraged to consult authoritative scriptures, scholars, and religious authorities for definitive guidance.
Copyright & Intellectual Property: Images, texts, quotations, and other materials featured on this blog may be the property of their respective owners. Such materials are used in good faith for non-commercial, educational, and illustrative purposes under the principle of fair use/fair dealing. No copyright infringement is intended. If you are the rightful owner of any content displayed here and believe it has been used improperly, please contact us and the material will be promptly removed or duly credited.
No Liability: While every effort is made to ensure accuracy, the author makes no warranties regarding the completeness or reliability of the information. Any reliance you place on such information is strictly at your own risk.
All trademarks, logos, and brand names are the property of their respective owners.



