SOUNDARYA LAHARI 27/103. J K SIVAN

ஸௌந்தர்ய லஹரி 27/103 – நங்கநல்லூர் J K SIVAN
ஆத்ம ஞான சித்தி

27. மானஸீக சமயாசார வழிபாடு.

जपो जल्पः शिल्पं सकलमपि मुद्राविरचना गतिः प्रादक्षिण्यक्रमणमशनाद्याहुतिविधिः ।
प्रणामस्संवेशस्सुखमखिलमात्मार्पणदृशा सपर्यापर्यायस्तव भवतु यन्मे विलसितम् ॥ २७॥

japō jalpaḥ śilpaṃ sakalamapi mudrāvirachanā gatiḥ prādakṣiṇyakramaṇamaśanādyāhutividhiḥ ।
praṇāmassaṃvēśassukhamakhilamātmārpaṇadṛśā saparyāparyāyastava bhavatu yanmē vilasitam ॥ 27 ॥

ஜபோ ஜல்ப: ஶில்பம் ஸகலமபி முத்ராவிரசனா கதி: ப்ராதக்ஷிண்ய க்ரமண மஶனாத்யாஹுதி விதி:
ப்ரணாம: ஸம்வேஶ: ஸுகமகில மாத்மார்ப்பம த்ருசா ஸபர்யா பர்யாயஸ் தவ பவது யன்மே விலஸிதம் 27

இந்த ஸ்லோகத்தை படிக்கும்போது எனக்கு மெய் சிலிர்த்தது. ஆஹா எவ்வளவு பக்தி பா(bha)வத்தோடு, ஆதி சங்கரர் எழுத்துக்கள் அமைந்திருக்கிறது பாருங்கள்.

”அம்மா தாயே, ஜெகதீஸ்வரி, எனக்கு பூஜா உபாசனா சாதக வழிபாட்டு முறைகள்,குண்டலினி உபாசனை எல்லாம் எதுவும் தெரியாது. நான் என்னவெல்லாம் என் நாவால் உச்சரிக்கிறேனோ, அந்த வார்த்தைகள் எல்லாம் உன்னை பூஜிக்கும் போற்றும் உயர்ந்த மந்த்ரஜபமாக ஏற்றுக்கொள்.

நான் எப்படியெல்லாம் கையை ஆட்டி அசைக்கிறேனோ, அதெல்லாம் உன்னை வேண்டி நான் வழிபடும் யோக ஞான முத்ரைகளாக ஏற்றுக்கொள். அப்படி அதை மாற்றிவிடு. ( ‘தசமுத்ரா ஸமாராத்யா” –என்று லலிதா ஸஹஸ்ர நாமத்தில் . தேவி பூஜையில் 10முத்திரைகள் உண்டு. (1)ஸம்க்ஷோபினீ (2) வித்ராவிணீ (3) ஆகர்ஷிணி (4) வசங்கரீ (5) உன்மாதினீ (6) மஹாங்குசா (7) கேசரீ (8) பீஜ (9) யோனி (10) த்ரிகண்டா).

நான் எப்போதெல்லாம், எங்கெல்லாம் எதற்கெல்லாம் நடக்கிறேனோ, அந்த நடையெல்லாம் உன்னைச்சுற்றிச் சுற்றி வரும் ப்ரதக்ஷ்ணமாக மாற்றி ஏற்றுக்கொள்.

நான் எதெல்லாம் எப்போதெல்லாம் குடிக்கிறேனோ, தின்கிறேனோ, அதெல்லாம் உனக்கு மனப்பூர்வமாக படைக்கப்பட்ட நைவேத்ய அர்ப்பணமாக ஏற்றுக்கொள்.

நான் அசதியாக தரையில் படுத்து, விழுந்து கிடப்பதையெல்லாம் உன்னை சாஷ்டாங்கமாக முறைப்படி உன்னை நமஸ்கரிப்பதாக ஏற்றுக்கொள்.

நான் எதெல்லாம் சந்தோஷமாக ருசிக்கிறேனோ, அனுபவிக்கிறேனோ, அதெல்லாம் உன்னை வழிபடும் பூஜையாக, அபிஷேகமாக, அலங்காரமாக ஏற்றுக்கொள்ளம்மா” — இந்த மாதிரி மனதளவில் புரியும் வந்தனைக்கு ”சமயாசார” வழிபாடு என்று பெயர். சேஷாத்ரி ஸ்வாமிகள் போன்ற யோகிகள் , ஞானிகள், இப்படிப்பட்ட மன அளவில் சமயாசார உபாசகர்கள்.

இதில் ஐந்து முக்கிய விஷயங்கள் அடக்கம். அவை:
1. சிவனும் சக்தியும் ஒன்றே. அவன் சிவன் அவள் சிவை. அவன் பைரவன், அவள் பைரவி…அவன் சங்கரன், அவள் சங்கரி.இது போல் எத்தனையோ நாமங்கள் இருவரையும் ஒன்றாக காட்டுகிறது.
2.உருவத்திலும் இருவரும் ஒன்றே காமேஸ்வரன், காமேஸ்வரி. இருவர் கரங்களிலும் ஒரே ஆயுதங்கள், தலையில் பிறைச்சந்திரன். உடலில் இருவரும் பப்பாதி .
3. சிவன் சிவை இருவருமே மேருவில் வாசம் செய்பவர்கள்.
4.பஞ்சகிருத்யங்கள், ஸ்ரிஷ்டி , ஸ்திதி, ஸம்ஹாரம் ,திரோதானம், அனுக்ரஹம் — இதை ரெண்டுபேரும் செய்கிறார்கள்.
5. பக்தர்களுக்கு அருள் புரியும் தர்ம, அர்த்த, காம, மோக்ஷம் எல்லாம் அவர்கள் ஒன்றாக தருவதே.

மனதால் சமயாசார உபாசனை போதும். வெளியே எந்த பூஜையும் உபாசனையும் அதில் சேர்த்தி இல்லை.
பாவனோபநிஷத் 37 ஸ்லோகங்களில் இந்த மனதளவில் புரிகிற சமயாசார உபாசனை பற்றி சொல்கிறது.அதை ஒருநாள் முழுமையாக பார்ப்போம்.
சுருக்கமாக சொன்னால் அம்மா மூலம், அம்மாவின் சிபார்சினால் தான் உபாசகன் ஐயாவை அடையமுடியும்.

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *